Published:Updated:

'நான் பெரியப்பாகிட்ட இருந்து தான் சுடுவேன்!'- பிரேம்ஜி கலகல

'நான் பெரியப்பாகிட்ட இருந்து தான் சுடுவேன்!'-  பிரேம்ஜி கலகல
'நான் பெரியப்பாகிட்ட இருந்து தான் சுடுவேன்!'- பிரேம்ஜி கலகல

என்னமோ நடக்குது படத்தைத் தொடர்ந்து இயக்குநர் ராஜபாண்டி இயக்கியிருக்கும் படம் 'அச்சமின்றி'. விஜய்வசந்த், சமுத்திரக்கனி, சிருஷ்டி டாங்கே, சரண்யா பொன்வண்ணன் எனப் பலர் நடித்திருக்கும் இப்படத்திற்கு இசையமைத்திருக்கிறார் பிரேம்ஜி அமரன். இப்படத்தின் இசை வெளியீட்டு விழா நேற்று மாலை (14.9.16) நடந்தது. 

விழாவின் துவக்கத்தில் நடிகர் விஜய் வசந்த் வரவேற்புரை வழங்கியதும், அதைத் தொடர்ந்து படக்குழுவினர் மற்றும் விழாவில் கலந்து கொண்ட வெங்கட் பிரபு, மிர்ச்சி சிவா, பொன்வண்ணன், யுவன் ஷங்கர் ராஜா பேசியவை....

விஜய் வசந்த்:

அப்பா வேற வந்திருக்கார். என்ன பேசறதுனு தெரியல. இந்தப் படத்துக்கு பணம் போட்ட அப்பாவுக்கும், தயாரிச்ச அண்ணனுக்கும் நன்றி சொல்லிக்கறேன். இந்த விழாவுக்கு வந்திருக்கும் என்னுடைய நண்பர்களான சென்னை 28 டீம் எல்லோருக்கும் நன்றி. எல்லோரும் எங்கள நைட் மட்டும் சந்திக்கிற ஃப்ரெண்ட்ஸ்னு நினைக்காதீங்க, நாங்க பகல்ல கூட சந்திக்கும் ஃப்ரெண்ட்ஸ். படத்துக்கு இசையமைத்திருக்கும் பிரேம்ஜிக்கு வாழ்த்துகள். எல்லோரும் கேட்கும் முன்னாடி நானே சொல்லிடுறேன். சீக்கிரம் உனக்கு கல்யாணம் நடக்கணும். 

ராஜ பாண்டி:

ஃப்லிம் இன்ஸ்டிட்யூட்ல படிச்சு முடிச்சதும் சின்னத்திரை, அதைத் தொடர்ந்து இப்போ சினிமாவுக்கு வந்து, இரண்டு படங்கள் முடிச்சிட்டேன். அதுக்கு காரணம் என்னுடைய தயாரிப்பாளர் தான். அவங்களுக்கு நன்றி. விழாவுக்கு வந்திருக்கும் யுவன் பத்தி எனக்கு ஒரு ரகசியம் தெரியும். எப்போ படம் இயக்கப் போறீங்க யுவன்? நல்ல நல்ல கதைகள் எழுதிவெச்சிருக்கார். சீக்கிரம் படம் இயக்குங்க யுவன்.

சரண்யா பொன்வண்ணன்:

திரையுலகில் இப்போது இந்த 'அம்மா' ஆட்சிதான் என அவருக்கு இன்ட்ரோ கொடுக்க, ஷாக் ரியாக்‌ஷனோடு மைக்கிற்கு வந்தார் சரண்யா. இப்படி எதாவது சொல்லி பயமுறுத்தி நான் சொல்ல வந்தத மறக்கடிச்சிடுவீங்க போலயே. இயக்குநர் ராஜபாண்டி, என் நல்ல நண்பர். எனக்கு எப்போதும் முடி கலைஞ்சாலும் பரவாயில்ல, வேர்த்தாலும் பரவாயில்ல... நடிங்கன்னா நான் பாட்டுக்க நடிச்சிட்டே இருப்பேன். ஆனா, மேடம் என்ன வேர்க்குது? என்ன முடி கலையுது போய் டச் அப் பண்ணுங்கன்னு சொன்னா, அவ்வளோ தான். வசனம் எல்லாம் மறந்திடும்.  பிரேம்ஜி, என்னமோ நடக்குது படத்தில் என்ன பாட வெச்சீங்க, இந்தப் படத்தில் பாடவைக்கலயே, ஏன்? (டைரக்டர் வேணாம்னு சொல்லிட்டார் என பிரேம்ஜி சொல்ல) ஓ, அடுத்த படத்தில் பாட வெப்பீங்கள்ல எனக் கேட்க ராஜபாண்டி, கண்டிப்பா என தலையசைத்தார்.

ரோகினி:

ரொம்ப நாளுக்குப் பிறகு ஒரு தமிழ் படம். நிறைய தெலுங்கு படங்கள் நடிச்சதாலையும், ஒரு நல்ல ரோல் வராததாலையும் தமிழ்ல நடிக்க முடியல. அந்த மாதிரி ஒரு ரோலோடு ராஜபாண்டி வந்ததும் மறுக்க முடியல. 

வெங்கட்பிரபு:

பிரேம்ஜி நல்லா மியூசிக் பண்றானே, என் படத்தில் அவன மியூசிக் பண்ண வெக்கலாமேனு யுவன் என்கிட்ட சொல்வார். அதனால நான் பிரேம் கிட்ட ஒரு ஒப்பந்தம் போட்டுகிட்டேன். நீ என் படத்தில் நடிக்கலைனா மியூசிக் பண்ணுனு. அதுதான் இப்போ வரை ஃபாலோ பண்ணுறோம். சரண்யா மேடம் வாய்ஸ்ல புதுசா ஒரு பாட்டு போட்டு அடுத்தவாரம் சிங்கிள் ட்ராக்கா ரிலீஸ் பண்ணலாமே பிரேம்? அவங்க வருத்தப்படறாங்க பாரு என சொல்ல போட்றலாம் என தம்ஸ் அப் காட்டினார் பிரேம்ஜி. எங்க சென்னை 28 டீம் மொத்தமும் பேசினா டைம் எகிறீடும். அதனால எல்லாருக்கும் சேர்த்து சிவா பேசுவான் என்றபடி நகர்ந்தார்.

மிர்ச்சி சிவா:

கடந்த 3 நாட்கள்ல ஏ.டி.எம்முக்கு அப்பறம் இங்க தான் இவ்வளோ கூட்டத்தப் பாக்கறேன். எனக்கு இந்தப் படத்தில் பாப்பாங்கற பாட்டு ரொம்ப பிடிச்சிருந்தது. ஆனா, ஒன்னே ஒன்னு மட்டும் புரியல... அது என்ன மச்சி இசை இளவல்?... 90 லெவல்.... ஓ... வேற லெவலா?. 

பொன்வண்ணன்:

எனக்கு வசந்த் மேல ஒரே ஒரு வருத்தம்... இவ்வளோ நாளா சினிமால இருக்கீங்க. ஆனா, நம்ம சிவா நடனத்தை விட சிறப்பா உங்களால ஆட முடியலையே. அவர்கிட்ட இருந்து ஏன் கத்துக்கலை? அவர் கேட்டா சொல்லிக் கொடுக்கமாட்டாரா என்ன? அடக்கத்தைப் பாருங்க சிவாவுக்கு எல்லாப் புகழும் இறைவனுக்கேனு மேல கைகாட்றாரு.

தனஞ்செயன்:

படத்தின் தலைப்பு 'அச்சமின்றி'னு இருக்கதால... அச்சமின்றி உடனே வந்துடாதீங்க. இப்போ சூழல் சரியில்ல. ஒரு மூணுவாரம் கழிச்சு கூட வாங்க. நான் சென்னை 28 - 2வுக்கு கூட இதையே சொல்றேன்.

யுகபாரதி:

சட்டமன்ற தேர்தல்ல சொத்து மதிப்பு காட்டுனு சொன்னப்போ அதிக சொத்து காட்டினது அண்ணாச்சி மட்டும் தான். அவர் மகன் தயாரிக்கும் படம்னு கேள்விப்பட்டதும் நிறைய சம்பளம் தருவாங்கனு நினைச்சேன். ஆனா, தயாரிப்பாளர் வினோத்குமார் ரொம்ப கறார். நான் பிரேம்ஜிய இசை இளவல்னு கூப்பிட மாட்டேன். இசைச் சித்தர்னு தான் சொல்வேன். இளவல்னா தம்பினு ஆயிடும், சித்தர்னு சொன்னாதான் பெரிய ஆளா தெரியும். அவருடைய முதல் படத்திலிருந்து நான் தான் பாட்டு எழுதறேன். இனி வர இருக்கும் எல்லா படங்களிலும் நான் தான் எழுதுவேன்னு அவரே இப்போ சொல்வார்னு நம்பறேன். இது நல்ல படம்னு நாங்க சொல்றோம், படம் பார்த்துட்டு ரொம்ப நல்லபடம்னு சொல்வீங்க.

பிரேம்ஜி:

நன்றி விஜய்வசந்த் உங்களுடைய இரண்டாவது படத்துக்கும் இசையமைக்க வாய்ப்பு கொடுத்ததற்கு. வேற வழியில்லை குடுத்து தான் ஆகணும். எங்க நண்பர்கள்ல இன்னும் சிவா மட்டும் தான் இன்னும் எனக்கு இசையமைப்பாளர் வாய்ப்பு குடுக்கல. மத்த எல்லார்கிட்டயும் புக் பண்ணிட்டேன். இயக்குநர் ராஜபாண்டி ரொம்ப நல்லவர், முதல் ட்யூனையே ஓகே பண்ணிடுவார். மாத்த சொல்லமாட்டார். இந்த 'இசை இளவல்' கதைய நான் இங்க சொல்லியாகணும். என்னமோ நடக்குது பட சமயத்தில் எனக்கு ஒரு பட்டப்பெயர் வைக்கலாம்னு முடிவு பண்ணி 'இசை சுனாமி' எப்பிடி இருக்குனு ராஜபாண்டிகிட்ட கேட்டேன். ஏன் நீங்க நல்லா தானே மியூசிக் பண்றீங்க, அப்பறம் ஏன் உங்களை நீங்களே கிண்டல் பண்றீங்க. நான் வெக்கிறேன்னு அவர் தான் பேர் வெச்சார். யுகபாரதி அண்ணன் சொன்ன, இசை சித்தர், சிவா சொன்ன, வேறலெவல் இதை எல்லாம் அடுத்தடுத்த படத்தில் பயன்படுத்திக்கலாம்னு இருக்கேன்.

அப்பறம் நான் எங்க இருந்து ட்யூன் சுடறேன்னு கேட்டீங்க, நான் சுட்டா எங்க பெரியப்பா (இளையராஜா)கிட்ட இருந்து மட்டும் தான் சுடுவேன். ஏன்னா அது எங்க சொத்து, எங்களுக்கு தான் உரிமை இருக்கு. ஒரு முறை அவர்கிட்ட பேசும் போது, அந்த காலத்தில் நீங்க ஒரே சயமத்தில் பத்து படமெல்லாம் இசையமைச்சிருப்பீங்க, அந்த ட்ராக் எல்லாம் எங்க வெச்சிருக்கீங்கனு சொன்னீங்கன்னா நீங்க யூஸ் பண்ணாத ட்யூன் எல்லாம் நான் யூஸ் பண்ணிப்பேன்னு கேட்டேன். அப்போ நீ இது வரைக்கும் காப்பி அடிக்கலையானு கேட்டார், நான் அவர் ட்யூன்ல இருந்து சுட்டு இந்தப் படத்தில் யூஸ் பண்ண பாட்டை பாடி காமிச்சேன். ஆனா, இங்க பாடமாட்டேன், நீங்களே கண்டுபிடிச்சுக்கங்க, அது ஒரு தெலுங்கு பாட்டு. 'என்னமோ நடக்குது' பட சிங்கிளுக்கு, உங்க பெரியப்பா ஸ்டைல்ல ஒரு பாட்டு வேணும்னு ராஜபாண்டி கேட்டார், அவர் மாதிரி ட்யூன் போட முடியாது வேணும்னா அவர் மாதிரி ட்ரெஸ் போட்டுக்கறேன்னு சொல்லி போட்டு போட்டோ ஷூட் பண்ணி போஸ்ட்ரா எல்லா இடத்திலும் ஒட்டினாங்க. அதை பெரியப்பா வீட்டு முன்னாலயும் ஒட்டீட்டாங்க. அவர் என்கிட்ட, என்னடா என்ன கிண்டல் பண்றியானு கேட்டப்போ, இல்ல பெரியப்பா உங்க மாதிரி ட்யூன் கேட்டாங்க, அது முடியாது உங்க மாதிரி ட்ரெஸ் வேணா போடுறேன்னு சொல்லி பண்ணது தான்னு சொன்னேன். என் இசை குரு யுவனுக்கு நன்றி. நான் இசையமைக்க யூஸ் பண்ணும் மேக் சிஸ்டம் அவர் கிஃப்ட் பண்ணினது தான். இப்போ லேட்டஸ்ட்டா புது சிஸ்டம் எல்லாம் வந்திருக்கறதா கேள்விப்பட்டேன் யுவன், பாத்து செய்ங்க. கடைசியா ஒன்னு நான் சுட்டா பெரியப்பாகிட்ட இருந்து தான் சுடுவேன், யுவன் கிட்ட இருந்தும் சுடுவேன். எல்லாம் ஒரே ஃபேமிலி தானே. நன்றி!

யுவன் ஷங்கர் ராஜா:

தயாரிப்பாளர் வினோத் இந்தப் பட ஆடியோ மட்டுமில்லாம மற்ற படங்களின் ஆடியோ ரைட்ஸையும் வாங்க ஆரம்பிச்சா நல்லாயிருக்கும். மற்ற கம்பெனிகள் கம்மி ரேட் தான் தர்றாங்க. பிரேம்ஜி சுடறது பத்தி சொன்னான். அது இன்டன்ஷனா பண்ணனும்னு அவசியம் இல்ல, சும்மாவே அது அப்பா மாதிரி தான் வரும். ஏன்னா அது எங்க ப்ளட்ல ஊறிப்போன விஷயம். அதையும் மீறி பிரேம்ஜி நல்லா மியூசிக் பண்ணக்கூடியவன். பருத்திவீரன்ல வர்ற அறியாத வயசு பாட்டில் ஒரு புல்லாங்குழல் வரும். அது இவன் சேர்த்தது தான். இது மாதிரி என்னுடைய பல பாட்டுகள்ல பண்ணியிருக்கான். வாழ்த்துகள் பிரேம்ஜி.

தயாரிப்பாளர் வினோத் நன்றி சொன்னதும் படத்தின் இசையை சென்னை 28 டீம் வெளியிட இசையமைப்பாளர் யுவன் ஷங்கர் ராஜா பெற்றுக் கொண்டார்.

- பா.ஜான்ஸன்