Vikatan.com

www.vikatan.com would like to send you push notifications.

Notifications can be turned off anytime from browser settings.

”செல்வராகவன் ரொம்ப பொறுமையா, தெளிவா விளக்குவார்!” -ஒளிப்பதிவாளர் ராம்ஜி #5yearsOfMayakkamEnna

ராம்ஜி

ண்கள் முழுக்க கனவுகளுடனும், கையில் ஒரு கேமராவுடனும் வைல்ட் லைஃப் போட்டோகிராஃபராக துடிக்கும் ஒரு எளிய இளைஞனின் கதை தான் 'மயக்கம் என்ன'. படம் ரிலீசாகி இன்றோடு ஐந்து வருடங்கள் ஆகின்றன. வழக்கமாக செல்வராகவன் படம் என்றாலே சோகமாக நகர்ந்து கொண்டிருக்கும் என்ற கருத்து இருக்கும். 'மயக்கம் என்ன' ரிலீஸ் ஆன நேரத்திலும் அப்படியான விமர்சனங்கள் வரத்தான் செய்தன. அந்த விமர்சனங்களையெல்லாம் தாண்டி இப்போதும் பலருக்கு தன்னம்பிக்கையை கொடுக்கும் படமாக 'மயக்கம் என்ன' இருக்கிறது.      

ன்றாட வருமானம், அவசரத்திற்கு நண்பர்கள் உதவி என ஓட ஓட தூரம் குறையாத வாழ்க்கையில் அவனை உயிர்ப்பாய் வைத்திருப்பது அவனுடைய போட்டோகிராஃபி ஆசை மட்டும் தான் என்பதை ஒவ்வொரு காட்சியிலும் கடத்தியிருப்பார் செல்வராகவன். தனுஷின் நண்பனாக வரும் சுந்தர், ரிச்சா கங்கோபாத்யா, பூஜா தேவார்யா என ஒவ்வொரு கதாபாத்திரமும் அதிகம் பேசாமலே தங்கள் உணர்வுகளைக் கடத்திக் கொண்டிருப்பார்கள்.

வாய்ப்புகாக ஒரு பெரிய வைல்ட் லைஃப் போட்டோகிராபரிடம் கெஞ்சுவது, நண்பனின் காதலியை மனைவியாக்கி கொள்ளும் பொழுது அழுது புலம்புவது, எப்போதும் உடல்மொழியில் ஒரு சின்ன தயக்கம் என தனுஷ் மிரட்டியிருப்பார்.  அலுவலகத்தில் "உனக்கு இந்த போட்டோக்ராபியெல்லாம் சரிப்பட்டு வராது வேற வேலை இருந்தா பாரு" என அட்வைஸ் பண்ணி திட்டு வாங்குவது, தனுஷ் அடித்ததும் ரத்தத்தை அமைதியாக துடைத்து எடுப்பது, தோற்று கொண்டே இருக்கும் ஒரு கலைஞனின் மனைவியாக அலட்டிக் கொள்ளாமல் தன்னை வெளிக்காட்டியிருப்பர் ரிச்சா. கடைசியாக தனுஷ் விருது வாங்கும் அந்த இடத்தில் ரிச்சா கொடுக்கும் அழுகை, கோபம், மகிழ்ச்சி கலவையான அந்த ரியாக்ஷன்கள் வேற லெவல்!! 

செல்வராகவன் மனதில் நினைத்ததை அவ்வளவு அழகாக, உயிர்ப்புடன் தன் கேமராவின் வழியே கடத்தியிருப்பார் ஒளிப்பதிவாளர் ராம்ஜி. ஒளிப்பதிவாளர் ராம்ஜியிடம் பேசினோம்.., 'மயக்கம் என்ன' படத்துடனான தன் அனுபவங்களை பகிர்ந்து கொண்டார்.

மயக்கம்

"டத்தை ஆரம்பிக்கும் பொழுது எங்களுக்கு ஒரு பெரிய சவால் காத்திருந்தது. எல்லோருமே செல்வா படம் முடிக்க ரொம்ப நாள் ஆகிடுதேன்னு பேசிட்டு இருந்தாங்க. ஷூட்டிங்க்கு முன்னே செல்வராகவன்கிட்ட 'சார் நாம இந்த படத்தை 55 நாள்ல முடிச்சு காட்டணும்னு' சொன்னேன். அவரும் எனக்கு எந்த பிரச்சனையும் இல்லை சார். நீங்க ரெடின்னா நானும் ரெடின்னு சந்தோஷமா ஒப்புக்கிட்டார். ஒரு சவாலா எடுத்துக்கிட்டு 28 நாள்லயே 60 சதவிகித படப்பிடிப்பையும் முடிச்சுட்டோம். நாங்க திட்டமிட்டதை விட இரண்டு நாட்கள் அதிகமாகி 57 நாள்ல ஷூட்டிங் முடிஞ்சுடுச்சு. பி சி ஸ்ரீராம் சார்கிட்ட வேலை செஞ்சுட்டு வந்ததால எந்த இடத்துலயும் எனக்கு பெரிய சிரமம் இல்லை. செல்வா ஒவ்வொரு காட்சியையும் ரொம்ப பொறுமையா, தெளிவா விளக்குவார். அது எனக்கு ரொம்ப பயனுள்ளதா இருந்தது. அவரு கதை சொன்னபோதே இந்த படத்துல என்னோட வேலை என்னனு தெளிவா பிளான் பண்ணிக்கிட்டேன். படம் ரிலீஸ் ஆனதும் ஒருதரப்பினர் ஒரு போட்டோகிராபரோட கதை தானே, இன்னும் நல்லா கலர்ஃபுல்லா பண்ணிருக்கலாமே சார்னு தங்களோட கருத்தை சொன்னாங்க. ஆனா என்னை பொறுத்தவரைக்கும் ஒவ்வொரு நாளையும் கஷ்டபட்டு நகர்த்துற ஒருத்தனோட வாழ்க்கையை அப்படி பதிவு பண்றதுல விருப்பமில்லை. எந்த இடத்துலயும் கதையை தாண்டி, ஒரு சீன்ல வரும் வண்ணங்கள் ஆடியன்ஸோட கவனத்தை திசை திருப்புற மாதிரி  இருந்துட கூடாதுங்குறதுல தெளிவா இருந்தேன். படம் முடிஞ்சு சென்சாருக்கு போனது. படம் பார்த்த மெம்பர்ஸ் யார் சார் கேமரா பண்ணினது, ரொம்ப கலர்ஃபுல்லா வந்திருக்குன்னு செல்வாகிட்ட சொல்லிருக்காங்க. அவரு எனக்கு போன்ல அதை சொல்லி ரொம்ப சந்தோஷப்பட்டார். நான் அப்போ படத்தோட கலர் கரேக்ஷன் வேலைகள்ல இருந்தேன். செல்வா இப்படி சொன்னதும் மறுபடியும் கலரெல்லாம் குறைச்சு அவுட்புட் கொடுத்தோம். நிறைய பேருக்கு அது தான் பிடிக்கவும் செஞ்சது. அது தான் அந்த கதைக்கு கொடுக்குற மரியாதைன்னு நான் நினைச்சேன்." என்கிறார்.   

ஜி வி பிரகாஷ் இசையில் 'பிறை தேடும் இரவிலே', 'நான் சொன்னதும் மழை வந்துச்சா..', 'ஓட ஓட ஓட தூரம் குறையல', 'காதல் என் காதல்', என ஒவ்வொரு பாட்டும் இன்றும் பலரின் ஃபேவரைட் லிஸ்ட்டில் இருப்பதைப் பார்க்க முடியும். படத்தில் ஒரு பாடலையும் பாடியிருக்கிறார் செல்வராகவன். படத்தின் எல்லாப் பாடல்களையும் செல்வராகவனும் தனுஷும் தான் எழுதி இருந்தார்கள்.     

"ன்னித்து கொள்ளுங்கள் நண்பர்களே., எனது உடல்நிலை சற்று சரியில்லை. முன் போல வேலை செய்ய முடியவில்லை. எனக்கு திருப்தியாக வந்த பிறகு 'மயக்கம் என்ன' படத்தை வெளியிடுவேன். இப்போது சில நாட்களாக எப்போதும் தூங்க வேண்டும் என்று தோன்றுகிறது. இதற்கு என்ன பெயர் என்று தெரியவில்லை. நிச்சயம் இதிலிருந்து மீண்டு வந்து படங்களை இயக்குவேன்." 2011 ஆம் ஆண்டு தீபாவளிக்கு ரிலீஸ் எனச் சொல்லப்பட்டு ரிலீஸ் தேதி மாறிய பொழுது செல்வராகவன் சொன்னது இது. படத்தில் தனுஷ் என்ன மனநிலையில் இருப்பாரோ, அதே மன நிலையை செல்வராகவனின் வார்த்தைகளிலும் உணரமுடியும். அதனால் தான் முயற்சியை கைவிடாமல் போராடிக் கொண்டே இருக்க நினைக்கும் ஒவ்வொருவருக்கும் 'மயக்கம் என்ன' ரொம்ப ஸ்பெஷல் படமாக இருக்கிறது..!!

- க. பாலாஜி

உங்கள் கருத்தைப் பதிவு செய்யுங்கள்

Advertisement
Advertisement
Advertisement
Advertisement

MUST READ

Advertisement

எடிட்டர் சாய்ஸ்