Published:Updated:

கௌதம்... நாங்க இதச் சொல்லியே ஆகணும்! #8YearsofVaaranamAayiram #GVM

Vikatan Correspondent
கௌதம்...  நாங்க இதச் சொல்லியே ஆகணும்! #8YearsofVaaranamAayiram #GVM
கௌதம்... நாங்க இதச் சொல்லியே ஆகணும்! #8YearsofVaaranamAayiram #GVM

உணர்வுகளை கவிதையாகச் சொல்வதில் கௌதம் வாசுதேவ் மேனன் தேர்ந்த இயக்குனர். தந்தையை இழந்த தனது வலியை திரைக்கதையாக்கி, தந்தையின் இடத்தில் சூர்யாவை நாயகனாக்கி கௌதம் இயக்கிய படம் வாரணம் ஆயிரம். ஒரு மேல் நடுத்தர வர்க்க  இளைஞனின்  ஜாலி கேலி பள்ளி கல்லூரி பருவம், அன்பு, பாசம், காதல், பேஷன், வேலை, குடும்பம் என பல்வேறு பரிமாணங்களின் பயணத்தையும், அந்த இளைஞனுக்கும் அவனது அப்பாவுக்கு இடையிலான உறவை அலட்டல் இல்லாமல் அழகாகக் கொண்டாடிய படம் வாரணம் ஆயிரம். 

உறவுகள் தொடர்கதை, உணர்வுகள் சிறுகதை... ஒரு கதை என்றும் முடியலாம்! முடிவிலும் ஒன்று தொடங்கலாம்! என  'அவள் அப்படித்தான்' படப் பாடலை  டைட்டில் கார்டு ஓடும்போதே பின்னணியில் பாடிக்கொண்டிருப்பார் கௌதம். முதல் காட்சிலேயே வயோதிகமும், நோயும் பின்னிப்பிணைந்திருக்கும் சூர்யா சோர்வுடன் நடந்து வருவார், சில நொடிகளில் ரத்த வாந்தி  எடுத்து சிரித்தபடியே செத்துப்போவார் தந்தை சூர்யா. 

ராணுவத்தில் முக்கிய ஆபரேஷன் ஒன்றிக்காக ஹெலிகாப்டரில் பறந்து கொண்டிருக்கும் ராணுவ வீரர் சூர்யாவிடம் விஷயம் சொல்லப்படுகிறது. "ஐ லவ் யூ டாடி"  என்றபடி தனது கடந்த கால நிகழ்வுகளை, அம்மா சொல்லிய அப்பாவின் காதலை, தனது காதலை, காதல் தோல்வியை, திருமணத்தை, சுகமற்ற நிலையில் இருந்த அப்பாவை விட்டுவிட்டு ராணுவ பணியாற்ற வந்ததை என அத்தனையையும் நினைவு கூறுவார். அது தான் கதை.

வாரணம் ஆயிரம்  ரசிகர்களை கவர முக்கிய காரணமே படத்தில் இருக்கும் ஃப்ரெஷ் சீன்கள் தான். ஒருபக்கம்  கிடார் கத்துக்கணும்.. சிக்ஸ் பேக் வைக்கணும் என  ரசிகர்கள் ஷார்ட் டேர்ம் கோல்களை வைத்துக் கொண்டு தெருத் தெருவாக சுற்றிக்கொண்டிருந்தார்கள். இன்னொரு பக்கம் காதல் தோல்வியில் இருந்த வாலிபர்கள் 'என் அஞ்சல மச்சான் அவன்' என சூப் சாங்க்கு தெருக்கள் தோறும் டெய்லி ஆட்டம் போட்டார்கள்.அடிச்சா திருப்பி அடி எனச் சொன்னது முதல், காதலுக்காக அமெரிக்கா சொல்ல ஓகே சொல்வது வரை மகனுக்கு நண்பனாக இருக்கும் தந்தையை திரையில் காட்டியதில் சில  இளைஞர்கள் கொஞ்ச காலம் டாடி... டாடி என சுற்ற ஆரம்பித்தார்கள். கௌதம் டிரென்ட் செட்டரானது இப்படித்தான்.

கௌதம்பட இலக்கணப்படி அக்மார்க் மெக்கானிக்கல் இன்ஜினியரிங் ஸ்டூடன்ட் சூர்யா. திருச்சி மூகாம்பிகை கல்லூரியில் படித்துமுடித்து கடைசி செமஸ்டரை எழுதிவிட்டு ரயில் ஏறுகிறார் சூர்யா, அங்கே மேக்னாவை பார்க்கிறார். பார்த்ததும் காதல்.

 அம்மாவை விட அழகான பெண்ணை பார்த்து விட்டேன் என பரவசமாவார். ஒற்றை கண்ணால் பார்ப்பது, கள்ளச் சிரிப்பு, நிலைகொள்ளாமல் தவிப்பது, இதயத்தை குத்துவது என ஒருபக்கம் கியூட் சூர்யா ஸ்கோர்  செய்ய, சிறு சிறு சிரிப்புகளாலேயே எதிரில் இருக்கும் சூர்யாவை மட்டுமல்ல திரையில் பார்த்துக் கொண்டிருக்கும் ரசிகர்களின் இதயத்தையும் சம்மர் சால்ட் அடிக்க வைத்தார் சமீரா ரெட்டி.  வாரணம் ஆயிரத்துக்கு பிறகு பல படங்கள் நடித்துவிட்டாலும், அநேகம் பேருக்கு ட்ரீம் கேர்ளாக இருந்தது வாரணம் ஆயிரம் சமீரா மட்டும் தான். அது கவுதமின் மேஜிக்கும் கூட. 

கடல் தாண்டி காதல் கைகூடினாலும், கைகள் வெட்டப்பட்டது போல கரையேறுவார் சூர்யா. சமீராவை தொலைத்ததில் வாழ்க்கையே இழந்தது போல நினைத்து அதீத போதைக்கு அடிமையாக, இறுதியில் மகனை மீட்பது கிருஷ்ணன் சூர்யாவே. "உன் பேண்ட் ஷார்ட் எல்லாம் பேக் பண்ணி வைக்கிறேன்,எங்கேயாவது போயிட்டு வா, ஆனா என் கிட்ட திரும்பி வரணும், ஆனால் எல்லாத்தையும் விட்டுட்டு வரணும் என மகனை அனுப்பி வைப்பார் அம்மா 'மாலினி' சிம்ரன். காஷ்மீரில் தன்னைத் தேடி புறப்படும் சூர்யா அதன் பின்னர் ராணுவத்தில் எப்படிச் சேர்கிறார் என்பது மீதி கதை.

ஆரம்பத்தில் கலவையான விமர்சனங்கள் வந்தாலும், லேட் பிக்கப் ஆகி ஓரளவு ஹிட்டாகவே ஓடியது வாரணம் ஆயிரம். முன் தினம் பார்த்தனே முதல் அனல் மேலே பனித்துளி வரை அத்தனை பாடல்களும் அந்த எப்.எம்.காலத்தில்  ரிப்பீட்டட் ஹிட் அடித்தது. ஹாரிஸ் ஜெயராஜ் - தாமரை - கௌதம் கூட்டணி இசையில் மெஸ்மரிக்க இன்னமும் பலரின்  பிளேலிஸ்ட்களில் வாரணம் ஆயிரம் இருக்கிறது.  ரத்னவேலுவின் கச்சிதமான ஒளிப்பதிவு படத்துக்கு அழகூட்டியது. 

திரைக்கதை கொஞ்சம் தூங்க வைக்கிறது, கத்திரி போடலாமே ஆண்டனி என அப்போது முணுமுணுப்புகள் கேட்டாலும், பின்னர் இரண்டாவது, மூன்றாவது முறை டிவியில் பார்க்கும் போது ரசிகர்கள் 2 மணி நேர ஐம்பது நிமிட திரைப்படத்தையும் ரசிக்கவே செய்தார்கள்.

"டாடி.. நீங்க எனக்கு எவ்வளவோ சொல்லிக்கொடுத்துருக்கீங்க, எல்லாமே நியாபகம் வருது.. உங்கள் அழகான முகம் .. உங்கள் உடம்பு .. உங்க குரல்... நீங்க தான் எனக்கு எல்லாமே...! எனக்கு எவ்வளவோ சுதந்திரம் குடுத்தீங்க. எனக்கு வேண்டியது எல்லாமே குடுத்தீங்க . மறக்கவே முடியாது டாடி . you let me live life on my own terms. எனக்குள்ள இருக்க மியூஸிக்குக்கு கூட நீங்க தான் காரணம்"

"லெட்டர்  எழுது டெய்லி  எழுது ...பத்து வருஷம் கழிச்சு படிக்க நல்லாருக்கும்"

"புத்திசாலிங்க எல்லாம் அமெரிக்கா போய் அங்க படிச்சு அங்க வேலை செஞ்சு அங்க டாக்ஸ் காட்டுனா அமெரிக்கா நல்லாருக்கும், அதே இங்க படிச்சு இங்க வேலை செஞ்சு, இங்க டாக்ஸ் காட்டுனா நாடும் நல்லாருக்கும். நானும் நல்லாருப்பேன்ல"என வசனங்களில் கௌதம் ட்ரீட் கச்சிதம்.

சூர்யாவை பொறுத்தவரை வாரணம் ஆயிரம் அவரது சினிமா வாழ்வில் ஒரு மைல் கல். அப்பாவாக. காதலனாக, போதைக்கு அடிமையானவனாக, மெச்சூர்டு பையனாக  என கவுதமின் கதாபாத்திரத்துக்கு உயிர் கொடுத்தது சூர்யா தான். வாரணம் ஆயிரம் பட பாதிப்பு சூர்யாவுக்கு 24 படம் வரை அகலவில்லை. அந்த படத்தை விட இன்னுமொரு பெஸ்ட் பெர்ஃபார்மென்ஸ் கொடுக்க சூர்யாவே திணறிக்கொண்டிருக்கிறார். அது தான் கௌதம்-சூர்யா இணையின் மேஜிக்.

2008 ஆம் ஆண்டுக்கான  சிறந்த தமிழ் படம் எனும் தேசிய விருது வாரணம் ஆயிரத்துக்கு கிடைத்தது. மீண்டும் இணைய வேண்டும், இன்னும் பல மேஜிக்குகளை நிகழ்த்த வேண்டும் என்பது தான் சூர்யா, கௌதம் இரண்டு ரசிகர்களின் எதிர்பார்ப்பும்! 

என்ன இருந்தாலும் சரி... கௌதம்...  நாங்க இதச் சொல்லியே ஆகணும்.. வி லவ் யூ!

- பு.விவேக் ஆனந்த்