Published:Updated:

”அப்பா கூடவும், தனுஷ் கூடவும் ஒரு வாக் போகணும்” - ஐஸ்வர்யா தனுஷின் ஆசை! #VikatanExclusive

Vikatan Correspondent
”அப்பா கூடவும், தனுஷ் கூடவும் ஒரு வாக் போகணும்” - ஐஸ்வர்யா தனுஷின் ஆசை! #VikatanExclusive
”அப்பா கூடவும், தனுஷ் கூடவும் ஒரு வாக் போகணும்” - ஐஸ்வர்யா தனுஷின் ஆசை! #VikatanExclusive

”ஒரு நாளைக்கு 24 மணி நேரம் தானா” மோடில் இருக்கிறார் ஐஸ்வர்யா தனுஷ், ஒரு பக்கம், 'ஸ்டேண்டிங் ஆன் தி ஆப்பிள் பாக்ஸ்' (ஒரு ஆப்பிள் பெட்டி மீது நின்று கொண்டு) என்றொரு புத்தகத்தை எழுதிக் கொண்டிருக்கிறார். இன்னொரு பக்கம், 'சினிமா வீரன்' என்றொரு ஆவணப்படத்தை இயக்கிக் கொண்டிருக்கிறார்.  ரஜினியின் மகள், தனுஷின் மனைவி என்பதைத் தாண்டி தன்னுடைய சுய அடையாளத்தை பதிக்கும் முயற்சியாக இதை எல்லாம் எடுத்துக் கொள்ளலாமா என்ற கேள்விக்கு புன்னகையை மட்டும் பதிலாக்கிவிட்டு பேச ஆரம்பிக்கிறார் ஐஸ்வர்யா தனுஷ்.

'எழுத்தாளர் ஐஸ்வர்யா தனுஷ்' பற்றி அவரது அப்பா ரஜினி, கணவர் தனுஷ் ரியாக்ஷன் எப்படி? 

''அப்பாவுக்கு நான் எழுதுவேங்கிறது தெரியும். அதனால அவர் சர்ப்ரைஸ் ஆகலை. ஆனா தனுஷுக்கு நான் எழுதுவேங்கிறதே தெரியாது. ரொம்ப சர்ப்ரைஸ் ஆகிட்டார்.''

சினிமா வீரன் என்று தலைப்பிலேயே ஸ்டண்ட் கலைஞர்களுக்கு கௌரவம் சேர்த்திருக்கிறார் ஐஸ்வர்யா தனுஷ் தன்னுடைய ஆவணப்படத்தில். சினிமாவில் எத்தனையோ கிராஃப்ட் இருக்க, இவர்களை நோக்கி கவனம் சென்றது எப்படி?

''சினிமா வீரன்ங்கிறது ஸ்டன்ட் மென் பத்தின டாகுமெண்ட்ரி மட்டுமில்லை. அது மூணு பார்ட். அதுல ஒரு பார்ட்தான் ஸ்டன்ட் மென் பத்தினது. இவ்வளவு கஷ்டப்படற அவங்களுக்கு எந்த இன்ஷ்யூரன்ஸும் இல்லை... இத்தனை கஷ்டத்துலேயும் அவங்க பசங்களும் இதே வேலைக்கு வர்றாங்க. ஸ்டண்ட் யூனியன் கார்டு எடுக்கிறதைப் பெருமையா நினைக்கிறாங்க. பெரிய பொருளாதாரப் பின்னணி இல்லாதவங்க... அவங்க கஷ்டங்களைப் பதிவு பண்ணணும்னு தோணினது.

அடுத்த பார்ட், ஜூனியர் ஆர்ட்டிஸ்ட்டோட வாழ்க்கையைப் பத்தினது. மூணாவது, பேக்ரவுண்ட் டான்சர்ஸோட... அதாவது குரூப் டான்சர்ஸ் வாழ்க்கையைப் பத்தினது. இந்த மூணு பேரும் இல்லாம ஒரு படம் முழுமையடையாது. அப்பாவோடு ஷூட்டிங் போகும்போதும் சரி... தனுஷ் ஷூட்டிங் போகும்போதும் சரி... என்னோட ஷூட்டிங்கிலேயும் சரி... இவங்களை பார்த்திருக்கேன்.  கவனிச்சிருக்கேன்.

இங்கயே பிறந்திருக்கேன்... வளர்ந்திருக்கேன்... கல்யாணமும் பண்ணியிருக்கேன்... ஒரு இண்டஸ்ட்ரி பொண்ணா இப்படியொரு விஷயத்தைச் செய்யறதை ட்ரிபியூட்டா நினைக்கிறேன். 

ஸ்டன்ட்மென் பத்தி ரிசர்ச் பண்ணினபோது அவங்களுக்கு அவார்டுனு எதுவும் இல்லைன்னு தெரிஞ்சப்ப ரொம்ப வருத்தமா இருந்தது. நேஷனல் அவார்ட் மட்டுமில்லை, ஆஸ்கார்லயே ஸ்டன்ட் கோரியோகிராஃபிக்கு அவார்ட் கிடையாதுங்கிறது எவ்வளவு கொடுமை பாருங்க? ஒரு மேக்கப் ஆர்ட்டிஸ்ட்டுக்கு அவார்ட் இருக்கு... விஷூவல் ஆர்ட்டிஸ்ட்டுக்கு இருக்கு.. காஸ்ட்யூம் டிசைனிங்குக்கு இருக்கு. இப்படியொரு முக்கியமான ஏரியாவான ஆக்ஷனுக்கு இல்லைங்கிறபோது அதை எடுத்துச் சொல்லணும்னு நினைச்சேன். இந்த வருஷத்துலேருந்து இவங்களுக்கான அங்கீகாரத்தைக் கொடுக்கணும்னு மினிஸ்டர் வெங்கய்யா நாயுடு சாரை மீட் பண்ணி ரெக்வெஸட் லெட்டர் கொடுத்திருக்கேன். அப்படி வந்ததுன்னா இந்த இன்டஸ்ட்ரிக்கு ஏதோ என்னால முடிஞ்ச ஒரு சின்ன பங்களிப்பா இருக்கும்.''

ஏ.ஆர்.ரஹ்மான் இசை, ரஜினியின் வாய்ஸ் ஓவர்... சினிமா வீரன் ஆவணப்படத்துக்கு இதெல்லாம் தேவையாக இருக்கிறதா? 

''தேவையா இல்லையாங்கறதைவிட, இப்படியொரு நல்ல காரியத்துக்கு இவங்க எல்லாரும் சப்போர்ட் பண்றாங்கங்கிறதுதான் முக்கியம். இவங்கக்கிட்ட ஒரு வீடியோ பைட்டை ஈஸியா வாங்கியிருக்கலாம். ஆனா இவங்க எல்லாரும் இதோட மதிப்பு தெரிஞ்சு, டைம் கொடுத்து ஈடுபட்டதுதான் பெரிய விஷயம். இந்தப் படத்துல ஏ.ஆர்.ரஹ்மான் சார் ஒரு சாங் பண்ணியிருக்கார். அவர் நடத்தற மியூசிக் ஸ்கூலை சேர்ந்தவங்கதான் பேக்ரவுண்ட் ஸ்கோர் பண்ணியிருக்காங்க. அப்பாகிட்ட கான்செப்டை சொன்னதும் வாய்ஸ்ஓவர் கொடுக்க சம்மதிச்சார். இதெல்லாம் ரஜினியோட மகள் என்பதால ஈஸியா நடந்த விஷயங்கள்னு கூட சிலர் சொல்லலாம். எதுவா இருந்தா என்ன? ஒரு நல்ல விஷயம் நடக்குதுன்னா அது எதனால நடக்குதுங்கிறது முக்கியமில்லை, நடக்குதுங்கிறதுதான் முக்கியம்.''

எப்படி இருக்கு அப்பாவை வைத்து படம் தயாரிக்கும் ஃபீலிங்?

''அப்பா நடிக்கிற படத்தை நாங்க புரட்யூஸ் பண்றதுல எனக்கு நிச்சயமா பெருமைதான். மகளுக்கோ, மருமகனுக்கோ படம் பண்றோம்ங்கிறதை மீறி, எங்களோட புரடக்ஷன் கம்பெனியோட திறமை அப்பாவுக்குத் தெரியும். ஒரு இடத்துல திறமை இருக்கு... சின்சியாரிட்டி இருக்குன்னா மட்டும்தான் அவர் படம் பண்ணுவார். ஃபேமிலியா இருந்தாலும் சரி, வெளியாட்கள் படமானாலும் சரி. இந்தப் படம் அவர் பண்ணக் காரணம், எங்களைவிட எங்க கம்பெனி மேல அப்பா வச்சிருக்கிற நம்பிக்கையாலதான். நல்ல நல்ல படங்கள் கொடுத்திருக்கோம். நேஷனல் அவார்ட் வாங்கியிருக்கோம். டீசன்ட்டான புரடக்ஷன் ஹவுஸ் என்ற பேர் இருக்கு. 

பொண்ணும் மருமகனும் கேட்டா டேட் கொடுக்க மாட்டாரானு மத்தவங்க நினைக்கலாம். ஆனா இது அப்படி நடந்த விஷயமில்லை. நாங்க கொடுத்த படங்கள், எங்க முயற்சி, எங்க கம்பெனியோட வளர்ச்சி, அது காட்டின விஷயங்களைப் பார்த்து நடந்ததுங்கிறதுதான் உண்மை. எங்க ரெண்டு பேருக்குமே இது பெரிய பிளெஸ்ஸிங். அதையும் தாண்டி எனக்கு ஒரு நிம்மதி என்னன்னா.... அப்பாவை கூடவே இருந்து நல்லா பார்த்துக்கலாம். மத்த பேனர்ல அப்பா படம் பண்றபோது ஒரு மகளா அவரோட ஹெல்த் பத்தின கவலை எனக்கு இருந்துக்கிட்டே இருக்கும். நம்ம குழந்தையை வெளியிடங்களுக்கு அனுப்பறப்ப சின்னதா ஒரு பயம் இருக்குமே.. அப்படி. அதே பிள்ளையை ஸ்கூலுக்கு அனுப்பறபோது ஒருவித பாதுகாப்பை உணர்வோம். எங்க பேனர்ல அப்பா நடிக்கிறப்ப இந்த மாதிரியான சேஃப் ஃபீலிங் வருது.''

தாத்தா ரஜினி -  பேரன்கள் யாத்ரா, லிங்கா ?

''அது ரொம்ப அழகான உறவு. அம்மாவுக்கும் அப்பாவுக்கும் நான் கொடுத்த மிகப் பெரிய சந்தோஷம்னா என் பசங்கதான். தாத்தாவும் பேரன்களும் பேசிக்கிறதே அவ்ளோ அழகா இருக்கும். எந்தக் கட்டுப்பாடும் இல்லாம தாத்தா பாட்டி வீட்டுக்குப் போறதுங்கிறது அவங்களுக்கு ஹாலிடே மாதிரி. தாத்தாவோட ஷூட்டிங் போவாங்க.  டபிள்யூ டபிள்யூ ஈலேருந்து கார்ட்டூன் வரைக்கும் எல்லாம் பேசுவாங்க. தாத்தாவுக்கு அதெல்லாம் தெரியுமானெல்லாம் கவலைப்பட மாட்டாங்க. அவரும் அதை என்ஜாய் பண்ணுவார். சேர்ந்து உட்கார்ந்து சாப்பிடுவாங்க. படம் பார்ப்பாங்க. விளையாடுவாங்க. ஒவ்வொரு வெள்ளிக்கிழமை நைட்டும் தாத்தா வீட்டுக்குப் போயிடுவாங்க. ஞாயித்துக்கிழமை நைட் எங்க வீட்டுக்கு வந்துடுவாங்க. நான் பிசியா இருக்கிறபோது அப்பாவே பசங்களை ஸ்கூல்ல விட்டுட்டு, ஈவ்னிங்போய் கூட்டிட்டு வருவார். அது பசங்களுக்கும் ரொம்பப் பிடிக்கும்.''

தயாரிப்பாளராக ரஜினியின் கால்ஷீட் கிடைத்தாகிவிட்டது. டைரக்டர் ஐஸ்வர்யாவுக்கு ரஜினியின் கால்ஷீட் எப்போது? எதிர்பார்க்கலாமா?

''அப்படியொரு ஐடியாவே எனக்கில்லை. ஒரு அம்மாவா, ஒரு மகளா, ஒரு ஃப்ரெண்டா அவர் வாழ்க்கையில நான் பண்ற விஷயங்களே எனக்குப் பிடிச்சிருக்கு.''

அப்புறம்.. எப்படி இருக்கார் தனுஷ்?

''ஒரு நடிகரா, தயாரிப்பாளரா, புரஃபஷனலா ரொம்பப் பெரிய மாற்றங்களை தனுஷ்கிட்ட பார்க்கறேன். ஆனா ஒரு மனிதரா அப்படியேதான் இருக்கார். நல்லது செய்யணும்னு நினைக்கிற கேரக்டர். தான் மட்டும் வளர்ந்தா பத்தாது. நல்ல திறமையைப் பார்த்தா வளர்த்து விடணும். சப்போர்ட் பண்ணணும்னு நினைக்கிறவர். அது அவர்கிட்ட எனக்கு ரொம்பப் பிடிக்கும். அவருக்கு நடிப்பையும் சினிமாவையும் விட்டா வேற ஒண்ணுமே தெரியாது. ஒரு செக்கை ஃபில் பண்ணக்கூடத் தெரியாது. அதுதான் அவரோட பலமும்கூட. 

எல்லாத்தையும் யாரோ ஒருத்தர் பார்த்துக்கிட்டா என் வேலையை நான் கரெக்டா செய்வேன் என்று நினைக்கிறவர். தன்னோட வேலையில அவருக்குள்ள லவ்வும் டெடிகேஷனும்தான் இத்தனை உயரத்துக்கு அவரை கூட்டிட்டுப் போயிருக்கு. அதைத் தவிர எனக்கு வேற எதுவும் தெரியாதுனு சொல்றதுக்கு ஒரு பியூரிட்டி வேணும். அது தனுஷ்கிட்ட இருக்கு.''

தான் நடிக்கும் படம் பற்றி, தன்னுடைய கதாபாத்திரங்கள் பற்றி உங்களுடன் அபிப்ராயம் கேட்பாரா தனுஷ்? 

''வீட்ல டிஸ்கஸ் பண்ணுவோம். என் அபிப்ராயம் கேட்பார், அவ்வளவுதான். அவரோட ஜட்ஜ்மென்ட் எப்போதும் சரியாகத்தான் இருக்கும். இதுவரை இருந்திருக்கு. அதனால அந்த விஷயங்கள்ல நான் அதிகம் தலையிடக்கூடாதுனு நினைப்பேன்.  நாளைக்கு நானே ஒரு படம் பண்றேன்னாகூட இது நல்லாருக்கா, நல்லால்லையானு கேட்பேனே தவிர அவங்க சொல்றதைத்தான் நான் பண்ணணும்னு அவங்களும் நினைக்கமாட்டாங்க. அந்த பர்சனல் ஸ்பேஸ் ரெண்டு பேருக்கும் முக்கியம்னு நினைக்கிறேன்.''

நடிகர் தனுஷ், வீட்டில் இரண்டு குழந்தைகளின் அப்பாவாக எப்படி?

''நான் அதிகம் வீட்ல இருக்கிறதில்லை, அம்மாவுக்குத்தான் பொறுப்புகள் அதிகம். அதனால அவங்க எடுக்கிற முடிவுகள்தான் சரியாவும் இருக்கும்னு நினைக்கிற கேரக்டர் தனுஷ். அது எனக்கு ரொம்பப் பிடிக்கும். சில குடும்பங்கள்ல நான் இல்லைனாகூட எல்லா முடிவுகளையும் நான்தான் எடுக்கணும்னு நினைக்கிறவங்களைப் பார்த்திருக்கேன். அந்த மாதிரி பிரஷர் எனக்கில்லை. முடிவெடுக்கிற உரிமை மொத்தமும் என்கிட்ட விட்ருவாங்க.  குழந்தைங்களோட வீட்ல இருக்கிற நேரம் அனிமேஷன் படங்கள் பார்ப்பாங்க. செகண்ட் சண்டேஸ்ல லன்ச் கூட்டிட்டுப் போவாங்க.  வீடியோ கேம் விளையாடுவாங்க.'' என்கிற ஐஸ்வர்யா தனுஷ் கூடுதல் தகவலாக சொன்னது: ''இப்ப  வீட்ல ஃபீஃபா ஃபீவர்தான் ஓடிக்கிட்டிருக்கு.''

ரஜினியின் மகள், தனுஷின் மனைவி என்பதைப்போலவே ஐஸ்வர்யாவுக்கு இன்னொரு பக்கமும் இருக்கிறது. யாத்ரா, லிங்காவின் அம்மா.

''என் வாழ்க்கைக்கே அர்த்தம் கொடுத்தவங்க என் பசங்கதான். ரொம்ப அனுசரணையான குழந்தைங்க. வேலைக்குப் போகும்போது குழந்தைங்க அழுதிட்டிருந்தா நிம்மதியா வேலை செய்ய முடியாது. பெரிய மனுஷங்க மாதிரி நீங்க போயிட்டு வாங்கனு அனுப்பறாங்க. ரொம்ப புத்திசாலிங்க. என்னோட ஒரே கடமை அவங்களை நல்ல சிட்டிசனா வளர்க்கிறதுதான். அவங்க வாழ்க்கையில வர்ற பெண்களை மதிக்கிற மாதிரியான பசங்களை வளர்த்திருக்கேன்னு சொல்ல வச்சா, அதுதான் என்னோட மிகப் பெரிய சாதனையா இருக்கும். 

இன்னிக்கு எந்த அம்மா, அப்பாவாலயும் பசங்களோட 24/7 இருக்கிறது நடைமுறையில சாத்தியமில்லாதது. யாருமே அப்படிப் பண்றதில்லைனு சொல்லலை. பண்ண முடியறவங்க கிரேட். இன்னிக்கு சூழல்ல பேரண்ட்ஸ் குவாலிட்டி டைம் கொடுக்கறதைவிட, குவான்ட்டிட்டி டைம் கொடுக்கிறதுதான் முக்கியம்னு நினைக்கிறேன். என்னைப் பொறுத்தவரைக்கும் காலையில ஸ்கூலுக்கு அனுப்பற டைமும், ராத்திரி சாப்பாடு கொடுத்து தூங்க வைக்கிற டைமும் எங்க வீட்ல ரொம்ப முக்கியமானது. அந்த ரெண்டையும் எங்க இருந்தாலும் மிஸ் பண்ண மாட்டேன்.  நைட் ஷூட் இருந்தா மட்டும்தான் முடியாமப் போகும். அது வருஷத்துல சில நாட்கள்தான்... பசங்களோட இருக்கோமாங்கிறதைவிட அவங்களோட என்ன பேசறோம் எப்படி இருக்கோம்ங்கிறதுதான் முக்கியம். இந்தக் காலத்துல ஃபேஸ்டைம், ஸ்கைப்னு எல்லாம் இருக்கு. பசங்க அதை ரொம்ப நல்லாவே ஹேண்டில் பண்றாங்க..''

குழந்தைகளை சினிமாவின் புகழ்வெளிச்சம் படாமல் வளர்க்க முடிகிறதா?

''அது ஓரளவுக்குத்தான் முடியுது. அவங்களைச் சுத்தி ஃப்ரெண்ட்ஸ் இருக்காங்க. அவங்க அம்மா, அப்பா இருக்காங்க. டிரைவர்ஸ் இருக்காங்க. அக்கம்பக்கத்து வீட்டுக்காரங்க இருக்காங்க. எல்லாரையும் நான் கன்ட்ரோல் பண்ண முடியாது. நீ என்ன உங்க அப்பா மாதிரி இருக்கே... நீ என்ன உங்க தாத்தா மாதிரி பண்றேனு கேட்கறதை கன்ட்ரோல் பண்ணணும்னு நினைச்சா நான் வெளியில அனுப்பாம வீட்லயேதான் வச்சுக்கணும். அது தெரிஞ்சு அதை பேலன்ஸ் பண்ணக் கத்துக்கிறதும் முக்கியம்னு நினைக்கிறேன். அதுல நான் கொஞ்சம் ஸ்ட்ரிக்ட். நாம ஏற்கனவே இந்த இன்டஸ்ட்ரியில இருக்கோம். இது இல்லாம அவங்களால வளரவே முடியாது. அதை அதிகமா கொடுத்துடக்கூடாதுங்கிற சின்ன கவலை எனக்கு உண்டு. நல்ல ஃபவுண்டேஷன் கொடுக்க வேண்டியது எங்களோட பொறுப்பு.''

எந்நேரமும் மீடியாவின் ப்ளாஷ் வெளிச்சத்தில் வாழ்கிற இந்த செலிபிரிட்டி ஸ்டேட்டஸ் என்னிக்காவது எரிச்சலைக் கொடுத்திருக்கிறதா?

''அது நாமளா தேடிக்கிட்டதில்லை. அப்படிப் பிறந்துட்டோம். என் பசங்களுக்கும் அப்படித்தான். கோயில், மால், பீச்னு என் பசங்க எங்க விரும்பினாலும் போவாங்க. ஆனா எங்ககூட போக மாட்டாங்க. அம்மா, அப்பாகூட போனா நம்மால விளையாட முடியாது. ஃபோட்டோ எடுத்து பேப்பர்ல போட்ருவாங்கனு விவரம் தெரியுது. அப்பா யாரு, தாத்தா யாரு, அம்மா யாருனு புரியுது. எனக்கு அந்த வயசுல அவ்வளவு புரிஞ்சிருக்குமானு தெரியலை.

கடவுள் ஒருத்தருக்கு ஏதோ கொடுக்கறார்னா, இன்னொரு விஷயத்தை எடுத்துப்பார். எல்லாருக்கும் எல்லாம் கிடைக்காது. எவ்ளோ பேர் எங்களுக்காக வேண்டறாங்க.. நல்லாருக்கணும்னு நினைக்கிறாங்க. அன்பைக் கொட்டறாங்க... இல்லாததை விட்டுட்டு என்ன இருக்குன்னு பார்க்கிறதுதான் என்னோட குணம்.

இந்த நட்சத்திர அந்தஸ்தை எல்லாம் மறந்துவிட்டு ஒரு நாளாவது சராசரியா வாழணும்ங்கிற ஆசை இருக்கா? நடந்திருக்கா?

''ஹாலிடேஸ் போகும்போது நடந்திருக்கு. பசங்களோட வெளிநாட்டுக்கு டிராவல் பண்ணும்போது மார்க்கெட்டுக்கு போவோம். இங்க போனா அடுத்தவங்களோட அட்டென்ஷன் இல்லாம ஷாப்பிங் பண்ண முடியாது. அது பசங்களை எப்படி பாதிக்கும்னு தெரியலை. வெளியில போகும்போது எல்லாரும் நம்மளைப் பார்க்கறாங்க... ஃபோட்டோ எடுக்கறாங்க... பேசறாங்கங்கிறதை இந்த வயசுல அவங்க எப்படி எடுத்துப்பாங்கனு தெரியலை. அதனால நான் அதைப் பண்றதில்லை. வெளிநாட்டுக்குப்போகும்போது அந்தப் பிரச்னை இல்லை. இங்க மிஸ் பண்றதை நான் அங்க நிறைவேத்திக்கிறேன். ஒரு பார்க் கூட்டிட்டுப் போறது, வாக்கிங்கோ, சைக்கிளிங்கோ போறதை அங்க பண்ண முடியுது. அப்பா கூடவும் தனுஷ் கூடவும் ஒரு வாக் போகணும், பஸ் பிடிச்சு எங்கேயாவது போகணும். அதை எல்லாம் இங்க மிஸ் பண்றோம். என் குடும்பத்தோடு பப்ளிக்ல இருக்கறதையும் மிஸ் பண்றேன்.''

-ஆர்.வைதேகி

படங்கள்: பா.காளிமுத்து