Published:Updated:

5 வயது, 1000 மைல், கூகுள் எர்த், அன்பே சிவம்..! என்னனு தெரியுமா?

5 வயது, 1000 மைல், கூகுள் எர்த், அன்பே சிவம்..! என்னனு தெரியுமா?
5 வயது, 1000 மைல், கூகுள் எர்த், அன்பே சிவம்..! என்னனு தெரியுமா?

2013 ஆம் ஆண்டு... ஆஸ்திரேலியாவில் ஒரு செய்தி வெளியாகிறது. சரூ ப்ரயர்லி (Saroo Brierley) என்ற இளைஞரின் கதை அது... 1986ஆம் ஆண்டு இந்தியாவின் மத்திய பிரதேசத்தின் ஒரு ஏழைக் குடும்பத்தைச்  சேர்ந்த சரூ, ரயில் நிலையத்தில் தொலைந்துவிடுகிறான். தவறான ரயில் ஏறி, 1000 மைல்களுக்கு அப்பால் இருக்கும் கொல்கத்தா வந்தடைகிறான். அங்கு அனாதையாக சுற்றும் சரூவை ஒரு ஆஸ்திரேலிய தம்பதி தத்தெடுத்து வளர்க்கிறார்கள். இளைஞனாய் வளர்ந்த சரூவுக்கு தான் பிறந்த குடும்பத்தைப் பார்க்க வேண்டும் என்ற ஏக்கம்... "கூகுள் எர்த்"யின் உதவியோடு, தன் குடும்பத்தைத் தேடி இந்தியா புறப்படுகிறார். அதன் பிறகு...

இந்த செய்தி ஆஸ்திரேலிய தொலைக்காட்சித் தொடர்களை இயக்கும் கார்த் டேவிசுக்கு ஆழமான தாக்கத்தை ஏற்படுத்துகிறது. உடனடியாக சரூவைத் தொடர்பு கொண்டு, இதைத் திரைப்படமாக எடுக்க அனுமதி கோருகிறார். ஹாலிவுட்டில் இருந்தும் பல நிறுவனங்கள் சரூவைத் தொடர்பு கொள்கின்றன. ஆனால், அவர்கள் அனைவரும் வைக்கும் ஒரே கோரிக்கை, ஆஸ்திரேலிய தம்பதிக்கு பதில் அமெரிக்கத் தம்பதியாக தாங்கள் கதையில் மாற்றிக் கொள்ள அனுமதிக்க வேண்டும் என்பது தான் . இதற்கு மறுப்பளிக்கும் சரூ, உரிமையை டேவிசுக்கு வழங்குகிறார். இந்த நிஜக் கதை திரைப்படமாக உருவாகத் தொடங்குகிறது...

வளர்ந்த இளைஞர் சரூவாக நடிக்க "ஸ்லம் டாக் மில்லியனர்" படத்தில் நடித்த தேவ் படேல் ஒப்பந்தம் செய்யப்படுகிறார். ஆஸ்கர் வென்ற நடிகை நிக்கோல் கிட்மேன் ஒரு ஆஸ்திரேலியர்... அவர் ஒரு பையனை தத்தெடுத்து வளர்த்து வருகிறார். தன் வாழ்வின் நெருக்கத்தை சொல்லும் கதையாக இருப்பதால், சரூவின் அம்மாவாக நடிக்க முன்வருகிறார். 5 வயது பையனுக்காக இந்தியா முழுக்க 4 மாத காலம் பயணம் மேற்கொள்கிறது படக் குழு. கிட்டத்தட்ட 2000 பேரைப் பார்த்த பிறகு, சன்னி பவார் என்ற பையனை ஒப்பந்தம் செய்கிறார்கள். படப்பிடிப்புத் தொடங்குகிறது...

படத்தின் சரி பாதி இந்தியாவில் தான் படமாக்கப்படுகிறது .இந்தப் படத்தின் படப்பிடிப்பிற்காக, முதன்முறையாக கொல்கத்தாவின் ஹவுரா பிரிட்ஜில் ஒரு நாள் முழுக்க போக்குவரத்து தடை செய்யப்படுகிறது . இந்தியாவைத் தொடர்ந்து ஆஸ்திரேலியாவில் படப்பிடிப்பு. 5 வயது சன்னி பவார் ஆஸ்திரேலியாவுக்குப் போனதும் ரொம்ப மிரட்சியடைகிறான். அந்நிய நடிகர்கள், கேமரா, படப்பிடிப்பு எல்லாம் அவனுக்கு பயம் கொடுக்கின்றன. நிக்கோல் கிட்மேன் அவனுடன் கிரிக்கெட், புட்பால் விளையாடி அவனை சகஜமாக்குகிறார். கொஞ்சம், கொஞ்சமாக வளர்ந்து படம் முழுமையடைகிறது. 

டொரண்டோ திரைப்பட விழா, லண்டன் திரைப்பட விழா உட்பட பல்வேறு சர்வதேச திரைப்பட விழாக்களிலும் திரையிடப்பட்டு பல பாராட்டுக்களை பெற்று வருகிறது " லயன் " (Lion) . 

எங்கோ இந்தியாவின் ஒரு மூலையில் பிறந்த ஒரு பையனின் வாழ்க்கை, 5000 மைல்கள் கடந்து ஆஸ்திரேலியாவிற்கு வந்து வளர்ந்து, மீண்டும் தன் தாயைத் தேடிப் போகும் அந்த அனுபவம் உணர்ச்சிகரமாக இதில் பதிவு செய்யப்படிருப்பதாக படம் பார்த்தவர்கள் சொல்கிறார்கள். "தூரங்களும், தேசங்களும் அன்பிற்கு தடை போட்டுவிட முடியாது என்ற கருத்து தான் இந்தக் கதையில் என்னைக் கவர்ந்தது. " என்று இந்தப் படத்தை எடுத்ததற்கான காரணத்தை சொல்கிறார் படத்தின் இயக்குநர் கார்த் டேவிஸ். படம் தொடங்கியதற்குப் பின்னர், சரூ தன் கதையை " எ லாங் வே ஹோம்" (A Long Way Home) என்ற பெயரில் புத்தகமாக வெளியிட்டார். அது பெரும் வரவேற்பை பெற்றது. 

அமெரிக்காவில் நவம்பர் 25ம் தேதி இந்தப் படம் வெளியானது. இந்தியாவில் ஜனவரி, 2017யில் வெளியாகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இந்தியாவைக் களமாகக் கொண்டு எடுக்கப்பட்ட "ஸ்லம்டாக் மில்லியனர்" இந்தியர்களை கேவலப்படுத்தியது என்ற கருத்து அந்த சமயத்தில் முன்வைக்கப்பட்டது . இந்தியாவையும், இந்தியர்களையும் சரியான புரிதலோடு இந்த "லயன்" அணுகியிருக்க வேண்டும் என்பதே இந்திய சினிமா ரசிகர்களின் எதிர்பார்ப்பாக இருக்க முடியும்.  
                                                                                                                       

 - இரா. கலைச் செல்வன்.