Published:Updated:

”சினிமாவிலும் சாதி பாக்குறாங்க. அதான் நாலஞ்சு சாதிகளோட சுத்திட்டு இருக்கேன்” -இயக்குநர் சுசீந்திரன் #VikatanExclusive

”சினிமாவிலும் சாதி பாக்குறாங்க. அதான் நாலஞ்சு சாதிகளோட சுத்திட்டு இருக்கேன்” -இயக்குநர் சுசீந்திரன் #VikatanExclusive
”சினிமாவிலும் சாதி பாக்குறாங்க. அதான் நாலஞ்சு சாதிகளோட சுத்திட்டு இருக்கேன்” -இயக்குநர் சுசீந்திரன் #VikatanExclusive

‘‘சினிமாவிலும் சாதி பாக்குறாங்களா’ங்கிறதுதான் எனக்கு ஆச்சர்யம். அதுவும் கடந்த ஒண்ணு இரண்டு வருஷமாத்தான் இது நடக்குதுனு நினைக்கிறேன். சில டைரக்டர்கள், ஹீரோக்கள், புரொடக்ஷன்ஸ்... சாதிப்பார்த்து படங்களை கமிட் பண்ணிக்கிறாங்கனு கேள்விப்பட்டேன். ரொம்ப வருத்தமா இருந்துச்சு. ‘தம்பி நம்மாளுதான்’ம்பாங்க. அதிர்ச்சியா இருக்கும். இப்படி சொல்லிச்சொல்லியே இன்டஸ்ட்ரியில நான் நாலஞ்சு சாதிகளோட சுத்திட்டு இருக்கேன். ‘நீங்க என்ன நினைக்கணுமோ அதை நினைச்சுக்கங்க’னு விட்டுட்டேன்.’’

சமீபகால சினிமாவை நினைத்து வருத்தப்பட்டு பேசுகிறார் இயக்குநர் சுசீந்திரன். சென்சாரில் ‘மாவீரன் கிட்டு’க்கு க்ளீன் யூ சான்றிதழ் கிடைத்த சந்தோஷம் ஒருபுறம் என்றால், படத்தை நல்லபடியாக ரிலீஸ் செய்துவிட வேண்டும் என்ற பரபரப்பு மறுபுறம். சுசீந்திரனை சந்தித்தோம். 

‘‘என் முதல் படம் ‘வெண்ணிலா கபடிக்குழு’, என் வாழ்க்கையில் நடந்த விஷயங்களை வெச்சு பண்ணின படம். அதேமாதிரி திரும்பவும் கிராமத்துப் படம் பண்ணணும்ங்கிற ஆசை. பிறகு பண்ணின ‘அழகர்சாமியின் குதிரை’ கிராமத்து படமா இருந்தாலும் அது பாஸ்கர் சக்தி சாரின் ஸ்கிரிப்ட். அதுக்கு தேசிய விருது கிடைச்சதெல்லாம் வேற விஷயம். ஆனா, ஆத்மார்த்தமா, என் லைஃபை தொட்டு மறுபடியும் ஒரு படம் பண்ணணும். திரும்பவும் என் கிராமத்துக்கு போகணும்ங்கிற எண்ணம். அது இப்ப என் 9-வது படம் ‘மாவீரன் கிட்டு’லதான் நிறைவேறியிருக்கு. சில படங்கள் பண்ணி முடிக்கும்போது நமக்கு முழு திருப்தி கிடைக்கும். அந்த திருப்தியை ‘மாவீரன் கிட்டு’ தந்திருக்கான்.’’

‘‘ ‘இந்தப் படம் பண்ணலாம்’னு எப்ப முடிவு பண்ணுனீங்க??‘
‘‘ ‘ஓகே. இந்தப்படம் முடிச்சிட்டோம். அடுத்து என்ன?’ங்கிற எண்ணம்தான் ஒரு குறிப்பிட்ட நாட்களுக்குப் பிறகு ஸ்கிரிப்டா மாறும். ‘எங்க ஊர்ல இப்படி ஒரு விஷயம் நடந்துச்சு, அதை வெச்சு பண்ணலாம்...’ இப்படி நிறைய கதைகள் பேசுவோம். அதில் பல கதைகளை பாதியிலேயே கைவிட்டிருப்போம். ‘இது இப்ப உன்னால முடியாது’னு சில கதைகள் நம்மை கைவிட்டிருக்கும். சில கதைகள், ‘நல்லாயிருக்கே’னு கடைசிவரை போய் முடிச்சிருப்போம். ‘ராஜபாட்டை’க்கு முன்னாடி, ‘நல்ல ஸ்கிரிப்ட் பண்ணணும்’னு நினைச்சு இந்தக் கதையை பண்ணினோம். ஆனா, அப்ப எனக்கு ஹீரோ கிடைக்கலை. ‘ஓ.கே. இன்னொரு ஸ்கிரிப்ட் பண்ணுவோம்’னு பண்ணினதுதான் ‘ஜீவா’. ஆனா அப்ப ‘இந்தத் தயாரிப்பாளரின் பையன் ஜீவா கதையை தாங்குவானா?’னு யோசனை. அடுத்து பட்ஜெட்டும் தாங்காது’னு நினைச்சு இரண்டு கதைகளையும் தூக்கிவெச்சுட்டேன். பிறகுதான் ‘ஆதலால் காதல் செய்வீர்’ கதையை அந்தத் தயாரிப்பாளரின் மகனை மனசுல வெச்சு பண்ணினோம். ஒரு கிரியேட்டரின் முடிவை பட்ஜெட்தான் தீர்மானிக்குது. பிறகு ஹீரோவுக்கு ஒரு கதை பண்ணுவோம்னு பண்ணினதுதான் ‘பாண்டியநாடு’. ஆனால் ‘மாவீரன் கிட்டு’, ‘ஜீவா’னு இரண்டு கதைகள் வெயிட்டிங். ‘மாவீரன் கிட்டு’ பண்ண பட்ஜெட் பிரச்னை. ‘ஸ்போர்ட்ஸ் ஃபிலிம். விஷ்ணுவுக்கு பொருத்தமா இருக்கும். வித்தியாசமா வரும்னு உடனடியா 'ஜீவா' ஆரம்பிச்சோம். ‘விஷ்ணுவும் தரமான ஹீரோவா வளர்ந்திருக்கார். ஒவ்வொருவரும் சம்பளத்தை குறைச்சுப்போம்’னு நினைச்சு ஆரம்பிச்சதுதான் இந்தப்படம்.’’

‘‘என்ன கதை?”
‘‘ஒரு உண்மைச் சம்பவத்தை மாத்திப்போடுறதுலதான் என் சினிமா மெட்டீரியலே உருவாகும். பாரதிராஜாங்கிற கதாபாத்திரம் ‘பாண்டியநாடு’ல வரலைனா அது வழக்கமான சினிமா மெட்டீரியலுக்குள்ள போய் முடிஞ்சிருக்கும். வேறொரு சினிமாவா மாறியிருக்காது. ‘நாலு புதுப்பசங்கதான் வில்லன்கள்’னு நான் தீர்மானிக்கலைனா ‘நான் மகான் அல்ல’ எப்பவும்போல  மர்டர், ரிவெஞ்சுனு போய் முடிஞ்சிருக்கும். அப்படி இந்தப் படம் ஒரு உண்மைச் சம்பவத்தை வேறொரு பாயின்ட் ஆஃப் வியூல மாத்தி மொத்தத் திரைக்கதையும் அமைச்சிருக்கேன். அந்தச் சம்பவத்தை நான் எப்படி மாத்தியிருக்கேன் என்பதுதான் படம். அதை சொல்லிட்டேன்னா படம் முடிஞ்சிடுச்சு, அவ்வளவுதான். சின்ன சுவாரஸ்யத்தைத்தான் முடிச்சா வெச்சிருக்கேன். அந்த முடிச்சை ஓப்பன் பண்ணிட்டேன்னா படம் பார்க்கும்போது ஆர்வம் போயிடும். கண்டிப்பா இந்தப்படம் உங்களுக்குப் பிடிக்கும்.’’

‘‘சாதிய பிரச்னைகள்தான் இந்தப் படத்தின் மையக்கரு’னு சொல்றாங்களே?’’
‘‘இதை சாதிங்கிற வட்டத்துக்குள்ள எளிதா சுருக்கிடக்கூடாதுனு நினைக்கிறேன். மனிதம், உணர்வு சம்பந்தப்பட்ட படம். மனிதமா பார்த்தா அதுவேற, சாதியா பார்த்தா அது வேற. அப்படி சாதியா பார்த்துடக்கூடாதுனு நினைக்கிறேன். ‘தட்டிக்கொடுத்தான்னு நினைச்சேன். ஆனா தடவிப்பார்த்தான்னு அப்புறம்தான் தெரிஞ்சுச்சு’னு ‘ஜீவா’வுல ஒரு டயலாக் எழுதியிருந்தேன். கிரிக்கெட்ல இருக்கக்கூடிய ஒருவர், ‘தன் சம்பந்தப்பட்ட சமூகத்தைச் சேர்ந்தவர்களுக்கு மட்டும் வாய்ப்பு கொடுக்கிறார்’ என்பதை மறைமுகமாக சொல்லியிருப்பேன். அப்ப சென்சார்ல அதை மியூட் பண்ணச்சொன்னாங்க. முடியாதுன்னேன். வாக்குவாதம் நடந்துச்சு. சென்சார் ஆஃபிஸ்லக்கூட இப்படி ஒரு விஷயம் நடந்துச்சுனு எதையுமே வெளிய சொல்லாம படத்தை நல்லபடியா ரிலீஸ் பண்ணணும். அதனாலயே சில நல்ல படைப்புகள் பண்ணும்போது அதன் கதையை மக்கள்ட்ட கொண்டுபோய் சேர்க்கும்வரை வெளியே சொல்லக்கூடாத நிலை இருக்கு. சென்சார் முடிஞ்சு மக்கள்ட்ட போய் சேரணும். அப்படி போய்ச்சேரணும்னா நிறைய விஷயங்கள்ல நாம அமைதியா இருக்கவேண்டி இருக்கு. ஆனா, கண்டிப்பா இந்தப் படத்தை நீங்க, மீடியா... எல்லாரும் என் முந்தைய எட்டுப் படங்களை மீறி இந்தப் படத்துக்காக என்னை கொண்டாடுவீங்க. அந்தோடு மட்டுமில்லாம இது வெற்றிப்படமாவும் அமையும்.’’‘‘‘சோத்துக்கு வழியில்லாதவன் எல்லாம் சோசலிசம் பேசறான்’... டீசர்லயே தெறிக்குது வசனங்கள். என்ன ஸ்பெஷல்?’’
‘‘அந்தமாதிரி நிறைய வசனங்கள். ஆமாம், முதல்முறையா பாடல்களுடன் சேர்த்து வசனமும் எழுதி இருக்கார் யுகபாரதி. ‘எல்லாப் போராளிகளும் நம்பிக்கை துரோகத்தினாலதான தோத்துப்போயிருக்காங்க. போராட்டத்தை யாரும் தோக்கவெச்சிடாதீங்க’னு நுணுக்கமான உணர்வுபூர்வமான வசனங்களை எழுதியிருக்கார். ‘நாம சினிமாவுக்கு வந்ததுக்கு அர்த்தமா இருக்க இந்த ஒரு சம்பவம் போதுமடா’னு ஒவ்வொரு படத்துலயும் ஒரு சம்பவம் கிடைக்கும். அப்படி இதுல ஒரு சீக்வென்ஸ் எடுத்தோம். எம்.ஜி.ஆர் இறந்துடுவார். காலேஜ் லீவு. ஊர் முழுக்க ஸ்ட்ரைக். காட்டு வழிப்பாதையில் நடந்துபோகவேண்டிய சூழல். எல்லாருமே அந்தவழியா நடந்துபோய்ட்டு இருக்கும்போது ஒரு பெண்ணை பாம்பு கொத்திடும். காலேஜ்ல இருந்து கிட்டத்தட்ட ஆறு மைல் நடந்து வந்திருப்பாங்க. பழனி ஹாஸ்பிடலுக்கு போகணும்னா திரும்ப வந்த வழியே ஆறு மைல் நடக்கணும். இன்னொரு விஷயம், அந்தப்பெண்ணை தொட்டு தூக்கக்கூடாது. காரணம், சாதிப் பிரச்னை. அப்ப விஷ்ணு, ‘நாம எல்லாரும் சாதியை மறந்து ஸ்டுடன்டா இருந்தா இந்தப்பெண்ணின் உசுரை காப்பாத்திடலாம்’னு சொல்லி ஒரு முடிவெடுப்பார். அந்தப் பெண்ணை கட்டில்ல தூக்கிப்போட்டு ரிளே ரேஸ்மாதிரி 60 மாணவர்கள் கைமாற்றி கைமாற்றி தூக்கிக்கிட்டு ஓடிட்டே இருப்பாங்க. அப்ப விஷ்ணு-திவ்யாவும் ஒருவரை மற்றொருவர் பார்க்க இருவரும் ஒருவரை மற்றவர் அறியாமல் காதலிக்க ஆரம்பிப்பார்கள். பின்னணியில் பாடல் ஒலிக்கும். ‘உயிரெல்லாம் ஒன்றே/உறவாவோம் இன்றே/நெஞ்சில் நேசம் கொள்வோம் என்றால்/கல்லும் தெய்வம் ஆகுமே/உண்மை அன்பை நாமும் காட்ட/கண்ணீர் மட்டும் போதுமே/இணைவோம் இணைவோம்/இதயம் பூக்க இணைவோம்/இணைவோம் இணைவோம்/மனிதம் காக்க இணைவோம்...’ இன்னும் 10 வருஷம் கழிச்சும் எல்லா இடங்கள்லயும் இந்தப் பாடல் ஒலிக்கும். இந்தக் காட்சியை இதை சிங்கிள் ஷாட்ல எடுத்தாதான் அழகு. ஹெலிகேம்ல பண்ணினோம். இயக்குநர்- நடிகர் பாண்டியராஜன் மகன்தான் ஹெலிகேம் ஆப்பரேட் பண்ணினார். அப்படி ஒரு வொர்க். அதேபோல ஸ்டெடிகேம் ஆப்பரேட்டரும் அசத்தினார். ஆர்ட்டிஸ்ட்டும் மூணு நாள் தொடர்ந்து ஓடிட்டே இருந்தாங்க. ‘பொத்திப்பொத்தி வளர்த்த பொண்ணை இப்படி ஓடவைக்கிறீங்களே. கால்ல ரத்தம் கட்டிக்கிட்டு’னு ஸ்ரீதிவ்யா அம்மா வருத்தப்பட்டாங்க. ஆனா திவ்யா அசரலை. அந்தக் காட்சியை நிறைய பேருக்கு போட்டுக்காட்டினேன். அவங்களும் ‘எங்கப்பா இந்த லொக்கேஷன்லாம் இருக்கு’ன்னாங்க. எல்லாமே நம்ம ஊரைச்சுத்திதாங்க இருக்குது. கேமரா மேலப்போனதும் வேறமாதிரி தெரியுது’ன்னேன். இந்தப்பாட்டு மட்டுமில்லாம ஒட்டுமொத்தமா ‘மாவீரன் கிட்டு’ இந்த ஃபீல்லதான் இருக்கும்.’’

‘‘பீரியட் ஃபிலிம், டெக்னிக்கல் டீமும் வெயிட்டா இருக்கணுமே?’’
‘‘பணம் பண்ணணும்ங்கிறதை தாண்டி நல்ல படம் பண்ணணும், நம்ம பேர் நிக்கணும்னு வர்றதாலயோ என்னமோ தெரியலை, முதல் பட தயாரிப்பாளர்களுக்கு மட்டும் அப்படி ஒரு அமைப்பு. ‘16 வயதினிலே’ தொடங்கி, ‘சேது’, ‘பருத்தி வீரன்’, ‘சுப்ரமணியபுரம்’, ‘அழகி’, ‘காதல்’, ‘வெண்ணிலா கபடிக்குழு’, ‘அட்டகத்தி’னு அதுக்கு நிறைய உதாரணம் சொல்லலாம். நான் ‘மாவீரன் கிட்டு’வையும் அந்த வரிசையில வெச்சுதான் பார்க்கிறேன். திருப்பூரைச் சேர்ந்த சந்திரசாமி. என் அப்பாவின் நண்பர். முதல்முறையா படம் தயாரிக்கிறார். இப்பவரை அவருக்கு கதை தெரியாது. ‘போட்ட காசை பிசினஸ் பண்ணி திருப்பிக்கொடுத்துடுவேன். நம்பிப்போடுங்க. பிரமாதமான ஒரு படம் பண்ணித்தர்றேன்’னேன். அவரும் நம்பி வந்தார். பிரமாதமான படம் பண்ணிட்டோம். இப்ப அவர் தயாரிப்பில் அடுத்தப்படத்தையும் தொடங்கிட்டோம். இசை, இமான் சார். 80கள்ல இருந்த தென்தமிழகத்தை அழகாக உள்வாங்கிட்டு அருமையா பண்ணியிருக்கார். நாலு லவ் மெலடி. இதுதவிர மூணு பாட்டுனு மொத்தம் ஏழு பாடல்கள். ஃபுல் அண்டு ஃபுல் மியூசிக்கல் படமா இருக்கும். யுகபாரதியோட சேர்ந்து இமான் சார் முழுப் படத்துலயும் அவ்வளவு அழகா ஆக்கிரமிச்சிருக்கார். ‘ஆதலால் காதல் செய்வீர்’ பண்ணின பையன்தான் இதில் கேமராமேன். பிரமாதம் பண்ணிட்டாப்ல. படம் பார்த்த எல்லாரும் கொண்டாடிட்டாங்க. படம் ஃபுல்லாவே ஒருவிதமான டோன்ல லைட்டிங் பேட்டர்ன் மெயின்டைன் பண்ணியிருக்கார். இந்தப்படத்துக்கு இன்னொரு தயாரிப்பாளரா இருக்கும் ராஜீவன் சாரின் உதவியாளர் சேகர்தான் ஆர்ட் டைரக்டர். இவரின் உழைப்பு ரொம்பப் பெருசு. காசி விஸ்வநாதன். என் முதல் நாலு படங்களின் எடிட்டர். அடுத்த நாலு படங்களுக்குப்பிறகு திரும்பவும் அவர்கூட பண்றேன். சுருக்கமா சொல்லணும்னா இந்த டீம் இல்லைனா ‘மாவீரன் கிட்டு’ இல்லை.’’

- ம.கா.செந்தில்குமார்

அடுத்த கட்டுரைக்கு