Published:Updated:

ரஜினி, கமல், சூர்யாவைப் பார்த்து காப்பி அடிச்சாரா மோடி..!? #Inspiration2Modi

Vikatan Correspondent
ரஜினி, கமல், சூர்யாவைப் பார்த்து காப்பி அடிச்சாரா மோடி..!? #Inspiration2Modi
ரஜினி, கமல், சூர்யாவைப் பார்த்து காப்பி அடிச்சாரா மோடி..!? #Inspiration2Modi

பிரதமர் மோடி ஒவ்வொரு டைமும் புதுசா ஒரு அறிவிப்பு வெளியிடும்போதும் அதை அவர் எப்படி யோசிச்சார்னு யாரும் ஆராய்ச்சி பண்ண வேணாம், நீங்க தமிழ் சினிமா ரசிகரா இருந்தாலே போதும், ஈசியா கண்டுபிடிச்சிடலாம். ஆமாம் ப்ரோ அவர் வெளியிட்ட முக்கால்வாசித் திட்டங்கள் உருவானது நம்ம தமிழ் சினிமாவைப் பார்த்துதான். அவர் என்னதான் நாடு நாடா சுத்திகிட்டு இருந்தாலும் அவருக்கு ஐடியா கொடுக்கிறது என்னமோ நம்ம கோலிவுட்தான். அப்படி என்னென்ன திட்டங்கள் எல்லாம் தமிழ் சினிமா பார்த்து மோடி வெளிட்டார்னு தெரிஞ்சிக்கணுமா... இதோ! 

தூய்மை இந்தியா :

உலகநாயகன் கமலும், கெளதமியும் நடிச்சு சேதுமாதவன் டைரக்‌ஷன்ல வந்த படம்தான் 'நம்மவர்'. படம் வந்த புதுசுல அந்தப் படத்துல வந்த `சொர்க்கம் என்பது நமக்கு சுத்தம் உள்ள வீடுதான்` பாட்டு ஹிட் ஆச்சு. படத்தைப் பற்றிப் பேசுனவங்களைவிட இந்தப் பாட்டைப் பற்றிப் பேசுனவங்கதான் அதிகம். ஒருநாள் பிரதமர் மோடி செக்கோஸ்லோவாக்கியா போனப்போ இந்தப் பாட்டை எதேச்சையா ஃப்ளைட்ல கேட்டுட்டுதான் இந்த ஐடியாவையே யோசிச்சாராம். அந்தப் பாட்டுல எப்படி கேமரா முன்னாடி மட்டும் சுத்தம் பண்ணாங்களோ அதே மாதிரிதான் நிஜத்துலயும் பண்ணாங்க என்பதுதான் இதுல ஹைலைட்டே. இதான் தூய்மை இந்தியா திட்டம் பிறந்த கதை. இப்போ தெரியுதா `கமல் அன்றே சொன்னார்`ங்கிறது எவ்வளவு உண்மைனு!

டிஜிட்டல் இந்தியா :

செக்கஸ்லோவாக்கியா போன பிரதமர் அங்கே இருந்து அமேசானுக்குப் போனப்போதான் இந்த ஐடியாவே தோனிச்சாம். அமேசானுக்குப் போய்கிட்டு இருந்தப்போ வழியில் ஒரு தியேட்டர்ல எந்திரன் படத்தை இந்தியில் பார்த்துட்டு இப்படி ஒரு திட்டத்தை நம்ம நாட்டுல கொண்டுவந்து நாட்டையே டிஜிட்டல் மயமாக்கிடலாம்னு யோசிச்சு இருக்கார். இப்படிப்பட்ட திட்டம் மூலமா நம்ம நாடு மொத்தமும் டிஜிட்டல் மயமாகி அண்ணா நகர்ல ஐஸ் விற்கிற ஆயாகூட ஐஸ்வர்யா கணக்கா ரோபோட் டெக்னாலஜியை கத்துப்பாங்கனு ஒரு நம்பிக்கை நம்ம பிரதமருக்கு. இந்தத் திட்டம் மட்டும் வெற்றிபெற்றால் சிந்தாதிரிப்பேட்டை ஃபுல்லா சிட்டி ரோபோவை ஓடவிடலாம். அப்பறம் மனுசன் படைச்சதுலேயே அழகான மூணாவது விஷயம் டிஜிட்டல் இந்தியாவாதான் இருக்கும். நடக்கும் கண்டிப்பா நடக்கும்!

யோகா டே :

டெல்லியில் உள்ள எல்லோரும் சேர்ந்து கூட்டம் கூட்டமா ஒண்ணா யோகா பண்றதுதான் பாஸு யோகா டே. இந்த மாதிரி யோகா டேவுக்கு மோடி ஐடியா பிடிச்சதே நம்ம ஏ.ஆர்.முருகதாஸ் படத்தைப் பாத்துதான். '7-ம் அறிவு' படத்துல சூர்யா காஞ்சிபுரத்துல இருந்து சீனாவுக்குப் போய் குங்ஃபூ கத்துக் கொடுப்பாரே, அந்த மாதிரி சீனாவுக்கு சுற்றுப்பயணம் போயிட்டு வர்றப்போ நாமளும் ஏன் ஒண்ணா சேர்ந்து யோகா பண்ணக் கூடாதுனு யோசிச்சுதான் இந்த ஐடியாவையே கண்டுபிடிச்சார். இந்தியாவில் உள்ள எல்லோரும் யோகா கத்துக்கிட்டு போதிதர்மர்ல பாதி தர்மர் ஆகி சீனாவுக்கு எதிரா முன்னேறணும்னு மோடி பண்ணின மாஸ்டர் பிளான்தான் ஃப்ரெண்ட்ஸ் இது. யோகா செய்யலாம். ஆனா சூர்யாவுக்கு ஒரு சுருதி மாதிரி நமக்கு யாரும் இல்லையே ப்ரோ!

பழைய பணம் ஒழிப்பு :

பிரதமர் இந்தத் திட்டத்தை எந்தப் படத்தைப் பார்த்து அறிவிச்சார்னு தமிழ் சினிமா ரசிகர்கள் எல்லோருக்குமே தெரியும். சசி டைரக்‌ஷன்ல விஜய் ஆண்டனி நடிச்ச 'பிச்சைக்காரன்' படத்துல இன்வஸ்மென்ட் அனலிஸ்ட் மெய்யப்பன் சார் ஒரு ஐடியா சொல்லுவாரே... அதுதான் இதுக்கு இன்ஸ்பிரேஷன். அவர் எஃப் எம்ல ஐநூறு, ஆயிரத்தை ஒழிச்சா என்னவெல்லாம் நடக்கும்னு சொன்னாரோ, அதெல்லாம் நடக்கும்னு நம்பி அப்படியே அவர் பேச்சைக் கேட்டு அந்தத் திட்டத்தையும் கொண்டு வந்தார். ஆனா அவர் சொன்ன விஷயத்தைத் தவிர மத்த எல்லாம் தாறுமாறா நடந்தது. மெய்யப்பன் சார் ஈசியா சொல்லிட்டார். மக்கள்தான் பாவம் சில்லறைய தேட ஆரம்பிச்சிட்டாங்க !

ஸ்மார்ட் சிட்டி :

டைரக்டர் ஷங்கரோட இன்னோரு படத்தைப் பார்த்துதான் இந்தத் திட்டத்தையும் பிரதமர் மோடி கொண்டு வந்தார். ரஜினி நடிச்ச 'சிவாஜி' படத்துல அவர் ஒரு கிராமத்தோட வரைபடத்தைக் காட்டி `இப்படி இருக்கிற உங்க ஊர் இப்படி ஆகிடும்`னு சொல்வார். ரஜினி அப்படி சொல்ற அந்த வசனத்தைக் கேட்டுதான் மோடிக்கு இநந்த் திட்டமே தோனுச்சாம். அதுல ரஜினி பூப்பாதையில் இருந்து சிங்கப்பாதைக்கு மாறுவார்ல... அதே மாதிரி மோடியும் சிங்கம் பாதைக்கு மாறுன மொமென்ட்தான் இது. இதுக்கெல்லாம் ஐடியா கொடுத்த ஷங்கருக்கே எல்லாப் புகழும் சேரும்.

மேக் இன் இந்தியா :

மேக் இன் இந்தியா திட்டத்தையும் மோடி ஒரு பழைய தமிழ்ப் படத்தைப் பார்த்துதான் உருவாக்கினாரு ப்ரோ. முரளியும், பார்த்திபனும் வெளிநாடு போக காசு கொடுத்து ஏமாந்திட்டு கடைசியா உள்ளூர்லயே தொழில் பண்ணி பெரிய ஆள் ஆகிடுவாங்க. அந்த மாதிரியே நம்ம மக்களையும் உள்ளூர்லயே வேலை செஞ்சு பெரிய ஆளாக வரச் சொல்லி, கடைசியா மாளவிகா மாதிரியே ஒரு பொண்ணைப் பார்த்து கல்யாணம் பண்ணிக்க வைக்கிற திட்டம்தான் இது. அட கேட்குறான் மேக்குரான் கம்பெனி மாதிரி எதுலயாவது மாட்டிக்கிறதுக்கு பதிலா நம்ம ஊர்லயே எதுனா நல்ல வேலையா செய்யலாம்ல!

அதெல்லாம் விடுங்க... பிரதமர் வெளிநாடு போனதே 'நாடோடிகள்' சசிகுமாரையும், 'வாரணம் ஆயிரம்' சூர்யாவையும் பார்த்துதானே. இந்த மாதிரி தமிழ்ப் படத்தைலாம் பார்த்த நம்ம பிரதமர் மோடி அப்படியே ராமராஜனோட `சொர்க்கமே என்றாலும் அது நம் ஊரைப் போல வருமா` பாட்டையும் கேட்டா நல்லாதான் இருக்கும். பிரதமருக்கே பிரகாசமான ஐடியா கொடுக்கிற நம்ம டைரக்டர்ஸூக்கு சமர்ப்பணம்!

-லோ.சியாம் சுந்தர்