Published:Updated:

'சூப்பர் சிங்கர்' பாவனாவுக்கு என்னாச்சு?

Vikatan Correspondent
'சூப்பர் சிங்கர்' பாவனாவுக்கு என்னாச்சு?
'சூப்பர் சிங்கர்' பாவனாவுக்கு என்னாச்சு?

வந்துடுவேன்னு சொல்லுங்க... திரும்ப வந்துடுவேன்னு சொல்லுங்க...பாவனா பன்ச்!

விஜய் டி.வியின் ரகளையான தொகுப்பாளினிகளில் பாவனா முக்கியமானவர். பாவனா இருந்தால்தான் சூப்பர் சிங்கர் அரங்கமே களைகட்டும்! 

சூப்பர் சிங்கர் ஜூனியர் அடுத்த சீசனும் ஆரம்பித்துவிட்டது. ஆனால் பாவனா மிஸ்ஸிங்!

'அவங்க ஃபாரின்ல செட்டிலாயிட்டாங்க...

'கர்ப்பமா இருக்காங்க...' என்கிற ரேஞ்சில் பாவனாவைப் பற்றி பல வதந்திகள்.

காணாமல் போனவர்கள் பட்டியலில் கல்யாணம் முதல் காதல் வரை ப்ரியாவைத் தொடர்ந்து பாவனாவும் இணைந்துவிட்டார். அவரைக் கண்டுபிடித்துப் பேசினோம்.

''இப்படியெல்லாம் தப்புத் தப்பா கிளப்பி விட்டா பாவனா பாவம்... 

அதே நேரம் என்னைக் காணோம்னு தேடிப் பிடிச்சுப் பேசறதைப் பார்த்து பாவனா ஹேப்பி...'' 

உற்சாகக் குரலில் ஒரு டெசிபல் கூடக் குறையாமல் பேசுகிறார் பாவனா.

''நான் டி.வியில முகம் காட்டறதை நிறுத்தி வெறும் மூன்றரை மாசம்தான் ஆச்சு. ஆனா அதுக்குள்ள மூன்றரை வருஷம் ஆன மாதிரி மக்கள் கவலையோட என்னைப் பத்தி விசாரிக்கிறாங்க. இந்த மூன்றரை மாசத்துல எத்தனை ஃபோன்........ எத்தனை விசாரிப்புகள்....
நான் ஆசிர்வதிக்கப்பட்டிருக்கேன்னுதான் சொல்லணும். அன்பினால நெகிழ வச்சிட்டாங்க...'' தானும் நெகிழ்கிற பாவனா, இப்போது மும்பையில் இருக்கிறார்.

''என் ஹஸ்பென்ட் நிகில் மும்பையில இருக்கார். நான்தான் விஜய் டி.வி ஷோவுக்காக மும்பையிலேருந்து சென்னை வந்துட்டுப் போயிட்டிருந்தேன். 'சூப்பர் சிங்கர் ஷோ' முடிஞ்சதும் நானும் மும்பை போனேன். மும்பையிலயும் நிறைய கார்ப்பரேட் ஷோஸ் பண்ணிட்டிருக்கேன். எனக்கு தமிழ், இங்கிலீஷ், ஹிந்தி, கொஞ்சம் தெலுங்கு, மலையாளம் தெரியும். அதனால மத்த மொழி நிகழ்ச்சிகளையும் ஹோஸ்ட் பண்றேன். சமீபத்துல டெல்லியில நடந்த ஷங்கர் மகாதேவன் ஷோவுக்கு நான் தான் ஆங்க்கர். போன வாரம் சிங்கப்பூர் இந்தியன் சேம்பர் ஆஃப் காமர்ஸ் நடத்தின ஒரு நிகழ்ச்சியையும் பண்ணினேன். எக்கச்சக்க நிகழ்ச்சிகள்....அநியாயத்துக்கு பிசி...'' என்கிறவர் சென்னைக்கும் அடிக்கடி விசிட் அடித்துக் கொண்டு தான் இருக்கிறாராம்.

''சென்னையிலயும் நிறைய ஷோஸ் பண்றதுக்காக வரேன். டி.வியில வராததால நான் ஒரேயடியா காணாமப் போயிட்டதா நினைக்க வேணாம். 'சூப்பர் சிங்கர் ஜூனியர்' ஆரம்பிச்சிருச்சு. அது நம்ம ஷோவாச்சே... எப்படி மிஸ் பண்ணுவேன்... சீக்கிரமே நானும் அதுல ஜாயின் பண்ணிடுவேன்...'' நம்பிக்கை தருகிறார்.

பாவனா பிரெக்னென்ட்டா?

''இல்லை. பிரெக்னென்ட் ஆனா வேலையிலேருந்து காணாமப் போயிடணுமா என்ன? என்னோட எத்தனையோ ஃப்ரெண்ட்ஸ் டெலிவரிக்கு முதல் நாள் வரைக்கும் வேலை பார்த்திருக்காங்க. கர்ப்பம் என்ற ஒரு விஷயம் ஒரு பெண்ணோட வேலைகளுக்கோ, ஆர்வங்களுக்கோ தடையா இருக்கக்கூடாதுனு நினைக்கிறவள் நான். ரசிகர்கள் எல்லாரும் என்னை அவங்க வீட்டுப் பெண்ணா பார்க்கறாங்க. அன்பு செலுத்தறாங்க. அப்படியிருக்கும்போது நான் பிரெக்னென்ட் ஆனா அவங்க வீட்டுப் பெண் கர்ப்பமானதா நினைச்சு சந்தோஷப்படுவாங்கதானே... கர்ப்பமானா கண்டிப்பா எல்லாருக்கும் சொல்வேன். அதைக் காரணம் காட்டி வேலையிலேருந்து பிரேக் எடுக்கவும் மாட்டேன்...'' நீண்ட நெடும் பதில் தருகிற பாவனாவுக்கு டிசம்பர் 5ம் தேதி 6வது திருமணநாள்!

''கல்யாணமான அஞ்சு வருஷங்கள்ல மூணு வருஷங்களும் கல்யாண நாள்  சூப்பர் சிங்கர் ஷூட்லதான் போயிருக்கு. அதிசயமா இந்த வருஷம் நானும் என் ஹஸ்பெண்ட் நிகிலும் ஒரே இடத்துல இருக்கப் போறோம். நிகில் ரொம்ப ஸ்வீட்டான ஒரு பர்சன். என்னோட பெரிய பலமே அவர்தான். என்னோட நிகழ்ச்சிகள் எதையும் அவர் பார்த்ததில்லை. கலாய்க்கிறதோ, கமெண்ட் அடிக்கிறதோ செய்ய மாட்டார். நான் ஷூட்டிங்ல இருக்கிறபோது 'ஆர் யு சேஃப்? ஆர் யு ஹேப்பி?'னு மட்டும்தான் கேட்பார்.

என்னை மாதிரி ஒரு இம்சை அரசியை வச்சு 5 வருஷங்களைத் தாண்டியும் குப்பை கொட்டிக்கிட்டிருக்கிற அவருக்கு இந்த வருஷம் வெட்டிங் ஆனிவர்சரிக்கு ஏதாவது சர்ப்ரைஸ் கொடுக்கலாமானு யோசிச்சேன். நான் அவர்கூட இருக்கப் போறதே அவருக்குப் பெரிய சர்ப்ரைஸ்தான்.. விஜய் டி.வி ஷூட்டிங் இருந்தபோது மும்பையிலேருந்து சென்னை வந்துட்டு திரும்பப் போயிடுவேன். ஆனா இந்த மூணு மாசத்துல இந்தியா மட்டுமில்லாம, சிங்கப்பூர், மலேஷியா, கனடா, ஆஸ்திரேலியானு உலகத்துல பாதி நாடுகளை சுத்தியாச்சு. 'நீ ஷூட்டிங்கே போயிடும்மா.... அப்பவாவது வெறும் சென்னைக்கு மட்டும் போயிட்டு வந்திட்டிருந்தே... இப்போ ஷோஸ் பண்றேங்கிற பேர்ல சூப்பர் பிசியாயிட்டே...'னு சொல்ற அளவுக்கு ஓடிக்கிட்டே இருக்கேன். ஸோ... பாவனா எங்கேனு கேட்கறவங்களுக்கு என்னோட பதில் இதுதான்.... 'வந்துடுவேன்னு சொல்லுங்க... திரும்ப வந்துடுவேன்னு சொல்லுங்க...'

ஆர்.வைதேகி