Published:Updated:

சிவகார்த்திகேயனுக்கு காதல் பாட்டு - விஜய் சேதுபதிக்கு இன்ட்ரோ பாட்டு..! - பாடகர் ஜித்தின்

மா.பாண்டியராஜன்
சிவகார்த்திகேயனுக்கு காதல் பாட்டு - விஜய் சேதுபதிக்கு இன்ட்ரோ பாட்டு..! - பாடகர் ஜித்தின்
சிவகார்த்திகேயனுக்கு காதல் பாட்டு - விஜய் சேதுபதிக்கு இன்ட்ரோ பாட்டு..! - பாடகர் ஜித்தின்

‘ரஜினிமுருகன்’ படத்தில் ‘உன் மேல ஒரு கண்ணு’ பாடலை பாடியதன் மூலம் பலரின் ஃபேவரைட் பாடகரானவர் ஜித்தின் ராஜ். மெலடி பாடல்களுக்கு இவரது வாய்ஸ் கனகச்சிதமாக பொருந்துகிறது என்று நினைத்து கொண்டிருக்கும் போது, ‘விர்ரு... விர்ரு... விர்ரு... விர்ரு...’ என ‘றெக்க’ படத்தில் விஜய் சேதுபதிக்காக இன்ட்ரோ பாடலை பாடி, ‘எனக்கு குத்துப்பாட்டும் பாடவரும்’ என்கிறார் இந்த சேட்டன். கேரளாவில் இருந்த ஜித்தினுக்கு தொலைபேசித்தோம்.

இதுவரை எத்தனை பாடல்கள் பாடியிருக்கீங்க..?

“கணக்கு பண்ணி வெச்சுக்கல பிரதர். ‘சிகரம் தொடு’ படத்துல, ‘பிடிக்குதே... திரும்ப திரும்ப உன்னை’ங்கிற பாடல் தான் என்னோட முதல் பாடல். அதுக்கப்பறம் ‘ரஜினி முருகன்’ல, ‘உன் மேல ஒரு கண்ணு’, ‘மருது’ படத்துல, ‘கருவாக்காட்டு கருவாயா’, ‘வாகா’ படத்துல, ‘ஏதோ மாயம் செய்தாய்’, ‘றெக்க’ படத்துல, ‘விர்ரு விர்ரு’ அப்பறம் ‘யானும் தீயவன்’, ‘முடிஞ்சா இவன புடி’, ‘அழகென்ற சொல்லுக்கு அமுதா’, ‘மீன் குழம்பும் மண் பானையும்’, ‘மாவீரன் கிட்டு’ படத்துல, ‘கண்ணடிக்கல... கைப்பிடிக்கல’னு அப்படியே பாடிட்டு இருக்கேன் ப்ரோ.”

நீங்க அதிகமா டி.இமானோட இசையில தான் பாடியிருக்கீங்க போல..?

“ஆமா, 90 சதவீதத்திற்கு மேல இமான் சாரோட பாட்டு தான் பாடியிருக்கேன். நான் விஜய் டிவியில சூப்பர் சிங்கர் நிகழ்ச்சியிலையும் கேரளாவில் ஒரு பாட்டு போட்டியிலும் கலந்துக்கிட்டதுக்கு அப்பறம் இமான் சார் எனக்கு ப்ரேக் கொடுத்தார். ‘சிகரம் தொடு’ படத்திற்கு முன்னாடியே ஒரு பாடல் நான் பாட வேண்டியது. அப்போ வாய்ஸ் செட்டாகலைன்னு பாட முடியாம போச்சு. அதுக்கப்பறம் நிறைய பாடல் பாடிட்டேன். ரொம்ப நல்ல மனிதர் அவர். என்னை மெலடி பாடல்கள் மட்டுமே பாட வைக்காம குத்து பாடல், ஸ்டைலிஸ் பாடல்னு எல்லா ரக பாடல்களும் என்னை பாட வெச்சார். என்னை அதிகம் உற்சாகப்படுத்துவார். ஒருத்தருக்குள் திறமையிருந்தா அதை நல்லா பயன்படுத்துவார். அவரோட ரெக்கார்ட்டிங்கும் ரொம்ப ஜாலியா இருக்கும்.”

முதல் ரெக்கார்ட்டிங் அனுபவம்..?

“ ‘பிடிக்குதே... திரும்ப திரும்ப உன்னை...’ பாட்டை முதலில் நான் பாடும் போது ஸ்ரேயா கோஷல் தான் டூயட் பாடுறாங்கனு எனக்கு தெரியாது. என்னோட பார்ட் எல்லாம் பாடி முடிச்ச பின்னாடி முழு பாட்டை கேட்கும் போது தான் ஸ்ரேயா கோஷல் பாடியிருக்காங்கனு தெரிஞ்சது. நான் அவங்களோட சேர்த்து ஒரு பாட்டாவது பாடலும்னு ஆசைப்பட்டுட்டு இருந்தேன். ஆனால், அது எனக்கு முதல் பாட்டுலையே கிடைச்சிருச்சு. அதை என்னால மறக்க முடியாது.” 

‘ரஜினிமுருகன்’ படத்துல நீங்க பாடுன, ‘உன் மேல ஒரு கண்ணு...’ பாடல் செம ஹிட்டான போது உங்க ரியாக்ஷன் என்ன..?

“சோஷியல் மீடியாவுல வந்த பாராட்டுகளை என்னால இன்றைக்கும் மறக்க முடியாது. என் நண்பர்கள், உறவினர்களும்னு தொடங்கி பாடலை கேட்ட அனைவரும் பாராட்டுனாங்க. ‘என்னோட பொண்ணுங்கும் இந்த பாட்டு ரொம்ப பிடிக்கும்’னு சிவகார்த்திகேயன் சொன்னார். இன்னைக்கு வரைக்கும் அந்த பாட்டுக்கு யூடியூப்ல 24 மில்லியனுக்கு மேல வியூஸ் இருக்கு. எனக்குனு ஒரு அடையாளம் கிடைச்சதே அந்த பாட்டுனால தான்.” 

உங்களுக்கு டான்ஸும் வரும்னு சொல்றாங்களே..! 

“அய்யய்யோ அப்படியெல்லாம் கிடையாது பாஸ். சூப்பர் சிங்கர் நிகழ்ச்சியில பாட்டுப் பாடும் போது சும்மா கை கால ஆட்டுவேன். அவ்வளவு தான். மத்தப்படி டான்ஸ்லாம் ரொம்ப நல்லா ஆடமாட்டேன்.” 

பாடுறீங்க, ஆடுறீங்க, எப்போ நடிப்பீங்க..?

“ஆல்ரெடி நான் ஒரு படத்துல நடிச்சிருக்கேன். ஜேம்ஸ் வசந்தன் இயக்கிய ‘வானனில் வாழ்க்கை’ங்கிற படத்துல நடிச்சேன். அதுக்கப்பறம் நான் நடிக்கலை. நடிக்கிறதுக்காக அதிக ஆர்வமும் நான் காட்டலை. இனிமேல் யாராவது நடிக்கக்கூப்பிட்டு, நல்ல கதையா இருந்தா நடிப்பேன்.” 

அடுத்து எந்தப் படத்துல பாடல் பாடியிருக்கீங்க, யாரோட இசையில பாடணும்னு ஆசைப்படுறீங்க..?

“மலையாளத்துல ‘முந்திரிவல்லிகள் தளிர்க்கும்போல்’ங்கிற மோகன் லால் படத்துல ஒரு பாட்டு பாடியிருக்கேன்.  எல்லா பாடகர்களுக்கும் இருக்கிற ஆசை மாதிரி எனக்கும் ஏ.ஆர்.ரஹ்மான் இசையில் பாடணும்னு ஆசையிருக்கு. அது மட்டுமில்லாமல் எல்லா இசையமைப்பாளர்களின் இசையிலும் பாடணும்.”

வாழ்த்துக்கள் ப்ரோ..!

மா.பாண்டியராஜன்