Published:Updated:

சிவாஜி, ஜிகர்தண்டா, கத்தி படங்கள்ல இந்த சீன்லாம் நீங்க தியேட்டர்ல பாத்திருக்க மாட்டீங்க!

சிவாஜி, ஜிகர்தண்டா, கத்தி படங்கள்ல இந்த சீன்லாம் நீங்க தியேட்டர்ல பாத்திருக்க மாட்டீங்க!
சிவாஜி, ஜிகர்தண்டா, கத்தி படங்கள்ல இந்த சீன்லாம் நீங்க தியேட்டர்ல பாத்திருக்க மாட்டீங்க!

நாம் திரையில் பார்க்கும் படம் விறுவிறுப்பாக அமைவதற்கு எடிட்டர்களின் பங்கு மிகவும் அத்தியாவசியமானது. நேரத்தைக் குறைப்பதற்காகவும், திரைக்கதையை சுவாரசியமாக்கவும் பல காட்சிகள் நீக்கப்பட்டுதான் திரைப்படம் இறுதி வடிவம் பெறுகிறது. ஹிட் அடித்த சில படங்களின் நீக்கப்பட்ட காட்சிகளின் தொகுப்பு இது.

கத்தி :

'துப்பாக்கி' ஏந்தி ஸ்லீப்பர் செல்களின் தலைவனைப் போட்டுத்தள்ளிய விஜய்யின் கையில், கார்ப்பரேட் நிறுவனங்களை எதிர்க்க 'கத்தி' பிடிக்க வைத்திருப்பார் இயக்குநர் ஏ.ஆர்.முருகதாஸ். அவ்வளவு பெரிய கம்யூனிசத்தை இட்லியை வைத்தே விஜய் தனது தங்கைக்கு விளக்கிய காட்சி பலரது கைதட்டல்களைப் பெற்றது. இந்தப் படத்தின் இந்தக் காட்சியும் படத்தில் இருந்திருந்தால் இதற்கும் கண்டிப்பாக கைதட்டல்கள் கிடைத்திருக்குமோ எனத் தோன்ற வைக்கிறது.

இறுதிச்சுற்று :

குப்பத்தில் குத்தாட்டம் போட்டபடி பலரது தாடையை உடைத்து ரத்தம் பார்த்துக்கொண்டிருந்த கதாநாயகியை, கதாநாயகன் தனது பயிற்சியால் குத்துச்சண்டை சாம்பியனாக்குவது தான் படத்தின் கதை. கதாநாயகியாக அறிமுகமான ரித்திகா சிங் நிஜ வாழ்க்கையிலும் குத்துச்சண்டை வீராங்கனை என்பது படத்துக்குக் கூடுதல் பலமாக அமைந்தது. வட இந்திய உதடுகளையும் முணுமுணுக்க வைத்தது சந்தோஷ் நாராயணனின் இசை. இப்படத்தில் இருந்து கட் செய்யப்பட்ட காட்சியைக் காண கீழே க்ளிக் செய்யுங்கள்.

மெட்ராஸ் :

வட சென்னை மக்களின் வாழ்க்கை முறையையும், அரசியல் சூழ்ச்சிகளால் மக்களின் வாழ்க்கை எப்படி துண்டாடப்படுகிறது என்பதையும் காட்டிய படம் இது. ஒரு சுவருக்கு இத்தனை அக்கப்போரா என ஆரம்பத்தில் சொன்னவர்களையும் 'அட' போட வைத்தது இப்படத்தில் தூவப்பட்டிருந்த குறியீட்டு மசாலா. நடிகர் கார்த்தியின் சினிமா டைரியில் முக்கியமான படமாகவும் எழுதப்பட்ட இப்படத்திலிருந்து நீக்கப்பட்ட காட்சிகள் கீழே...

ராஜா ராணி :

தனது முதல் படத்திலேயே இயக்குநர் அட்லி சிக்ஸர் அடித்த படம் இது. பார்த்துப் பழகிய திரைக்கதை என்றாலும் நயன்தாரா-ஆர்யா கூட்டணி, க்யூட் நஸ்ரியா, அதிரி புதிரி காமெடி, ரிச் விஷுவல்ஸ் எல்லாம் கலந்துகட்டி வசூலில் பொளந்து கட்டியது. இப்படத்தின் எடிட்டர் ரூபன் செம ஸ்ட்ரிக்ட் பேர்வழி போல. படத்தில் பாடல்கள், சில காட்சிகள் என நிறைய கட். அதில் சில காட்சிகள்.

ஜிகர்தண்டா :

'பீட்சா' படத்திற்குப் பிறகு கார்த்திக் சுப்புராஜ் இயக்கிய இப்படத்தில் நாயகன் சித்தார்த்தை விட 'அசால்ட்' சேதுவாக முரட்டுத்தனமான வில்லன் கதாபாத்திரத்தில் அசால்ட் காட்டியிருப்பார் பாபி சிம்ஹா. பின்நாளில் தன்னைச் சந்தித்த கார்த்திக் சுப்பராஜிடம், ’சேது’ பாத்திரத்தை நான் அதிகம் விரும்பினேன். சிம்ஹாவின் நடிப்பு எனது ’பரட்டை’ கதாபாத்திரத்தை ஞாபகப்படுத்தியது' என சூப்பர்ஸ்டார் பாராட்டினார் என்றால் பார்த்துக்கொள்ளுங்கள். இப்படத்தில் எக்கச்சக்கமான காட்சிகள் பாரபட்சம் பார்க்காமல் நீக்கப்பட்டிருக்கின்றன.

சிவாஜி :

வில்லன் சுமனை மட்டுமில்லாமல் கறுப்புப் பணத்தையும் ஒழித்துக்கட்டி, நாட்டை சுபிட்சமாக்கிய சூப்பர்ஸ்டாரின் வெற்றிப்படம் இது. 'கறுப்புப் பண வேட்டை தீவிரம் '500 ரூபாய், 1000 ரூபாய் பணம் செல்லாது' என  டைட்டில் கார்டில் ஓடவிட்ட இந்த தீர்க்கதரிசனத் திரைப்படம், தமிழ் மற்றும் தெலுங்கில் ஒரே நேரத்தில் ரிலீஸ் ஆகி வசூல் வேட்டையாடியது. அநேகமாக ஒரு படத்தின் நீக்கப்பட்ட காட்சிகளை அதிகம் பேர் பார்த்த வரலாறும் இத்திரைப்படத்திற்குத்தான் இருக்கும்.

இவை எல்லாம் சாம்பிள்ஸ்தான். இப்படி ஏகப்பட்ட காட்சிகள் ஒவ்வொரு படத்திலிருந்தும் வெட்டப்பட்டுதான் முழுமை அடைகின்றன. எடிட்டர்ன்னா சும்மா இல்லை பாஸ்!

- கருப்பு