Published:Updated:

விஜய் சேதுபதிக்கு என்னாச்சி? நாலு வருஷம் ஆச்சி! #4yearsofNKPK

விஜய் சேதுபதிக்கு என்னாச்சி? நாலு வருஷம் ஆச்சி! #4yearsofNKPK
விஜய் சேதுபதிக்கு என்னாச்சி? நாலு வருஷம் ஆச்சி! #4yearsofNKPK

"என்னாச்சு?, கிரிக்கெட் விளையாண்டோம்... நீதான அடிச்ச... ஆ... பால் மேல போச்சி... பிடிக்கலாம்னு பின்னாடியே போனேன்... விட்டனா?", "சிவாஜி செத்துட்டாரா?", "நாகராஜ் அண்ணே" இந்த வசனங்களை அத்தனை சுலபமாக யாரும் மறந்திருக்க முடியாது. 'நடுவுல கொஞ்சம் பக்கத்த காணோம்' படம் வெளியாகி இன்றோடு நான்கு வருடங்கள் ஆகிறது. படத்தின் ஐடியா, படம் உருவான விதம் பற்றி பாலாஜி தரணிதரனிடம் பேசியதிலிருந்து.... 

உங்க நண்பரின் வாழ்க்கை சம்பவத்தை படமாக்கலாம்ங்கற ஐடியாவ யார் சொன்னது?, இது ஒர்க் அவுட் ஆகும்னு எப்படி தோணுச்சு?

யார்கிட்டயும் உதவி இயக்குநரா இல்லாம, சில குறும்படம், ஆவணப்படம் மட்டும் செய்த அனுபவத்தோட, படம் பண்ணணும்னு தீவிரமா வாய்ப்பு தேடிட்டிருந்த சமயம். சின்ன பட்ஜெட்ல பண்றதா இருந்தா, ஒரு தயாரிப்பாளர் வாய்ப்பு கொடுக்கறதா நண்பர் மூலமா தெரிஞ்சது. அவ்வளவு சிம்பிள்ங்கறதால, அதிக ஆட்கள் இருக்கும் படியா பண்ண முடியாது. என்ன யோசிச்சும் ஒரே வீடு, ஒருத்தன் மட்டும் இருக்கான்னு ரொம்ப சாதாரணமா, சுவாரஸ்யமே இல்லாதது லைன் தான் தோணிட்டே இருந்தது.

அன்னைக்கு நைட்டு 'எ ப்யூர் ஃபார்மாலிட்டி' ஜ்யூசபே டோர்னடோர் இயக்கின ஒரு படம் பார்த்தேன். ஒருநாள் நைட்டு போலிஸ் ஸ்டேஷன்ல நடக்கும் கதை, அதில் மெயின் கேரக்டரே ரெண்டு பேர் தான். ஆனா, அவ்வளவு சுவாரஸ்யமா இருந்தது. சரி ரொம்ப கம்மியான நேரத்தில் சுவாரஸ்யமான எதாவது சம்பவத்தை வெச்சு படம் பண்ணலாம்னு ஒரு ஸ்பார்க் அடிச்சது. நானும் சம்மர் லீவ்ல என் தம்பி தொலைஞ்சு போய் தேடின வரை என் வாழ்க்கைல நிறைய யோசிச்சுப் பார்த்தேன். மறுநாள், பிரேம் வீட்டுக்கு ஒரு வேலையா போகும் போது தான், அட இத மறந்திட்டோமேனு அந்த சம்பவத்தை பற்றி யோசிக்க ஆரம்பிச்சேன். அவன் வீட்டுக்கு போறதுக்குள்ள கதைக்கு ஒரு ஸ்டரக்சர் கிடைச்சிருந்தது. அங்க போய் கதைல வர்ற எல்லார் பேரையும் மாத்தி அவன் கிட்ட சொன்னேன். டேய் என் கதையே என்கிட்டயே சொல்றியானு சிரிச்சான். ஏன் பேர மாத்திருக்க, அதே பேர வெச்சா இன்னும் கொஞ்சம் லைவ்வா இருக்கும்னு அவனே ஐடியாவும் கொடுத்தான்.  சில மாற்றங்கள் எல்லாம் செய்ததுக்குப் பிறகு கதை கேட்ட எல்லோரும் சூப்பர்னு சொன்னாங்க. அதனால ஒர்க் அவுட் ஆகும்ங்கற தைரியம் தானவே வந்தது. அப்பறம் விஜய்சேதுபதி அந்தப் கேரக்ட்டரோட சேர்த்து படத்துக்கும் பெரிய அளவில் பலம் சேர்த்திட்டார்.

அதில் எடிட் பண்ண சம்பவம் எதாவது சொல்லுங்க?

அவனுக்கு கல்யாணத்துக்கு ஒரு வாரம் முன்னாடி நடந்ததை, ரிசப்ஷனுக்கு ஒரு நாள் முன்னாடினு மாத்தினோம். நிஜத்தில் ரிசப்ஷன் அன்னைக்கு காலை 10.30, 11 மணிக்கு அவனுக்கு எல்லாம் ஞாபகம் வந்திடுச்சு. ஆனா, படத்தில் அப்படி அவனுக்கு ஞாபகம் வரலைனா ரிசப்ஷன் எப்பிடி நடந்திருக்கும்? கல்யாணம் எப்படி நடந்திருக்கும்ங்கற மாதிரி வெச்சிருப்போம். ஸ்க்ரிப்ட் முழுசா முடிச்சதும், கல்யாணத்துக்கு முன்னால இப்படி ஒண்ணு நடந்ததுன்னு ப்ரேமுடைய மனைவிகிட்ட சொன்னேன். என்னண்ணே சொல்றீங்க, எல்லாரும் இவ்வளோ ஃப்ராடா இருக்கீங்களேனு சின்னதா கோபப்பட்டாங்க. எல்லோரும் படத்தை சிரிச்சு ரசிக்கும் போது, ப்ரேமுடைய அப்பா, அம்மா படம் பார்த்திட்டு என் பையனுக்கு இப்படி ஒண்ணு நடந்திருக்கு, ஆனா, நமக்கு அது தெரியவே இல்லையேனு கண்கலங்கிட்டாங்க. அந்த சமயத்தில் அதை சொல்லியிருக்கவும் முடியாதுல. ஆனா, இப்போ வரை ப்ரேமுக்கு அந்த ஒருநாள் என்ன நடந்ததுனே தெரியாது.

அந்த "ப்ப்ப்ப்பா... யார்ற இது பேய் மாதிரி", "நாகராஜ் அண்ணே" கூட நிஜத்தில் நடந்ததா?

அந்த சீன் நிஜத்தில் நடக்கல... (இந்த காட்சிகளின் ஸ்க்ரிப்டைக் காண க்ளிக்கவும்) இல்ல. ஆனா, சாதரணமாவே நல்லாயிருக்கும் பொண்ண கல்யாணத்துக்கு மேக்கப் போடறேன்னு சொல்லி வழக்கமா மேக்கப்ப பூசிவிடும் சம்பவம் தனாவுக்கும் நடந்தது. நாகராஜ் அண்ணே சீன் வெச்சது ப்ரேமோட கேரக்டர்னால. ஏன்னா, அவன் இயல்பாவே சிலர்கிட்ட கோபப்படுவான். சரி ஒரு வேளை இவன் சண்டை போட்ட யாரையாவது இப்போ சந்திச்சா என்ன பண்ணுவான்னு யோசிச்சு வெச்சது தான். 

படத்தை இப்போ சமீபத்தில் எப்பவாவது பார்த்தீங்களா?

போன தமிழ்புத்தாண்டுக்குனு நினைக்கறேன், என் குழந்தையோட பார்த்தேன். டிவில போட்டப்போ பார்த்தேன். படம் முடிச்சப்பறம் தான் எனக்கு கல்யாணம் ஆச்சு, ரிலீஸ்க்கு பிறகு தான் குழந்தை பிறந்தது. குழந்தைக்கு இப்போ மூணு வயசு, படத்துக்கு நாலுவயசு.

படம் பார்க்கும் போதோ, இப்போ நினைக்கும் போதோ ஜாலியா இருக்கும். ஆனா, அந்த நேரத்தில் அவரை கையாள்றது எவ்வளோ சிரமமா இருந்தது?

எங்கள விட சரஸ் தான் ப்ரேமுக்கு நெருக்கமான ஆள். குடும்பத்துக்கு பதில் சொல்லணும், தனாவுக்கு பதில் சொல்லணும்னு சரஸ் ரொம்ப பயந்துட்டான். பக்ஸ் எப்பவும் போல யோசிக்க ஆரம்பிச்சிட்டான் இது எதனால ஆயிருக்கும்னு. எனக்கு, இது பெரிய விஷயமா தோணல. "என்னடா இவனுங்க, கொஞ்ச நேரத்தில் சரியாகிடும் இதைப் பேசிட்டிருக்கானுங்க, பசிக்க வேற ஆரம்பிச்சிருச்சு, டின்னர் பத்தி பேசமாட்றானுங்களே" நினைச்சேன். எனக்கு எப்போ பயம் வந்ததுன்னா, மதன்னு ஒரு கேரக்டர் கிட்ட பக்ஸ் போன்ல பேசுவாரே.. அப்போதான். அதுக்குப் பின்னால நான் சீரியஸாகி ஹாஸ்பிட்டல்ல நைட்டு அவன் கூடவே இருந்து  பாத்துக்கிட்டேன்.

ஆனா எனக்கு பயம், எங்க காலை எழுந்து மறுபடியும் "என்னாச்சு?"னு கேட்ருவானோனு. அங்க இன்டர்வெல் ட்விஸ்ட்டுக்காக, எல்லாரும் வந்த பின்னால இன்னும் சரியாகலைங்கறதை அப்பறமா தான் சொல்லியிருப்போம். ஆனா, ரியல் லைஃப்ல, அவங்க வர்றதுக்கு முன்னாலயே, அங்க வேலை செய்யற அம்மா, ஏம்பா அவரு நைட்டு பூரா எத்தனை முறை தான் எழுந்து தண்ணி குடிப்பார்.. எத்தனை முறை தான் டாய்லெட் போவார்னு சொன்னதுமே புரிஞ்சிடுச்சு. நான் ஏதோ அவன ஜாக்கிரதையா பார்த்துகிட்டேன்னு நினைச்சிட்டிருந்தா, அவன் நைட்டு பூரா தூங்காம, மறந்திட்டு மறந்துட்டு தண்ணி குடிச்சிட்டு டாய்லெட் போயிருக்கான்னு.

அடுத்தா இயக்கியிருக்கும் 'ஒரு பக்க கதை' என்ன மாதிரியான படம்? எப்போ ரிலீஸ்?

நார்மலான ஒரு பொண்ணு பையன் காலேஜ் படிக்கறாங்க. அவங்களுக்குள்ள எதிர்பாராம சில விஷயங்கள்லாம் நடக்கும். அதுக்கு பிறகு அவங்க வாழ்க்கை எங்கெல்லாம் போகுதுங்கறது தான் படம். காளிதாஸ் ஜெயராம், மேகா ஆகாஷ் ரெண்டு பேருக்கும் இந்தப் படம் ஒரு நல்ல ரீச்சைக் கொடுக்கும். வித்தியாசமான ஒரு படமா எடுத்திருக்கேன்னு நான் நம்பறேன். சீக்கிரமே ரிலீஸ் ஆகும்!

- பா.ஜான்ஸன்