Published:Updated:

‘வில்லன்களே இல்லாத படம்’..! - ‘கவலை வேண்டாம்’ இயக்குநர் டிகே

‘வில்லன்களே இல்லாத படம்’..! - ‘கவலை வேண்டாம்’ இயக்குநர் டிகே
‘வில்லன்களே இல்லாத படம்’..! - ‘கவலை வேண்டாம்’ இயக்குநர் டிகே

‘சிவா மனசுல சக்தி’, ‘கோ’, ‘நீதானே என் பொன்வசந்தம்’, ‘என்றென்றும் புன்னகை’ என ஒரு படம் விட்டு ஒரு படம் ஹிட் கொடுத்துக்கொண்டிருந்த நடிகர் ஜீவா, அடுத்தடுத்து ‘யான்’, ‘போக்கிராஜா’, ‘திருநாள்’ படங்களினால் கொஞ்சம் தடுமாறிவிட்டார். தற்போது அவர் நடித்து, வருகிற வியாழக்கிழமை ரிலீஸாகயிருக்கும் ‘கவலை வேண்டாம்’ திரைப்படம் அவருக்குக் கவலை அளிக்காமல் இருக்குமா..? அவரது கேரியரில் இது ரொம்ப முக்கியமான கட்டம், அதை எப்படி நீங்கள் சரிகட்டப் போகிறீர்கள்..? என பல கேள்விகளுடன் ‘கவலை வேண்டாம்’ இயக்குநர் டிகே-விடம் பேச ஆரம்பித்தோம். இவர் ‘யாமிருக்க பயமே’ படத்தின் மூலம் தமிழ் சினிமாவுக்குள் என்ட்ரியானவர்.

“இது ஜீவாவுக்கு மட்டும் முக்கியமான கட்டம் இல்லை, எனக்கும் தான். முதல் படம் ’யாமிருக்க பயமே’ காமெடி பேய் படம்னு ஒரு டிரெண்ட் செட் பண்ணுச்சு. ‘இவன் அடுத்த படத்தில் என்ன செய்ய போறான்’னு பலபேரின் கண்ணும் என் மேல் இருக்கு. அதுமட்டுமில்லாமல் தயாரிப்பாளருக்கும் இந்தப் படம் ரொம்ப முக்கியமானதுதான். அதை எல்லாம் சரி செய்து, எனக்கு, நடிகர் ஜீவா, தயாரிப்பாளர் எல்ரெட் குமாருக்கும் ‘கவலை வேண்டாம்’ திரைப்படம் சந்தோஷத்தை கொடுக்கும்னு எனக்கு முழு நம்பிக்கை இருக்கு, படமும் ரொம்ப சூப்பராக வந்திருக்கு.”

‘கவலை வேண்டாம்’ எந்த மாதிரியான படம்..?

“ஜாலியான, குடும்பத்தோட எல்லாரும் உட்கார்ந்து ரசிச்சு பார்க்கிற மாதிரியான படம். குடும்பத்தில் இருக்கும் அத்தனை உறவுகளையும் இணைக்கிற மாதிரி இருக்கும். படத்தில் காதல், ரொமான்ஸ், காமெடி, சென்டிமென்ட்டுக்கு பஞ்சம் இருக்காது. அப்பா-பையன் பாசம், ஃப்ரண்ட்ஷிப்னு எல்லா விஷயங்களும் இருக்கு. பக்கா பாஸிட்டிவ்வான படம். எதுவுமே முடியாதுனு நினைக்கிற ஆள்கூட நம்மால் எல்லாமே பண்ணமுடியும்னு தன்னம்பிகை கொடுக்கிற படமாக இருக்கும்.”

படத்தில் கவலை வேண்டாம்னு யார் யார்கிட்ட சொல்றாங்க..?

“ஹாஹா... படத்தில் கவலை வேண்டாம்னு அவங்க அவங்களுக்கே சொல்லிக்கிறாங்க. லைக், ஆல் இஸ் வெல் மாதிரி.” 

ஜீவாவும் காஜல் அகர்வாலும் முதல்முறையாக ஜோடி சேர்ந்து நடிக்கிறாங்க, அவங்க கெமிஸ்ட்ரி எப்படி வந்திருக்கு..?

ரொம்ப சூப்பரா வந்திருக்கு. அவங்களுக்கான சோலோ காட்சிகளிலும் சரி, காதல் காட்சிகளிலும் சரி, இரண்டு பேருமே ரொம்ப அழகாக நடிச்சிருக்காங்க. குறிப்பாக, காஜல் அகர்வால் இதற்கு முன் நடிச்ச  படங்களை விட இந்தப் படத்தில் ரொம்ப நல்லா நடிச்சிருக்காங்க. அவங்களோட நடிப்பு பெருசா பேசப்படும். ஜீவாவைப் பற்றி சொல்லணும்னா, அவர் தங்கம். ரொம்ப சிறந்த நடிகர். அவர் பெரிய நடிகராகயிருந்தாலும் அவங்க அப்பா பெரிய தயாரிப்பாளராக இருந்தாலும் அதை அவர் வெளியில காட்டிக்க மாட்டார். செம ஜாலியான ஆள், அவரோட வேலை செய்றதும் ரொம்ப ஈசி. ஒரு டைரக்டருக்கு கரெக்ட்டான ஆள். டைரக்டர் என்ன சொன்னாலும் செய்வார். தலைகீழாக நிற்க சொன்னாக்கூட நிற்பார். காஜலும் அப்படித்தான். இவங்க இரண்டு பேருடன் நூறு படங்கள் கூட வேலை செய்யலாம்.” 

படத்தில் நடிச்சிருக்கிற மற்ற நடிகர்கள் பற்றிச் சொல்லுங்க..?

“பாபி சிம்ஹா ஒரு முக்கியான ரோல்ல நடிச்சிருக்கார். பாபி சிம்ஹா இந்தப் படத்தில் வில்லனாக நடிச்சிருக்கார்னு வெளியில் பேசிக்கிறாங்க. ‘கவலை வேண்டாம்’ படத்தில் வில்லன்களே இல்லை. எல்லாருக்குமே பாஸிட்டிவ் கேரக்டர் தான். சுனைனாவும் சுருதி ராமகிருஷ்ணனும் ஜீவாக்கு ஜோடியாக நடிச்சிருக்காங்க. அது என்ன டுவிஸ்ட்னு படத்தைப் பார்த்து தெரிஞ்சுக்கோங்க. அப்பறம் மயில்சாமி, மனோபாலா, ஆர்.ஜே.பாலாஜி, பாலசரவணன்னு பலர் நடிச்சிருக்காங்க. இசையமைப்பாளர் லியோன் ஜேம்ஸ், ஒளிப்பதிவாளர் அபிநந்தன் ராமானுஜம், ஆர்ட் டைரக்டர் செந்தில் ராகவன், பாடலாசிரியர் கோ சேஷா என முற்றிலும் புது டீமோடு தான் வொர்க் பண்ணியிருக்கேன். கதைக்கு என்ன தேவையோ, படத்துக்கு எது அழகு சேர்க்குமோ அதை கரெக்ட்டா பண்ணியிருக்காங்க. அவுட்புட்டும் ரொம்ப பிரமாதமா வந்திருக்கு.” 

’பேய் படம், ஃபேமிலி படம்... அடுத்தது..?

“அடுத்ததும் பேய் படமாகக்கூட இருக்கலாம். எல்லாரும் ‘யாமிருக்க பயமே’ படத்தை இரண்டாம் பாகம் எடுக்குறீங்களானு கேட்குறாங்க. ‘யாமிருக்க பயமே’ படத்தை இரண்டாம் பாகம் எடுக்க மாட்டேன். ஆனால், அதே போல் வேற ஒரு பேய் படத்தை எடுப்பேன். அதுக்காக என்னோட அடுத்தப் படம் பேய் படம் தான்னு உறுதியா சொல்ல முடியாது. பக்கா ஆக்‌ஷன், மாஸ் படம் பண்ணனும்னு ஆசையிருக்கு. ‘கவலை வேண்டாம்’ படம் ரிலீஸ் ஆன பின்னாடி தான் தெரியும்.” 

‘கவலை வேண்டாம்’ படத்தோட இரண்டு டீசரிலும் இரட்டை அர்த்த வசனங்கள் இருக்கே..?

“பொதுவா இரட்டை அர்த்த வசனங்கள் எல்லாம் முகம் சுளிக்கக்கூடியதாக இருக்கும். ஆனால், இந்த படத்தில் வரும் இரட்டை அர்த்த வசனங்கள் அப்படி இருக்காது. குடும்பத்தோடு என்ஜாய் பண்ற மாதிரிதான் இருக்கும்.” 

அக்டோபர் 7-ம் தேதியே படம் ரிலீஸ்னு விளம்பரங்கள் வந்ததே..?

“ஆமா, அந்த டைம்ல நிறைய படங்கள் வந்தனால, எங்களுக்குள்ளையே பேசி வெச்சிக்கிட்டு கொஞ்சம் லேட்டா ரிலீஸ் பண்றோம்.”

அதென்ன உங்க பெயர், டிகே..?

“என்னை யாரும் என்னோட பெயரைச் சொல்லி கூப்பிடமாட்டாங்க. எல்லாரும் டிகேனு தான் கூப்பிடுவாங்க. அதனால படத்திலையும் டிகேனு போட்டுட்டேன். என்னோட பெயர் டி.கார்த்திகேயன்.”

- மா.பாண்டியராஜன்