Published:Updated:

யாரு சாமி நீங்க? உங்களை பார்க்கணும் போல இருக்கே! - ஒரு சீன் காமெடியன்கள்

Vikatan Correspondent
யாரு சாமி நீங்க? உங்களை பார்க்கணும் போல இருக்கே! - ஒரு சீன் காமெடியன்கள்
யாரு சாமி நீங்க? உங்களை பார்க்கணும் போல இருக்கே! - ஒரு சீன் காமெடியன்கள்

கவுண்டமணி, வடிவேலு போன்றவர்களைப் பற்றிச் சொல்லவே தேவையில்லை. காமெடியில் கலக்கி வெளுப்பார்கள். அவர்களைத் தாண்டி சில துணை நடிகர்களும் அவ்வப்போது திரையில் சில பல பதில் சொல்ல முடியாத கேள்விகளை எல்லாம் கேட்டு  மின்னுவார்கள். இன்னும் சிலர் இருக்கிறார்கள். இதுவரைக்கும் நடித்ததே ஒன்றிரண்டு காட்சிகளாகத்தான் இருக்கும். ஆனால் எவர்க்ரீன் சிரிப்பை அள்ளித் தந்து 'யாரு சாமி இவரு' எனத் தேட வைப்பார்கள். அப்படி சிங்கிள் பாலில் சிக்ஸ் அடித்த சிங்கங்கள்தான் இவர்கள்.

மிஸ்டர் மிக்சர் :

நெட்டிசன்களின் எவர்க்ரீன் காமெடி மீம் மெட்டீரியல் இவர்தான். செந்திலும் கவுண்டமணியும் கட்டி உருள்வதைக் கண்டுகொள்ளாமல் வெள்ளை வேட்டி, சட்டை, நெற்றியில் பட்டை என சாத்வீகமாக உட்கார்ந்து மிக்சர் அரைப்பதைக் கண்ணும் கருத்துமாக செய்துகொண்டிருப்பார். அதுவும் சும்மா இல்லை. வாய் வாசல்படி வரைக்கும் அரவை மெஷின் போல போய்ப் போய் வரும். யாரு சாமி நீங்க? எங்க இருக்கீங்க?

முறைக்கும் மீசை :

வடிவேலுவிடம் 'சைத்தான் சைக்கிளில் அல்ல, சுருட்டிலும்கூட வரும்' எனச் சொல்லி சிவனே எனத் துண்டுபீடி வாங்கச் செல்பவரை குறுகுறுவென முறைத்துப் பார்த்துப் பீதியேற்றும் ஓர் உருவம். உலக்கை போலத் தடியாய், மீசையை முறுக்கி முறைக்கும் அந்த உருவத்தைப் பார்க்கும் அப்பிராணி வடிவேலு கொடுக்கும் காமெடி ரியாக்‌ஷன்கள் தெறி ரகம். நீங்க இன்னும் நிறையப் படங்கள்ல விடாம முறைச்சிருக்கலாம் ப்ரோ.

குருநாதாஆஆஆஆ :

முன்னதில் துண்டுபீடி என்றால் இதில் எச்சில் பீடி. முட்டுச்சந்தில் திணறத் திணற அடிவாங்கும் வடிவேலுவுக்கு சப்போர்ட்டாய் வரும் அந்த முரட்டு உருவத்திற்கு மாட்டு சாணத்தையும் மனுஷன் ............யும் கலந்து அபிஷேகம் செய்வார்கள். அதற்கு வடிவேலு கொடுக்கும் ரியாக்‌ஷன் வாவ்டா ரகம். கடைசியில் அவரிடமும் அடிவாங்கி ஓடுவார் வைகைப்புயல்.

கோலம் போடும் லேடி :

பொண்ணு பார்க்க ஆசை ஆசையாய் வடிவேலு சகிதம் போவார் முரளி. அங்கே கோலம் போட்டுக்கொண்டிருக்கும் இவரைப் பார்த்து பயந்து செருப்புத் தெறிக்க முரளி ஓடிவிட, மாட்டும் வடிவேலுவை நொங்கெடுக்க விரட்டும் ஒரு கூட்டம். விடிய விடிய சந்து சந்தாக ஓடி, கடைசியில் வடிவேலுவுக்குப் பொண்ணே பார்க்க முடியாமல் போவதுதான் 'திடுக்' க்ளைமாக்ஸ்.

'டீ கேன்சல்' தம்பி :

இவருக்கு மொத்த வசனமே தலைப்பில் இருக்கும் அந்த ஒற்றை வரிதான். ஆனால் ஆக்‌ஷனிலேயே வெள்ளை சொள்ளையுமாக பந்தாவாகத் திரியும் வடிவேலுவை சேற்றில் முக்கி பாத்திரத்தில் அடிவாங்க வைத்து புலம்ப விடுவார். சும்மா போற ஆளை வம்பிழுத்து நாறடிச்சு அழ வெச்ச உங்களைப் பார்த்தே ஆகணும். யாருண்ணே நீங்க?

கர்ர்ர்ர் குறட்டை சார் :

நாடி நரம்பு எல்லாம் வேட்டை வெறி ஊறி செந்தில் துணையோடு புலியைத் தேடிப் பாய்ச்சலோடு போவார் கவுண்டர். அவரை குறட்டைவிட்டுக் கலாய்ப்பாரே அந்த ஜீவன் இவர்தான். அனேகமாய் ஆல் ஓவர் இந்தியாவிலேயே இப்படி வித்தியாசமாய்க் குறட்டைவிடும் ஒரே ஆள் இவராகத்தான் இருப்பார். அனந்த் வைத்தியநாதன்கிட்ட சொன்னா நல்லா டியூன் பண்ணுவார் ப்ரோ.

'ஐயய்யய்யோ ஆனந்தமே' அண்ணன் :

கேடி பில்லா கில்லாடி ரங்கா க்ளைமாக்ஸில் விமலை ஓரங்கட்டி, சூரியைப் பறக்கவிட்டு, சிவகார்த்திகேயனைத் தெறிக்கவிட்டு வெளுத்துக்கொண்டிருக்கும் ஒரு குரூப். திடீரென சம்பந்தமே இல்லாமல் 'ஐயய்யய்யோ ஆனந்தமே' பாட்டுக்குக் கூட்டத்தில் குத்தாட்டம் போட்டு கிச்சுகிச்சு மூட்டுவார் ஒருவர். அதெப்படி ஜி அந்த ரத்தக் களறியிலேயும் உங்களுக்குக் குதூகலமா இருக்கு? 

செங்கல் சைக்கோ :

21-ம் நூற்றாண்டின் அரிய கண்டுபிடிப்பு. கை நிறைய ஜெம்ஸ் மிட்டாய் போல செங்கற்களை வைத்துக்கொண்டு விரட்டி விரட்டி விளாசும் 'சூப்பர்மேன்'. அதுவும் வி.டி.வி. கணேஷின் கரகரக் குரல் அநியாயத்துக்குக் கடுப்பேற்றும் போல. அவரை மட்டும் மங்கு மங்கு எனக் குறிவைத்து அடிப்பார். உங்க வித்தியாசமான பேருக்காகவே உங்களைப் பார்க்கணும் பாஸ்!

-நித்திஷ்