Published:Updated:

’என்னமோ போடா மாதவா’க்கு வயசு 28. இன்னமும் ஃபேஸ்புக்ல வாழுது!” - ஜனகராஜ் ரிட்டர்ன்ஸ் #VikatanExclusive

Vikatan Correspondent
’என்னமோ போடா மாதவா’க்கு வயசு 28. இன்னமும் ஃபேஸ்புக்ல வாழுது!” - ஜனகராஜ் ரிட்டர்ன்ஸ் #VikatanExclusive
’என்னமோ போடா மாதவா’க்கு வயசு 28. இன்னமும் ஃபேஸ்புக்ல வாழுது!” - ஜனகராஜ் ரிட்டர்ன்ஸ் #VikatanExclusive

”காலம் கடந்தும் ரசிகர்கள் மனதில் நிற்பவர்கள்” எல்லாம் பழைய ஸ்டைல். நமது அன்றாட பேச்சில் கலந்திருக்கும் காமெடி நடிகர்கள் தான் உண்மையான லெஜன்ட்ஸ். கவுண்டமணி, வடிவேலு மாதிரி வெகு சிலருக்கே அந்த சிறப்பு உண்டு. அந்த வரிசையில் தவிர்க்கவே முடியாத மனிதர் ஜனகராஜ். இன்றும் மனைவி ஊருக்கு செல்ல பஸ் ஏறியதும், ஒவ்வொரு கணவனும் மனதுக்குள் போடும் ஸ்டேட்டஸ் ஜனகராஜ் டயலாக்தான். நம்ம கே.பாலி மீண்டும் நடிக்க வருகிறார் எனக் கேள்விப்பட்டதும் மடக்கி பிடித்தோம்.

பத்து வருஷத்துக்கு பிறகு சினிமா எப்படி மாறியிருக்கு? 
"நிறையவே மாறியிருக்கு. ஷூட்டிங் நடக்கிற மாதிரியே தெரியலை. ரொம்ப குறைவான ஆட்கள்தான் இருக்கிறாங்க. பிலிம் கேன் வேஸ்டாகுதுங்கிற கவலை போயி டிஜிட்டல்,எஸ்.எல்.ஆர்ன்னு புதுசு புதுசா வந்துடுச்சு. ப்லிம் ரோல் வீணாகுறதில்லை என்பதால நேரம் ரொம்ப முக்கியமாயிடுச்சு. எவ்வளவு சீக்கிரம் ஷூட்டிங் முடிக்கிறாங்களோ அவங்க நல்ல இயக்குநர்கள்ன்னு ஆகிடுச்சு. " 

உங்க நண்பர் சூப்பர்ஸ்டார் கிட்ட பேசினிங்களா? 
"இல்ல ரொம்ப நாளாச்சு பேசி. எனக்கு உடம்பு சரியில்லாம போச்சு. அப்புறம் அவருக்கு உடம்பு சரியில்லாம போச்சு. முன்னாடி மாதிரி அடிக்கடி பார்த்துக்க முடியலை. ஆனால் மின்னல் மாதிரி ரெக்கவர் ஆகி வந்து படபடன்னு படம் நடிக்கிறார் பாருங்க... அதான் ரஜினி"

கபாலி பார்த்தாச்சா?
" கபாலி 100வது நாள் போஸ்டர் பார்த்தேன். ரொம்ப சந்தோஷம், சீக்கிரமே பார்த்துடுவேன். 'தம்பிக்கு எந்த ஊரு, படிக்காதவன், ராஜாதிராஜா, அண்ணாமலை, பாட்ஷா'ன்னு அவர்கூட எனக்கு எவ்வளவோ ஸ்வீட் மெமரீஸ் இருக்கு. 'கபாலி' படம் மட்டுமில்ல, ரஜினியவே பார்க்கணும் போலத்தான் இருக்கு. இப்ப அவருகூட சேர்ந்து நடிச்சா ரொம்ப இன்ட்ரஸ்டிங்கா இருக்கும்ல"

சினிமா ஆட்கள் உங்களை சந்திக்க வருகிறார்களா?
"இன்டஸ்ட்ரியில இருந்து நிறைய பேர் வந்து பார்த்துகிட்டுதான் இருந்தாங்க. கொஞ்சம் ஓகே ஆகிட்டேன்னு தெரிஞ்சதும் ஏகப்பட்ட வாய்ப்பு தேடி வந்தது. எனக்கே ஆச்சர்யமா போயிடுச்சு இன்னமும் நம்மளை மறக்காம இருக்காங்களேன்னு, ஏன்னா நான் நடிச்சு முழுசா பத்து வருஷமாச்சு. இப்பவும் எதாவது புது இயக்குநர்கள் 'இந்த கேரக்டர் உங்கள நினைச்சு தான் கிரியேட் பண்ணியிருக்கேன். புரொடிஸர் கிடைச்சவுடன் வரேன் சார்'ன்னு வந்து சொல்லிட்டுதான் இருக்காங்க. " 

இதுக்கு முன்ன நடிச்ச வரைக்கும் உங்களுக்கு திருப்தியா ? 

"இது நான் ஆசைபட்டு எடுத்துக்கிட்ட துறை.அதனால திருப்தியெல்லாம் நடிப்பு துறையில் யாருக்கும் வராது. ஆனா ஒவ்வொரு நாளும் தமிழ் மக்களின் அன்றாட வாழ்க்கையில நாம இருக்கோம்ன்னு தெரிய வந்தபோது ஒரு நிம்மதி வந்தது. பேஸ் புக்கில் என் ப்ரெண்ட் பையனுக்கு ஒருத்தர் போட்ட கமெண்ட் "என்னமோ போடா மாதவா". அந்த படம் வந்து 28 வருஷம் ஆகுது. ஜனகராஜ் தமிழ் மக்களின் மனசில இருக்கேன். நிறைய பேருக்கு கிடைக்காத கிஃப்ட் இல்லையா இது"

பாண்டியராஜன் - ஜனகராஜ் காம்போ அந்தக் காலத்தில் வைரல் மெட்டீரியல் ஆச்சே....
பாண்டியராஜன் படம் எடுத்தா என்னை மிஸ் பண்ணவே மாட்டார். அவரும் இப்ப டைரக்‌ஷனை விட்டுட்டு நடிப்பு, டிவின்னு போயிட்டார். ஆனா எனக்கு நடிப்பில் இன்னொரு முகம் கொடுத்தது அவர்தான். 

-வரவனை செந்தில்
படம்- சு.குமரேசன்