Published:Updated:

இவங்க பார்க்க முடியாததை நாம பார்த்திருக்கோம்!

காதலில் தொடங்கி சைக்கோ வரைக்கும் நிறையக்கதைகள் தமிழ் சினிமா தந்திருக்கிறது.  இதில் ஹீரோ, ஹீரோயின்ஸ் கண்பார்வையற்றவர்களாக நடித்து ஹிட்டடித்து வெகு சில படங்களே. தமிழ் சினிமாவில் பார்வையற்ற கேரக்டரில் நடித்த ஹீரோக்களின் லிஸ்ட் இது...

கமல்ஹாசன் / ராஜபார்வை  : 

100வது படமென்றாலே அதீத கவனம் ஹீரோக்களுக்கு இருக்கும். நடிப்பு மட்டுமின்றி கமலின் முதல் தயாரிப்பாக, ரிஸ்க் எடுத்து சக்ஸஸ் செய்த படம் தான் ராஜபார்வை. இன்றைய தலைமுறையினர் பார்த்திருக்க முடியாத, ஆனால் நிச்சயம் பார்த்திடவேண்டிய படம். டைஃபாய்டு நோயினால் கண்பார்வை இழந்து, பணக்கார வாழ்க்கையையும் துறந்தவர் ரகு(கமல்). பின்னணி இசைக்குழுவில் வயலின் வாசிக்கும் ரகுவிற்கும், கிருஸ்தவ பெண், நான்சிக்கும் (மாதவி) இடையேயான அழகிய காதல் தான் படம். கமல் படமுழுவதும்  கண் இமைக்காமல் நடித்திருப்பது இப்படத்தின் ஸ்பெஷல். 

விக்ரம் / காசி : 

சிறந்த நடிகனாக தன்னை நிரூபிக்க, விக்ரமிற்கு கிடைத்த மிகப்பெரிய வாய்ப்பு காசி. வினயன் இயக்கத்தில் இளையராஜா இசையுடன் விக்ரமின் நடிப்பு கைகோத்து மிகப்பெரிய வெற்றியாக அமைந்தது. கண்பார்வையற்றவராக நடிப்பது சாதாரண விஷயமில்லை. ஹீரோக்கள் பொதுவாக இந்தமாதிரியான கேரக்டரில் நடிக்க யோசிப்பதுண்டு. ஆனால் அசால்ட்டாக நடித்து விருதுகளையும் பாராட்டையும் பெற்றார் விக்ரம். பார்வையற்ற நாயகனை மையமாக வைத்து எத்தனை படங்கள் வந்தாலும்  இன்றும் ரசிகர்கள் கண்ணுக்குத் தெரியும் ஹீரோ விக்ரம் தான்.

ரேவதி / அவதாரம்: 

“எனக்கு கண்ணு தெரியாதுங்குறதுனால, யார்யார்லாமோ என்ன கஷ்டப்படுத்திட்டு இருக்காங்க, நீ என்னென்னா எனக்காக உன்ன கஷ்டப்படுத்திக்கிறேன்னு சொல்லுற! ஏன் நீ என் கண்ணா இருந்து இந்த உலகத்தை பார்க்கக்கூடாது?” இந்த வசனங்களை மறந்தாலும், இதன்பிறகான இளையராஜாவின் “தென்றல் வந்து தீண்டும்போது...” பாடல் நிச்சயம் நம் நினைவலைகளை தீண்டாமல் இருக்காது. ரேவதியின் நடிப்புக்கு கிடைத்த மகுடமாக நாசர் இயக்கி நடித்த படம் “அவதாரம்”.  கண்பார்வையற்ற ரேவதி கற்பழித்து கொலை செய்யப்பட, கூத்துக்கலைஞன் நாசர் எடுக்கும் அவதாரம் தான் கதை. 

பார்த்திபன் / நீ வருவாய் என : 

“தென்றலாக நீ வருவாயா ஜன்னலாகிறேன்! தீர்த்தமாக நீ வருவாயா மேகமாகிறேன்! வண்ணமாக நீ வருவாயா பூக்களாகிறேன்! வார்த்தையாக நீ வருவாயா கவிதை ஆகிறேன்... நீ வருவாய் என....” 90களில் இந்தப் பாடலை ரசிக்காமல், காதலிக்காமல் யாரும் கடந்துவந்திருக்க முடியாது. எதிர் வீட்டிற்கு குடிவரும் பார்த்திபனை கண்ணாக கவனிப்பார் தேவயானி. ’இது லவ் தானே ஜெஸ்ஸி’ என காதலைச் சொல்ல... நான் உங்களை காதலிக்கவில்லை, உங்க கண்ணைத்தான் காதலித்தேன் என்று ட்விஸ்ட் அடிப்பார் தேவயானி. படமும் ஜாக்பாட் ஹிட்..  பார்த்திபனுக்கு கண் தரும் அஜித், சில காட்சிகள் என்றாலும் நச்சென நடித்திருப்பார். 

சிம்ரன் / துள்ளாத மனமும் துள்ளும்: 

பெரிய ஹீரோக்களின் படங்களில் நாயகிகளுக்கு முக்கியத்துவம் குறைவாகத்தான் இருக்கும். ஆனால் விஜய் படத்தில் சிம்ரன் பாராட்டுகளைக் குவித்தார் என்றால், அது துள்ளாத மனமும் துள்ளும் படத்தில் தான். குட்டியால் கண்பார்வையை இழந்து தவிக்கும் ருக்மணிக்கு, அதே குட்டியால் கண்பார்வையும் கிடைத்து கலெக்டராகவே மாறிவிடுவார். யார் அந்த குட்டி என்பது தெரியாமல் தவிக்கும் ருக்மணி (சிம்ரன்), குட்டி(விஜய்)யின் காதல் தான் கதை. எழில் இயக்கத்தில், எஸ்.ஏ.ராஜ்குமார் இசையில் படமும், பாடல்களும் செம ஹிட்.  

பிரபுதேவா / 123:

ஹீரோக்கள் கண்பார்வையற்றவராக நடிக்கும் பெரும்பாலான படங்கள் கண்ணீரும், சோகமும் என அழுகாச்சி காவியமாகத்தான் இருக்கும். அதைத்தாண்டி ஜாலியாக ஒரு படம் 123. பிரபுதேவா, ராஜூ, ஜோதிகா நடிப்பில் தேவா இசையமைக்க, சுபாஷ் இயக்கத்தில் வெளியானது. பிரபு, நாகேந்திரா, ராஜூ சுந்தரம் மூவருக்கும் மூன்று குறைபாடுகள் இருக்கும். இவர்களின் வெற்றிக்கு காரணமாகும் ஜோதிகா இறுதியில் யாரை காதலித்தார் என்பது தான் படம்.  காமெடி சரவெடியாக, அன்றைய காலத்தில் புதுரகமாக ரிலீஸானது.  

பசுபதி / ராமன் தேடிய சீதை : 

கண்பார்வையற்றவர்களும் வாழ்க்கையில் சாதிக்கமுடியும் என்ற தன்னம்பிக்கை பாடமாக உருவானது ராமன் தேடிய சீதை. நெடுமாறனாக வரும் பசுபதியின் நடிப்பில் அத்தனை நேர்த்தி. தயக்கமோ, பயமோ இல்லாமல் பார்ப்பவர்களுக்கு புது எனர்ஜியை கொடுக்கும்.  என் கண்ணுல தான் வெளிச்சம் இல்லை, என் மனசுல நிறைய வெளிச்சம் இருக்கு என டயலாக்குகள் மிரட்டியிருக்கும். இப்பவே இப்பவே பார்க்கணும் இப்பவே... பாடலை மறக்க முடியுமா?

விக்ரம் / தாண்டவம் :

காசி படத்தைத் தொடர்ந்து விக்ரமின் அடுத்த முயற்சி தாண்டவம். விஜய் இயக்கத்தில் விக்ரமுக்கு ஜோடி அனுஷ்கா. முதல் பாதியில் காதலில் கொஞ்ச, இரண்டாம் பாதியில் பார்வையற்றவராக சண்டையில் மிரட்டுவார் விக்ரம்.  கண் தெரியாவிட்டாலும் சண்டை போடும் டெக்னிக்குகளை திரையில் கொண்டுவந்திருந்தாலும், விக்ரமின் ஹிட் லிஸ்டில் இடம்பெறவில்லை. 

பூஜா / நான் கடவுள்: 

ருத்ரன் ஆர்யாவுக்கு ஈடுகொடுக்கும்,கறுப்பு தோலும், கலைந்த முடியுமாக பூஜாவின் நடிப்பு வாவ்! பாலாவின் பட்டறையில் வார்த்தெடுத்த படம் “நான் கடவுள்”.  வித்தியாசமான கதைகளைத் தேர்ந்தெடுத்து நடிக்கும் பூஜா நடிப்பில் உச்சம் தொட்டது இந்த அம்சவள்ளி கதாபாத்திரம் தான். இவரை தமிழ் திரையுலகம் அதிகமாக பயன்படுத்தவில்லை என்பதே குறை. பாலாவின் படங்களிலேயே அதிக வலியை திரையில் கொண்டுவந்த கதாபாத்திரத்தில் ஒன்று இது. 

தினேஷ் / குக்கூ: 

கண்பார்வையற்றவர்களுக்கான வாழ்க்கை என்னவாக இருக்கும், அவர்களின் வாழ்க்கைத்தடம் எங்கிருந்து பயணிக்கிறது, அவர்களுக்கான காதல், அன்பு, கோபம் துரோகம் எங்கிருந்து தொடங்குகிறது என்பதை அழகியலுடன் திரையில் கொண்டுவந்த படம் குக்கூ. ராஜூமுருகன் இயக்கத்தில் அட்டகத்தி தினேஷ் மற்றும் மாளவிகா இருவருமே கண்பார்வையற்றவராக நடித்திருப்பார்கள். பாடல்காட்சிகள் மற்றும் திரைக்கதை என்று இரண்டுமே ரசிக்கும் விதம் அமைந்திருக்கும். 

இந்தப்படங்கள் மட்டுமின்றி, குற்றமே தண்டனை படத்தில் விதார்த் “டனல் விஷன்” கண் குறைபாடுடன் நடித்திருப்பார். இந்தியில் காஜல்அகர்வால் நடித்த Do Lafzon Ki Kahani படமும் ஹிட். அடுத்ததாக பார்வையற்றவராக ஹிருத்திக் ரோஷன் நடிப்பில் “காபில்” ரிலீஸூக்கு ரெடியாகிவருகிறது.

-முத்து பகவத்-