Published:Updated:

கமல் பாவம்... சத்யராஜ் பாவம்...! - விருமாண்டிக்கும் சிவனாண்டிக்கும் படம் எப்படி?

கமல் பாவம்... சத்யராஜ் பாவம்...! - விருமாண்டிக்கும் சிவனாண்டிக்கும் படம் எப்படி?
கமல் பாவம்... சத்யராஜ் பாவம்...! - விருமாண்டிக்கும் சிவனாண்டிக்கும் படம் எப்படி?

குறைந்த பட்ஜெட், புதுமுக நடிகர்கள், டெக்னீஷியன்ஸை வைத்து தரமான படத்தை எடுக்க முடியும். தமிழில் அதற்கான உதாரணங்கள் ஏராளம் அல்லது காமெடி என்கிற பெயரில் வேலைக்கே ஆகாத ஒரு  படத்தையும் எடுக்க முடியும். இதற்கும் தமிழில் உதாரணங்கள் ஏராளம். இதில் "விருமாண்டிக்கும் சிவனாண்டிக்கும்" என்ன வகைப் படம்?

தொழிலதிபர் ஆகும் கனவுடன் இருப்பவர் ஹீரோ சஞ்சய். வட்டிக்கு பணம் கொடுக்கும் சங்கிலியிடம் ப்ரவுசிங் சென்டர் ஆரம்பிப்பதாக சொல்லி ஐந்து லட்சம் ரூபாய் கடனாக வாங்குகிறார். ஆனால், நண்பன் முருகதாஸுடன் அதை செலவழித்துவிடுகிறார். வாங்கிய பணத்துக்கு 'எங்கடா வட்டி?' என கொந்தளிக்கும் சங்கிலி, பணத்துக்கு கேரண்டி கொடுத்த முருகதாஸை வெளுத்தெடுக்கிறார். பணப்பிரச்சனையை சரி செய்ய முழித்துக் கொண்டிருக்கும் சஞ்சய் + முருகதாஸுக்கு, தம்பிராமையா ரூபத்தில் உதவி வருகிறது. தன் படத்தில் சஞ்சய் ஆறுநாள் நடித்துக் கொடுத்தால் ஆறுலட்சம் தருவதாக கூறுகிறார். அருந்ததி நாயர் ஹீரோயின் என முடிவு செய்து, அவருக்குத் தெரியாமலே அவரை வைத்துப் படம் எடுத்து முடிக்கிறார்கள். தம்பிராமையாவிடம் செக் வாங்கி, சங்கிலியிடம் கொடுத்துவிட்டு வீட்டுக்கு வந்தால் அருந்ததியின் குடும்பமே சஞ்சய் வீட்டு வாசலில் உட்கார்ந்திருக்கிறார்கள். 'எங்கடா என் பொண்ணு?' என கேட்கிறார் அருந்ததியின் அப்பா. தம்பிராமையா எடுத்த படம் யூ-ட்யூபில் வெளியாக, சஞ்சய்கும் அருந்ததிக்கும் காதல் என ஊரே நம்புகிறது. அதே சமயத்தில் சங்கிலியிடம் கொடுத்த செக் பவுன்ஸ் ஆகிறது. அருந்ததி எங்கு சென்றார்? சங்கிலிடமிருந்து சஞ்சயும், முருகதாஸும் தப்பினார்களா? க்ளைமாக்ஸில் படம் முடிந்து ப்ளூபர்ஸ் போடுகிறார்களா? எனப் பல கேள்விகளுக்கு விடை சொல்கிறது படம்.

படத்தின் ஹீரோவா என உறுதியாகச் சொல்ல முடியவில்லை. ஆனால், அவருக்கு ஜோடியாக அருந்ததி இருப்பதால் ஹீரோ சஞ்சய் தான் என்பதைப் புரிந்து கொள்ளமுடிகிறது. எக்ஸாம் ஹாலில் மூன்று மணிநேரம் கண்டிப்பாக இருக்கவேண்டும் என்ற கட்டாயம் போல, தான் வரும் காட்சிகளில் எல்லாம் மிகவும் கஷ்டப்பட்டு ஏனோ தானோ என நடித்திருக்கிறார். ஹீரோயின் அருந்ததிக்கு, நல்ல மேக்கப்புடன் ஸ்லோமோஷனில் நடந்து செல்வது, அழுவது போல கொஞ்சம் நடிக்கவும் இடம் கொடுத்திருக்கலாம். பஸ்டிக்கெட், டீக்கடை, பிச்சைக்காரர் என எல்லோருக்கும் செக் எழுதிக் கொடுக்கும் மோசடிக்காரர் வேடம் தம்பிராமையாவுக்கு. வழக்கம் போல் தன் வேலையை சரியாக செய்கிறார். Be cool, Be cool என அவர் சொல்லும் மாடுலேஷன்களும், சில எக்ஸ்பிரஷன்களும் மட்டும் தான் மொத்தப் படத்திலும் ஆறுதல். அண்ணே, ஃப்ரெண்டு கம்ப்யூட்டர் சென்டர் வைக்கணும்னு ஆசைப்படறாப்ள என்றதும் "வைக்கிறதா இருந்தா குடவுன்ல வெச்சுட்டுப் போங்கடா" என யோகிபாபுவின் ஒன்று இரண்டு கவுண்டர்கள் மட்டும் பலமாக சிரிக்க வைக்கிறது. 

எஸ்.கே.மைக்கேல் ஒளிப்பதிவு படத்துக்கு என்ன தேவையோ அதை மட்டும் செய்திருக்கிறது. தேவராஜனின் இசையில் பாடல்கள் சுமார் ரகம் பின்னணி இசை சில நேரம் சீரியல் பார்க்கும் உணர்வைத் தருகிறது.

விஜய் நடிப்பில் ப்ரியமுடன், யூத் என இரண்டு படம் இயக்கிய வின்சென்ட் செல்வா தான் இந்தப் படத்திற்கு இயக்குநர். தம்பிராமையா, மயில்சாமி, யோகிபாபு, ரோபோ ஷங்கர் என காமெடிக்கு அத்தனை ஆட்களை இறக்கிவிட்டு மற்ற எதையும் கண்டுகொள்ள வேண்டாம் என இயக்குநர் தீர்மானித்திருப்பது படத்தில் அப்படியே தெரிகிறது. தம்பிராமையா ஏன் சஞ்சயை ஹீரோவாக நடிக்கவைக்க அடம் பிடிக்கிறார்? தொழிலதிபர் ஆகவேண்டும் என சீரியஸ் லட்சியம் வைத்திருக்கும் ஹீரோ, வாங்கிய ஐந்து லட்சம் கடனை ஏப்பம் விட்டு, மேற்படி அறுபது லட்சம் லோனுக்கு வங்கியில் அப்ளை செய்கிறார். நிஜமாக அவரின் கேரக்டர் தான் என்ன? ஹிட்டன் கேமிரா மூலம் ஹீரோயினை படத்தில் இணைப்பது ஓகே. கொடியில் காயும் பச்சைக் கலர் புடவையை தூக்கி வந்து ஷூட் செய்யும் க்ரீன் மேட் டெக்னிக்கெல்லாம் அநியாயம். இதனுடன் ரகசிய கில்லர் மயில் சாமியின் காமெடி, அலமாரிக்குள் மாட்டிக் கொள்ளும் முருகதாஸ் காமெடி, மனோபாலா - சோனா காமெடி, தம்பிராமையாவைத் தேடி வரும் போலீஸ் ரோபோ ஷங்கர் காமெடி என ஏதேதோ திணிப்புகள். ஆனால், எந்த காமெடியும் வேலைக்கு ஆகாதது தான் பெரிய காமெடி.

படத்தில் என்ன தான் சொல்ல வருகிறார்கள்? என்பது க்ளைமாக்ஸ் வரும் வரை புரியவே இல்லை. ஆனால், அந்தக் கிளைமாக்ஸுக்கும் அதற்கு முன் நாம் பார்த்த படத்துக்கும் என்ன தான் சம்பந்தம் என்ற கேள்வியும் எழுகிறது. படத்தின் தலைப்புக்கு நியாயம் செய்ய, ஒரு ஊரின் தலைவருக்கு விருமாண்டி என்றும் இன்னொரு ஊரின் தலைவருக்கு சிவனாண்டி என்றும் பெயரிட்டு, இருவருக்கும் ஆலமரத்தடியில் ஒரு பஞ்சாயத்து சீன் கொடுத்திருக்கிறார்கள். மற்றபடி படத்துக்கும் தலைப்புக்கும் கூட சம்பந்தம் கிடையாது. எண்டு க்ரெடிட்ஸில் வரும் ப்ளூப்பர்ஸைப் பார்க்கும் போது கூட சிரிப்பு வரவில்லை என்பது தான் இருப்பதிலேயே பெரிய சோகம்.