Published:Updated:

ரூபாய் நோட்டு பிரச்னையை சமாளித்ததா அச்சம் என்பது மடமையடா?

Vikatan Correspondent
ரூபாய் நோட்டு பிரச்னையை சமாளித்ததா அச்சம் என்பது மடமையடா?
ரூபாய் நோட்டு பிரச்னையை சமாளித்ததா அச்சம் என்பது மடமையடா?

வெள்ளிக்கிழமை படம் வெளியாகிறதென்றால், அப்படத்திற்கான ஒட்டுமொத்த செட்டில்மென்ட் பணமும் முந்தைய நாள் முடித்தாக வேண்டும். ரிலீஸ் தேதி உறுதி செய்து, விளம்பரங்கள் வெளியாகியும் கூட, சில நேரங்களில், பேமெண்ட் சிக்கலினால் பல படங்கள் தள்ளிப்போயிருக்கின்றன. அதுமட்டுமின்றி படம் ரிலீஸாகுமா என்று தெரியாமல், முந்தையநாள் நள்ளிரவு வரையிலும் அதற்கான பேச்சுவார்த்தைகள் நடக்கும். பொதுவாகவே ஒரு படத்தை ரிலீஸ் செய்ய பல தடைகளை தாண்டித்தான் ஆகவேண்டும். இந்த நிலையில் திரையுலகிற்கு வந்த அதிர்ச்சி செய்தி தான்  500, 1000 ரூபாய் நோட்டுகள் செல்லாது என்ற அறிவிப்பு. 

பொதுவாக கறுப்பு பணத்தினை, வெள்ளை பணமாக மாற்றுவதற்கான கருவியாகத்தான் சினிமா பார்க்கப்படுகிறது. இதனால் தான் நடிக, நடிகைகளுக்கும் இயக்குநர்களுக்கும் அதிகப்படியான சம்பளம் கொடுக்கப்படுகிறது. பெரிய பட்ஜெட் படங்கள் ரிலீஸ் நாட்களில் வருமான வரித்துறையினரும் நேரத்திற்கு ஆஜராகியும் விடுகிறார்கள். இந்நிலையில் 500, 1000 ரூபாய் நோட்டுகள் செல்லாது என்ற அறிவிப்பால், நவம்பர் மாதம் வெளியாகவிருந்த அதிகப்படியான திரைப்படங்களின் ரிலீஸும் தேதியை மாற்றின. 

ஜீவா நடிப்பில் டிகே இயக்கியிருக்கும் “கவலை வேண்டாம்”, சுராஜ் இயக்கத்தில் விஷால் நடிக்கும் “கத்திச்சண்டை”, விஜய் ஆண்டனியின் “சைத்தான்”, ஜி.வி. பிரகாஷ் நடிக்கும் “கடவுள் இருக்கான் குமாரு” உள்ளிட்டப் படங்களும் பணச்சிக்கலினால் தள்ளிப்போனது.  மோடியின் இந்த அறிவிப்பு வெளியாகி ஒன்பது நாட்கள் ஆகிவிட்ட நிலையில்,  பணப்பரிமாற்ற சிக்கலில் இந்த வாரம் சிக்கிய படங்கள் கடவுள் இருக்கான் குமாரு மற்றும் கெளதமின் “அச்சம் என்பது மடமையடா”. இதில் சிம்புவின் அச்சம் என்பது மடமையடா கடந்த வெள்ளியன்று ரிலீஸாகிவிட்டது. ஆனால் கடவுள் இருக்கான் குமாரு பின்வாங்கி, 18ல் ரிலீஸாகிறது. (இதற்கு வேறு சில சிக்கல்கலும் இருந்தன என்பதும் குறிப்பிடத்தக்கது)

திரையரங்கில் படத்தினை ரசிக்கவரும் ரசிகர்களில் அநேகமானவர்கள் B மற்றும் C ஆடியன்ஸ் தான். இவர்களை நம்பித்தான் திரைப்படத்தின் பெரும்பான்மையான வசூலும் அமைகிறது. ஆனால் 500, 1000 ரூபாய் நோட்டுகள் செல்லாது என்ற அறிவிப்பால், ஒட்டுமொத்த மக்களும் வங்கியில் வரிசைகட்ட ஆரம்பித்துவிட்டார்கள். “செலவுக்கு பணமே இல்லை, இதுல எப்படி பாஸ் படத்துக்கு வரது?” என்பதே ரசிகர்களின் பதில். அதையும் மீறி திரையரங்கிற்கு வந்த ரசிகர்கள் மிகவும் குறைவே. 

இந்நிலையில் இந்த வார ரிலீஸ் படங்களின் வசூலை, மோடியின் அறிவிப்பு பாதித்திருக்கிறதா? இந்த நிலையை சரி செய்ய என்ன வழி என்பது குறித்து, திரைப்பட விநியோகிஸ்தர் திருப்பூர் சுப்பிரமணியத்திடம் நம்மிடம் பேசினார். “  கடந்த வாரம், கடவுள் இருக்கான் குமாரு”, “அச்சம் என்பது மடமையடா”  வெளியாக இருந்தது. பணச்சிக்கலினால் ஒரு படம் மட்டுமே வெளியானது.  இரண்டு படமுமே வெளியாகியிருந்தா கலெக்‌ஷன், இரண்டா பிரிஞ்சிருக்கும். பணதட்டுப்பாடினால் 30 சதவிகித வசூல் குறையும் என்பது உண்மையே. ஆனால் தனியா ஒரே படம் மட்டும் வெளியானதால் அந்த 30 சதவிகித வசூலை ஈடுகட்டவும் முடியுது. அதனால கடந்த வாரம் ரிலீஸான எந்த படத்திற்கும், எந்த வித நஷ்டமும் கிடையாது. இன்னும் மூன்று வாரத்திற்கு, ஒரே நாளில் இரண்டு படங்களுக்கு மேல் ரிலீஸாகாமல் இருந்தால் நல்லது. வாரத்திற்கு ஒரு படம் என்ற கணக்கில் வெளியானால் நிச்சயம் படத்தையும், திரையரங்க வசூலையும் பாதிக்காது.  வசூல் பிரியுறதுக்கான வாய்ப்பும் கிடையாது. 

இந்த நேரத்தில் படம் வெளியாவதில் சின்னச்சின்ன சிக்கல்களும், தடுமாற்றமும் இருக்கத்தான் செய்யும். ஆனால் இரண்டு, மூன்று மாதங்களில் சிக்கல் தீர்ந்த பிறகு அனைத்துமே சரியாகிவிடும். அதற்குள், திரையரங்கம் முழுவதுமாக இணையதளத்திலேயே புக் செய்வது என்ற முறையை கொண்டுவர பேச்சுவார்த்தை நடத்திட்டு இருக்கோம். அதுமட்டுமில்லாம உச்ச நீதிமன்றம் டிக்கெட் விலையை உயர்த்த சொல்லி, தமிழக அரசிற்கு கெடு வைத்திருக்கிறது. நவம்பர் 26க்குப் பிறகு அனைத்து திரையரங்கிலும் ஆன்லைன் டிக்கெட் முறை வந்துவிட்டால், வசூல் வெளிப்படையாக தெரியவரும். திரையரங்கில் டிக்கெட் விலையை உயர்த்தி விற்கவும் முடியாது. படத்தின் மொத்த வருமானத்தில் அதிகப்படியான வருமானம் நடிகர்களுக்கும், இயக்குநர்களுக்குமே போகிறது. அந்த வழக்கம் இந்த முறையால் ஒழிந்துவிடும். நடிகர்களுக்கான சம்பளமும் குறையும்.  இனிமேல் எந்த விதத்திலும் கறுப்புபணம் புழக்கத்திற்கு வராது. மோடியின் இந்த முயற்சி வரவேற்க்கத்தக்கது.  இப்போதைக்கு கொஞ்சம் சிரமமாக இருந்தாலும், இதனால் நல்ல தீர்வு வரும் என்பதற்காக காத்திருப்போம்”  என்றார். 

-பி.எஸ்.முத்து-