Published:Updated:

தமிழ் சினிமாவின் பேவரைட் ஷூட்டிங் ஸ்பாட்கள்!

தமிழ் சினிமாவின் பேவரைட் ஷூட்டிங் ஸ்பாட்கள்!
தமிழ் சினிமாவின் பேவரைட் ஷூட்டிங் ஸ்பாட்கள்!

தமிழ் சினிமாவில் சில சமயம் ஹீரோ, ஹீரோயினைத் தாண்டி பின்னணியில் உள்ள லொக்கேஷன்கள் நம்மை ரசிக்க வைக்கும். 'இந்த இடம் அந்தப் படத்துல வர்றதுதானே' என சுற்றுலா செல்லும்போது அங்கே நின்று போட்டோ எடுத்து சமூக வலைதளங்களில் அப்லோட் செய்து லைக்ஸ் வாங்கும் மக்கள்தான் நாம் எல்லாரும். அப்படி நம்மை ரசிக்க வைக்கும், லைக்ஸ் வாங்க வைக்கும் சில லொக்கேஷன்கள்.

பாண்டிச்சேரி பிரெஞ்சு கட்டடங்கள் :

தமிழக இளைஞர்களின் ஹாட் ஸ்பாட் இது. பளபள ரோடுகள், வெளிநாட்டு கட்டடக்கலை என ஃபாரீன் பீல் தருவதால், இயக்குநர்களின் ஏகபோக சாய்ஸ் பாண்டிச்சேரிதான். நானும் ரவுடி முழுக்க இங்கே எடுக்கப்பட்டதுதான். அதிலும் அங்கே இருக்கும் மஞ்சள் நிற பிரெஞ்சு கட்டடங்கள் - ஆசம் ஆசம்! பிரெஞ்சு தூதரகம், டெஸ் ஆர்ட்ஸ் கஃபே என எக்கச்சக்க மஞ்சள் நிற கட்டடங்கள் தமிழ் சினிமாவில் தலை காட்டியிருக்கின்றன. இதற்காகவே ஹெரிடேஜ் டவுன் செல்லும் இளைஞர்கள் அவற்றின் முன் நின்று செல்ஃபி எடுத்துத் தள்ளுகிறார்கள். 

பின்னி மில்ஸ், சென்னை :

தமிழ் சினிமாவின் டிஷ்யூம் டிஷ்யூம் தளம். 'போக்கிரி'யில் இளைய தளபதி துரத்தி துரத்தி சுடுவாரே.. அந்த இடம்தான். நிஜப் பெயர் பக்கிங்காம் - கர்நாடிக் மில்ஸ் என்றாலும் உரிமையாளரான பின்னியின் பெயரால் அழைக்கப்படுகிறது. 1996-ல் மூடப்பட்ட இந்தத் தொழிற்சாலை, பின் எக்கச்சக்க படங்களில் கெஸ்ட் ரோலில் நடித்தது. 2014-ல் இதை இடித்துவிட்டு அப்பார்ட்மென்ட் கட்டப்போவதாக அறிவிப்புகள் எல்லாம் வெளியாகின. நம் குழந்தைகளுக்குக் காட்ட பின்னி மில்ஸ் படங்களில் மட்டுமே இருக்கும்.

பெசன்ட் நகர் ஆர்ச் :

பிரமாண்ட கடல், கொஞ்சம் தள்ளி வெள்ளை வெளேரென ஒரு பழைய பில்டிங். பெசன்ட் நகர் கடற்கரையைக் காட்டும் கேமராக்கள் இந்த வளைவைக் காட்டாமல் தப்பிக்கவே முடியாது. கடலில் மூழ்கிக்கொண்டிருந்த ஆங்கிலேய பெண் ஒருவரைக் காப்பாற்றிவிட்டு உயிர்விட்ட ஸ்கிமிட் என்பவரின் ஞாபகமாக கட்டப்பட்ட ஆர்ச் இது. சமீபத்தில்தான் இதை புதுப்பித்தார்கள். இப்போது இன்னும் மின்னுகிறது.

நேப்பியர் பாலம் :

மெரினாவிற்கும் கோட்டைக்கும் நடுவே இருக்கும் இந்தப் பாலம் சென்னையின் முக்கிய லேண்ட்மார்க். 'ஆயுத எழுத்து' படத்தின் நான்காவது ஹீரோ. 'தெறி'யில் இதைத்தான் க்ராஃபிக்ஸ் செய்திருந்தார்கள். 150 வயதைத் தாண்டிவிட்டாலும் கெத்தாக நிற்கிறது. அதுவும் இரவு நேரத்தில் கலர்ஃபுல் லைட் வெளிச்சத்தில் தகதகவென மின்னுவதைப் பார்க்க ஐ தெளசண்ட் வேண்டும். அந்த லைட்டிங் செட்டப்பிற்காகவே சிட்னி ஓபரா ஹவுஸை அலங்கரித்தவர்களை அழைத்து வந்தார்கள்.

தெப்பக்குளம், மதுரை :

ஒரு காலத்தில் மதுரை மண்ணை சலிக்க சலிக்கக் காட்டியது தமிழ் சினிமா. அந்தப் படங்களில் எல்லாம் தவறாமல் இடம் பிடிப்பார் வி.ஐ.பி வண்டியூர் மாரியம்மன் கோயிலின் தெப்பக்குளம். நாயக்கர் மஹால் கட்டுவதற்கான மூலப்பொருட்களை வைக்கத் தோண்டப்பட்ட இடம் பின்னாட்களில் குளமானது. பக்கத்திலேயே மீனாட்சி அம்மன் கோயிலும் என்பதால் மதுரை சினிமாக்கள் தவற விடாத இடங்கள் இவை.

ப்ரோக்கன் பிரிட்ஜ், அடையார் :

'ஆயுத எழுத்து', 'சென்னை - 28' போன்ற படங்களில் பாதியாய் நிற்கும் ஒரு பாலம் இருக்குமே. அது இதுதான். அடையாற்றுக்கு குறுக்கே இருந்த இந்தப் பாலத்தின் ஒரு பகுதி நீரில் அடித்துச் செல்லப்பட, அன்றிலிருந்து சிங்கிளாய் நிற்கிறது. பகலில் ஷூட்டிங் ஸ்பாட்டாகவும், இளைஞர்களின் மீட்டிங் ஸ்பாட்டாகவும் இருக்கும் இந்த இடம் இரவில் ஆள் நடமாட்டமில்லாமல் வெறிச்சோடிக் கிடக்கிறது. இதை சாக்காக வைத்து பேய்க்கதைகளை எல்லாம் கிளப்பிவிடுகிறார்கள் சில சேட்டைக்காரர்கள்.

ராயபுரம் துறைமுகம் :

சமீபகாலமாக வட சென்னையை வட்டமிடும் சினிமாக்காரர்கள் தவறாமல் காட்டும் லொக்கேஷன் இது. அதான் ஜி 'மான் கராத்தே' படத்தில் சிவகார்த்திகேயன் ஓப்பனிங் பாட்டுக்கு ஓடி வருவாரே! காசிமேட்டில் இருக்கும் இந்த பிரமாண்ட மீன்பிடித் துறைமுகத்தில் ஆயிரக்கணக்கான படகுகள் வாசம் செய்கின்றன. பக்கத்திலேயே மீன் வியாபாரமும் சுறுசுறுவென நடப்பதால் நேட்டிவிட்டிக்கு பஞ்சமே இல்லை.

அதிரப்பள்ளி :

பார்த்தாலே பயமுறுத்தும் பிரமாண்ட அருவி. ஆனாலும் அசராமல் கேமராவில் அடக்குகிறார்கள் சினிமாக்காரர்கள். சாலக்குடியில் இருக்கும் இந்த அருவியின் உயரம் 260 அடி. நூறு அடி தள்ளி நின்றாலும் நம்மை சாரலில் நனைக்கிறது இந்த அருவி. இதை எக்கச்சக்கப் படங்களில் ஏகப்பட்ட ஆங்கிள்களில் காட்டிவிட்டார்கள் நம் இயக்குநர்கள். அதுவும் 'குரு' படத்தில் 'வெண்மேகம் முட்ட முட்ட' பாட்டுக்கு உலக அழகி ஆடும் காட்சிகள் - வாவ்டா ரகம்!

-நித்திஷ்