தமிழ்சினிமா ரசிகர்கள் தவறவிட்ட படங்கள்  | Movies that went unnoticed at the time of their release

வெளியிடப்பட்ட நேரம்: 11:32 (26/11/2016)

கடைசி தொடர்பு:11:32 (26/11/2016)

தமிழ்சினிமா ரசிகர்கள் தவறவிட்ட படங்கள் 

கோலிவுட்டில் சில படங்கள் தியேட்டருக்கு வந்ததும் தெரியாமல் போனதும் தெரியாமல் காணாமல் போய் இருக்கும். ஆனால் அதே படங்களை சில காலம் கழித்து டி.வி-யிலோ, லோக்கல் சேனலிலோ பார்க்கும்போது `ச்சே இப்படி ஒரு படத்தை எப்படி மிஸ் பண்ணோம்?' என்று யோசிக்க வைக்கும். தமிழ் சினிமா ரசிகர்கள் தியேட்டரில் பார்க்கத் தவறிய நல்ல படங்களின் தொகுப்புதான் இது.  

சினிமா

விடியும் முன் :

நான்கு ஆண்கள், மூன்று காரணங்கள், இரண்டு பெண்கள், இவர்களுக்கு இடையில் ஒரே இரவில் நடக்கும் கதைதான் 'விடியும் முன்'. படத்தின் தலைப்புதான் மொத்தக் கதையே. ஒரே நாளில் நடக்கும் சம்பவங்களின் தொகுப்பை இதைவிட சுவாரஸ்யமாகச் சொல்வது கடினம். இந்தப் படத்தின் இயக்குநர் பாலாஜி கே குமார் இதற்கு அடுத்து வேறு எந்தப் படமும் இயக்கவே இல்லை. இந்தப் படத்திற்கு முன் '9 Lives of Mara' என்றொரு ஆங்கிலப் படத்தை இயக்கி இருக்கிறார். இந்தப் படத்தின் டீஸரே கதைக்களத்தின் வீரியத்தைச் சொல்லும்.

 

மூடர் கூடம் :

கோலிவுட்டில் இது போன்ற படங்கள் வருவது அரிது. கிட்டத்தட்ட படத்தின் இரண்டாம் பாகம் முழுக்க ஒரே இடத்தில் எடுக்கப்பட்டிருந்தாலும் எந்த விதத்திலும் சுவாரஸ்யம் குறையாமல் திரைக்கதை நகரும். படம் வந்த புதிதில் கவனிக்கப்படாமல் போனாலும் பின் கொஞ்சம் கொஞ்சமாக ரசிகர்களின் கவனத்தை ஈர்த்தது. இந்தப் படத்தின் இயக்குநர் நவீன் எழுதிய வசனங்களுக்காகவே  அதிகம் பாராட்டப்பட்டது. என்னதான் அதிகம் பாராட்டப்பட்டாலும் தியேட்டரில் ஓடிய சமயத்தில் படம் குறித்து யாருமே பேசவில்லை.

 

கற்றது தமிழ் :

இயக்குநர் ராமின் முதல் படம். வேலை இல்லாமல் தவிக்கும் தமிழில் முதுகலைப் பட்டம் பெற்ற  ஓர் இளைஞனின் வாழ்க்கையில் நடக்கும் கதை. தமிழ் சினிமா கதை சொல்லலில் வித்தியாசமான பாணியை இந்தத் திரைப்படம்தான் முதலில் ஏற்படுத்தியது. 'தமிழ் எம்.ஏ' என பெயரிடப்பட்டு பின்பு 'கற்றது தமிழ்' என்று மாற்றப்பட்டது. படம் வந்து தியேட்டரைவிட்டு போகும் வரை இந்தப் படத்தைப் பற்றி யாருமே பேசவில்லை. ஏனோ நீண்ட நாட்களுக்குப் பின்புதான் 'கற்றது தமிழ்' பிரபாகர் பற்றியும் ,ஆனந்தி பற்றியும் தமிழ் ரசிகர்களுக்கு தெரிந்தது.

 

புதுப்பேட்டை:

கிட்டத்தட்ட தமிழ் சினிமாவில் ஒரு புதிய அலையை ஏற்படுத்திய படம் என்றால் அது இந்தப் படமாகத்தான் இருக்கும். தனுஷின் தோற்றத்தை வைத்து அவரைக் குறைவாக மதிப்பிட்ட பல பேர் அவருடைய ரசிகர்களாக மாறியது இந்தப் படத்தில்தான். ஒரு டான் எப்படி உருவாகிறான் என்பதையும் அவனுடைய வாழ்க்கை முறையையும்  இயல்பாகக் காட்சிப்படுத்தி இருப்பார்கள். செல்வராகவன் எடுத்த படங்களிலும், தமிழ் சினிமாவிலும் மிக முக்கியமான படமும், தவிர்க்க முடியாத படமும் கண்டிப்பாக 'புதுப்பேட்டை'யாகத்தான் இருக்கும்.

 

மதுபானக் கடை :

தமிழில் கிட்டத்தட்ட யாருமே பார்க்காமல் போன மிகச்சிறந்த படம்தான் 'மதுபானக் கடை'. தமிழில் தலித் அரசியல் பேசிய மிகச் சில படங்களில் இதுவும் ஒன்று. `ஏ` சர்டிஃபிகேட் வாங்கிய படம் என்பதால், யாருமே இந்தப் படத்தை தியேட்டரில் வந்தபோது பார்க்கவில்லை. மனிதக் கழிவுகளை மனிதர்களே அள்ளுவது எத்தனைத் தவறானது என்பதையும், எத்தனை வலி மிகுந்தது என்பதையும் சொல்லும் அந்த ஒரு காட்சிக்காகவே இந்தப் படம் கொண்டாடப்பட வேண்டியதுதான்.

ஆரண்ய காண்டம் :

தியாகராஜன் குமாரராஜா என்ற அற்புதமான கலைஞனை அடையாளப்படுத்திய படம்தான் 'ஆரண்ய காண்டம்'. அதுவரை தமிழில் பின்பற்றப்பட்டு வந்த எல்லா சம்பிரதாயங்களையும் மொத்தமாக உடைத்த படம். யுவனின் பின்னணி இசை படத்தை வேறொரு தளத்திற்குக் கொண்டு சென்றிருக்கும். வேற லெவல் திரைக்கதையுடன் வந்த படத்தை யாருமே பார்க்காமல் போனதுதான் கொடுமை.

 

-லோ.சியாம் சுந்தர்

நீங்க எப்படி பீல் பண்றீங்க


டிரெண்டிங் @ விகடன்