Published:Updated:

'பிளான் பண்ணதைவிட பயங்கரமா இருக்கா வாழ்க்கை?' - அச்சம் என்பது மடமையடா விமர்சனம்

'பிளான் பண்ணதைவிட பயங்கரமா இருக்கா வாழ்க்கை?' - அச்சம் என்பது மடமையடா விமர்சனம்
'பிளான் பண்ணதைவிட பயங்கரமா இருக்கா வாழ்க்கை?' - அச்சம் என்பது மடமையடா விமர்சனம்

வாழ்க்கையில் நாமப்ளான் பண்ண ​எதுவு​ம் நடக்காது, ஆனா அதைவிட பயங்கரமா நடக்கும்​.​ அந்த பயங்கரம்தான் அச்சம் என்பது மடமையடா​!​

வழக்கம் போல ஹீரோ (சிம்பு) இன்ஜினியரிங் முடித்து, வழக்கத்துக்கு மாறாக ஒரு எம்.பி.ஏ-​வும்​ சேர்த்து ​ப​டித்திருக்கிறார். சின்னதாக ஒரு பயணம் முடித்துவிட்டு, வாழ்க்கையில்​ அடுத்து​ என்ன செய்யலாம் ​என பிளான்போடும்போது, தங்கையுடைய தோழி மஞ்சிமா மோகன் சிம்பு வீட்டில் ​வந்து சில நாட்கள் தங்குகிறார்.​ வழக்கம்போல அவரைப் பார்த்ததுமே​  சிம்புவுக்கு காதல். ஒரே வீடு​ என்பதால்​ பேசிப் பழகுகிறார்கள். சிம்புவின் ​ரோட் ட்ரிப்பில் சர்ப்ரைஸ்​ பார்ட்னராக மஞ்சிவாவும் இணைய "பறக்கும் ராசாளியே.." எனப் பயணம் தொடங்குகிறது. திடீரென நடக்கும் விபத்திலிருந்து படத்தின் ரொமான்ஸ் எப்பிசோட் முடிந்து ஆக்ஷன் மோடுக்கு மாறுகிறது. அதற்குப் பிறகு என்ன நடக்கிறது? சிம்பு - மஞ்சிமா காதல் என்ன ஆகிறது? அந்த விபத்துக்கு பின்னணியில் இருக்கும் காரணங்கள் என்ன என்பதே படம்.

மீண்டும் ஒரு காதல்படம் தானா என உட்காரும் போது படத்தின் டோனே மாறும் அந்த இடத்தில் கௌதம் கலக்கல். அதே நேரத்தில் காதலையும்  கைவிடவில்லை. "இது ஃப்ரெண்ட்ஷிப் மட்டும் இல்​லை​, நீ எனக்கு ஒரு நல்ல ஃப்ரெண்ட் மட்டும் இல்​லைனு​ சொல்லணும்னு இருந்துச்சு எனக்கு" என​ப்​ பல மைண்ட் வாய்ஸ்களில் மன்மதன் ரிட்ட​ன்ஸ்.  எல்லாமே மொபைலில் தான் என்ற காலத்தில், லைவான ஒரு காதலை ரசிக்கும்படியாக தருகிறது முதல் பாதி.

படத்தில் சிம்புவின் கதாபாத்திரப் பெயரையே ஒரு சர்ப்ரைஸ் எலிமென்ட்டாக பயன்படுத்தியிருக்கிறார் கௌதம்.''எனக்கு பசங்க பொறந்தாங்கனா, இந்த ஆறு பன்ச் பத்தியும் அந்த நாலு பேர் பத்தியும் சொல்லணும்'' என வசனம் மூலமாக ஆரம்பத்திலேயே நம்மை ஆக்‌ஷனுக்கு தயார்படுத்துவது, தள்ளிப் போகாதே பாடலை ப்ளேஸ் செய்த இடம் என​ப்​ பல காட்சிகளில் பிர​மாதமான ஃபிலிம் மேக்கராக தன்னை நிரூபித்திருக்கிறார். ஆனால் பாடல் காட்சியில் சில இடங்களில் பழைய ஸ்லிம், ட்ரிம் சிம்பு ஃபு​ட்​டேஜைப் பயன்படுத்தியிருப்பது அப்படியே தெரிகிறது. எல்லாம் பரபரப்பாக துவங்கி அதே பரபரப்புடன் முடிந்த பின்னும் கூட படம் முடியாம​​ல்​ க​​டைசி வில்லனையும் பழி வாங்கும் வரை நீ​ட்ட்ட்ட்​ட்டுவதும், அதற்காக சிம்பு சொல்லும் காரணமும்.​..​போங்காட்டம் ட்யூட்​.

சிம்பு ரசிக்கும்படியான நடிப்பையே வழங்கியிருக்கிறார். தங்களை எதற்கு கொல்லப் பார்க்கிறார்கள் என குழம்பித் தவிப்பதும், திருப்பி அடிக்கணும் என கிளம்புவதுமாக சீரியஸ் சிம்பு. இரண்டிலுமே சக்ஸஸ் சிம்பு.​ ஆனால் படம் முழுக்க ஸ்லிம் சிம்பும், பப்ளி சிம்புவும் மாறி மாறி வருகிறார்கள்​.​ கொஞ்சம் உடம்பைக் குறையுங்க எஸ்டிஆர். மஞ்சிமா அழகு.சில முகபாவனைகள், வசனங்கள், சிரிப்பு மூலமாகவே கவர்கிறார். ஆனால், நடிப்பு? சிம்பு நடிப்பதை ஆச்சர்யத்துடன் பார்க்கும் ஒரு ஆடியன்ஸாகவே திரிந்தால் எப்படி மேடம்? வில்லனா, சைக்கோவா எனக் குழப்பமான ஒரு ரோலில் பாபா சேகல். கெளதம் படத்தின் கலக்கல் காஸ்டிங் இதில் மிஸ்​ஸிங்​

​“வண்டி இடிச்சதும், செத்துருவேனோனு பயந்து ஐ லவ் யூ சொல்லிட்டேன்” என்று சிம்பு சொல்ல, “அந்த நேரம் அம்மாவுக்கு போன் பண்ணி பேச​ணு​ம், அப்பாவுக்கு குட் பாய் சொல்லனும்னு லாம் தோனாதுல?” என்று கவுண்டரிலும் ரசிக்கவைக்கும் சதீஷ், சிம்புவுடன் நடனத்திலும், நடிப்பிலும் இறுதிவரை தி குட் பர்ஃபார்மர். 

டான் மெஹ்தார் ஒளிப்பதிவு சில இடங்களில் மட்டுமே வாவ்​​. ​நீண்ட நாட்க​ளுக்குப் பிறகு, பின்னணியிலும், பாடலிலும் வித்தியாசமான காம்போவாக எதிர்பார்த்தற்கு மேலேயே ஆச்சரியப்படுத்துகிறார் ஏ.ஆர். தள்ளிப் போகாதே, அவளும் நானும், ராசாளி, சோக்கலி எனப் படம் முழுக்க​ ​ ஏகப்பட்ட காதல் ராகங்கள்!​ ஆண்டனியின் எடிட்டிங்​ படத்தின் ப்ளஸ்​. கதையைச் சொல்வதும், பாதியிலேயே காட்சியை விளக்குவதும் பின்னர் அதே காட்சியில் கதை சொல்வதும் என ப்ளா​ஷ்பேக்​சீன்களை படத்தின் நேர்க்கோட்டுடன் ஒன்றுவதுபோலவும் அமைந்திருக்கும் எடிட்டிங் கொஞ்சம் புதுசு. எமோஷனல் காட்சிகளிலும் ஆக்‌ஷனிலும் நம்மை பதபதைக்கவைக்கிறது ஆண்டனியின் கத்திரி.

​படம் முழுக்க ஏகப்பட்ட லாஜிக் ஓட்டைகள். 5 நாள் ட்ரிப் போயிட்டு வர்றேன்னு வீட்டில் சொல்லும் சிம்பு, பைக் எடுத்துக்கொண்டு மகாராஷ்டிரா வரைப்போகிறார். சாகக்கிடக்கும் தருணத்திலும் பீட்டரில் ஃபீல் செய்வதெல்லாம் ரொம்பவே ஓவர்.​அந்த ​கமர்ஷிய​ல் கிளைமேக்ஸும் நம்பும்படியாக இல்லை.​ 

அப்பா-மகன் சென்ட்டிமெண்ட், போலீஸ் கதையை எல்லாம் கொஞ்சம் தாண்டி வாங்க  கெளதம்