Published:Updated:

”எங்களை சாகடிப்பதை எப்போது நிறுத்தப் போகிறீர்கள்” - கேள்வி எழுப்பும் ’கக்கூஸ்’ ஆவணப்படம்!

”எங்களை சாகடிப்பதை எப்போது நிறுத்தப் போகிறீர்கள்” - கேள்வி எழுப்பும் ’கக்கூஸ்’ ஆவணப்படம்!
”எங்களை சாகடிப்பதை எப்போது நிறுத்தப் போகிறீர்கள்” - கேள்வி எழுப்பும் ’கக்கூஸ்’ ஆவணப்படம்!

"நாங்கள் சாகவில்லை. நீங்கள் தான் எங்களை கொன்றுவிடுகிறீர்கள்... எங்களை சாகடிப்பதை எப்போது நிறுத்தப் போகிறீர்கள்?" என்ற கேள்வியை நம்மிடம் எழுப்புகிறது “கக்கூஸ்” என்ற ஆவணப்படத்தின் டிரெய்லர் வீடியோ. மனிதக் கழிவுகளை மனிதனே அகற்றுவது மிகவும் கொடுமையானது. துப்புரவுத் தொழிலாளிகளுக்கு தமிழகத்தில் நிகழ்த்தப்படும் கொடுமைகளை 2 மணிநேரத்திற்கு முழுமையான ஆவணப்படமாக இயக்கியிருக்கிறார் திவ்யா பாரதி.  யாரும் துணித்து எடுக்க யோசிக்க முடியாத தளத்தில் செயல்பட்டிருக்கிறார் என்பதே பாராட்டுதலுக்குரியது.

ஒன்றரை வருடத்திற்கும் மேலாக தமிழகம் முழுவதும் சுற்றித்திரிந்து, துப்புரவுத் தொழிலாளிகளைப்பற்றி முழுமையாக ஆவணப்படுத்தியிருக்கிறார். பழனிகுமாரு மற்றும் கோபாலகிருஷ்ணன் ஒளிப்பதிவு செய்ய, க்ரவுட் ஃபண்டிங் முறையில் முகநூல் நண்பர்களின் பணஉதவுயிடன் இந்த ஆவணப்படத்தை தயாரித்திருக்கிறார் திவ்யா பாரதி. இந்த டிசம்பரில் வெளியிட முனைப்புடன் செயல்பட்டு வருகிறார். 

இந்த ஆவணப்படம் பற்றியும், துப்புரவுத் தொழிலாளிகளின் தற்போதைய வாழ்க்கை பற்றியும் ஆவணப்பட இயக்குநர் திவ்யாவிடம் கேட்டோம், “ 2013 சட்டத்திற்குப் பிறகு துப்புரவுத்தொழிலாளர்கள் சந்திக்கும் பிரச்னைகள் எப்படியிருக்கு என்பதற்கான ஆய்வு. கடந்த அக்டோபர் முதல் இந்த அக்டோபர் வரை 20க்கும் மேற்பட்ட செப்டிக் டேங் க்ளீனர்கள் விஷவாயு தாக்கப்பட்டு இறந்திருக்கிறார்கள். இதையெல்லாம் பேசக்கூடிய ஆவணப்படம் தான் இது.

மொத்தமாக 1009  கையால் மலம் அள்ளும் தொழிலாளிகள் தமிழகத்தில் இருப்பதாக, கடந்த வருடங்களில் தமிழக அரசு

பொய்யான தகவல்களை தந்துகொண்டிருக்கிறது. அந்த புள்ளிவிவரம் தவறு என்றும், ஒவ்வொரு துப்புரவுத்தொழிலாளியும் ஓர் மலம் அள்ளும் தொழிலாளி தான் என்பதை ஆதாரப்பூர்வமாக நிறுவுவதற்கான முயற்சி தான் இந்த கக்கூஸ் ஆவணப்படம்.கையால் மலம் அள்ளக்கூடாது என்று 2013ல் சட்டம் இயற்றப்பட்டும் தோல்வியடைந்த நிலையிலே அது இருக்கிறது. 2014ல் உச்சநீதிமன்ற  தீர்ப்புப்படி, செப்டிக் டேங் க்ளீன் செய்யும் போது, இறப்பவரின் குடும்பத்திற்கு 10 லட்சம் நஷ்ட ஈடு தரவேண்டும் என்ற தீர்ப்பும் கூட உயிரற்றுக் கிடக்கிறது. பாதிக்கப்பட்ட குடும்பங்களுக்கு அதற்கான நஷ்ட ஈடு சென்று சேர்வது இல்லை. 

நான் ஒன்பது வருடங்களாக சமுக சேவையிலும், அரசியலிலும் இருந்துவருகிறேன். ஆனால் ஒருநாள் கூட துப்புரவுத் தொழிலாளிகளின் வாழ்வியல் பற்றி சிந்தித்துப்பார்த்ததில்லை. 2015 அக்டோபரில் மதுரையில் இரண்டு துப்புரவுத்தொழிலாளிகள் விஷவாயு தாக்கி இறந்ததாக செய்திகள் வெளியானது.  அந்த மரணத்திற்குப் பிறகு இவர்களைப் பற்றி சிந்திக்காமல் விட்டது எவ்வளவு கேவலம் என்ற குற்ற உணர்ச்சியில் தான் இந்த ஆவணப் படத்தை கையில் எடுத்தேன். 

இந்த ஒரு வருடத்தில் மட்டும் 20க்கும் மேற்பட்ட மாவட்டங்களை சுற்றிவிட்டோம். அதில் 22க்கும் மேற்பட்ட மரணங்கள், அதனால் பாதிக்கப்பட்ட குடும்பத்தின் வலி என்னவாக இருக்கிறது என்பதையும் வலியுடன் ஆவணப்படுத்தியிருக்கிறோம். அவர்கள் வேலை செய்யும் விதம், மலத்தை கையாளுவதையெல்லாம் பார்த்தால் நிச்சயம் நம்மால் பல நாட்கள் தூங்கவோ, சாப்பிடவோ முடியாது. 

துப்புரவு தொழிலில் இருக்கும் நபர் இறந்துவிட்டால், அவரின் பிள்ளைகளின் படிப்பு போய்விடும். தந்தையின் வேலைக்கு பிள்ளைகள் வரவேண்டிய கட்டாயம் ஏற்படும். குடும்ப சூழலுக்காக இந்த தொழிலுக்கு வந்து தான் ஆகவேண்டும். அவர்களுக்கு வேறு இடத்தில் வேலையும் தரமாட்டார்கள். டிகிரியே முடித்தாலும், ஹோட்டல்களில் துப்புரவு பணிகளில் தான் வேலைப்பார்த்தாகவேண்டும்.

ஆனா, இந்தப் பிரச்னையைப் பற்றி யாரும் பேசமுன்வரவில்லை, அவர்களின் பணிகளில் உள்ள சங்கடம் நம்மை உறுத்தவில்லையென்றால் அதற்கு நம்மிடம் இருக்கும் சாதி தான் காரணம். இது அவங்களுக்கான வேலை தானே, என்ற எண்ணம் நம் மனதில் ஏற்றப்பட்டுள்ளது. அரசும் கூட அவர்களுக்கான சலுகைகளையும், நஷ்டஈடுகளை சரிவர கொடுப்பதில்லை. விஷவாயு தாக்கி இறந்த குடும்பத்திற்கு, விரல் விட்டு எண்ணும் அளவிற்கு, பெரும் போராட்டங்களுக்கு நடுவே தான் அவர்களுக்கான நஷ்ட ஈடு கொடுக்கப்படுகிறது. 

சென்னையில் ஒரு சப் இன்ஸ்பெக்டர் வீட்டில் செப்டிங் டேங்க் க்ளீன் செய்யும் போது ஒருத்தர் இறந்தார். அவரின் மூத்த பையன் படிப்பை விட்டுட்டு, அந்த வேலைக்கு இப்போ அவனே வந்துட்டான். இரண்டாவது பெண் படிப்பை நிறுத்திவிட்டு வீட்டில் இருக்கிறாள். அரசிடமிருந்து 10 லட்சம் வந்தால் மட்டுமே அவர்களின் வாழ்வாதாரம் மாறும் சூழ்நிலை. ஆனால் அரசும் அதற்கான எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை என்பது தான் உண்மை. 

இந்த 11 மாத பயணத்தின் மூலம், என்னிடம் மொத்தமாக 90 மணிநேரத்திற்கான ஆவண வீடியோ கையில் இருக்கிறது. இதைச் சுருக்கி 1.45 மணிநேர ஆவணப்படத்தை உருவாக்கியிருக்கிறேன். அவர்கள் வேலை செய்வதை காட்சிப்படுத்துவதற்கு துப்புரவுத் தொழிலாளிகளே முன்வரமாட்டார்கள், ஏனெனில் அவர்களின் வேலை போவதற்கான வாய்ப்பு உண்டு.  அவர்களிடம் நம்பிக்கை ஏற்படுத்திய பின்னரே இந்த ஆவணப்படத்தை உருவாக்கினோம். முதல்கட்டமாக டிசம்பரில் மக்களின் முன் இந்த ஆவணப்படத்தை சென்னையில் திரையிடவிருக்கிறோம். அதன்பின்னர், ஒவ்வொரு ஊருக்கும் சென்று  திரையிட திட்டமிட்டிருக்கிறோம். ஆவணப்படம் எடுப்பது மட்டுமே என் கடமை, அதை மக்கள் மத்தியில் கொண்டுசெல்ல நெட்டிசன்கள் தான் முன்னெடுக்கவேண்டும்” என்று கூறினார் ஆவணப்பட இயக்குநர் திவ்யா பாரதி. 

துப்புரவுப் பணியாளர்களின் வறுமையை இந்த சமுதாயமும், அரசாங்கமும் சுயநலத்துடன் பயன்படுத்திக்கொள்கிறது என்பதற்கான வாழும் சாட்சிகளே இவர்கள்...  மனித மலத்தை மனிதனே அப்புறப்படுத்தும் நிலை மாறவேண்டும் என்பதை உரக்கசொல்லும் இந்த மாதிரியான ஆவணப்படங்களை நாம் வரவேற்க வேண்டும்.

கக்கூஸ் ஆவணப்பட டிரெய்லருக்கு: 

-முத்து பகவத்-