Published:Updated:

கான் வருமா... சந்தானம் ஏன்... மீண்டும் யுவன்! - மனம் திறக்கும் செல்வராகவன் #VikatanExclusive

கான் வருமா... சந்தானம் ஏன்... மீண்டும் யுவன்! - மனம் திறக்கும்  செல்வராகவன் #VikatanExclusive
கான் வருமா... சந்தானம் ஏன்... மீண்டும் யுவன்! - மனம் திறக்கும் செல்வராகவன் #VikatanExclusive
கான் வருமா... சந்தானம் ஏன்... மீண்டும் யுவன்! - மனம் திறக்கும்  செல்வராகவன் #VikatanExclusive

‘‘எனக்கு வேற தொழில் தெரிஞ்சுருந்தா, நான் எப்பயோ போயிருப்பேன். ‘உனக்கு என்னதான் தெரியும்’னு நானும்யோசிச்சு பார்த்துட்டேன். ஒண்ணும் வரலை. இப்படினு தெரிஞ்சிருந்தா நாலு வித்தைகளாவது கத்து வெச்சிருந்திருப்பேன். இதுதான் இதுக்கு நேர்மையான பதில். இப்படித்தான் இந்த சூழலை நான் பார்க்கிறேன்.’’ .. ‘‘இன்னைக்கு சினிமா எப்படி இருக்கு?’’ என்ற கேள்விக்குதான் இப்படி பதில் சொல்கிறார் செல்வராகவன். நண்பர்கள் யுவன் ஷங்கர் ராஜா, ஒளிப்பதிவாளர் அர்விந்த் கிருண்ணா டீமுடன் மீண்டும் இணைந்து ‘நெஞ்சம் மறப்பதில்லை’, அடுத்து சந்தானம், தொடர்ந்து சூர்யா காம்பினேஷன்... என தன் பழைய ஃபார்முக்கு வந்துவிட்டார் செல்வா. ஆனால் நிதானம், தெளிவு என அவர் பேச்சில் இத்தனை வருட அனுபவம் தெரிகிறது.

‘‘டான்ஸ் மாஸ்டர் கல்யாண் என் நண்பர். இது அவர் சொன்ன லைன். அதைச்சொல்லி, ‘எழுதித்தரமுடியுமா’னு கேட்டார். எழுதித்தந்தேன். அதைப் படிச்சவர், ‘இதை என்னால பண்ண முடியாது. நீ பண்ணினாத்தான் சரியா இருக்கும்’னார். அப்படி ஆரம்பிச்சதுதான் ‘நெஞ்சம் மறப்பதில்லை’. ‘ஹாரர் ஃபிலிம், காமெடி ஃபிலிம்’னு ஒரு எல்லைக்குள் இந்தப் படத்தை போட வேணாம். ஒரு ஃபிலிம்மேக்கரா நான் மக்கள்ட்ட விரும்பிக் கேக்குறது இதைத்தான்.’’

‘‘‘நெஞ்சம் மறப்பதில்லை’. நீங்க, எஸ்.ஜே.சூர்யா,கௌதம் மேனன்னு இயக்குநர்கள் சேர்ந்திருக்கீங்க. இந்தப்படம் எந்தத் தருணத்துல தொடங்குனுச்சு?’’
‘‘இது அவர் ‘இறைவி’க்கு முன் கமிட்டான படம். ‘இறைவி’ பார்க்கச் சொன்னார். ‘இல்ல சார் எனக்கு எந்த முத்திரையும் வேணாம். உங்களை நான் எப்படி பார்க்கணும்னு நினைக்கிறேனோ அப்படியே பாத்துக்கிறேன்’னேன். இந்த காம்பினேஷன் ரொம்ப வருஷங்களுக்கு முன்னாடியே நடக்கவேண்டியது. அப்ப அவருக்கு ஒரு படம் பண்றேன்னு சொல்லிட்டு பண்ணாம வேற படத்துக்கு ஓடிட்டேன். அதை இப்பவும் சொல்லி குத்திக்காட்டுவார். நம்ம மனசுக்கானபண்ற படம்னு சில படங்கள் இருக்கும். அப்படி பண்ணினப் படம்தான் இது. முதல்ல இந்தப்படம் பண்ற ஐடியாவே இல்லை. ‘அடுத்து என்னமாதிரி பண்ணணும்’னு யோசனையில் ஒரு மார்க்கமா நிம்மதியா இருந்தேன். ஏன்னா ஒரு படத்தை ஆர்ட்டிஸ்டிக்கா எப்படி எடுக்கிறதுனு புரிஞ்சுக்கிறதுக்கே எனக்கு இத்தனை வருஷம் ஆச்சு? அப்படி இந்தக் கடலுக்குள்ள இன்னும் எவ்வளவு இருக்கு, அதை நாம எப்ப புரிஞ்சுக்குவோம்’ங்கிற கேள்விக்கான விடையை தேடிட்டு இருக்கிற சூழல்லதான் கௌதம்மேனன் சார் ஒரு ஐடியாவோடு வந்தார். ‘டைரக்டர்ஸ் இரண்டு பேர் சேர்ந்து ஒரு படம பண்ணுவோம்’னார். ‘மூணு டைரக்டர்ஸ் இருந்தா நல்லா இருக்கும்’னு ஒரு ஐடியாவா வந்ததும் எஸ்ஜே.சூர்யா உள்ள வந்தார். பிறகு தயாரிப்பாளர் மதன் சார் வந்தார். இந்த ப்ராஜெக்ட்டை ஆரம்பிச்சது யார்னு கேட்டீங்கன்னா, கௌதம்மேனன் அவர்களுக்குத்தர்ன நன்றி சொல்லணும்.’’

‘‘எஸ்.ஜே.சூர்யா ஓர் இயக்குநர். அவரிடம் நடிப்பை வாங்குவதில் ஏதாவது சிரமம் இருந்துச்சா?’’
‘‘தன்னை முழுசா இயக்குநர்ட்ட ஒப்படைக்கிறவன் நடிகன். ஆனா, அதில் தானும் ஒரு பகுதியா புகுந்து விளையாடுறவன் இயக்குநர். அவர் ஒரு பெரிய இயக்குநர். ‘நாம பண்றது சரியா தப்பா, இதை இப்படி பண்ணலாமா, அப்படி பண்ணலாமா’னு இயக்குநரின் மூளை யோசிச்சிட்டே இருக்கும். ஒரு இயக்குநரால அந்த மூளையை அவ்வளவு எளிதா கழட்டி வைக்க முடியாது. அதனால ஆரம்பத்துல எங்களுக்கு செட் ஆகுறதுக்கே நான்கைந்து நாட்கள் தேவைப்பட்டது. ‘வெளியிலப்போங்க. 10 நிமிஷம் கழிச்சு வாங்க. வரும்போது உங்க டைரக்டர் மைண்டை ஆஃப் பண்ணிட்டு வாங்க. வரும்போது எஸ்.ஜே.சூர்யாங்கிற இயக்குநர் உள்ள வரக்கூடாது. நடிகன் மட்டும் உள்ள வரணும்’பேன். என்மேல இருக்கிற நம்பிக்கையில் வந்தார். இது எங்களுக்கு ஆத்மார்த்தமான ஒரு பயணம்தான். அவரை எப்படி நாம தேர்வு பண்ணினோம்னு யோசிச்சுப்பார்க்கிறேன். ஒரு முகததைப்பார்த்தா நமக்கு தெரிஞ்சிடும். அப்பதான் நீங்க இயக்குநரா இருக்கமுடியும். அந்த அனுபவத்துல யோசிச்சுப் பார்த்து சொல்றேன், இந்தமாதிரியான கேரக்டர் பண்ண இவரைத் தவிர வேற யாருமே இங்க கிடையாது.’’

‘‘படப்பிடிப்பில் அவர்கூட முரண்பட்ட தருணம்னு ஏதாவது உண்டா?’’
‘‘அவர்கூட மட்டும்கிடையாது, நான் எந்த நடிகர்கள் கூடவும் இதுவரை முரண்பட்டதே இல்லை. நாம விரும்பி அழைப்பதும், அதுக்கு அவங்களும் விரும்பி வர்றதும் ஒண்ணு சேரும்போது ரொம்ப சந்தோஷமாதான் எல்லா பயணங்களும் போயிருக்கு. அவர் இயக்குநர்ங்கிறதால அந்த பிணைப்பு இதில் இன்னும் அதிகம். இன்னும் நல்லா உரிமையோட கூப்பிட்டு பேசமுடியும். ஆமாம், எஸ்.ஜே.சூர்யா என் நல்ல நண்பன்.’’

‘‘வழக்கமாவே உங்க ஹரோயின்ஸ் வேற லெவல்ல இருப்பாங்க. இதில் ரெஜினா, நந்திதானு வளர்ந்து வர்ற ஹீரோயின்ஸ். இவங்களை ஃபிக்ஸ் பண்ண சிறப்பு காரணங்கள் ஏதாவது உண்டா?’’
‘‘நான் என்னைக்குமே மார்க்கெட்ல யார் டாப்ல இருக்கா? அது நமக்கு பிளஸ்ஸா இருக்குமானு யோசிக்கிறதைவிட கதைக்கு யார் சரியா இருப்பாங்கனுதான் பார்ப்பேன். அப்படி இந்த சிறப்பு பாத்திரங்களுக்கு யார் சரியா வருவாங்கனு பார்ததேன். பலர் வந்தாங்க. அதில் இவங்களும் வந்தாங்க. வரும்போதுமேக்கப் இல்லாமதான் வரச்சொல்லுவேன். வந்தாங்க. பார்த்தேன். சரியா இருப்பாங்கனு தோணுச்சு. இவ்வளவுதான் புராசஸ். அடுத்து, ‘நடிக்கிறது’னு ஒண்ணு இருக்கு. ‘நடிக்காம இருக்கிறது’னு வேறொண்ணு இருக்கு. என்கிட்ட வந்தா நடிக்காம இருக்கணும். பொதுவா அதுக்குதான் சிரமப்படுவாங்க. ஆனா அந்த சிரமத்துக்கு துளி அளவுகூட யோசிக்காதவங்கதான் என் ஹீரோ, ஹீரோயின்ஸ் மூணு பேரும். ‘இவங்க பெரிய ஹீரோயின் இல்லை’னு சொல்றீங்க. ஆனா ரெஜினாட்ட இன்னும் ஒரு வருஷத்துக்கு தேதியே கிடையாது. இப்ப இந்தி படத்தில் நடிக்கிறாங்க. அதேபோல நந்திதாவும் நிறைய படங்கள் பண்ணிட்டு இருக்காங்க. இதில் நகுல்னு குட்டிப்பையன் நடிச்சிருக்கான். படத்துல நான் கஷ்டப்பட்டதுன்னா அவன்ட்ட நடிப்பு வாங்கினதுதான். என் பையனை வளர்த்த அனுபவத்துல அவனை தூக்கிட்டுப்போய் 5 நிமிஷம் செல்லம் கொஞ்சுவேன். அப்பதான் அவன் நடிப்பான். வளர்ந்தவங்கள்ட்ட சொல்லி புரியவைக்கலாம். குழந்தைகள்ட்ட என்ன பண்ணுவீங்க? இந்த நாலுபேரைத்தவிர இன்னும் புதுமுகங்கள் நாலுபேர் நடிச்சிருக்காங்க. மரியாதையா, அன்பானு தெரியலை, அவங்க விரும்பி வரும்போதும் ‘இன்னும் கொஞ்சம் பண்ணலாம்’னு சொல்லும்போதும்... ரொம்ப சந்தோஷமா இருக்கு.’’ 

கான் வருமா... சந்தானம் ஏன்... மீண்டும் யுவன்! - மனம் திறக்கும்  செல்வராகவன் #VikatanExclusive


‘‘நீண்ட இடைவெளிக்குப்பிறகு மீண்டும் யுவன் காம்பினேஷன். என்ன சொன்னார்?’’
‘‘ ‘நாம சேர்ந்தா எதிர்பார்ப்பு எப்படி இருக்கும்னு உனக்குத் தெரியாது’னு யுவன் சொல்லிட்டே இருப்பார். ‘என்ன தெரியாது’ம்பேன். ‘உனக்கு தெரியாது, புரியாது’ம்பார். ‘சரி பார்ப்போம்’னு சேர்ந்து பண்ணின படம்தான் ‘நெஞ்சம் மறப்பதில்லை.’ அப்பப்ப பேசுவோம். சேர்ந்து பண்ணலாம்னு ஒரு வருஷமாவே பேசிட்டு இருந்தோம். ‘ஒரு படம் பண்ணுவோம்’னு சேர்ந்து பண்றதுல என்ன த்ரில் இருக்கப்போகுது? 10 வருஷம் கழிச்சு வரும்போது இரண்டு பேரும் அந்த சவாலை ஏத்துக்கலைனா ரசகர்களுக்கும் திருப்திகரமா இருக்காது. திரும்ப சேர்ந்து பண்ணும்னுபோது ஒரு குறிப்பிட்ட எதிர்பார்ப்பு மீட்டர் ஒண்ணு இருக்கும். ஒண்ணு அதை தொடணும். அதை தொட முயற்சியாவது பண்ணணும். ‘நான் செல்வாவும் கிடையாது, நீங்க யுவனும் கிடையாது. நம்ம ரெண்டு பேருக்கும் இது அறிமுகப்படம். நம்மை ஒருத்தர் அறிமுகப்படுத்துறார். அப்படின்னா எப்படி ஒர்க் பண்ணுவோமோ அப்படி பண்ணுவோம்னு பண்ணினதுதான் இந்தப்படம். ஆமாம், மியூசிக்கலா இது அவருக்கு சவாலான படம்.’’

‘‘பாடல்களை கேட்டவங்க என்ன சொன்னாங்க?’’
‘‘கேட்டுட்டு கேட்டுட்டு பண்றது இசை கிடையாது. இரண்டு பேர் நமக்கு சரியா இருக்கும்னு நம்பி பண்றதுதான் ஒரு காம்பினேஷனா இருக்க முடியும் என்பது என் தாழ்மையான அபிப்பிராயம். இதை 15 பேருக்கு போட்டுக்காட்டி, அதை மாத்தலாம், இதை மாத்தலாம்னு நாங்க இதுவரை பண்ணினது இல்லை. அப்படி பண்றது தப்புனு சொல்ல வரலை. ஆனா நாங்க அப்படி பண்றது இல்லை. ஆனா சோகமான விஷயம்னா இதில் நா.முத்துக்குமார்தான் பாடல்கள் எழுதணும்னு நாங்க ரெண்டு பேருமே பிடிவாதமா இருந்தோம். அவர் இல்லை, அது நடக்கலை என்பதுதான் மிகப்பெரிய வருத்தம்.’’

‘‘நா.முத்துக்குமாருடனான அந்த பாடல் பயண அனுபவம் எப்படி இருக்கும்?’’
‘‘அவரோட டிராவல் பண்ணினது மிகப்பெரிய அனுபவம். அதை தனியா ஒரு புக்காதான் எழுதணும். என்னை முதல்ல ஃப்ளைட்ல கூட்டிட்டு போனது யுவன். முத்துக்குமாரை முதல்ல ஃப்ளைட்ல கூட்டிட்டு போனது நான். இப்படி நிறைய. ராப்பகலா யோசிச்சு யோசிச்சு அவர் எழுதி எழுதி கொண்டுவநது சேர்த்ததையும் நாங்க உட்கார்ந்து பேசிய தருணங்களையும் ஆமாம், ஒரு புக்காதான் எழுதணும். நிறைய படங்கள், நிறைய பாடல்கள். தேசிய விருது வாங்கும்போது, ‘இது முக்கியம்தான். சந்தோஷம்தான். ஆனா, உங்க படத்துல எழுதினாதான் அது முழுமையா தெரியும். எப்ப உங்களுக்கு எழுதுவேன்’னார். ‘பண்ணுவோம்’னேன். இவ்வளவு படங்கள் சேர்ந்து பண்ணிடடு ஒரு புரிதலோடு ஒர்க் பண்ணும்போது எங்களுக்கு ரொம்ப டைம் தேவைப்பட்டதே இல்லை. ‘இந்தோ’னு வெளியிலப்போய் டீ சாப்பிட்டு வர்றதுக்குள்ள பாட்டு முடிச்சு வெச்சிருப்பார். இது எப்ப வரும்னா, 2 மனசு நிறைய பக்குவப்பட்டு போயிருந்தாதான் அது நடக்கும். நண்பர் ஒளிப்பதிவாளர் அரவிந்த் கிருஷ்ணாவும் அப்படித்தான். ‘இப்படிதான்’னு சொன்னா போதும் அது சரியா இருக்கும். ஆமாம், சொல்லாம செய்றவங்கதான் நிறைய வேணுமே தவிர, அங்கப்போய் நின்னு ஒவ்வொண்ணையும் சொல்லிச்சொல்லி ஆரம்பிச்ச நாளுக்கே திருபிப்போகமுடியாது. அப்படி இருக்கிறதாலதா இநதப் படத்தை எளிதாவும் வேகமாவும் முடிக்க முடிஞ்சது.’’ 

கான் வருமா... சந்தானம் ஏன்... மீண்டும் யுவன்! - மனம் திறக்கும்  செல்வராகவன் #VikatanExclusive‘‘அடுத்த படம் சந்தானம்கூட பண்றீங்க. அது எப்படி இருக்கும்?’’
‘‘‘இந்த காம்பினேஷன் நல்லா இருக்கு’மேனு சஷாங்கிற தயாரிப்பாளர் ஒரு ஐடியா எடுத்துட்டு வந்தார். ‘பண்றீங்களா’ன்னார். ‘எனக்கென்னங்க இருக்கு. பண்ணலாம்’னேன். சந்தானத்தை எனக்கும் பிடிக்கும். அவரை ஒருமுறை சந்திச்சேன். அவர் அணுகுமுறையும் பேசும் விதமும் அவ்வளவு பிடிச்சிருந்துச்சு. ரொம்ப வெளிப்படையா சொல்லிட்டார். ‘நான் நார்த் போல் சார். நீங்க சவுத் போல். நான் உங்களை சந்திப்பேனானுகூட வாழ்க்கையில நினைச்சதே இல்லை. இது ஒரு நல்ல பயணமா இருக்கும். பண்ணுனீங்கன்னா நல்லா இருக்கும்’னு ஓப்பனா பேசினார். ‘ஓ.கே. பண்ணுவோம்’னேன்.’’

‘ ‘ஃபன், கவுன்டர் கலாய்ப்பதை நம்பியே படம் எடுப்பது எரிச்சலூட்டக்கூடிய செயல்’னு முந்தைய விகடன் பேட்டியில சொல்லியிருந்தீங்க. அவர் கலாய் காமெடி பண்ணி இப்ப ஹீரோவா பண்ணிட்டு இருக்கார் இப்ப உங்க காம்பினேஷன்ட்ட நாங்க என்ன எதிர்பார்ககலாம்?’
‘‘ஃபன் மட்டும்தான் வேணும்னா அவருக்கு எதுக்கு நான். இன்னைக்கு அவரே பெரிய ஹீரோ, அந்த ஃபன்தான் வேணும்னா அதை அவரே பண்ணிக்கலாமே. அவர் நினைச்சார்னா அந்தமாதிரி 50 படங்கள்கூட பண்ணலாம். ஆனா அந்த ஃபன் மட்டுமே படம் கிடையாது. இதிலேயே உங்களுக்கு ஆன்சர் இருக்குனு நினைக்கிறேன்.’’

‘‘மறுபடியும் தனுஷ்கூட சேர்ந்து படம் பண்ணப்போறீங்கன்னு செய்திகள் வருதே?’’
‘‘என்னென்னமோ செய்திகள் வருது. என் படத்துக்கு யார்யாரோ ஹீரோ, ஹீரோயின்னு சொல்றாங்க. எல்லாத்துக்கும் ‘இல்லைங்க... இல்லைங்க...’னு என்னால பதில் சொல்லிட்டுஇருக்க முடியுமா? பசங்களை ஸ்கூலுக்கு கிளப்பிவிடணும். கொண்டுபோய் விடணும், அழைச்சிட்டு வரணும்னு... நிறைய வேலைகள் இருக்கு. எனக்கு பொய் சொல்லவும் தெரியாது. என் தம்பி ரொம்ப அழகா சொல்வான், ‘அப்படி உனக்கு பொய் சொல்லத் தெரிஞ்சிருந்தா நீ ஏன் இந்த நிலைமையில இருக்க. இந்நேரம் நீ ஆயிரம் கோடி கையில வெச்சிருந்திப்ப. ஏன் இவ்வளவு பிரச்னைகள்ல இருக்க’ம்பான். எனக்கு சினிமாவைத்தவிர வேறு எதுவும் தெரியாது. நான்தான் ‘படம் பண்றேன், பண்ணலை, இந்தப்படம் சரியா வரலை’னு எல்லாத்தையும் சொல்லிடுறேனே. அதனால வர்ற லாப நஷ்டக் கணக்குகளைக்கூட நான் பார்க்கிறது இல்லை. நாங்க படம் பண்றதை மீறி அண்ணன் தம்பியா மட்டுமே வாழ்க்கை முழுவதும் மெயின்டைன் பண்ண ஆசைப்படுறோம். படம் பண்ணும் காலம் வரும்போது பார்க்கலாம்.’’

கான் வருமா... சந்தானம் ஏன்... மீண்டும் யுவன்! - மனம் திறக்கும்  செல்வராகவன் #VikatanExclusive


‘‘தனுஷ் இப்ப டைரக்டர். அவரை உங்க ஷூட்டிங் ஸ்பாட்ல ஒரு இயக்குநரா பார்த்தது உண்டா?’’
‘‘நான் பார்த்ததே இல்லை. தவிர நாங்க படம் பண்ணியும் பல வருஷங்கள் ஆச்சு. வீட்ல சந்திக்கிறதோட சரி. அப்பப்ப பேசிப்போம். ஒருநாள் போன் பண்ணி வரச்சொன்னார். போனேன். ஒரு ஸ்கிரிப்ட்டை கொடுத்துட்டு, ‘படிச்சிட்டு உங்க அபிப்பிராயம் சொல்லுங்க’ன்னார். எனக்கு பிடிக்கலைனா நாலாவது பக்கத்திலேயே பொறுமை இழந்து வெச்சுடுவேன். ஆனா அந்த ஸ்கிரிப்டை முழுசா படிச்சு முடிச்சேன். பிறகு வெளியில கிளம்பினேன். அவரும் பின்னாலயே வந்தார். தனுஷுக்கு நான் சொல்றது தாய்க்கரடி சொல்றது மாதிரி. ‘பாராட்டோ திட்டோ என்னனு சொல்லு’ன்னார். ‘எதுக்கு கேட்ட’ன்னேன். ‘இந்தக் கதையைப் பற்றி பலர் பலமாதிரி சொன்னாங்க. உங்கக்கிட்ட கேட்டுக்குவோம்னுதான்’ன்னார். ‘இந்தப்படம் மிகப்பெரிய லெவல்ல இருக்கும். இந்தக் கதையை அப்படியே கொடுத்துடு. போயிடுறேன்’னேன். நான் இதுவரை, ‘எனக்கு கொடுங்க’னு ஒருத்தரைக்கூட கேட்டது கிடையாது. அவர்ட்ட கேட்டேன். அப்படியே அந்த ஸ்கிரிப்டை பிடுங்கினார். ரெண்டு பேரும் அந்த ஃபைலுக்கு அடிச்சிகிட்டோம். ‘‘நீயே எழுதினியா’ன்னேன். ‘ஆமா... சத்தியமா நான்தான் எழுதினேன்’னார். ‘டைரக்ட் பண்ணப்போறேன்’னார். ‘பொறுமையா பண்ணணும். அவசரம் இல்லாம பண்ணணும்’னேன். ‘இதுக்கு யார் ஆர்ட்டிஸ்டா இருக்கலாம்’னார். ‘சூப்பர் ஸ்டார். இல்லைனா உலக நாயகன். இவங்க இரண்டு பேர்தான் இந்தக் கதைக்கு நியாயம் பண்ண முடியும்’னேன். ஏன்னா அப்ப ராஜ்கிரண் சார் உடனடியா என் மைண்ட்ல வரலை. ‘அது கஷ்டம். ஏன்னா பட்ஜெட்டுக்குள்ள பண்ணணும். ரெண்டு பேரும் யோசிப்போம்’னார். பிறகு சில நாள் கழிச்சு, ‘இந்த காம்பினேஷன் எப்படி இருக்கும்’னு அவரேதான் ராஜ்கிரண் சாரை சொன்னார். ‘இது என் மைண்ட்ல வரலையே. ரொம்ப பிரமாதமா இருக்கும்’னேன். நாங்க ரெண்டுபேரும் இனனைக்கு இங்க நிக்கிறதுக்கு அவர்தான் காரணம். அவரோட நடிப்பு பற்றி நான் சொல்லவே வேணாம். பிறகு ஷூட்டிங் முடிச்சிட்டு முதல் பாதி காட்டினார். நல்லா பண்ணியிருக்கார். நீங்க படம் பார்த்தீங்கன்னா புரியும்.’’

‘‘ஒரு டைரக்டரா தனுஷ் எப்படி பண்ணியிருக்கார்?’’
‘‘நல்லா இல்லை, எனக்கு பிடிக்கலைனா, முகத்துல அடிச்சமாதிரி சொல்லிடுவேன். அதனாலயே யார் படம் பார்க்கக்கூப்பிட்டாலும் நான் போறது இல்லை. ஏன்னா நல்லா இருந்துச்சுன்னா, சொல்றது ஈஸி. நல்லா இல்லைனா, ‘நமக்கு நம்ம படத்தை நல்லா இல்லைனு சொன்னா என்ன வலியோ அதானே அவங்களுக்கும். அதை எப்படி சொல்றதுன்னு இக்கட்டான சூழல். ஆனா தம்பிட்ட அது கிடையாதுல்ல. ‘ரொம்ப கேவலமா இருக்கு’னு காறித்துப்பிட்டு போயிடுவேன்னு அவருக்குத் தெரியும். படத்தை போட்டுட்டு பரிட்சை எழுதின பையன்மாதிரி ரிசல்ட்டை எதிர்பார்த்து என் பின்னாடி நின்னுட்டு இருந்தார். ‘நீ என்னைக்காவது டைரக்ட் பண்ணினா ஸ்கீரினைப் பார்க்காதே. ரசிகர்களோட கழுத்தைப்பார். அந்தக் கழுத்தின் அசைவைப்பார்’னு அவருக்கு நான் சொல்லிக்கொடுததிருக்கேன். டைரக்டரா இது முதல் படம்ங்கிறதால நான் திரையை பார்த்துக்கிட்டு இருந்தப்ப அவர் என் கழுத்தைப் பார்த்துட்டு இருந்திருக்கார். ‘ரொம்ப பிரமாதமா இருக்கு. நான் சார்ட்ட உடனடியா பேசணும். உடனே போன் பண்ணிக்கொடு’ன்னேன். ‘என்ன சார் அஜித் விஜய்க்கு போட்டியா வந்துடுவீங்க போலிருக்கே’னு மனசுல உடனடியா தோணினதை சொன்னேன். அந்த வயசுல அந்தமாதிரி எஃபர்ட் போட்டு பிரமாதமா பண்ணியிருக்கார். அப்படி நடிச்சிருக்கார். தனுஷ் ரொம்ப அழகா டைரக்ட் பண்ணியிருக்கார். ஒரு படம் பார்த்துட்டு வெளியில வரும்போது பூரிப்போட வருவோம் தெரியுமா, அப்படி ஒரு சந்தோஷம் இருக்கும். ‘பவர் பாண்டி’ ஹார்ட் டச்சிங் ஃபிலிம்.’’

கான் வருமா... சந்தானம் ஏன்... மீண்டும் யுவன்! - மனம் திறக்கும்  செல்வராகவன் #VikatanExclusive‘‘தனுஷின் வளர்ச்சியை எப்படி பார்க்குறீங்க?’’
‘‘எப்படி இவ்வளவு விஷயங்கள் பண்றார்னு எனக்கே ஆச்சர்யம்தான். ஆனா அது நம்மால முடியாது. அந்த அசுர உழைப்பெல்லாம் நமக்கு சான்ஸே இல்லை. 30 நாளும் ராத்திரி பகலா சினிமா சிந்தனையிலேயே சுத்திடடு இருக்கிறதெல்லாம் என்னால முடியாது. எதுவுமே விலையில்லாம ஃப்ரீயா கிடைக்காது. ஒவ்வொண்ணுக்கும் ஒரு விலை இருக்கு. இந்தமாதிரி வெற்றி, மரியாதை, உலக சினிமாக்கள்லாம் பண்றார்னா.. அந்தளவுக்கு உழைக்க எவ்வளவு பேரால முடியும்னு எனக்குத் தெரியைல. அவரோ உழைப்பு தெரியும். அதற்கு அவர்கொடுத்துள்ள விலைகளும் நிறைய.’’

‘‘சிம்புவை வைத்து நீங்க ஆரம்பிச்ச கான்’ என்ன ஆச்சு? வருமா? வராதா’’
‘‘கேள்விக்குறி போட்டு இருக்கீங்கல்ல. அது அப்படியே இருக்கட்டும்.’’

‘‘நீங்களா ஏற்படுத்திக்கிட்டதோ இல்ல... உங்க மேல் திணிக்கப்பட்டதோ... இந்த இடைவெளியை எப்படி பார்க்குறீங்க?’’
‘‘ஒரே வரியில பதில் சொல்லணும்னா, உண்டாக்குனதும் அவங்கதான். திரும்பி வரும்போது கூப்பிடுறதும் அவங்கதான். நாளைக்கு அடிவிழுந்தாலும் நல்லது நடந்தாலும் அதுக்கும் காரணம் அவங்கதான். ஏன்னா நாங்க வரும்போது எங்களுக்கு பின்னாடி யாருமே இல்லை. ரொம்ப கஷ்டப்பட்டு ஒரு படம் எடுத்து அதை கரை சேர்க்குறதுக்குள்ள நாங்க பட்டபாடு எல்லாருக்குமே தெரியும். தனுஷ் என்ற நடிகர் சாதாரணமா உருவாகலை என்பதும் இங்க எல்லாருக்கும் தெரியும். எத்தனை வருஷம் கழிச்சு வந்தாலும் எல்லாமே கொடுத்தது அவங்க எனும்போது பேச என்ன இருக்கு. ரசிகர்களின் அந்த அன்புக்கு எந்த ஈடுஇணை கிடையாது. அவ்வளவுதான்.’’

‘‘இன்றைய தமிழ் சினிமாவின் பிளஸ், மைனஸ்னா... என்ன சொல்வீங்க?’’
‘‘இதை நீங்க ஒரு வயசானவர்ட்ட கேட்கணும். முதல் படம் பண்ற இளைஞர்ட்ட இந்தக் கேள்வியை கேட்கலாமா? எனக்கு வயசு 23. யுவனுக்கு இப்ப 18. நாங்க இப்பதான் முதல் படம் பண்ணிட்டு இருக்கோம். எங்களுக்கு அவ்வளவு மட்டும்தான் ஞாபகம் இருக்கும்போது கருத்து சொல்ல எங்களுக்கு எந்த அருகதையும் கிடையாது.  (சிரிக்கிறார்) ஆனா ஒரு விஷயம், முன்னாடி நீங்க நலல படம் எடுத்தீங்கன்னா அது ஒரு பெரிய ஹீரோ படத்துக்கு சமமா வசூலிக்கக்கூடிய வாய்ப்பு இருந்துச்சு. ஆனா இன்னைக்கு நல்ல படமே எடுத்தாலும் அதனுடைய லாப சதவிகிதம் ரொம்ப கம்மி. போகப்போக அது இன்னும் குறைஞ்சிகிட்டுதான் போகும். இன்னைக்கு யார் படம் ஓடுதோ அவங்கதான் கவனிக்கப்படுறாங்க. எந்த குதிரை முன்னாடி வருதோ அதுதான் கவனிக்கப்படும். நல்ல படமே எடுத்தாலும் அது ரேஸ்ல ஜெயிச்சாதான் வேல்யூ உண்டுனு சொல்ற காலகட்டம். ஆமாம், நாம ஜெயிக்கணும்.’’

‘‘இன்னைக்கு நிறைய பேர் சினிமா எடுக்குறாங்க. ஆனா ரிலீஸ் பண்றது பெரிய போராட்டமா இருக்கே?’’
‘‘இன்னைய தேதியில ரிலீஸ்ங்கிறது ரேஸ்ல முண்டியடிச்சுட்டு போற குதிரை மாதிரிதான் இருக்கு. இந்தப் படத்தில் ஒவ்வொரு பைசாவும் படத்துக்குதான் போயிருக்கு. யுவன் ஷங்கர ராஜா, ஒளிப்பதிவாளர் அரவிந்த் கிருஷ்னா, நான்னு இந்தப்படத்துல வேலை செஞ்ச எல்லாருமே ஒரு passion மாதிரி இந்தப்படத்தை பண்ணியிருக்கோமே தவிர இதுல எங்களுக்கு எவ்வளவு கிடைக்கும்னு நினைக்கவே இல்லை. குறிப்பா யுவன் இன்றுவரை இந்தப்படத்துக்கு இசையமைத்து ஒரு பைசா வாங்கலை. தயாரிப்பாளர் மதன் சார் நல்லா இருந்தார்னா போதும். அதைத்தவிர வேற எந்த எதிர்பார்ப்பும் எங்களுக்கு கிடையாது.’’

‘‘சிவகார்த்திகேயன், பா.இரஞ்சித் மாதிரியான இளைஞர்களின் வரவு...?’’
‘‘இளைஞர்கள் வருவாங்க. திறமையைப் பொருத்து யாருடைய வளர்ச்சியை யாராலும் தடுக்க முடியாது. அது சிவகார்த்திகேயனின் திறமை, இரஞ்சித் அவர்களின் திறமை.’’

‘‘‘நான் வீட்டை பார்த்துக்கிறேன். என் மனைவி டைரக்ட் பண்றாங்க’னு அப்ப சொன்னீங்க. அவங்க அடுத்தப்படம் எப்பப் பண்ணப்போறாங்க?’’
‘‘‘அவங்க டைரக்ட் பண்றாங்க. நான் வீட்டை பார்த்துக்கிறேன்’னு உங்கள்ட்ட சொன்னதுக்கு பிறகுதான் புரிஞ்சுது, நம்மூர்ல அதுக்கு பேர் ‘வெட்டி’, வேலை இல்லாதவன்னு. ‘ஏன்னா அந்த ஸ்பேஸ் கொடுக்குற கான்செப்ட் நம்ம ஊர்ல இல்லை. அவங்களுக்கு நிறைய பொறுப்புகள் இருக்கு. அடுத்தடுத்த கமிட்மென்ட்ஸ் இருக்கு. இரண்டுபேரும் படம பண்ண போயிட்டா வீட்டை யார் பாத்துக்கிறது. இப்ப அவங்க ஸ்கிரிப்ட் பண்ணிட்டு இருக்காங்க. வருவாங்க. ஒவ்வொரு ஆறு மாசத்துக்கு ஒரு படம் ரிலீஸ் பண்ணிட்டே இருக்கிறவங்தான் இங்க இருக்காங்க. உங்களைப் பொருத்தவரை எனக்கு இது இடைவெளி, ‘செல்வாவின் கமிங் பேக்’கா இருக்கலாம். ஆனா என்னைப்பொருத்தவரை இந்த இடைவெளியில் நான்கு படங்களுக்கான திரைக்கதை எழுதியிருக்கேன். அதைத்தான் ஒவ்வொண்ணா பண்ணப்போறேன். ஓடிட்டே இருந்தா டென்னிஸ் பிளேயர் மாதிரி கால் முறிஞ்சுதான் போகும். நாம எல்லாருக்கும் புதுசா சிந்திக்க, ஓய்வெடுக்கனு... ஒரு இடைவெளி தேவை.’’

‘‘பொண்ணு, பையனுக்கு என்ன வயசாகுது. யார் செல்லம்?’’
‘‘பொண்ணுக்கு 5 வயசு. பையனுக்கு மூணு வயசு. நீங்க குழந்தைகூட இருக்கும்போது குழநதைகளா இருக்கணும். அவ்வளவுதான். யாராவது ஒருத்தவங்க கண்டிக்கணும். ரெண்டு பேரும் சேர்ந்து கண்டிச்சா நல்லா இருக்காது. ‘கண்டிப்பா உங்களால அவங்களை கண்டிக்க முடியாது. அதை நான் பார்த்துக்கிறேன். நீ உங்க போக்குல அவங்களை கொஞ்சிக்கங்க’னு என் மனைவி தெளிவா சொல்லிட்டாங்க. சினிமாவையும் குடும்பத்தையும் பேலன்ஸ் பண்ண முடியுமானு பார்த்துட்டே இருக்கேன். ஆனா நடக்கமாட்டேங்குதே. என்னைக்கு இந்த படத்தை ஆரம்பிச்சேனோ அன்னையில இருந்து அவங்களோட நேரம் செலவழிக்கிறது குறைஞ்சிடுச்சு. எங்க தொழில் அப்படி.’’

‘‘இதற்கு முந்தைய உங்களோட பேட்டிகளுக்கும் இந்த பேட்டிக்கும் நிறைய வித்தியாசம். உங்க பதில்கள்ல அவ்வளவு பொறுமை, நிதானம்...
‘‘உண்மையான சந்தோஷம் எதுங்கிற கேள்விக்கான விடை தெரிஞ்சிட்டா அந்த பக்குவம் வந்துடும். எதுவுமே நிலை இல்லைனு புரிஞ்சுடும். இதை சிலர் வரம் வாங்கி வந்தமாதிரி எளிதா கண்டுபிடிச்சிடுறாங்க. அது ஒவ்வொருவரின் தேடலைப் பொறுத்தது. ஆனா அதுக்கு நான் கொடுத்த விலை 16 வருடங்கள். காலேஜ் முடிச்சிட்டு சினிமா ஆசையில் வெளியில் இருக்கும்போது ஒரு ஃபயர் இருக்கும். நான் அவரைமாதிரி ஆகப்போறேன். சினிமாவை மாற்றப்போறேன்னு பல கனவுகள்ல இருப்போம். ஆனா இது ஆர்ட்லயே மிகப்பெரிய ஆர்ட்னு உள்ளப்போய் நின்னு கால்கள் நடுங்கும்போதுதான் தெரிஞ்சுது. அன்னையில இருந்து இன்னையவரை எது சந்தோஷம், அது எங்க கிடைக்கும்னு தேடாத இடம் கிடையாது. திருமணம் ஆச்சு, ஹனிமூன் போயிருக்கேன். பல நாடுகள் சுற்றியிருக்கேன். ‘இதுதான் சந்தோஷமா’னு ஸ்விட்சர்லாந்து வீதிகள் சுத்தித் திரிஞ்சிருக்கேன். ஆனா ஒரு எழவு சந்தோஷமும் வரலை. நாம் செய்யும் வேலையில்தான் உண்மையான சந்தோஷம் இருக்குனு இப்பதான் கண்டுபிடிச்சேன். ஏன்னா உலகத்துல மத்தது எல்லாம நம்மகிட்ட எதிர்பார்க்கும். ஆனா நாம கலையா நினைச்சு செய்யும் வேலை, நம்மகிட்ட எதிர்பார்க்காது. நமக்கு கொடுததுட்டே இருக்கும். அது ஆண்டவனோட சேர்ந்து போற பயணம். இதை கண்டுபிடிக்கிறதுக்கே எனக்கு இவ்வளவு வருடங்கள் ஆச்சு.’’

-ம.கா.செந்தில்குமார்