Election bannerElection banner
Published:Updated:

‘சின்னக் கண்ணன் அழைக்கிறான்’ #பொக்கிஷ பதிவு

‘சின்னக் கண்ணன் அழைக்கிறான்’ #பொக்கிஷ பதிவு
‘சின்னக் கண்ணன் அழைக்கிறான்’ #பொக்கிஷ பதிவு

‘சின்னக் கண்ணன் அழைக்கிறான்’ #பொக்கிஷ பதிவு


சென்னை, ராதாகிருஷ்ணன் சாலையில் உள்ள மியூஸிக் அகாடமிக்கு அருகிலேயே, இன்னொரு மியூஸிக் அகாடமி உண்டு.  அந்த அகாடமியை, இசைத் துறையின் பல்கலைக் கழகம் என்றும் சொல்லலாம். சங்கீத ஜாம்பவான் என்றும் பெருமைபட விவரிக்கலாம். அந்த இசைமேதை... டாக்டர் பாலமுரளி கிருஷ்ணா.
‘சின்னக் கண்ணன் அழைக்கிறான்’ என்று இவர் பாடி அழைத்தால் போதும்... அந்தக் கண்ணனே ஓடி வந்துவிடுவான். அவரின் குரலும் அதில் இருந்து வெவ்வேறு விதமாக வெளிப்படுகிற குழைவும், நெகிழ்வும் இசை ரசிகர்களுக்கு பெரு விருந்தாகவும் அருமருந்தாகவும் திகழும் என்பதில் சந்தேகமே இல்லை. 
காலமெல்லாம் இசையால் நம்மையும் இறைவனையும் தன்வசப்படுத்தியவர் இன்று இறைவன் வசப்பட்டுவிட்டார்.  சக்தி விகடன் வாசகர்கள் பங்கேற்கும் சக்தி சங்கமம் நிகழ்ச்சிக்காக அந்த இசைமேதையுடன் நடத்திய கலந்துரையாடலின் சில பகுதிகளை அவருடைய நினைவைப் போற்றும் வகையில் இங்கே உங்களுக்காக...


மூன்று தலைமுறைக்கும் மேலாக கர்னாடக சங்கீதத்தில் ஒரு ராஜாங்கமே நடத்திவரும் மேதையைப் பார்க்கப் போகிறோம் என்கிற லேசான பதற்றம் ப்ளஸ் பயத்துடனும் வந்திருந்தனர், வாசகர்கள்.


‘‘நீங்க எல்லாரும் வந்தது ரொம்ப சந்தோஷம். வாங்கோ, வாங்கோ!’’ என்று பளீர் புன்னகையும், வாஞ்சையான பார்வையுமாக வரவேற்றார் பாலமுரளி கிருஷ்ணா.


‘’நீங்க எல்லாரும் பாடுவேளா? பாட்டுன்னா, கச்சேரி பண்றதையெல்லாம் சொல்லலே! சாதாரணமா பாடுவீங்களானு கேட்டேன். எல்லாரும் பாடுங்கோ. பாட்டு, ஆத்மாவிலேருந்து வர்ற விஷயம். அதனாலதான் ஒரு பாட்டு, நம்மளை உற்சாகமாக்கிடுது. மொத்தக் கவலையையும் போக்கிடுது’’ என்றார், சிரித்துக் கொண்டே!
ஒரு சின்ன அமைதி. அந்த அமைதி, கேள்விகள் கேட்க வாசகர்களை தயார் படுத்துவதுபோல அமைந்தது. அதையடுத்து வாசகர்கள் மெள்ள கேள்விகளைக் கேட்கத் துவங்கினார்கள்.


 ‘‘உங்களுக்குள் இருந்த இசை ஞானத்தை முதலில் அறிந்தவர் யார்?’’ என்று வாசகி சுகன்யா உரையாடலைத் தொடங்கி வைத்தார்.
 ‘‘எல்லாம் பகவானின் அருள். இதோ... இந்த நிமிஷம் வரைக்கும் குரல் பயிற்சி எடுத்துக்கிட்டதில்லை. சங்கீதம் பெரிசா தெரியாது. கச்சேரிக்கு முன்னாடி, இப்படி இப்படில்லாம் பாடணும்னு எந்தத் திட்டமிடலும் வெச்சுக்கறது இல்லை. இது, தெய்வ சங்கல்பம். இதைப் பெருமையாவோ தன்னடக்கமாவோ சொல்லிக்கலை. நிஜம் இதுதான்.
ஏழு வயசுல கச்சேரி பண்ண ஆரம்பிச்சேன். பாருபள்ளி ராமகிருஷ்ணய்ய பந்துலுதான் என்னோட குருநாதர். அவர்தான் எனக்கு என்னெல்லாம் வரும், எங்கிட்டேருந்து எதெல்லாம் வெளிக் கொண்டுவர முடியும்னு பயிற்சி கொடுத்து உருவாக்கினார். என் அப்பா பட்டாபிராமய்யா மிகப்பெரிய புல்லாங்குழல் வித்வான். அம்மா பிரமாதமா வீணை வாசிப்பாங்க. தாத்தாவும் இசைக்கலைஞர்தான். பாரம்பரியம் மிக்க ஓர் இசைக் குடும்பத்துலேருந்து வந்ததுகூட, என் இந்த வளர்ச்சிக்கும் வாழ்க்கைக்கும் காரணமா இருக்கலாம்.’’


 ‘‘இசைத் துறை மட்டும் இல்லாம, சினிமாலயும் நடிச்சிருக்கீங்க. பக்த பிரதலாதன் படத்துல நாரதரா நடிச்சதுக்கு நிறையப் பாராட்டுக்கள் குவிஞ்சுதாமே..?’’ என்று வாசகி சுபஸ்ரீ கேட்டார்.
 ‘’நாரதர் வேஷத்துக்குப் பாராட்டுக்கள் கிடைச்சது இருக்கட்டும். ஆனா, அதுக்குப் பிறகு சான்ஸ் ஏதும் வரலியே! தவிர, அடுத்தடுத்தும் நாரதர் மாதிரியான கேரக்டரே வந்துச்சு. நான் வேணாம்னுட்டேன். ஏன்னா, நாரதருக்கு ஜோடி கிடையாது. ஹீரோயின் இல்லாம எதுக்காக  நடிக்கணும்னு விட்டுட்டேன். சான்ஸ் வேற கிடைக்கலியா... நல்லதாப் போச்சுனு  பேசாம இருந்துட்டேன்’’ என்று வெடிச்சிரிப்பு சிரித்தார் பாலமுரளி கிருஷ்ணா. அவருடன் சேர்ந்து வாசகர்களும் பலமாகச் சிரித்தார்கள்..


 ‘’நீங்கள் பல படங்களுக்கு இசையமைத்திருக்கிறீர் கள். அதில் உங்களுக்கு மிகவும் பிடித்தது என்று எதைச் சொல்வீர்கள்?’’ என்று வாசகர் நல்லசிவம் கேட்க...
‘’மன்னிக்கணும். பிடிக்காத விஷயங்களை நான் செய்யறதே இல்லை. ஒரு விஷயத்தை பிடிச்சுப் பண்ணணும். மனசு லயிச்சுப் பண்ணணும். பிடிச்சும் லயிச்சும் பண்ற விஷயங்கள் நல்ல விதமாத்தான் வெளிப்படும்னு நம்பறேன்!’’ என்று உறுதியான பதில் வந்தது பாலமுரளிகிருஷ்ணாவிடம் இருந்து.


 ‘’கற்றுக் கொடுத்த குருவின் பெயரைக் காப்பாற்றிவிட்டதாக முதன்முதலில் எப்போது உணர்ந்தீர்கள். அவருக்கு எதைச் சமர்ப்பிக்க விரும்புகிறீர்கள்?’’ - என்று வாசகி சாருலதா தன் கேள்வியை முன்வைத்தார்.
‘’என் குருநாதர், வருடாவருடம் அவருடைய குருவுக்கு ஆராதனை விழா நடத்துவார். அந்த விழாவில் என்னையும் பாட வைச்சார். எனக்கு அடுத்தாப்ல, முசுனூரி சூரிய நாராயண மூர்த்திங்கறவரோட, கதா காலட்சேபம் இருந்துச்சு. மிகப்பிரமாதமா கதை சொல்வார். அதைக் கேக்கறதுக்கு ஆயிரக் கணக்கில் மக்கள் கூடுவாங்க. அவருக்கு முன்னாடி என்னைப் பாட வைச்சா, அந்தக் கூட்டம் என் பாட்டையும் கேக்கும்னு யோசிச்சு, நேரம் ஒதுக்கினாங்க. 8 மணிக்கு ஆரம்பிச்சு, 9 மணிக்கு முடிக்கணும். ஆனா, பாட்டு பாட ஆரம்பிச்சதும் நேரம் போனதே தெரியலை எனக்கு. பத்தரை மணியைத் தாண்டியும் பாடினேன். அப்புறம் குருநாதர் வந்து, ‘போதும்டா! முடிச்சுக்கோ’ன்னார். மேடைக்குப் பின்பக்கம் என்னை கூட்டிட்டுப் போய் திருஷ்டி சுத்திப் போட்டார். கட்டியணைச்சுக் கண்ணீர் விட்டார். இதுதான் குருவின் பெயரைக் காப்பாத்தறதுன்னு நினைக்கிறேன். தவிர, எல்லாமே குருவுக்கு சமர்ப்பணம். இந்த ஞானம், புகழ், கௌரவம் எல்லாத்தையுமே அவருக்கு சமர்ப்பணம் செய்றேன்.


என்னோட குரு, ஆல் இண்டியா ரேடியோல டாப் ஆர்ட்டிஸ்ட்! நான் ஏ கிரேடு. குருவுக்கு வெள்ளிக்கிழமை பாட வாய்ப்பு கிடைக்கும். எனக்கு ஞாயித்துக் கிழமை கிடைக்கும். இதுக்காக ரெண்டு பேரும் வியாழக்கிழமை சாயந்திரம் சென்னைக்குக் கிளம்புவோம். ரயில்ல அஞ்சு ரூபா டிக்கெட். குருவோட சகோதரர் மயிலாப்பூர் லஸ் பக்கத்துல இருந்தார். அவரைப் பார்த்துட்டு ரேடியோ ஸ்டேஷனுக்குப் போவோம். வெள்ளிக் கிழமை குருநாதர் பாடுவார். அப்புறம் சனிக் கிழமை ரெஸ்ட். ஞாயித்துக்கிழமை நான் பாடுவேன். அப்புறம் கிளம்பி ஊருக்கு வருவோம். அப்பா என் குருநாதரா இருந்தார். அதேபோல குருநாதரும் அப்பா மாதிரியே என்னைப் பார்த்துப் பார்த்து வளர்த்தார்’’ என்று பழைய நினைவுகளில் மூழ்கித் திரும்பினார்.


‘’உங்களின் இஷ்ட தெய்வம் எந்தக் கடவுள்னு தெரிஞ்சுக்கலாமா சார்?’’ - என்று வாசகி புவனேஸ்வரி கேட்டார்.
‘’நமக்கு இஷ்டமான தெய்வத்தை தேர்ந்தெடுக்கறதா  அல்லது தெய்வத்துக்கு இஷ்டமா நாம இருக்கறதா... இதுல எது முக்கியம்? கடவுளுக்கு இஷ்டமா நாம நடந்துக்கணும். அது இசைத் துறையாகட்டும், வேற துறையாகட்டும். எதுவா இருந்தாலும் சரி... வாழ்க்கையை அர்த்தம் உள்ளதா மாத்திக்கணும். எல்லாருக்கும் உபகாரம் பண்ணிண்டு, ஒருத்தருக்கும் சின்ன உபத்திரவம்கூட பண்ணாம, வாழ்ந்தா... கடவுளுக்கு இஷ்டமானவங்களா நாம ஆகிடலாம். ஒவ்வொரு மனுஷாளுக்கும் இதுதான் அவசியமும்கூட!  
மத்தபடி என் இஷ்ட தெய்வம்னு நீங்க கேட்டதால சொல்றேன். அனுமார்தான் என் இஷ்ட தெய்வம். சின்ன வயசுலேருந்து வந்த பழக்கம் இது. எந்தவொரு செயலா இருந்தாலும் சரி, சட்டுன்னு அனுமார்கிட்ட ஒரு வேண்டுதல் வைச்சிருவேன். அவரோட திருநாமத்தை அடிக்கடி சொல்லிக்கிட்டே இருப்பேன். ஸ்ரீஅனுமன் மேல அலாதி பிரியமும் பக்தியும் உண்டு எனக்கு’’ என்றார்.


‘’இந்தக் கால இசையைக் கேட்கிறீர்களா? கர்னாடக சங்கீதத்துடன் மேற்கத்திய இசையும் கலப்பதை எப்படிப் பார்க்கிறீர்கள்?’’ என்று வாசகி பத்மலதா கேட்டார்.
‘’ஓய்வு நேரங்கள்ல கேப்பேன். ஆனா, ஓய்வுக்குன்னெல்லாம் நேரம் ஒதுக்கறதே இல்லை. எப்பவும் ஏதாவது பண்ணிக்கிட்டே இருக்கணும். அதான் என் விருப்பம். தவிர, கர்னாடக சங்கீதம் மேற்கத்திய சங்கீதம்னெல்லாம் தனித் தனியா இருக்கிறதா நினைக்கலை. காதுக்கு இனிமையான சங்கீதம் எதுவா இருந்தாலும், அது கர்னாடக சங்கீதமே!’’ என்றார் அழுத்தம் திருத்தமாக.


‘’உங்களிடம் பயிற்சி பெற்றவர்கள் நிறையப் பேர் உண்டு. குறிப்பாக, கமல்ஹாசன்கூட உங்களிடம் சங்கீதம் கற்றுக் கொண்டிருக்கிறாராமே...’’ - என்று வாசகர் ஸ்ரீநிவாசன் கேட்க...
‘’கமல், மகா கலைஞன். கூர்மையான புத்திசாலித்தனம் உண்டு. எதையும் சட்டுன்னு உள்வாங்கிப்பார். அவ்வளவு ஏன்... இப்போ நம்ம தமிழ்நாட்டை ஆட்சி செஞ்சிட்டிருக்கிற ஜெயலலிதா கூட எங்கிட்ட பாட்டு கத்துட்டிருக் காங்க. இசைல பெரிய ஆர்வம் உண்டு அவங்களுக்கு. அவங்க குரலும் பாடுறதுக்கு அத்தனை தோதா இருக்கும். அவங்க கச்சேரிலயோ இல்ல சினிமாலயோ இன்னும் நிறையப் பாடியிருக்கலாம். ஏன் பாடலைனு தெரியலை. ஆனா, இப்ப கமலும் சரி, ஜெயலலிதாவும் சரி... என்னை அடியோடு மறந்துட்டாங்கன்னுதான் சொல்லணும்’’ என்று வெள்ளந்தியாகச் சொல்லிப் புன்னகைத்தார் பாலமுரளி கிருஷ்ணா.


‘’மேடையில் கச்சேரி பண்ணும்போது கையில், பாக்கெட்டில் அல்லது பக்கத்தில் ஏதேனும் ஸ்வாமி படம் வைத்துக்கொள்ள வேண்டும் என்பது போன்ற சென்டிமென்ட் உண்டா, உங்களுக்கு?’’ என்று வாசகி லலிதா கேட்டார்.
‘’அப்படியெல்லாம் எந்த சென்டி மென்ட்டும் கிடையாது. இந்தக் கலர், இந்த ஸ்வாமி படம், இப்படி திசை பார்த்து உட்கார்றதுன்னு எந்தப் பழக்கமும் கிடையாது. பகவான் எப்பவும் எல்லா பக்கத்திலயும் பக்கத் துணையா இருக்கார். பக்க வாத்தியக்கார கலைஞர்களும் பக்கத் துணையா இருக்காங்க. எதிர்ல இருக்கற ரசிகர்களும் நம்ம மேல மிகுந்த வாத்ஸல்யத்தோட, பிரியத்தோட இருக்காங்க. இவங்க எல்லாரையும் திருப்திப்படுத்தணும்; சந்தோஷப் படுத்தணும்; பெருமைப்படுத்தணும். அவ்வளவுதான் நினைச்சுப்பேன்!
திருவையாறில் ஒரு ஆராதனை விழா. அப்ப எனக்கு 11 வயசு. அங்கே விழாவுல, முத்தையா பாகவதர் மடியில உக்கார்ந்திருந்தேன். ஸ்வாமிக்கு அபிஷேகம் நடந்துட்டிருந்துது. யாரோ ஒருத்தங்க பாடிட்டிருந்தாங்க. அவர் பாடி முடிச்சதும், ‘நீ பாடு... நீ பாடு...’னு முத்தையா பாகவதர் சொல்ல, நான் பாட ஆரம்பிச்சேன். மொத்தக் கூட்டமும் ‘யார் பாடுறது?’னு சுத்திச் சுத்திப் பார்க்க ஆரம்பிச்சுது. கடைசியாதான், முத்தையா பாகவதர் மடியில உக்கார்ந்திண்டிருக்கிற பய பாடுறான்னு தெரிஞ்சுது அவங்களுக்கு.
பெங்களூரு நாகரத்தினம்மாங்கறவங்க, ‘நாளைக் காலைல இவன் பாடட்டும். நான் என் டைமை இவனுக்காக விட்டுத் தரேன்’னு சொன்னாங்க. மறுநாள், மாபெரும் இசைக்கலைஞர்களோட நிகழ்ச்சிகளுக்கு நடுவே பாடினேன். ‘என் நேரத்தையும் பையனுக்கே தரேன்’னு அரியக்குடி ராமானுஜ அய்யங்கார் முன்வந்தார். மகாராஜபுரம் விஸ்வநாத அய்யரும் அவர் நேரத்தை எனக்குத் தந்து பாடச் சொன்னார். ஓர் இளம் பாடகன், திருவையாறு கச்சேரில ஒன்றரை மணி நேரம் பாடினது, அதுதான் முதல்முறை. மேடையேறும்போது பல தருணங்கள்ல, 11 வயசுல திருவையாறில மேடையேறின அனுபவம்லாம் சட்டுன்னு நினைவுக்கு வரும். இப்பவும் ஞாபகம் வந்துடுச்சு!’’ என்று சொல்லிப் பூரிக்கிறார் பாலமுரளி கிருஷ்ணா.
பெயருக்கேற்றாற்போலவே, ஒவ்வொரு பதிலிலும் ஒரு குழந்தைத்தனம் கொஞ்சுகிறது டாக்டர் பாலமுரளிகிருஷ்ணாவிடம். எந்தக் கேள்வி கேட்டாலும், சட்சட்டென்று பதில் சொல்லிவிட்டு, கலகலவெனச் சிரிப்பதில் தான் அவரின் ஆரோக்கியமும் தெளிவும் நிறைந்திருக்கிறதுபோலும்.


 திருவிளையாடல்ல ‘ஒருநாள் போதுமா’ன்னு ஆணவ த்வனியில பாடியிருப் பீங்க. இன்னொரு படத்துல ‘தங்கரதம் வந்தது வீதியிலே’னு குழைஞ்சும் இழைஞ்சும் பாடியிருப்பீங்க. இதுக்காக, என்ன மாதிரியான முயற்சிகள் எடுத்துக் கிட்டீங்க?’’ என்று கேட்டார் வாசகி ராதா சுதர்சனம்.
‘‘இதுக்குப் பெரிசா மாத்திப் பாடணும், முயற்சி எடுத்துப் பாடணும்னெல்லாம் அவசியம் இல்லை. படத்துல அந்தக் கேரக்டரோட குணாதிசயம் என்ன, எந்தச் சூழல்ல இந்தப் பாட்டு வருது, இந்தப் பாட்டின்போது யார் யாரெல்லாம் இருப்பாங்க, பாட்டுக்கு வாயசைக்கிற நடிகர் யாருனு டைரக்டர்கிட்டயும் மியூஸிக் டைரக்டர்கிட்டயும் முழு விவரத்தை யும் கேட்டுத் தெரிஞ்சுக்கிட்டுப் பாடிட வேண்டியதுதான்!’’


 ‘இந்தக் காலத்தில் சங்கீதம் கற்றுக் கொள்ளும் குழந்தைகளுக்கு உங்களின் அறிவுரை என்ன?’’  இது வாசகர் சேதுராமனின் கேள்வி. 
‘‘அரைகுறையா கத்துக்காதீங்க; முழுசா கத்துக்கோங்க. ஆசைப்பட்டு கத்துக்கோங்க. அப்பா ஆசைப்படுறார், அம்மா விரும்பறானு இல்லாம, நீங்களா விரும்பிக் கத்துக்கணும். சங்கீதத்துல எல்லா நுணுக்கங்களையும் ஈடுபாட்டோட கத்துக்கணும். அந்தக் காலத்துல எல்லாம் இந்த அளவுக்கு வசதிகளோ வாய்ப்புகளோ இல்லை. இங்கேருந்து அங்கே போய் கத்துக்கறதுக்கு, போயிட்டு வர வாகன வசதிகளும் கிடையாது.
இன்னிக்கு எல்லாமே இருக்கு. கத்துக் கொடுக்கறதுக்கும் நிறையப் பேர் இருக்காங்க. போக வர, சாலையும் நல்லாருக்கு. வாகன வசதிகளும் இருக்கு. ரேடியோ, டிவி, மேடை, சபாக்கள்னு நிறைய வாய்ப்புகளும் கிடைக்குது. போட்டிகள் வைக்கிறாங்க. பரிசுகள் கொடுத்து ஊக்கப்படுத்துறாங்க. அதனால, எதைக் கத்துக்கறதா இருந்தாலும், ஆழ்ந்த ஈடுபாட்டோடயும் உத்வேகத்தோடயும் குழந்தைகள் கத்துக்கணும்!’’ என்றார் பாலமுரளி கிருஷ்ணா.


‘‘நீங்களே புதுப்புது ராகங்களை அறிமுகப்படுத்தியிருக்கிறீர்கள். கீர்த்தனை களை இயற்றியிருக்கிறீர்கள். இதுபற்றிக் கொஞ்சம் சொல்லுங்களேன்’’ என்று வாசகி புவனேஸ்வரி கேள்வி எழுப்பினார்.
‘’இசையில் மொத்தம் 72 மேளகர்த்தாக்கள். ஆனால் அந்த மேளகர்த்தாக்களைப் பற்றி ஒரு சர்ச்சை உண்டு. சம்பூர்ண மேளகர்த்தா, அசம்பூர்ண மேளகர்த்தானு ரெண்டுவிதம். இதுல, அசம்பூர்ண மேளகர்த்தாவை உருவாக்கியவர் வேங்கடபதி. சம்பூர்ண மேளகர்த்தாவுக்கு கோவிந்தாச்சாரி என்பவர்தான் கர்த்தா. தியாகராஜர், சம்பூர்ண விதத்தைத்தான் கையாண்டார். எனக்கும் சம்பூர்ணம்தான் பிடிக்கும்.
முத்துசாமி தீட்சிதர், அசம்பூர்ண மேளகர்த்தாவை போற்றினார். எந்த ராகத்துக்கும் ஒரு பாடல் இருக்கணும். அப்போதுதான், அந்தப் பாட்டைப் பாடும்போதுதான் ராகம் புரியும். ஒரு ராகத்துக்கு பலப்பல பாட்டுகள் இருந்தா, இன்னும் விசேஷம். ஆனா, ஒரு ராகத்துக்கு ஒரேயொரு கீர்த்தனை மட்டுமே இருந்தா, அதை அடிக்கடி பாடணும். அப்படிப் பாடினாத்தான், அந்த அபூர்வ ராகம் வெளியே தெரியவரும். நான் கச்சேரிகள்ல, ரெண்டு பாட்டுப் பாடிட்டு, ஒரு அபூர்வ ராகம் பாடுறது வழக்கம்.
கவிதை, பாடல் எழுதறதை முறையாக் கத்துக்கலை நான். சம்ஸ்கிருதம் தெரியாது எனக்கு. பாடுவேனே தவிர, எழுதத் தெரியாது. திடீர்னு தோணுச்சு. குருநாதர்கிட்ட பாடிக்காட்டினேன்.
‘அற்புதம்... ரொம்ப நன்னா இருக்கு. நிறையப் பண்ணு...’னு ஆசீர்வாதம் பண்ணினார். அப்புறம் குருவை வைச்சே கீர்த்தனை தோணுச்சு. அதுக்கு நிறைய கீர்த்தனைகள் எழுதினேன். எல்லாமே இறையருள். குரு கிருபை.
அப்பய்ய சாஸ்திரி தெரியும்தானே! ஒருநாள், காலைல நாலு மணிக்கெல்லாம் வீட்டுக்கு வந்து கதவைத் தட்டினார். அப்ப, சின்னவயசுதான் எனக்கு. கதவைத் திறந்து பார்த்ததும், என் அப்பா ஆடிப்போயிட்டார். ‘எழுப்பு... இன்னும் பத்து நிமிஷத்துல உன் பையன் என்னோட வரணும்’னார் சாஸ்திரி. எழுந்து, குளிச்சு நாங்க ரெண்டு பேரும் ரெடியானதும்... ‘நீ வரவேணாம். அவன் மட்டும் வந்தாப் போதும்’னார்.
சாஸ்திரிகளை நிமிர்ந்து என்னால பார்க்கவே முடியலை. அவர் கண்கள்ல அப்படியொரு ஒளி. தேஜஸ். பயமா இருந்துச்சு. ஏதோ மந்திர சக்திக்குக் கட்டுப்பட்டது மாதிரி அவரோடயே போனேன்.  
அவர் வீட்டு பூஜையறையில் என்னை உட்கார வெச்சு. ‘’இங்கே பார். சில விஷயங்களை உங்கிட்ட சொல்லச் சொல்லி, அம்பாள் உத்தரவு. அதைச் சொல்லத்தான் இங்க கூட்டிட்டு வந்தேன். கவிதைங்கறது ஒரு அற்புதமான படைப்பு. அதுக்கு சில விதிமுறைகள் இருக்கு. அதுவொரு அறிவியல். சில முக்கியக் குறிப்புகள் உனக்குத் தெரியணும். கவிதைக்கு ஒரு கனம் அவசியம். மீட்டர் ரொம்பவே முக்கியம். அதெல்லாம் இப்படித்தான் இருக்கணும்’னு சொல்லிட்டு, மடை திறந்த வெள்ளம் போல, சங்கீதம் தொடர்பான குறிப்புகளை சொல்லிக்கிட்டே போனார். அப்பய்ய சாஸ்திரி சொன்ன எல்லாமே அப்படியே என் மனசுல பதிஞ்சிடுச்சு.
வீட்டுக்கு வந்து, எழுதின கீர்த்தனைகளையும் சாஸ்திரி சொன்ன குறிப்புகளையும் வைச்சுப் பார்த்தப்ப, ஒவ்வொரு கீர்த்தனையும் கனகச்சிதமா அமைஞ்சிருந்து. நான் கரகரன்னு அழுதுட்டேன். எல்லாமே தெய்வ சங்கல்பம். வேற என்ன சொல்றது... சொல்லுங்க’’ என்றபோது, நெகிழ்ந்தும் வியந்தும் நின்றது வாசகர் கூட்டம்.


‘‘இப்படித்தான் கச்சேரி பண்ணணும். பூஜை இப்படித்தான் செய்யணும் என்றெல்லாம் உங்களுக்கு நீங்களே கட்டுப்பாடுகள் வைத்துக் கொண்டிருக் கிறீர்களா?’’ என்று வாசகி உமா கேட்டார்.


‘’பூஜையாகட்டும், கச்சேரியாகட்டும்... இப்படிக்கட்டுப்பாடுகள் வெச்சுக்கிட்டா, அப்புறம் மனசும் புத்தியும் அந்தக் கட்டுப்பாட்டையே பிடிச்சுண்டு நிக்கும். மனசு ஒரு திசை. புத்தி இன்னொரு திசை. இது ரெண்டும் இப்படிப் போயாச்சுன்னா, அப்புறம் பூஜைலயும் ஆத்மார்த்தம் இருக்காது. கச்சேரியை யும் லயிச்சுப் பண்ணமுடியாது.
அதனால, பூஜைகளை எப்ப செய்யணும்னு தோணுதோ, அப்ப ஆத்மார்த்தமா செய்றவன் நான். அதேபோல கச்சேரி புக்காகி, மேடை ஏறிட்டேன்னா, அந்த நாலஞ்சு மணி நேரமும் பாட்டுலதான் முழுக்கவனமும் இருக்கும்.
அதேபோல, ‘கச்சேரி அன்னிக்கி மௌன விரதம் இருந்து குரலை பாதுகாப்பீங்களா? ஐஸ்க்ரீம் அறவே தொடமாட்டீங்களா?’ன்னெல்லாம் கேப்பாங்க சிலபேர். ‘மௌனத்தில் விளையாடும் மனசாட்சியே’னு பாடியிருக்கேன். ஆனா, கச்சேரிக்கும் மௌனமா இருக்கறதுக்கும் சம்பந்தமே இல்லை. ஐஸ்க்ரீமை ரொம்ப விரும்பிச் சாப்பிடுவேன். சாயந்திரம் கச்சேரின்னா, ஒரு மூணு மணி வாக்குல, சுடச்சுட பஜ்ஜி சாப்பிட்டு, ஸ்ட்ராங்கா ஒரு காபி குடிச்சிட்டு, அப்புறம் ஒரு ஐஸ்க்ரீம்கூட சாப்பிட்டுவிட்டு, மேடையேறியிருக்கேன்.
இந்தப் பாட்டு, இசை, ஞானம், கீர்த்தனை, பெயர், புகழ் எல்லாமே பகவான் கொடுத்த பெருங்கருணை. கொடை. அப்படியிருக்கும்போது, குரல் வளத்தோட இருக்கறதுக்கு நாம என்ன பண்ணினாலும் ஒண்ணும் ஆகப்போறதில்லை. தெய்வக் கணக்குக்கு முன்னாடி, நீங்க என்ன.... நான் என்ன... நாமெல்லாம் எம்மாத்திரம்?
இசையுலகத்துக்கும் இறைவனுக்கும் எப்பவும் நான் நன்றிக்கடன் பட்டிருக்கேன். அவ்ளோதான்...’’ என்று ஒரு குழந்தையைப் போல் கபடமின்றிச் சிரிக்கிறார் பாலமுரளி கிருஷ்ணா.
அந்தச் சிரிப்பே ஒரு ஆலாபனைதான். சங்கீதம்தான்!
 

Election bannerElection banner
அடுத்த கட்டுரைக்கு