Published:Updated:

'500, 1000 ரூபாய் நோட்டுகள் எல்லாம் தெய்வம்ங்க...' - கலா மாஸ்டரின் உருக்கம்!

'500, 1000 ரூபாய் நோட்டுகள் எல்லாம் தெய்வம்ங்க...' - கலா மாஸ்டரின் உருக்கம்!
'500, 1000 ரூபாய் நோட்டுகள் எல்லாம் தெய்வம்ங்க...' - கலா மாஸ்டரின் உருக்கம்!

'மானாட மயிலாட' டான்ஸ் ஷோ மூலம் சின்னத்திரையிலும் பிரபலமானவர் டான்ஸ் மாஸ்டர் கலா. ஜோதிகாவுக்கு 'சந்திரமுகி' படத்தின் பாடலுக்கு நடனம் கற்றுக் கொடுத்தவரும் இவரே. மோகன்லாலின் பல படங்களுக்கு இவரையே டான்ஸ் மாஸ்டராக வர வேண்டும் என்று கேட்டு கற்றுக்கொடுக்க சொல்வாராம். அப்படி பல சினிமா பிரபலங்கள் முக்கியத்துவம் கொடுக்கும் மாஸ்டர் தான் கலா. அவரிடம் ஒரு பேட்டி...

'மானாட மயிலாட' நிகழ்ச்சிக்கு வருவதே இல்லையா..? உங்களை பார்க்க முடிவதில்லையே?

'மானாட மயிலாட நிகழ்ச்சியை நான் தான் தயாரித்து வருகிறேன். இந்த வருடம் ஜனவரி மாதம் ஆரம்பிச்சப் பயணம். இப்போ வரைக்கும் ஓடிட்டே இருக்கேன். அதனால் என்னால அந்த நிகழ்ச்சியில் நடுவரா உட்கார முடியல. மத்தபடி, நான் எங்கெங்கே போகிறேன். என்ன புராஜக்ட் பண்ணிட்டு இருக்கேன் என்பதை மக்களுக்கு சொல்வதற்காகவே அடிக்கடி ஃபேஸ்புக்கில் என்னுடைய ஒவ்வொரு அப்டேட்டையும் பதிவு செய்துட்டே இருக்கேன். இப்போ மலையாளத்தில் மூன்று படங்கள், கேரள முதலமைச்சரோட படம், திலீப் குமார் தயாரிப்பில் உருவாகும் படங்களிலும் வேலை பார்த்துட்டு இருக்கேன். 

வேற என்ன புராஜக்ட் பண்ணிட்டு இருக்கீங்க?

கொச்சின் ல ஏஷியன் நெட் மோகன் லால் சினிமாவுக்கு வந்து 35 வருடத்திற்கும் மேல் ஆனதால் அதை மையமாக வைத்து அவர் வாழ்க்கையை பேசும் விதமாக ஒரு நிகழ்ச்சிக்கு ஏற்பாடு செய்தார்கள். 35 நிமிடத்தில் அவருடைய வாழ்க்கையை திரும்பி பார்க்க வைக்கும் ரீவைண்ட் ஸ்கிரிப்டை செய்திருந்தோம். குறைந்தது 40 நிமிடமாவது ஆகும் என்று நான் சொன்னேன். சரி என ஒப்புக் கொண்டு இந்த புராஜக்டை முடித்தோம். இதில் 40 நிமிடத்திற்கும் 22 காஸ்டியூமை மாற்றி ஒவ்வொருவருக்கும் பிடிக்கும் வேட்டி, ஜீன்ஸ், வட இந்திய சூட் போன்று பல காஸ்டியூமுடன் மேடைக்கு வந்து கலக்கினார் மோகன் லால். நிஜமா சொல்றேன் அவரை தவிர வேற ஒருவரால இந்த சாதனையை செய்யவே முடியாது. இந்த நிகழ்ச்சியில் நடிகைகளின் நினைவுகளை பகிரும் போது அவர்களை மேடைக்கு அழைப்போம். அதில் ஆஷா சரத், மம்தா போன்றோர் வந்து இன்னும் நிகழ்ச்சியை கலகலப்பாக மாற்றினாங்க. இந்த நிகழ்ச்சி ஹிட் அடிச்சதால, சிங்கப்பூரிலும் இதே மாதிரி மறுபடியும் செய்தோம். இந்த நிகழ்ச்சியிலும் பல நடிகைகள் கலந்துக்கிட்டாங்க.  இந்த நிகழ்ச்சிக்கு ஏஷியன் நெட்  விருதும் கிடைச்சது.  

TNPL க்கு ஒரு விளம்பரம் பண்ணினேன். நல்ல ஹிட் அடிச்சது. குவைத் தமிழ் சங்கம் டான்ஸ் ஷோவ்ல நடுவரா கலந்துக்கிட்டேன். இதே மாதிரி சுவிட்சர்லாந்துலயும் ஒரு நடனப் போட்டியில ஒரு நடுவரா கலந்துக்கிட்டேன். 

அப்போ சுத்திட்டே இருக்கேனு சொல்லுங்க?

வெளியூர் ஷோக்களுக்கு பெரும்பாலும் நான் தனியாக போகமாட்டேன். என் கணவர்தான் என் கூட வருவார். அதனால போர் அடிக்காது. ஆனால், அடுத்தடுத்து பயணம் பண்றது ரொம்ப கஷ்டமா இருக்கு. 

மானாட மயிலாட நிகழ்ச்சியை சில காப்பி அடிக்கிறதா சொல்றாங்களே?

அப்படி எல்லாம் இல்லை. ஒவ்வொரு சேனலும் தனக்கான தனித்தன்மையையும், வித்தியாசத்தையும் காண்பிக்குது அவ்வளவுதான். எது எப்படி இருந்தாலும் நடுவர்களை தேர்ந்தெடுப்பதில் சரியாக இருந்துவிட்டால் கண்டிப்பாக அந்த நிகழ்ச்சி வித்தியாசமாகத்தான் இருக்கும். நான் 2006 ல் 'ஜோடி நம்பர் ஒன்'  இரண்டு சீசன்ல உட்கார்ந்தேன். அப்போ நான் கர்ப்பமாக இருந்தேன். அதனால அலையக் கூடாதுனு அந்த நிகழ்ச்சியில் நடுவரா உட்கார்ந்தேன். அதுக்கப்புறம் அடுத்தடுத்த புராஜட்கள் ஒவ்வொன்றிலும் ஒவ்வொரு வித்தியாசத்தை காண்பித்துக் கொண்டிருக்கிறேன்.

குழந்தைகளை ரியாலிட்டி ஷோ என்கிற பெயரில் கெடுப்பதாக பெற்றோர்கள் சொல்கிறார்களே..?

நீங்கள் சொன்னால் நம்ப மாட்டீர்கள். எத்தனையோ பெற்றோர்கள் என் பிள்ளை ஒரு முறையாவது மேடையில் ஆடிவிடக் கூடாதா என ஏங்குகிறார்கள். வீட்டில் குடும்பத்தோடு உட்கார்ந்து பார்க்கிறார்கள். இங்கு போட்டியில் கலந்து கொள்ளும் குழந்தையை சரியான பாதைக்கு கொண்டு செல்வதே என்னுடைய நோக்கம். ஒரு ஸ்கூல்ல நல்ல டீச்சர் இருந்தாதான் குழந்தை நல்ல படியா வளரும். கலைஞர் டிவி 'ஓடி விளையாடு பாப்பா' நிகழ்ச்சியில் ரிஜக்ட் ஆன பல பேர் விஜய் டி.வி.யில் நல்லாப் பண்ணிட்டு இருக்காங்க. அதே மாதிரி 'மானாட மயிலாட' நிகழ்ச்சியில் ரிஜக்ட் ஆன பலரும்  இப்போ ஜி தமிழ்ல நல்லாப் பண்ணிட்டு இருக்காங்க. ஏன் 'காக்கா முட்டை' ஐஸ்வர்யா ராஜேஷ் 'மானாட மயிலாட 3' நிகழ்ச்சியில் முதல் பரிசு வாங்கினவங்க தான். அப்போ நான் சொன்னேன், 'ரியாலிட்டி ஷோ எல்லாம் போதும், இனிமே படத்தில் கவனத்தை செலுத்துனு. அப்போ எல்லாம் என்கிட்ட அடிக்கடி வந்து, படம் கிடைக்க மாட்டேங்குது என சொல்லியிருக்காங்க. 'பொறுமையா இரு கிடைக்கும்'னு சொல்லியிருக்கேன். இப்போ பாருங்க எத்தனைப் படம். இப்போ அவங்களும் டாப் ஹீரோயின் லிஸ்ட்ல இருக்காங்க. எங்களுக்கு இதைவிட வேற பெரிய சந்தோஷம் என்ன இருக்கப் போகுது. 

எனக்கு என் அம்மா பரதநாட்டியம் கத்துக் கொடுத்தாங்க. நான் இப்போ கெட்டாப் போயிட்டேன். குழந்தைகளுக்கான ஷோக்களில் குடிப்பது, தவறான பார்வையை ஏற்படுத்தும் ஆடைகளை அணிவது இதுக்கெல்லாம் தடை விதிச்சிருக்கோம். ஒரு ரியாலிட்டி ஷோவுக்கென சில விதிமுறைகள் இருக்கு. அதை மீறி நடத்த மாட்டோம். பிளாக் பாடி ஷூட் போட்டுடுதான் ஆட வைப்பேன். அப்பா, அம்மா பர்மிஷன் இல்லாம குழந்தைகள் டான்ஸ் பண்ண மாட்டாங்க. இன்னிக்கு பல குழந்தைகள் தான் குழந்தைகளுக்கும், பெரியவங்களுக்கும் அட்வைஸ் பண்றாங்க. 'அண்ணாவும், தங்கச்சியுமா ஆடுனீங்களா சூப்பர்னு' சொல்லிதான் அவங்க பாராட்டுவேன். 

டி.வி.க்கு வந்தவங்க அடுத்த கட்டமாக சினிமாவுக்கு போகணும். அதே போல சினிமாவுல இருந்து டி.வி.க்கு வந்தவங்க எல்லாருமே பெரிய அளவில் அனுபவம் வாய்ந்தவங்கதான். அதனால நம்முடைய இடத்தை எப்போதும் தக்க வச்சுக்கணும்.

நீங்க நிகழ்ச்சியில் சொல்ற வார்த்தையை வச்சு கலாய்க்கிறாங்களே அதை எப்படி எடுத்துக்கிறீங்க?

சந்தோஷப்படணும். இப்பவும் பல பேர் எம்.ஜி.ஆர், சிவாஜி மாதிரி பண்றாங்க. அது அவங்கள கலாய்க்கிறது இல்ல. அது அவங்களோட தனித்தன்மை. அதனாலதான் அவங்களை காப்பி அடிக்கிறாங்க. நடிகை ராதா, கலா மாஸ்டர் இவங்க வார்த்தை மக்கள் மனதில் பதிந்துடு. அதை திரும்ப திரும்ப சொல்றதுல என்ன தப்பு?. எப்ப மானாட மயிலாட வந்ததோ அப்போ இருந்து இப்போ வரைக்கும் நான் வந்து ஸ்டேஜ்ல பேசணும் என எதிர்பார்க்கிறாங்க. நடன நிகழ்ச்சியில் ஸ்கின் பிரச்னை இருக்கிற ஒரு பொண்ணு அழுதது. எனக்கு ஹெல்த் பிரச்னை இருந்தது. அதனால தான் ஸ்டேஜ்ல ஆடப் பயந்தேன். உங்க முன்னாடி ஆடிக் காட்டணும்னு தோணுச்சு. அதான் ஆடினேன்னு சொன்னாங்க. ஸ்டேஜ்லயே எழுந்து நின்னு கைத்தட்டினேன். அதற்குப் பிறகு, இப்போ பல மேடைகளில் தைரியமா ஆட ஆரம்பிச்சுட்டாங்க. இன்னும் சொல்லப் போனா நானும் ஒரு காலத்துல அழகா இல்லாதவளாக இருந்தவள்தான். அழகுக்கும், திறமைக்கும் சம்பந்தமே இல்லைங்க. திறமை இருந்தா எந்த விஷயத்தையும் சாதிக்க முடியும். 

இத்தனை வருஷம் சினிமா துறையில் இருந்திருக்கீங்க நடிக்கணும்னு தோணலயா? 

எனக்கு நிறைய வாய்ப்புகள் வந்தது. பிசி ஶ்ரீராம், சந்தோஷ் சிவன் எல்லோரும் கூப்பிட்டாங்க. நடிகர் சந்தானம் எவ்வளவோ கூப்பிட்டார். என்ன கலாய்க்கலாம், ஆனா என் நடனத்தை கலாய்க்க விட மாட்டேன். நடனத்துக்குள்ள போகும் போதுதான் அதோட உண்மையான அனுபவம்  புரியும்.

500, 1000 ரூபாய் நோட்டுகளில் எவ்வளவு மாற்றினீர்கள்?

பொதுவாக வீட்டில் அதிகம் பணம் எடுத்து வைப்பதை விரும்ப மாட்டேன். சரியாக வருமான வரி கட்டி வருகிறேன். என் கணவர் என்னை விட நேர்மையானவர்.  ஒரு விஷயம் எல்லோர்கிட்டையும் சொல்லியே ஆகணும் 500, 1000 ரூபாய் நோட்டு செல்லாது என அரசு அறிவித்தது. அடுத்த நிமிடம் அதற்கான மதிப்பு போய்விட்டதா..? அடுத்த நாளே பலரும் ஃபேஸ்புக், ட்விட்டரில் கடலை மடிக்கும் காகிதகாம 500, 1000 ரூபாய் நோட்டுகளை பயன்படுத்துவது போல, தண்ணீர் கப்பல் விடுவது போல், குழந்தை மாடியில் இருந்து 500, 1000 ரூபாய் நோட்டுகளை தூக்கி எறிவது போல் இப்படி பல படங்களும், மீம்ஸூம் வந்தது. இதை பார்க்கும் போது மனசுக்கு கஷ்டமாக இருந்தது. பணத்திற்கே இந்த மதிப்புத் தான் என்றால், மனிதர்களுக்கும் இதே மதிப்பு தானே கிடைக்கும். தேவையான அளவுக்கு பயன்படுத்திக் கொண்டு, நன்றியில்லாமல் தூக்கி எறிந்துவிட்டுப் போய்விடுவார்களோ என நினைக்கத் தோணுது. 500, 1000 ரூபாய் நோட்டு எல்லாம் தெய்வம்ங்க. அதை எப்படி எல்லாம் மிஸ் யூஸ் பண்றாங்க. மனுஷங்களையும் அப்படித்தானே மிஸ் யூஸ் பண்ணுவாங்க. மனிதர்களுக்கு நிதானம் ரொம்ப முக்கியம். திடீர்னு தடை என சொன்னா கஷ்டம்தான். அதற்காக இப்படி செய்வது தவறு. அந்த பேப்பரை மிஸ் யூஸ் பண்ணாதீங்க.

-வே. கிருஷ்ணவேணி 

அடுத்த கட்டுரைக்கு