Published:Updated:

பாஸ் ஆவாரா பட்டதாரி? #பட்டதாரி - படம் எப்படி?

பாஸ் ஆவாரா பட்டதாரி? #பட்டதாரி - படம் எப்படி?
பாஸ் ஆவாரா பட்டதாரி? #பட்டதாரி - படம் எப்படி?

படித்து முடித்துவிட்டு, வேலைக்குப் போகாமல் வெட்டியாக சுற்றித்திரியும் ஐந்து வேலையில்லா பட்டதாரிகள் எல்லா ஊரிலும் இருப்பார்கள். தொல்லை தரும் இந்த ஐந்து பிள்ளைகளின் காதலும், கலாட்டாவும் தான் “பட்டதாரி”. பாஸ்... ஐந்து பேருன்னா “பட்டதாரிகள்”னு தானே டைட்டில் வச்சிருக்கணும்? டவுட்டு.. டவுட்டு...

கதை என்னன்னா....

‘மதுரக்காரய்ங்க பழகிட்டா உயிரையும் கொடுப்பாய்ங்க... பகைச்சிட்டா உயிரையும் எடுப்பாய்ங்க..’ என்ற பின்னணி குரல் முடியவும், கத்தியுடன் ஐந்து பேர் ஓடிவர படமும் ஸ்டார்ட் ஆகிறது. இதை சொல்லும் 993வது படம் இது. அபிசரவணனும், அவனின் நான்கு கூட்டாளிகளும் பட்டதாரிகள். டீ கடையும் டாஸ்மாக்கும் தான் இவர்களின் உச்சபட்சப் பொழுதுபோக்கு. கலாட்டா செய்வதும், போலீஸில் சிக்குவதுமே வேலையாக வைத்திருக்கிறார்கள். ஆளுக்கொரு காதல். அந்த காதலும் பீஸ் போன பல்பாக மாறிவிடுகிறது. இந்த நேரத்தில் அபிசரவணனை துரத்தித் துரத்தி காதலிக்கிறார் அதிதி. கல்லூரி படிக்கும் போதே, அபிசரவணனின் காதலிக்கு நிகழ்ந்த கோரசம்பவத்தால், அதிதியை விட்டு விலகிச்செல்கிறார் அபி. பழைய காதலி ராசிகாவிற்கு என்ன நடந்தது, அதிதியை அபிசரவணன் திருமணம் செய்தாரா என்பதே கதை. இதற்கு நடுவே, அபிசரவணனின் நான்கு நண்பர்களின் கலாட்டாவும், எதற்கு கத்தியுடன் ஓடினார்கள் என்ற ட்விஸ்ட் தனி. 

படம் முழுக்க அபிசரவணனும், அவனின் நான்கு நண்பர்களுமே நிறைந்திருக்கிறார்கள். ஆளுக்கொரு காதலும், அந்த காதலுக்காக பாடாய்படுவதும், தேவையே இல்லாமல் சண்டை போடுவதுமாக படம் முழுவதும் வெட்டி தான். அம்பாசமுத்திரம் அம்பானி படத்தில் கருணாஸூடன் நடித்த சங்கரின் காமெடி மட்டும் ஒகே. மற்ற மூவரைக்காட்டிலும் இவரின் நடிப்பு ரசிக்க வைக்கிறது.

படத்தை கலர்ஃபுல்லாய் நிறைப்பது நாயகி அதிதி தான். அழகாய் வருகிறார், அழகாய் பார்க்கிறார், அழகாய் நடிக்கிறார்.சில காட்சிகள் என்றாலும் அதிதி அவ்வளவு அழகு. பிளாஷ்பேக்கில் அபியின் பழைய காதலியாக வரும் ராசிகா மேக்கப்பில் மேனேஜ் செய்திருப்பது க்ளோசப் காட்சிகளில் அப்பட்டமாக தெரிகிறது. 

பாடலாசிரியர் தரண் வரிகளில்,வைக்கோம் விஜயலட்சுமி குரலில் “சிங்கிள் சிம்” பாடலும், அதற்கான காட்சியமைப்பும் நச். பாடல் காட்சிகளில் அதிதி ஒவ்வொரு சீனிலும் ஸ்கோர் செய்கிறார். சின்ன சின்ன முகபாவனைகளில் ரசிக்கவைக்கிறார்.  இந்த  ஒரு பாடலைத் தவிர, எஸ்.எஸ்.குமரனின் இசையில் மற்ற பாடல்கள் எதுவும் மனதில் பதியவில்லை.

முதல் பாதியில் வெட்டியாக சுற்றித்திரியும் ஐந்துபேரும்,இரண்டாம் பாதியில் வேலைக்கு செல்ல முடிவெடுக்கிறார்கள். ஆனால் அதற்காக இந்த பட்டதாரிகள் முயற்சி எடுக்காமல் விட்டது, ஜவ்வாக இழுக்கும் ப்ளாஷ்பேக் காட்சிகள் எல்லாம் மிகப்பெரிய மைனஸ். டைம்பாஸ் டீக்கடைக்கு, இந்த ஐந்துபேரையும் தவிர யாருமே வரமாட்டாங்களா பாஸ்? அதிதியை கடத்திச் செல்கிறார்கள் அபி & டீம். அடுத்த காட்சியிலேயே திருமணம் என்று ட்விஸ்ட் வைக்கிறார்கள். நடுவுல கொஞ்சம் பக்கத்த காணோமே? 

போலீஸ் அதிகாரியாக வரும் மகாநதி சங்கரும், டீ மாஸ்டரும் படத்தில் கச்சிதம். இவர்களின் கதாபாத்திரம் மனதில் நிறைகிறது. முடிந்த அளவிற்கு மேக்கிங்கில் பெஸ்ட் தர முயன்றிருக்கிறார் இயக்குநர் எ.ஆர்.சங்கர் பாண்டி. ஆனால் மெதுவாக செல்லும் திரைக்கதை சறுக்கல். மதுரை நேட்டிவிட்டி காட்டுவதில் இன்னும் கொஞ்சம் மெனக்கெட்டிருந்தால் படம் மக்கள் மனதில் நின்றிருக்கும். ஆரம்ப காட்சியில் தரும் ஆக்‌ஷன் சஸ்பென்ஸ் படத்தின் மீது எதிர்பார்ப்பை தூண்டி, இருக்கையில் அமரவைத்தாலும், அடுத்தடுத்த காட்சிகளில் சுவாரஸ்யத்தையும் , எதிர்பார்ப்பையும் தரத் தவறிவிட்டார் இயக்குநர். 

பல தடைகளைத் தாண்டி சின்னபட்ஜெட் படங்கள் ரிலீஸ் ஆவதே பெரிய சவால் என்ற நிலையில், முடிந்த அளவிற்கு சுவாரஸ்யமாய் ஒரு படம் தர முயற்சித்திருக்கிறார்கள். ஆனால் இதே களத்தில் தமிழ் சினிமா பல நூறு சினிமாக்கள் பார்த்து விட்டதே பாஸ்?