Published:Updated:

ஆஹான் முதல் குருநாதாஆஆ வரை - வைரல் வார்த்தைகள்!

Vikatan Correspondent
ஆஹான் முதல் குருநாதாஆஆ வரை - வைரல் வார்த்தைகள்!
ஆஹான் முதல் குருநாதாஆஆ வரை - வைரல் வார்த்தைகள்!

அந்த டயலாக்கை உண்மையில் சொன்னவர்கள்கூட அத்தனை முறை சொல்லியிருக்க மாட்டார்கள். அப்படி நாம் பேச்சுவழக்கில் அடிக்கடி யூஸ் பண்ணும் சில டயலாக்ஸ் ஜிஃப் இதோ!

ஆஹான் :

இந்த வார்த்தையானது 'தவம்'  படத்தில் இடம்பெற்றது. அருண்விஜய், அர்பிதா நடிப்பில் வெளிவந்த திரைப்படம். இதில் வடிவெலு காமெடியெல்லாம் அல்டிமேட் ரகம். மிகவும் ஃபேமஸான டயலாக் 'ஆஹான்'. இதைச் சொன்னாலும் சொன்னார் எதைச் சொன்னாலும் இந்த கவுன்ட்டர் இல்லாமல் காமெடியானது முழுமையடையாது. ஆச்சரியமான விஷயமாக இருக்கட்டும், சீரியஸான விஷயமாக இருக்கட்டும், உங்கள் நண்பரிடம் சொன்னால் அடுத்த கவுன்ட்டரே ஆஹான் ஆகத்தான் இருக்கும். ஆஹான்!

தூக்கி அடிச்சுருவேன் பார்த்துக்க :

இதைச் சொன்னவர் நம்ம கேப்டன் விஜயகாந்த். ஒரு ப்ரஸ் மீட்டில் நிருபர் கேட்ட கேள்வியைத் தாங்க முடியாமல் கோபப்பட்டு ஒரு டி.வி சேனலைப் பார்த்து 'கம்முனு இருக்க மாட்டியா... தூக்கி அடிச்சுருவேன் பார்த்துக்க' என்றார். அவர் என்னவோ கோபமாகத்தான் சொன்னார். ஆனால் நம்ம பசங்களைப் பற்றிதான் தெரியுமே, அதையே ஃபேஸ்புக்கில் ஒரு பேஜுக்கு பேரா வெச்சுட்டாங்க. நம்ம வழக்கமா ஃப்ரெண்ட்ஸோட பேசும்போது அவனுக்குப் பிடிக்காதது எதையாவது சொல்லிட்டா போதும். அடுத்த கவுன்ட்டரே 'தூக்கி அடிச்சுருவேன் பார்த்துக்க' தான். ஆங்!

அம்மா வரட்டும்னு காத்திருக்கிறோம் :

இதை நம்ம நாஞ்சில் சம்பத் கூறினார். அதுவே அவருக்கும் வினையாக அமைந்துவிட்டது. சரி மேட்டருக்கு வருவோம் .வெளியில் நண்பர்களிடம்தான் இப்படியென்று பார்த்தால் வீட்டிலோ அதற்கு மேல் காமெடியெல்லாம் நடக்கும். 'ஏன்டா லேட் ஆச்சு இன்னும் சாப்பிடாமல் இருக்க. போய் சாப்பிடுடா'னு அப்பா சொன்னால் கொஞ்சம்கூட யோசிக்காமல் இந்த டயலாக்தான் வரும். அப்பாவோ 'தூக்கி அடிச்சுருவேன் போய் சாப்பிடு டா'னு அவரும் கவுன்ட்டர் கொடுப்பார்.

போலீஸைக் கூப்பிடுவேன் :

ஒரு டி.வி நிகழ்ச்சியில் இடம் பெற்றது இந்த டயலாக். இதற்கு அர்த்தம் 'அமைதியா இருங்க எல்லாரும் அமைதியா இருங்க போலீஸைக் கூப்பிடுவேன்' என்பதுதான். இந்த கவுன்ட்டர் எல்லாவற்றுக்கும் சூட் ஆகும். நம் நண்பனே ஏதாவது காமெடி பண்றேன்னு சொல்லி மொக்கையா பேசி சிரிச்சிட்டு இருப்பான். அப்போ சொன்னா இது 'தம்பி பேசாமல் போயிடு. இல்லைனா போலீஸைக் கூப்பிடுவேன்'. ஆக்ரோசமா சொன்ன டயலாக் இப்படி அல்டிமேட் கவுன்ட்டரா ஆகிப்போச்சே.

ப்ப்ப்ப்ப்பாஆஆஆ :

'நடுவுல கொஞ்சம் பக்கத்த காணோம்' படத்தில் விஜய் சேதுபதி கூறும் டயலாக். கொடூரமாக யாராவது மேக் அப் போட்டுவந்து நம் கண்ணில் சிக்கினால் போதும். வாயை அஷ்ட கோணலாய் வைத்துக்கொண்டு சொல்லும் வசனம். இது மீம் கிரியேட்டர்ஸின் ஃபேவரட் டெம்ப்லேட்டும்கூட. கொடுர மேக் அப்பில் பையனைப் பார்த்தாலும் பெண்ணைப் பார்த்தாலும் நினைவிற்கு வரும் டயலாக் இதுதான். 'ப்ப்ப்ப்பாஆஆஆஆஆஆஆஆஆஆ'

சிலிர்த்துப்போய் சில்லறையெல்லாம் விட்டு எறிந்தேன் :

'பயணம்' படத்தில் வரும் வசனம். ஒருவனை ஆஹா ஓஹோன்னு நினைச்சா அப்புறம்தான் தெரியும் அவன் ஒரு டுபாக்கூருனு. அப்போதுதான் இந்த டைலாக் டெலிவரியாகி ஃபேமஸானது. இது ஃபேஸ்புக்கிலும்கூட ஃபேமஸ் தான். நண்பன் யாராவது ப்ரொஃபைல் பிக்சரை மாற்றினால் கீழே இந்த கமென்ட்டைப் பார்க்கலாம். உன் டி.பி பார்த்து 'சிலிர்த்துப் போய் சில்லறையெல்லாம் எறிந்தேன்'.

சைத்தான் சைக்கிள்ல வருது :

'எல்லாம் அவன் செயல்' படத்தில் வடிவேலு மேடையில் பேசிக்கொண்டு இருக்கும்போது எதிர்க்கட்சியைத் தாக்கிப் பேசுவார். அப்போது முதுகில் அருவாள் ஒன்றை செருகிக்கொண்டு சைக்கிளில் வடிவேலுவை நோக்கி ஒருவர் மேடைக்கு வருவார். அப்போது சொல்லும் டயலாக்தான் இது. இப்போது ட்ரெண்டில் இருவருக்கும் இடையில் ஏதேனும் பிரச்னை வரும் டைமில் ஏதேனும் லூஸ் டாக் விட்டால் வரும் டயலாக் இதுவாகத்தான் இருக்க வேண்டும். 'ரைட்டு சைத்தான் சைக்கிள்ல வருது'. 

யாருய்யா அவரு எனக்கே அவரைப் பார்க்கணும் போல் இருக்கு :

'ரமணா' படத்தில் வரும் சிங் போலீஸ் ரொம்ப சீரியஸாக இதுவரைப் பார்க்காத மனிதனைப் பார்க்க வேண்டும் என்று ஆசைப்பட்டுச் சொல்லும் டயலாக் இது 'யாருய்யா அவரு... எனக்கே அவரைப் பார்க்கணும் போல் இருக்கு'. இப்போது உள்ள காலகட்டத்தில் சீரியஸாகச் சொல்லும் டயலாக்தான் காமெடியாகி விடுகிறது. பொதுவாக நம் நண்பனின் நண்பனைப் பற்றி நம் நண்பன் நம்மிடம் வந்து கூறுவது வழக்கம். அதுவும் மிகவும் பெருமையாகக் கூறுவான். அப்போது வரும் இந்த டயலாக் 'யாருய்யா அவரு எனக்கே அவரைப் பார்க்கணும் போல் இருக்கு'.

குருநாதாஆஆஆ :

'நேசம் புதிது' படத்தில் வரும். வடிவேலு அங்குள்ள லோக்கல் ரௌடியிடம் அடி வாங்குவார். அப்போது பொறுக்க முடியாமல் 'குருநாதாஆஆஆஆ... இதற்குமேல் தாங்க முடியாது குருநாதா' என்று சொல்லிவிட்டு ஏரியா டான் ஒருவரைக் கூட்டிக்கொண்டு அவர் பல்பு வாங்கும் காமெடி சீன். இந்த டயலாக்கானது தற்போது பயங்கர ட்ரெண்டிங். யாராவது ஒவ்வொரு கேங்கிலும் ஒருவன் பல்பு வாங்குவது வழக்கம். அப்போது சொல்லும் டயலாக்தான் இது 'குருநாதா... என்ன பாதி மூஞ்சியைக் காணோம்... என்ன உங்களுக்குப் புது இடமா இருக்கு'.

மண்டை பத்திரம் :

'முருகா' படத்தில் வரும் வடிவேலு காமெடிதான் இது. ரோட்டில் போய்க்கொண்டு இருப்பவரிடம் வம்பு இழுக்கும் காமெடி சீன். அபோது வரும் டயலாக் 'என்ன சண்டைக்கு வர்றியா? அப்படினு ரோட்டில் போய்க்கொண்டு இருப்பவர் கேட்க அதற்கு வடிவேலு 'தெரியுதுல மண்டை பத்திரம்'னு சொல்லும் டயலாக்கும் ஃபேமஸ். அதே காமெடியில் 'லேடன்கிட்ட பேசுறியா'னு கேட்கும் டயலாக்கும் ஃபேமஸ். இதை நாம் பேச்சுவழக்கில் பலமுறை பயன்படுத்தியிருப்போம்.  

-தார்மிக் லீ