Published:Updated:

''அக்காங்... நான் தனுஷோட நிஜ அம்மாவாம்!” - சரண்யா பொன்வண்ணன் #VikatanExclusive

''அக்காங்... நான் தனுஷோட நிஜ அம்மாவாம்!” - சரண்யா பொன்வண்ணன் #VikatanExclusive
''அக்காங்... நான் தனுஷோட நிஜ அம்மாவாம்!” - சரண்யா பொன்வண்ணன் #VikatanExclusive

அழகான அம்மா.... அன்பான அம்மா... அசட்டு அம்மா என தமிழ் சினிமாவின் தவிர்க்க முடியாத அம்மா இவர்! மார்க்கெட் இழந்த ஹீரோயின்களுக்கான கடைசி சான்ஸ் அம்மா கேரக்டர் என்பதை மாற்றி, அம்மா கேரக்டருக்காகவே ஒரு மார்க்கெட்டை உருவாக்கிய பெருமை சரண்யாவுக்கு உண்டு.ஒரு காலத்தில் ராசியில்லாத ஹீரோயின் என்று ஒதுக்கப்பட்ட சரண்யா, அதே தமிழ் சினிமாவில் இன்று ராசியான நடிகையாக வலம் வருகிறார்.

நாயகனின் நாயகி....
1987 தீபாவளி...  மணிரத்னம் சார் படத்துல நுழையறேன். கமல் சார் ஹீரோ. இதுக்கப்புறம் நூறு படங்கள் பண்ணி சம்பாதிக்கணும்ங்கிற எண்ணமெல்லாம் இல்லை. இதுதான் இனிமே என் வாழ்க்கைங்கிற நினைப்பும் இல்லை.  நமக்கு நடிக்கிற தகுதி இருக்கானு தெரிஞ்சுக்கிற வயசும் கிடையாது. ஏதோ சொல்றாங்க... செய்வோமோங்கிற நினைப்புல பக்குவமே இல்லாம ஜாலியா உள்ளே நுழைஞ்சேன்.
தமிழ், தெலுங்கு, கன்னடம், மலையாளம்னு எல்லாம் சேர்த்து ஹீரோயினா 50 படங்களைத் தாண்ட முடியாத நான்,  இப்ப அம்மாவா ஒரு மொழியிலயே அதுக்கு மேல பண்ணிட்டேன்.''

ராசியில்லாத ஹீரோயின் டு அதிர்ஷ்டமான அம்மா!
''ஏண்டா இங்க வந்தோம்... நமக்குத் தெரியாத நமக்குப் பொருந்தாத ஒரு இன்டஸ்ட்ரிக்குள்ள நுழைஞ்சிட்டோமோ... ஒழுங்கா படிச்சிருந்தா வேற இன்டஸ்ட்ரிக்குள்ள போயிருக்கலாமோ... தேவையில்லாம காலம் நம்மளைக் குழப்பி இங்க கொண்டு வந்து விட்ருச்சோனு கவலைப்பட்ட காலம் அது. 

இவ்வளவு அழகான ஒரு விஷயத்துக்குள்ள அன்னிக்கு அவ்வளவு கசப்போட நுழைஞ்சோமானு  தோணற அளவுக்கு இன்னிக்கு எனக்கு மகாராணி ஸ்டேட்டஸ் கிடைச்சிருக்கு. தொட்டதெல்லாம் பொன்னாகும்ங்கிற கதையா நீங்க நடிச்சாலே சக்சஸ்னு சொல்றாங்க. அன்னிக்கு என் குரல் பெரிய மைனஸ். ஆம்பிளைக் குரல்... கரகர தொண்டைன்னாங்க. அப்பல்லாம் ஹீரோயின்ஸ் கிளி மாதிரி பேசணும். இன்னிக்கு கரகர குரல்ல பேசினா டாப் ஹீரோயின். இப்ப என் வாய்ஸை பிளஸ்னு சொல்றாங்க. அந்தக் காலத்துல என்னை படத்துல கமிட் பண்ணவே யோசிப்பாங்க. இன்னிக்கு நான் படத்துல இருந்தா அதிர்ஷ்டம்னு சொல்றாங்க. ஹீரோவுக்கே என்னால லைஃப்னு சொல்றாங்க. இதைத்தான் டைம், அதிர்ஷ்டம்னு சொல்றது.

'முன்னல்லாம் நடிக்கவே மாட்டே... இப்ப என்னடான்னா  உனக்குள்ள சந்திரமுகி ஏறின மாதிரி நடிக்க ஆரம்பிச்சிட்டே...னு பிரபு சாரும், 'இந்த நடிப்பையெல்லாம் எங்க ஒளிச்சு வச்சிருந்தே...'னு வசந்த் சாரும் கிண்டலே பண்ணியிருக்காங்க. ஒருத்தரால எப்படி அப்ப மோசமாகவும் இப்ப நல்லாவும் நடிக்க முடியும்னு எனக்கே தெரியலை.
 
சினிமா அன்றும், இன்றும்
''இன்டஸ்ட்ரி இன்னிக்கு எக்கச்சக்கமா மாறியிருக்கு. அந்தக் காலத்துல இருந்த தொழில் பயம், குரு பயம், சீனியாரிட்டி பயம் எதுவுமே இன்னிக்கு இல்லை. நம்மளைவிட வயசானவங்க, சீனியர்ங்கிறதுக்கு பத்து பைசா மதிப்பு கிடையாது. இவங்களாலதான் நாம முன்னுக்கு வந்தோம்ங்கிற மரியாதை கிடையாது.

நான் இன்னிக்கு வரைக்கும் ஒரு டைரக்டரை பேர் சொல்லிக் கூப்பிட பத்து தடவை யோசிப்பேன். என்னைவிட பதினஞ்சு வயசு சின்னவரா இருப்பார். ஆனாலும் சார்னு கூப்பிடுவேன். நான் அங்க சீனியரா இருக்கலாம். ஆனா லைட்மேன்லேருந்து எல்லாரும் இருக்கிறப்ப  பேர் வச்சுக் கூப்பிடறது சரியா இருக்காது. அந்த மனநிலை இன்னிக்கு யார்கிட்டயும் இல்லை. மரியாதையை வாய்ல காட்டணுமா, மனசுல இருந்தா போதாதா, அல்பமா இருக்கு, ஃப்ரெண்ட்லியா பழகினா என்னங்கிற மனநிலைக்கு மாறியிருக்காங்க. எனக்கு அதெல்லாம் தப்பா தெரியுது. ஒரு ஷாட் முடிஞ்சா எங்க காலத்துல நாங்க உடனே நகரக்கூடாது. அங்கயே நிக்கணும். டைரக்டர் ஓ.கே நெக்ஸ்ட் ஷாட்டுனு சொன்னா  அடுத்த ஷாட்டுக்கு நாங்க எங்க நிக்கறதுனு  டைரக்டர் மூஞ்சியைப் பார்க்கணும்.  அடுத்த ஷாட்டுக்கு நீங்க இல்லைனு அவர் சொன்னாதான் நகரணும். இப்ப கட் சொன்னதும் அந்த ஷாட் ஓ.கேவானு தெரியறதுக்கு முன்னாடியே கேரவனுக்கு போயிடறாங்க. நாங்கல்லாம் யூத்... நீங்கல்லாம் பழைய கருவாடுனு அதுக்கு ஒரு பேர் கொடுத்துடறாங்க.   என்கிட்ட அப்படி யாரும் நடந்துக்கிட்டதில்லை. ஆனா நானே மத்தவங்களுக்கு அப்படிப் பண்றதைப் பார்த்திருக்கேன். என்கிட்ட ஏன் பண்ணலைனு தெரியலை.  ஜெயிக்கிறவங்களை மதிக்கிறதும், தோக்கறவங்களை மதிக்காமப் போறதும் சினிமாவுல சகஜம். ஒருவேளை நான் ஜெயிச்சவங்க லிஸ்ட்டுல இருக்கிறதாலகூட இப்படி இருக்கலாம். 

ரஜினி.... கமல்....
ஹீரோயினா நடிக்கும்போது ரஜினி சார்கூடவும் மோகன்லால்கூடவும் ஜோடியா நடிக்கணும்னு ஆசைப்பட்டேன். நடக்கலை. நிறைவேறாத ஆசையா இன்னமும் இருக்கு. இந்த வயசுக்கேத்தபடியான கேரக்டர்ல பண்ற வாய்ப்பு வந்தா நல்லாருக்கும். ரஜினி சாருக்கும் சரி. மோகன்லாலுக்கும் சரி... நல்லா ஹ்யூமர் வரும். எனக்கும் அவங்களோட சேர்ந்து ஹ்யூமரும் எமோஷன்ஸும் கலந்து பண்ணணும்னு ஆசை. நான் எத்தனை படங்கள் பண்ணுவேன்னு தெரியலை. அதுக்குள்ள இந்த ஆசை நிறைவேறினா சந்தோஷம்.
எனக்கு கிரீடம் வைக்கிறதுக்காகவே வந்தவர் கமல். அதுக்கப்புறம் அவர்கூட சேர்ந்து நடிக்கிற வாய்ப்பு அமையலை.''

அம்மா கேரக்டரில் வேறு யார் பெஸ்ட்?
என் கேரக்டரோட மத்தவங்க கேரக்டரை  நான் கம்பேர் பண்ண மாட்டேன். மத்தவங்க எப்படி பண்ணியிருக்காங்கனு கவனிப்பேன். ராதிகா மேடம், லட்சுமியம்மா  பண்ணினதை எல்லாம் கவனிப்பேன். அவங்க புடவை கட்டற ஸ்டைல்ல கூட ஒரு அழகு இருக்கும்.
சமீபத்துல 'தோனி' படம் பார்த்தேன். அதுல வர்ற அம்மா கேரக்டர்ல சின்ன அசைவுகளும் வெகுளித்தனமும் நல்லாருந்தது. இது மாதிரி சின்னச் சின்ன விஷயங்களை எடுத்துக்கிட்டு மனசுல வச்சுப்பேன். எங்கயாவது யூஸ் பண்ணுவேன். சினிமாங்கறதே காப்பிதான். இங்க யாரும் யாருக்கும் போட்டி கிடையாது.

நிஜ வாழ்க்கையில நான் பார்க்கிற அம்மாக்களோட பாடி லேங்வேஜ், ஹேன்ட்பேக் மாட்டிக்கிறது, எப்ப கண்ணாடியை மாட்டறாங்க, எப்ப கழட்டறாங்க, வேர்க்கிறது, முடி கலையறதுனு எல்லாத்தையும் கவனிப்பேன். கிராமத்துப் படங்கள்ல என் மாமியாரோட பாடி லேங்வேஜ் அப்படியே இருக்கும். 'தவமாய் தவமிருந்து' படத்துல ஒரு சீன்ல முந்தானையில டம்ளரை பிடிச்சுக்கிட்டு காபி குடிக்கிற சீன், என் மாமியாரோட ஸ்டைல்!''

ஆஃப்  ஸ்கிரீனிலும் அம்மா பாசம் தொடருமா?
''வேலை முடிஞ்சதும் நான் எந்த ஹீரோவோடவும் ஃபோன்லகூட பேச மாட்டேன். தனுஷுக்கு நான்தான் நிஜ அம்மானு பலரும் நினைக்கிறாங்க. இத்தனைக்கும் நாங்க ஷுட்டிங்  முடிஞ்சதும் பேசிக்கிறதுகூட இல்லை. எந்த நடிகரோடவும் பார்ட்டி போறதெல்லாம் கிடையாது. முக்கியமான விஷயம் ஏதாவது சொல்லணும்னா எனக்கே கூட அவங்க நாட் ரீச்சபிளாதான் இருப்பாங்க.  அந்த இடைவெளியை மெயின்டெயின் பண்றதாலதான் என் மரியாதையை நான் தக்க வச்சிட்டிருக்கேன்னு நினைக்கிறேன்.''

எப்படிப்பட்ட அம்மாவாக நடிக்க ஆசை?
''பொசசிவ் அம்மாவா நடிக்கணும்னு ரொம்ப ஆசை. அது இதுவரைக்கும் பண்ணலை. சில வீடுகள்ல அப்பாக்கள் இருந்தாலும் இல்லாட்டாலும் அம்மாக்கள் மகன்கள் சம்பந்தமான எல்லா வேலைகளையும் செய்வாங்க. அந்தப் பையனுக்கு ஆசையா கல்யாணமும் பண்ணிக் கொடுப்பாங்க. ஆனா அதுக்கப்புறம் அதே அம்மா அவனுக்கு பயங்கர டார்ச்சரா மாறிடுவாங்க. அதாவது மகன் செத்தாலும் பரவால்லை... மருமகள் தாலி அறுக்கணும்னு சொல்வாங்களே அந்தளவுக்கு... இப்படியொரு அம்மா கேரக்டர் பண்ணணும்.''


மகன் இல்லாத ஏக்கம்?
''முன்னல்லாம் எனக்கு பையனுங்களையே பிடிக்காது. இப்ப இந்த ஹீரோக்களோட எல்லாம் நடிச்சு பையன் இல்லையேனு ஏக்கமா இருக்கு. 'நல்லவேளை எனக்கு பையன் இல்லை'னு சொல்றப்ப என் பொண்ணுங்க ஏம்மான்னு கேட்பாங்க. அவங்க நிறைய தப்பு பண்ணுவாங்கனு சொல்வேன். ஏம்மா பசங்க மட்டும்தான் தப்பு பண்றாங்களா.,.. இந்தக் காலத்துல  பொண்ணுங்க எவ்வளவு மோசமா நடந்துக்கிறாங்க தெரியுமா... அதெல்லாம் வளர்ப்புலதாம்மா இருக்கு. உங்களுக்கு ஒரு பையன் இருந்திருந்தா அவன் நிச்சயம் நல்லவனாதாம்மா இருந்திருப்பான்னு சொல்வாங்க. இது  பெருமை பீத்திக்கிறதுக்காக சொல்லலை.  இன்னிக்கு நடக்கிற குற்றங்களுக்குக் காரணம் வளர்ப்பு சரியில்லாததுதான். 

 வலின்னா என்ன... அடுத்தவங்களை இன்சல்ட் பண்றதும் துன்புறுத்தறதும் எவ்வளவு வலிக்கும்னு ஆம்பிளைப் பசங்களுக்கு பெத்தவங்க சொல்லி வளர்க்கணும். ஈஸியா கத்தியை எடுத்துக் குத்திடறாங்க. ஆசிட்டை எடுத்து ஊத்திடறாங்க.இதையெல்லாம் வளர்ப்புல சரி பண்ணாம பேரன்ட்ஸ் எங்கயோ மிஸ் பண்ணிடறாங்க. குழந்தைங்களை மனித வேல்யூஸோட வளர்க்கிறதுங்கிறது பெரிய வேலை. கஷ்டமான வேலைதான். ஆனா அதை சரியா பண்ணிட்டாங்கன்னா, அதைவிட பெரிய சாதனை வேற இருக்காது.''

நடிப்பு இல்லாமல் போனால்?
''நான் இன்டஸ்ட்ரியை நம்பியோ, அந்த புகழ் வெளிச்சம் வேணும்னோ என்னிக்குமே நினைச்சதில்லை.  இன்னிக்கு நான் இன்டஸ்ட்ரியை மட்டும் நம்பியிருந்தேன்னா இதை இன்னொரு பேஷனான ஃபேஷன் டிசைனிங்கை பத்தி நினைச்சிருக்கவே மாட்டேன்.  சினிமாவுல நடிக்கிறது ரொம்ப ஈஸி. ஃபேஷன் டிசைனிங் இன்ஸ்டிட்யூட் நடத்தறது ரொம்பக் கஷ்டம். சினிமாவுல உள்ள பந்தா, சொகுசு, ஆடம்பரத்துக்கெல்லாம் நான் என்னிக்கும் பழகினதில்லை. சாதாரண வாழ்க்கையைத் தான் வாழறேன். இன்னும் நான் காய்கறிக் கடைக்கும் மளிகைக் கடைக்கும் போய் வாங்கறேன். என் பசங்களை பிளாட்ஃபார்ம் கடைக்குக் கூட்டிட்டுப் போறேன். மமதையில வாழலை. 500 ரூபாய் சொல்ற ஒரு பொருளை 400 ரூபாய்க்கு பேரம் பேசுவேன். மிடில் கிளாஸ் லைஃப் ஸ்டைல்தான் என் விருப்பம். நாளைக்கே நான் எதிர்பார்க்கிற இடம் இங்க இல்லாமப் போனாலும் என்னால சாதாரண வாழ்க்கையை வாழ முடியும். இப்பவும் நான் தினம் காலையில 4 மணிக்கு எழுந்திருக்கறேன். என் பசங்களுக்கு சாப்பாடு பேக் பண்றேன். சமையலுக்கு ஆள் வரலைன்னா நானே சமைச்சு பேக் பண்றேன். டிரைவர் வரலைனா டிராப் பண்ணிட்டு வரேன். சினிமா தவிர்த்த வாழ்க்கையை வாழறது எனக்கு பெரிய கஷ்டமா இருக்காது.''

எதிர்கால ஆசைகள்...
''என் எதிர்காலம் என் பொண்ணுங்கதான். எனக்கு அமைஞ்சது மாதிரி அவங்களுக்கு நல்ல ஹஸ்பெண்ட் அமையணும். அவங்க மெடிசின் படிக்கணும்னு சொன்னபோது எனக்கு அதுல கொஞ்சமும் விருப்பமில்லை. ஒரு லேடியா கல்யாணம் பண்ணிக்கணும். குழந்தை பெத்துக்கணும். சமைக்கணும். குடும்பத்தைப் பார்க்கணும்ங்கிறது என் விருப்பம்.  சினிமாவுல இருந்ததால அதையெல்லாம் பேலன்ஸ் பண்ண நான் ரொம்பக் கஷ்டப்பட்டிருக்கேன். எந்தக் குறைகளும் இல்லாம அதையெல்லாம் செய்ய  நிறைய கசப்புகளை அனுபவிச்சிருக்கேன். அதை அவங்களும் அனுபவிக்கணுமாங்கிறதுதான் என் கேள்வி.  டாக்டராயிட்டதால குடும்பத்தைப் பார்க்க முடியாதுங்கிறதையோ, சமைக்க முடியாதுங்கிறதையோ என்னால ஏத்துக்க முடியாது.. டாக்டரானாலும் நீதான் எல்லாம் செய்யணும்னு வளர்த்திருக்கேன்.  அவங்களால நிச்சயம் யாரையும் ஏமாத்த முடியாது. பொய் சொல்ல முடியாது. அப்படிப்பட்ட மனிதாபிமானம் உள்ள டாக்டர்ஸை இந்த சமுதாயத்துக்குக் கொடுக்கணும்ங்கிறதுல அம்மாவா எனக்கும் பெரிய பங்குண்டு.''

-ஆர்.வைதேகி

பின் செல்ல