Published:Updated:

எத்தனை வருஷமானாலும் தமிழ் சினிமால இதெல்லாம் மாறாது!

எத்தனை வருஷமானாலும் தமிழ் சினிமால இதெல்லாம் மாறாது!
எத்தனை வருஷமானாலும் தமிழ் சினிமால இதெல்லாம் மாறாது!

காலங்கள் மாறினாலும் சில காட்சிகள் மாறாதுங்கிறது நம்ம தமிழ் சினிமாவுக்கு கனகச்சிதமா பொருந்தும். அது படமா இருந்தாலும் சரி, அந்தப் படம் தொடர்பான நிகழ்ச்சிகளா இருந்தாலும் சரி. அப்படி சிலவகைப் படங்களில் நாம் பார்த்துப் பழகிப்போன சில காட்சிகள் 'திரும்பத் திரும்பப் பேசுற நீ!' என்பதுபோல் ரிப்பீட் மோடில் வந்துகொண்டே இருக்கும். அதெல்லாம் என்னன்னு பார்த்தா...

காதல் காவியங்கள் :


 

ஹீரோ இன்ட்ரோ ஆனபின் மழை பெய்ஞ்சாலோ அல்லது யாராவது பூக்கூடையைத் தட்டிவிட்டு பூவெல்லாம் ஸ்லோமோஷன்ல கொட்ட ஆரம்பிச்சாலோ அது ஹீரோயின் அறிமுகம்னு கண்டுபிடிச்சிடலாம்.  இதுவே நிஜ வாழ்க்கையா இருந்திருந்தா பூக்கார அம்மா நம்ம பரம்பரையையே இழுத்துக் கழுவி ஊத்திருக்கும். படம் நெடுக லவ், ரொமான்ஸ் இருந்தாலும் இன்டர்வெல் டைம்ல சரியா ஏதாவது ஈகோ சண்டைல ஹீரோ-ஹீரோயின் பிரிஞ்சிருவாங்க. அப்புறமென்ன எக்ஸாம் பேப்பரை சேஸ் பண்ற மாதிரி ஹீரோயினை விடாம சேஸ் பண்ண ஹீரோ பின்னாடி ஓடுவார். அங்கே ஆரம்பிச்ச ஓட்டம் க்ளைமாக்ஸ்ல ரயில்வே ஸ்டேசன்லதான் முடியும். அதுவும் ட்ரெயின் நகர ஆரம்பிச்சதும்தான் ஹீரோ ஸ்டேசனுக்குள்ள வருவார். பக்கத்து ஸ்டேசன் போய் சாவகாசமாக்கூட கூட்டிட்டு வரலாம்னாலும் ட்ரெயின் பின்னாடியே ஓடுவாங்க. இதுவே கொஞ்சம் ஹை-பட்ஜெட் படம்ன்னா இதே காட்சி ஏர்போர்ட்ல நடக்கும்.

திகிலூட்டும் த்ரில்லர் படங்கள் :


மிட் நைட்ல ஆளே இல்லாத தெருவுல எந்தக் கதாபாத்திரமாவது நடக்கிற மாதிரி ஒரு சீனாவது இருக்கும். மழை சீசன்லதான் சைக்கோ உருவாங்களோ என்னவோ! எல்லா படத்துலயும் அப்பதான் கொலைகள் அதிகமா நடக்கும். அதுமட்டுமில்லாம வீடு எவ்வளவு பெரிசா இருந்தாலும் இந்த சைக்கோக்கள் பெரும்பாலும் தனியாதான் தங்கிருப்பாங்க. அதுசரி! ஷேரிங்ல எவனாவது கூட தங்கினா சங்குல மிதிச்சு கொல்வாங்க. சைக்கோவா காட்டப்படுற கதாபாத்திரங்கள் கண்டிப்பா ஜெர்க்கின், க்ளவுஸ் போடுவாங்க (அதுக்கப்புறமா ஜெர்க்கினை கேங்க்ஸ்டர் கலாசாரத்தோட அடையாளமா மாத்துன பெருமை நம்ம இளைய தளபதிக்கே சேரும்!). இந்தப் படங்களோட தாக்கத்தால ஒரு காலத்துல க்ளவுஸ் & ஜெர்க்கின் போட்ட ஆளுங்களப் பார்த்தாலே பல பேர் பயந்து நடுங்கிருக்காங்க.

பேய்ப்படங்கள் :


பாழடைஞ்ச வீட்ல அதுவும் பக்கத்துல ஆளுங்களே இல்லாத இடத்துல கதாபாத்திரங்கள் மாட்டிப்பாங்க. அந்த வீட்ல பேய் இருக்கிறது லைட்டா தெரிய வந்தாலும் கடைசி வரைக்கும் அந்த வீட்டைவிட்டுப் போக மாட்டேன்னு அடம் பிடிப்பாங்க. அதுலயும் லோ வோல்டேஜ்ல பல்பு கண் சிமிட்டணும். பைப்ல இருந்து தண்ணி சொட்டு சொட்டா சவுண்ட் எஃபெக்ட்டோட விழணும். இதெல்லாம் பேய்ப் படங்களுக்கான இலக்கணங்கள். பவர் கட் ஆகிறப்போ மெழுகுவத்தியோட யாராவது ஒவ்வொரு ரூமா போறதும், அந்நேரத்துல க்ளோஸப்ல ஃபேஷியல் பண்ணிருக்கிற பொண்ணு மாதிரி பேய் தன்னோட முகத்தைக் காட்டி பயமுறுத்தும் வேலையை இதுநாள்வரைக்கும் நிறுத்தலை. ரேஸ்கல். இதென்ன கெட்ட பழக்கம். கண்ணாடில அப்படியே ஹீரோயின் உருவம் ஃப்ரீஸ் ஆகி நிற்கிற ஜிகினா வேலைகளுக்கும் யாராவது முடிவு கட்டுனா புண்ணியமாப் போகும்.

வெறித்தனமான விளையாட்டுப் படங்கள் :


அது என்ன மாயமோ தெரியலை. ஸ்போர்ட்ஸ் படங்கள்ல பெரும்பாலும் காலம்காலமா ப்ராக்டீஸ் பண்ற கதாபாத்திரங்களைவிட, அதைப்பற்றி ஒண்ணுமே தெரியாத ஹீரோ திடுதிப்புனு குதிச்சு களமாடுவார். ஒரு சபதம், முரட்டு உடம்பு, ரத்தம் சிந்த அடிவாங்கறது இப்படி சில க்ளிஷேக்களை ஒண்ணா கலந்தா ஸ்போர்ட்ஸ் சினிமா ரெடி. ஹீரோ அடிபட்டுக் கிடக்கும்போதோ இல்லை தோற்கிற நிலைமைக்கு வந்தாலோ... அவருக்கு வேண்டப்பட்டவங்க எதிர்ல வந்து நிற்கணும். அவர்கிட்ட பேசணும். சபதமெல்லாம் ஞாபகம் வரணும். வெறியேறி எதிர்ல நிற்கிறவங்களைப் போட்டுப் பொளந்தெடுப்பார். எப்பப் பாரு வெளாட்டு!

காமெடி :


முழு காமெடிப் படங்களில் பெரும்பாலும் ஆள் மாறாட்டக் காட்சிகள் இருக்கணும்கிறது எழுதப்படாத விதியாகவே இன்னும் இருக்கு. ஒரு பொய் அல்லது ஆள் மாறாட்டம். அதனால ஏற்படுற குழப்பங்களை எப்படி சமாளிக்கிறாங்கங்கிறதுதான் பல காமெடிப் படங்களோட ஒன்லைன்.  'இரு பொருள் பன்மொழி' அர்த்தம் தெரிஞ்ச வசனகர்த்தா இருந்தால் இன்னும் சிறப்பு. சின்னதா ஒரு சீனிப்பட்டாசு வெடிச்சாலே ரத்தக்களறி ஆகும்கிறப்போ வெடிகுண்டே வெடிச்சாலும் காமெடி நடிகர்களுக்கு சட்டை மட்டும் கிழிஞ்சு, வாய்ல புகையை விட்டுட்டு அசால்ட்டா நடந்து போறதைக் கைதட்டிச் சிரிச்ச கோடிப்பேர்ல நாமளும்தான் அடக்கம்!

- கருப்பு