Published:Updated:

என்னது... இந்தப் பட இயக்குநர் இவரா? - கோலிவுட் கபீம் குபாம்!

என்னது... இந்தப் பட இயக்குநர் இவரா? - கோலிவுட் கபீம் குபாம்!
என்னது... இந்தப் பட இயக்குநர் இவரா? - கோலிவுட் கபீம் குபாம்!

தமிழ் சினிமாவில் காமெடி மற்றும் சீரியஸ் கதாபாத்திரங்களில் நடித்திருக்கும் சில இயக்குநர்கள் இதற்குமுன் என்ன என்ன படங்களை டைரக்ட் பண்ணிருக்காங்கனு தெரியுமா மக்களே?

புதிய கீதை :

இந்தப் படம் இளையதளபதி நடிப்பில் வெளியான படம். 2003-ல் ரீலிஸ் ஆன இந்தப் படத்தின் இயக்குநர் யார் என்று பார்த்தால் கே.பி.ஜெகன். இந்தப் படம் ஹிட் அடிக்கவில்லை என்றாலும் விஜய் ரசிகர்களுக்கு ஒரு ஃபேவரைட் படமாகவே இருந்தது. பெயரைச் சொன்னால் கண்டிப்பாக இவரைப்பற்றித் தெரிய வாய்ப்பு குறைவுதான். இவர் 'மாயாண்டி குடும்பத்தார்', 'கோரிப்பாளையம்', 'மிளகா' போன்ற படங்களில் நடித்துள்ளார். 'புதிய கீதை' மட்டுமின்றி 'கோடம்பாக்கம்', 'ராமன் தேடிய சீதை' போன்ற படங்களையும் இயக்கியுள்ளார்.

மகாநதி, குணா :

பொதுவாகக் கமலை வைத்துப் படம் எடுத்தால் இயக்குநரின் பெயர் வெளியே தெரிய வாய்ப்பு குறைவு. ஏனென்றால் படத்தைப் பொருத்தவரை கமலின் ஆளுமை பெரிய அளவில் இருக்கும். அந்த வரிசையில் 'மகாநதி, குணா' போன்ற ப்ளாக் பஸ்டர் படங்களை இயக்கியவர் சந்தான பாரதி. 'அன்பே சிவம்', 'தசாவதாரம்', 'வரலாறு' போன்ற படங்களில் சப்போர்டிங் ஆக்டராகவும் நடித்துள்ளார். வருடம் கடந்து ஓடிய 'கரகாட்டக்காரன்' படத்தின் வில்லனும் இவர்தான். 10-க்கும் மேற்பட்ட படங்களை இயக்கியுள்ளார். சமீபகாலமாகப் பல்வேறு படங்களில் நடிகராகத் தமிழ் சினிமாவை வலம் வருகிறார் சந்தான பாரதி.

சிட்டிசன், ஏ.பி.சி.டி :

இந்த இரண்டு படங்களையும் இயக்கிய இயக்குநர் சரவணன் சுப்பையா. பின்பு இவரும் நடிக்க களம் இறங்கிவிட்டர். முக்கியமாக இவர் போலீஸாகப் பல படங்களில் நடித்துள்ளார். உதாரணத்துக்கு 'மீகாமன்', 'அதிபர்', '10 எண்றதுக்குள்ள' திரைப்படங்களில் போலீஸ் ஆபீஸராக நடித்துள்ளார். சமீபத்தில் வெளிவந்த 'காஷ்மாரோ' படத்திலும் நடித்துள்ளார். இவர் இயக்கிய முதல் படமே அல்டிமேட் ஸ்டார் அஜீத்தை வைத்துதான் என்பது குறிப்பிடத்தக்கது.

ஆசை ஆசையாய் :

இந்தப் படத்தை இயக்கியவர் யார் என்று சொன்னால் யாராலுமே நம்ப முடியாது. 'வேலைன்னு வந்த்துட்டா வெள்ளைக்காரன்', 'ஜில்லா', 'கோரிப்பாளையம்', 'தேசிங்கு ராஜா' போன்ற படங்களில் நடித்த ரவி மரியாதான். 'அன்னைக்கு காலையில ஆறு மணி இருக்கும்' காமெடியில் ரோபோ சங்கருடன் போராடுவாரே ஒரு மனுசன் அவரேதான். அந்தப் படம் மட்டுமில்லாமல் பல்வேறு படங்களில் காமெடியனாகக் கலக்கியுள்ளார். இவரும் இப்பொழுது முழு நேர  நடிகராக மாறிவிட்டார். 

அன்பே சிவம் :

இந்தப் படத்தை இயக்கியவர் 'முறை மாமன்', 'உள்ளத்தை அள்ளித்தா', 'மேட்டுக்குடி' போன்ற குபீர் சிரிப்புப் படங்களை இயக்கிய சுந்தர். C தான். தமிழ் மற்றும் தெலுங்கு மொழிகளில் 25-க்கும் மேற்பட்ட படங்களை இயக்கியுள்ளார். இவர் ஆரம்பக் காலத்தில் மணிவண்ணனின் உதவி இயக்குநராக இருந்திருக்கிறார். சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நடித்த 'அருணாசலம்' படம் இவர் இயக்கியதுதான்.

அவள் வருவாளா, ஆனந்தப் பூங்காற்றே :

நம்ம தல நடித்த சூப்பர் ஹிட் படமான 'அவள் வருவாளா', 'ஆனந்த பூங்காற்றே' இந்த இரண்டு படங்களையும் இயக்கிவர் 'கொடி', 'கோரிப்பாளையம்', 'விசில்' போன்ற பல படங்களில் நடித்த ராஜ் கபூர் தான். இவர் இயக்கிய முதல் படம் 1991ல் பிரபு, கனகா இருவரும் இணைந்து நடித்து வெளியான 'தாலாட்டு கேட்குதம்மா'. இதுவரைக்கும் இவர் 15-க்கும் மேற்பட்ட படங்கள் இயக்கியுள்ளார். சமீபகாலமாக அதிகப் படங்களில் நடித்து வருகிறார்.

ஊர்க்காவலன் :

சூப்பர் ஸ்டார் ரஜினி, ராதிகா நடித்து வெளியான 'ஊர்க்காவலன்' படத்தை இயக்கியவர் மனோபாலா. 1982-ல் கார்த்திக், சுகாசினி நடிப்பில் வெளியான 'ஆகாய கங்கை' படம்தான் இவர் இயக்கிய முதல் படம். இதுவரைக்கும் 20-க்கும் மேற்பட்ட படங்களை இயக்கியுள்ளார், 700-க்கும் மேல் படங்களில் நடித்து இருக்கிறார் என்பதும் ஹைலைட்டான விஷயம். இப்போது வரும் படங்களில் கதை இருக்கோ இல்லையோ மனோபாலா கண்டிப்பா இருப்பார்.

-தார்மிக் லீ

பின் செல்ல