Published:Updated:

”என் ஆசை நிறைவேறியது” கமல் பேச்சு: நடிகர்சங்க பொதுக்குழு கூட்ட அப்டேட்ஸ்

Vikatan Correspondent
”என் ஆசை நிறைவேறியது”  கமல் பேச்சு: நடிகர்சங்க பொதுக்குழு கூட்ட அப்டேட்ஸ்
”என் ஆசை நிறைவேறியது” கமல் பேச்சு: நடிகர்சங்க பொதுக்குழு கூட்ட அப்டேட்ஸ்


நடிகர் சங்க 63வது பொதுக்குழு, சென்னை தி-நகரில் இருக்கும்  நடிகர் சங்க வளாகத்தில் இப்போது நடைபெற்றுவருகிறது. சங்கத்தைச் சேர்ந்த,  இறந்த  மூத்த நடிகர்களுக்கு முதலாவதாக இரங்கல் தெரிவிக்கப்பட்டது. அதில் எம்.ஜி.ஆர்., சிவாஜி, தியாகராஜ பாகவதர் உள்ளிட்ட மூத்த நடிகர்கள் நினைவு கூரப்பட்டு கெளரவிக்கப்பட்டனர்.

பொதுக்குழுவிற்கு அனுமதி அட்டை உள்ளவர்கள் மட்டுமே அனுமதிக்கப்பட்டனர். இதனால் பழைய உறுப்பினர் அட்டை வைத்திருந்தவர்கள் பொதுக்குழுவிற்கு அனுமதிக்கப்படவில்லை. இதனால் அவர்களுக்கும் நடிகர் சங்க நிர்வாகிகளுக்கும் இடையே அவ்வளாகத்தில் வாக்குவாதம் ஏற்பட்டது. 

இதனால் பொதுக்குழு தொடங்கி சிலமணிநேரத்தில் அவ்விடத்தில் பரபரப்பு ஏற்பட்டது. அவர்களை காவல்துறையினர் அப்புறப்படுத்தினர். இதற்கு நடுவே நடிகர்சங்க துணைத்தலைவர் கருணாஸின் கார் கண்ணாடியை மர்ம நபர் உடைத்ததால் பொதுக்குழு வளாகத்திற்கு வெளியே பெரும் கலவரம் நடந்தது. கண்ணாடியை உடைத்த மர்ம நபரை கருணாஸின் ஆதரவாளர்கள் காவல்துறை முன்னிலையில் தாக்க, காவல்துறையினர் அவர்களை தடுப்பதற்காக முயல, இருதரப்புக்கும் இடையில் கைகலப்பு ஏற்பட்டது. இதனால் வளாகமே போர்க்களம் போல் காட்சியளித்தது. அதன்பின்னரே நிலைமை போலீஸாரால் கட்டுக்குள் கொண்டுவரப்பட்டது. 

இதையடுத்து அங்கு நின்ற அனைவரையும் காவல்துறையினர் அப்புறப்படுத்தினர். கூடுதல் பாதுகாப்பிற்காக போலீஸார் வரவழைக்கப்பட்டனர். இதனையடுத்து பொதுக்குழு தொடர்ந்து நடைபெற்றுவருகிறது. ஏற்கெனவே பொதுக்குழுவை லயோலா கல்லூரியில் நடத்தக்கூடாதென நீதிமன்றத்திலும் காவல்துறையிடமும் புகார் அளிக்கப்பட்டிருந்தது குறிப்பிடத்தக்கது. இந்த புகாரின் எதிரொலியாக வேறு இடத்திற்கு பொதுக்குழு மாற்றி வைத்துக்கொள்ளும்படி லயோலா கல்லூரியும் கடிதம் அளித்தது. இதனைத் தொடர்ந்து நடிகர் சங்க வளாகத்தில் பொதுக்குழுவை நடத்துவதற்கான ஏற்பாடுகள் செய்யப்பட்டன. இருப்பினும், பொதுக்குழுவிலிருந்து நீக்கப்பட்ட முன்னால் நிர்வாகிகளால் பிரச்னை ஏற்பட வாய்ப்புள்ளதால் தனியார் பாதுகாவலர்கள் (பவுன்சர்கள்) நடிகர் சங்கம் சார்பில் நியமிக்கப்பட்டனர். 

வளாகத்தில் சுற்றியிருந்த பவுன்சர்கள், உறுப்பினர்களிடம் அவர்களது அடையாள அட்டையை காட்டிய பிறகே உள்ளே அனுமதித்தனர். தொடர்ந்து பொதுக்குழு நடைபெற்றுவருகிறது. இந்நிகழ்ச்சிக்கு ஆவலோடு எதிர்பார்க்கப்பட்ட ரஜினி, கமல், விஜய், அஜித் உள்ளிட்ட யாரும் கலந்துகொள்ளவில்லை. வடிவேலு, சரோஜாதேவி, தன்ஷிகா, விக்ரம்பிரபு, விக்ரம், விமல், விதார்த், சூரி, சதீஷ் மற்றும் சிவகார்த்திகேயன் உள்ளிட்ட பலர் கலந்துகொண்டனர். 

நடிகர் சங்கத்திற்கான பொதுக்குழு நிகழ்ச்சியை நடிகை சுஹாசினி தொகுத்துவழங்கினார். நடிகர்களுக்குள் பல்வேறு பிரச்சனைகள் இருந்தாலும் அவர்கள் எப்போதும் ஒற்றுமையானவர்கள் என்று கூறினார் சுஹாசினி. பின்னர் சங்க தலைவர், செயலாளர் உள்ளிட்ட சங்க நிர்வாகிகள் மேடைக்கு அழைக்கப்பட்டனர். சச்சு, எல்.விஜயா, சாரதா உள்ளிட்ட மூத்தக் கலைகஞர்கள் குத்து விளக்கேற்றுகின்றனர். பின்னர் மறைந்த ஜேப்பியார், முன்னாள் திரைக் கலைஞர்களுக்கு ஒரு நிமிட மௌன அஞ்சலி செலுத்தப்பட்டது. 

ஸ்கைப்பில் பேசிய கமல், “ நடிகர் சங்கத்தின் அனைத்து நிகழ்வுகளும் நமது இடத்தில் நடைபெற வேண்டும் என்பது நீண்ட நாள் ஆசை, அது நிறைவேறிவிட்டது. என்னைவிட வயதில் இளையவர்கள் மத்தியில் மிகுந்த நட்பும், பொறுப்பு உணர்வும் இருப்பதை உணர்கிறேன். இதில் மறைந்த கலைஞர்களின் பங்களிப்பும் நடிகர் சங்கத்தின் வளர்ச்சியில் உள்ளது. பேசவாய்ப்பளித்த அனைவருக்கும் வாழ்த்துக்களும், நன்றியும்” இவ்வாறு கூறினார் கமல். 

“புதிய நிர்வாகத்தின் முதல் பொதுக்குழுவிற்கு வந்த அனைவருக்கும் மனமார்ந்த நன்றி” என்று கூறி விஷால் வரவேற்புரை ஆற்றினார். முன்னாள் இயக்குனர் ஏ.பி.நாகராஜனை கெளரவிக்கும் விதமாக, இவரைப் பற்றிய புத்தகத்தை சிவக்குமார் வெளியிட இயக்குனர் எஸ்.பி.முத்துராமன் பெற்று கொண்டார். 

“ காணாமல் போன நடிகர் சங்கத்தை கண்டு பிடித்தது மட்டுமில்லாமல், இந்தக்கூட்டமும் பல எதிர்ப்புகளைத் தாண்டி நடந்ததே மிகப்பெரிய வெற்றி. இருப்பினும் நல்லது செய்வதை கெடுப்பதற்காக எப்போதுமே சிலர் இருப்பது வேதனையளிக்கிறது” இவ்வாறு பேசினார் வடிவேலு. 

தற்பொழுது பொதுக்குழுவின் பேச்சுவார்த்தையில், சர்த்குமார், ராதாரவி உள்ளிட்டோர்களை நடிகர் சங்கத்திலிருந்து நிரந்தரமாக நீக்குவது குறித்து ஒப்புதல் அளிக்கப்பட்டது. இதுகுறித்து விஷால் பேசும்போது, “ சரத்குமார், ராதாரவி மீது இந்த நடவடிக்கை எடுப்பது நடிகர்சங்க வளர்ச்சிக்கு  முன்னுதாரணமாக இருக்கும்

சங்க உறுப்பினர்களின் நலன்களுக்காகவே, நாங்கள் தொடர்ந்து பாடுபட்டுவருவதாகவும், அதற்கு எத்தகைய தடைகளை நீங்கள் போட்டாலும், அத்தனையும் உடைத்து சங்க உறுப்பினர்களுக்கு நல்லது செய்தே தீர்வோம். இந்த இடத்தில் கட்டிடம் கட்டாமல் நாங்கள் ஓயமாட்டோம். இன்று பொதுகுழுவிற்கு வந்து சண்டையிடும் சிலர் என்னைப் பார்த்து “ஆம்பள”யா என்று கேட்கிறார்கள். நான்  ‘ஆம்பள’ தான் என்பதை தற்பொழுது நிரூபித்துள்ளேன். எத்தகைய மிரட்டலுக்கும் பயப்படபோவதில்லை.

சங்கத்தின் கணக்குவழக்குகளையும் மற்ற விஷயங்களையும் பொருளாளர் கார்த்தி அவர்கள் தெரிவித்தார். இதற்குப் பிறகும் இந்த விவகாரத்தில் எப்படி எங்களால் சும்மா இருக்க முடியும். மற்றவர்களுக்கு நல்லது செய்யவேண்டும் என்று சொல்லித்தான் என் குடும்பத்தினரும் ஆசிரியர்களும் எனக்குச் சொல்லி வளர்த்தனர். ஆனால் இங்கு நல்லது செய்வதே பிரச்னையாக உள்ளது. புகார் அளித்துள்ள முன்னாள் நிர்வாகிகள் என்று தான் கூறிவந்தேன். இப்பொழுது அவர்களது பெயர்களைச் சொல்கிறேன். அவர்கள்... சரத்குமார், ராதாரவி. 

சங்கத்தின் பல்வேறு முறைகேடுகளை அவர்கள் செய்துள்ளனர். அதனால் அவர்களை நீக்குவதற்கான ஒப்புதலை உங்களிடம் பெறவேண்டியிருக்கிறது. நீங்கள் என்ன சொல்கிறீர்கள்? (அனைவரும் கோரசாக கத்த) சட்டவல்லுனர்களே நன்றாக குறித்துக்கொள்ளுங்கள். உறுப்பினர்கள் அனைவரும் ஒப்புதல் அளித்துள்ளனர். இவ்வாறு விஷால் பேசினார். 

இதற்கு முன்னதாக பேசிய பொருளாளர் கார்த்தி, “ நடிகர் சங்க கணக்குகள் அனைத்தையுமே முறையாக தாக்கல் செய்துள்ளோம். முன்னாள் நிர்வாகிகள் செய்துள்ள முறைகேடுகளை ஆதாரத்துடன்  வெளியிடப்போகிறேன். டிரஸ்ட்டீயின் நிரந்தர உறுப்பினர்கள் நாங்கள் தான் எனக்கூறி சொத்துக்களை தங்கள் பெயரில் பதிவு செய்துள்ளனர். அதற்கான ஆதாரம் இங்கே உள்ளது. நீங்கள் தான் இனிமேல் என்ன நடவடிக்கை எடுக்கவேண்டுமென முடிவுசெய்யவேண்டும்” என்று கூறினார் கார்த்தி.

இத்துடன் நடிகர் சங்க பொதுக்குழு முடிந்தது.  

-பிரம்மா, முத்துபகவத்-