Published:Updated:

"ஆமா, உங்களுக்கு எத்தனை வயசாகுது?" - பார்த்திபன் பிறந்த நாள் சிறப்பு பேட்டி #Exclusive

"ஆமா, உங்களுக்கு எத்தனை வயசாகுது?" - பார்த்திபன் பிறந்த நாள் சிறப்பு பேட்டி #Exclusive
"ஆமா, உங்களுக்கு எத்தனை வயசாகுது?" - பார்த்திபன் பிறந்த நாள் சிறப்பு பேட்டி #Exclusive

பார்த்திபன் என்றாலே வித்தியாசம். நக்கல், கிண்டலைத் தன் ஸ்டைலில் கூறி நம் புன்னகையில் நகை செய்யும் ஜாலக்காரருக்கு இன்று பிறந்தநாள். அவுட் ஆஃப் த பாக்ஸ் சிந்தனைக்காரரை, அவுட் ஆஃப் டவுன் சென்று கொண்டிருந்தபோது போனில் அழைத்தேன். பிறந்தநாள் வாழ்த்தோடு சேர்த்து சில கேள்விகளை கிஃப்ட் செய்தோம். கேள்விகளும், அவர் படபடவென தன் பிறந்தநாள் ட்ரீட்டாக கொடுத்த பதில்களும் கீழே...

முதல் முதலில் பிறந்தநாள் கொண்டாடியது எப்போது?

முதல் பிறந்தநாளில்...
அழுதுக் 
கொண்டே
ஆடியது.
அந்த ராயபுரம் ஹாஸ்பிடல் நர்சுக்கு தான் நன்றி சொல்ல வேண்டும். பிறந்த சில நிமிடங்கள் வரை ஒரு ஜடம் போல் இருந்த என்னை புட்டத்தில் தட்டி, தொடையில் கிள்ளி ஒரு வழியாய் அழவைத்ததும் பெற்றோர் முகத்தில் அப்படி ஒரு நிம்மதியாம். பிறர் அழுகையும் சிலருக்கு கொண்டாட்டமே.

குழந்தைகள் தினத்தன்று பிறந்தநாள் அமைந்திருக்கிறதே? 

பிறந்தநாளில்...
பிறக்கும் போது
அனைவரும் குழந்தைகள் தானே.

எல்லோர் பிறந்தநாளுக்கும் வித்தியாசமான பரிசு கொடுப்பவர் நீங்கள். உங்களுக்கு வந்த வித்தியாசமான பரிசு எது? யார் கொடுத்தது?

5 பேராக இருந்த நாங்கள்
4 பேரான போது பிறந்த மனஉளைச்சலின் போது வந்த பிறந்தநாளின் போது
3 குழந்தைகளும் கிண்டிய 
2 மினிட்ஸ் நூடுல்ஸை கேக் போல வடிவமைத்து அதன் கொண்டையில் ஒரு மெழுகுவர்த்தியை செருகி அதிகாலை 
1 மணிக்கு HAPPY BIRTHDAY சொல்லி முத்தத்தால் என்னை அணைத்த நொடி  என பூகோள வாழ்கையில் ஒரு சரித்திரப் பதிவு. 

இதுவரை வெளியில் சொல்லாத ரகசியம் எதாவது இருக்கிறதா?

உள்ளேயே சொல்லிக்கொள்கிறேன். ஆமாம், உங்களுக்கு எதாவது கேட்டதா?... இல்லை என்றால் ஏனோ அது வெளியில் கேட்டதில்லை.

உங்களுக்கு நீங்களே பிறந்தநாள் வாழ்த்து சொன்னால், எப்படி வாழ்த்துவீர்கள்?

நவம்பரில் பிறந்தவரின், டிசம்பரில் பிறக்கப்போகும் ஒரிஜினல் குழந்தையான 'கோடிட்ட இடங்களை நிரப்புக' படத்திற்கு முதல் நாள் முதல் காட்சிக்கு நண்பர்களுக்கும் சேர்த்து 10டிக்கெட்டாவது வாங்கி கை தட்டி வாழ்த்துவேன்.

பார்த்திபன் ஒரு இயக்குநராக ______, ஒரு நடிகராக ______. (கோடிட்ட இடங்களை நிரப்புக)

பார்த்திபன் ஒரு இயக்குநராக அக்னி வளர்ப்பவன், ஒரு நடிகராக குளிர் காய்பவன்.

500, 1000 நோட்டுகளை மாற்றிவிட்டீர்களா?

ஒரு P.M ல் நம் P.M அதை சொன்னபோது, இருப்பவனோ இல்லாதவனாகிவிட்டான். இல்லாதவரோ இருப்பவராகிவிட்டார். என்னிடம் கறுப்புப் பணம் இல்லாததால் நிம்மதியில் நானும் நிறைந்துவிட்டேன். பலரை அவர்கள் ஹார்ட்டே அட்டாக் செய்தது.

'பைரவா' விஜய் டீசரில் சொன்னது போல "யாருகிட்டயுமே இல்லாத கெட்ட பழக்கம் எதாவது உங்களிடம் உள்ளதா?"

யாரிமும் இல்லாத கெட்டப்பழக்கம் என்னிடம் இருப்பது என்னவென்றால் யாரிடமும் இல்லாத ஒரு நல்ல பழக்கத்தையாவது நாம் வளர்த்துக்கொள்ள வேண்டுமென்று அன்றாடம் மன்றாடுவது.

அர்ஜெண்டாக ஒரு கவிதை ப்ளீஸ்?

இரவிலே வந்தது
இன்னும் விடியவேயில்லை.
அன்று வெள்ளை'சுதந்திரம்
இன்று கருப்பு'தந்திரம்!

இந்த பிறந்தநாளில் என்ன ஸ்பெஷல்?

உறுதிமொழி. யார் எவ்வளவு சாமர்த்தியமாக, சூசகமாக, அழுத்தமாக கேட்டாலும், அது 11வது கேள்வியாக இருந்தாலும் சொல்லக்கூடாதென!

11. ஆமா, உங்களுக்கு எத்தனை வயசாகுது?

- பா.ஜான்ஸன்