Published:Updated:

'டி.ஆர்கிட்ட 'ஐ லவ் யூ' சொன்னேன்... அவர் ரியாக்‌ஷன்..?!' - குஷி பிரியங்கா

'டி.ஆர்கிட்ட 'ஐ லவ் யூ' சொன்னேன்... அவர் ரியாக்‌ஷன்..?!' - குஷி பிரியங்கா
'டி.ஆர்கிட்ட 'ஐ லவ் யூ' சொன்னேன்... அவர் ரியாக்‌ஷன்..?!' - குஷி பிரியங்கா

''உங்க ரசிகர் உங்களுக்கு அனுப்பிய மறக்க முடியாத பரிசு?''

''ஒரு முறை சுவிட்சர்லாந்துல இருந்து தர்ஷன் என்கிற ரசிகர் ஒரு போன் கேஸ் அனுப்பி இருந்தார். அதுல என்னோட ஃபோட்டோ பிரின்டாகி இருந்தது அவர் சுவிட்சர்லாந்துல  நிகழ்ச்சி ஒருங்கிணைப்பாளரா இருக்கிறதா குறிப்பிட்டிருந்தார். அதைப் பார்த்தவுடனே, சிரிச்சிட்டேன்.  என்னோட போட்டோவை பிரின்ட் பண்ணி அனுப்பினதோடு சேர்த்து, ஒரு போனையும் அனுப்பியிருந்தா ரொம்ப சந்தோஷப்பட்டிருப்பேன்.''

''உங்களுக்கு ரொம்பப் பிடிச்ச தொகுப்பாளர் யார்?''

''திவ்யதர்ஷினி அக்கா, அர்ச்சனா அக்கா இரண்டு பேரையும் ரொம்பப் பிடிக்கும். அதே போல சிவக்கார்த்திகேயன், கல்யாணி, மகேஷ் அண்ணா எல்லாரையும் பிடிக்கும். முதல் இரண்டு பேர்னா அது டிடி அக்காவும், அர்ச்சனா அக்காவும் தான். நான் சில நேரங்களில் கெஸ்ட்கிட்ட கேள்வி கேட்டு பதில் வாங்க தடுமாறுவேன். ஆனா, டிடி அக்கா, சூப்பரா கெஸ்ட்கிட்ட கேள்வி கேட்டு பதில் வாங்கிடுவாங்க. அர்ச்சனா அக்கா செம்ம போல்டான லேடி.  அவங்களுக்கு காமெடி, சீரியஸ் என எந்த கான்செப்டா இருந்தாலும், கலக்கிருவாங்க.'' 
 

''உங்கள கலாய்ச்சவங்க மேல எப்போதாவது கோபப்பட்டிருக்கீங்களா?''

''என் கூட இருக்கிறவங்க, என்னோட சீனியர்ஸாதான் இருந்திருக்காங்க. அதனால எனக்குப் பொதுவாக பிரச்னைகள் வந்தது இல்ல. அதனால என் கூட இருந்தவங்கக்கிட்ட கோபம் வந்தது கிடையாது. ரசிகர்கள் மிஸ் பிகேவ் பண்ணும்போது கோபம் வரும். திரும்ப பங்கமா கலாய்ச்சி விட்டுடுவேன்.''

''உங்களுக்கு 'ரவுடி' என்கிற பேரும் இருக்கிறதா கேள்விப்பட்டோமே?''

''ஆமாங்க.ஸ்கூல்ல படிக்கும்போது  நான் மட்டும்தான் ரவுடியா இருந்தேன். மத்த ஸ்கூல்ல இருக்கக்கூடிய ரவுடிங்க எல்லாரும் ஒன்னா சேர்ந்து, காலேஜ்ல ரவுடி கும்பலா ஃபார்ம் ஆகிட்டோம். அதனால ரவுடித்தனம் ரத்தத்திலயே ஊறிடுச்சு.'' (கலகலவென சிரிக்கிறார்) 

''பொதுவா கவுன்டர் கொடுக்கணும்னா முன்னாடியே பிராக்டிஸ் பண்ணணும்னு சொல்லுவாங்களே?''

''அப்டி எல்லாம் இல்லீங்க. அது தன்னால வந்திடும்.  நான் வீட்ல என் கணவர்கிட்ட அடிக்கடி 'லொட லொட'னு பேசிட்டே இருப்பேன். நான் நாலஞ்சு சொன்னா, என் கணவர் பிரவீன் குமார் ஒரே கவுன்டர்ல ஆஃப் பண்ணி காலி பண்ணிடுவார்.''

''டி.ஆர்.கிட்ட உண்மையிலயே லவ்யூ சொல்றீங்களா..? இல்ல அவரை ரொம்ப பிடிக்கும் அதனால சொல்றீங்களா?''

''ரொம்ப ஒப்பனாவே சொல்றேன். எனக்கு டி.ஆர். சார் பத்தி, அவர சந்திக்கிறதுக்கு முன்னாடி ஒரு பிம்பம் இருந்தது. அந்த பிம்பத்தை சுத்தமா உடைச்சிட்டார் அவர். நீங்க அவரை நேர்ல மீட் பண்ணி, பழகினீங்கனா அவரை உங்களுக்கு ரொம்பப் பிடித்துப் போயிடும். சூப்பரான ஆளுங்க அவரு. அவ்வளவு சீனியர் ஆர்ட்டிஸ்ட். ஆனா, ஜூனியர்ஸ் என்ன சொன்னாலும் அதை கவனிப்பார், ஏத்துப்பார். எந்த விதத்திலும் டென்சன் ஆக மாட்டார். நேரத்துக்கு வந்துடுவார். நான் அவர்கிட்ட, அடிக்கடி 'ஐ லவ் யூ டி.ஆர்' சார் என சொல்லிட்டே இருப்பேன். ஒரு நாள் என்னோட கணவர்கிட்ட, 'பிரியங்காவ சும்மா இருக்கச் சொல்லுங்க. இப்படி சொல்லச் சொல்லாதீங்கனு சிரிச்சிட்டே சொல்லியிருக்கார். நான் அவர்கிட்ட இப்படி கேட்கிறதை, ஆஃப் ஸ்டேஜ்ல 'ஏன் பிரியங்கா இப்படி பண்றா'னு கேட்பார். டி.ஆர். சாரை சமாளிக்கவே முடியாது. ஷூட்டிங் சில நேரம் நைட் மூணு மணிக்கு நடக்கும், அந்த டைம்ல கூட ரசிச்சு, அதுல முழுகி, அதுக்கு பஞ்ச் கொடுத்து, எக்ஸ்பிரஷனுடன், கதை ரிலேட் பண்ணி.... ஸ்ஸ்ஸ்ப்பா நான் எல்லாம் டொய்னு ஆயிடுவேன். அவருக்குள்ள அவ்வளவு விஷயங்கள் இருக்குங்க. அவர் அந்த காலத்து ஆளு. அவங்க ரொம்ப பேசிட்டே இருப்பாங்கனு தானே யோசிக்கிறோம். அவங்க மாதிரி ஆட்கள்கிட்ட இருந்து நிறைய கத்துக்கணும் இன்றைய இளைஞர்கள்''. 

''அந்த ஒருத்தரோட ஒரு போட்டோவாவது எடுத்தாகணும் என நினைக்கக் கூடிய ஆள் யார்?''

''சிம்பு சாரோட ஒரு ஃபோட்டோ எடுக்கணும்னு ஆசை. ஒரு வருஷத்துக்கு முன்னாடி, பாலம் சில்க்ஸ் நிகழ்ச்சியை தொகுத்து வழங்கினேன். அப்போ, சிம்புவும் வந்திருந்தார். அப்போ அவரை அறிமுகப்படுத்திப் பேசினேன். முடிஞ்சதுக்குப் பிறகு, கீழே இறங்கிப் போனார் பாருங்க அப்போ என்னோட கண்ணும், அவரோட கண்ணும் ஒரு பத்து செகன்ட் சந்திச்சதுப் பாருங்க. 'என்னக் கூப்பிட்டு ஏடாகுடமா கேள்விகேட்டுடாத, செம்ம அடி வாங்குவ'னு நினைச்சிருப்பாருப் போல. அவர் போனப் பிறகுதான் யோசிச்சேன். அடடா, அவர்கூட ஒரு போட்டோ எடுக்க மறந்துட்டமே. டி.ஆர். சாரை பார்க்கும்போது, அப்பப்போ, 'சிம்பு சார் கூட ஒரு போட்டோ எடுக்கணும் சார்' என சொல்லிட்டே இருக்கேன். பிளீஸ்மா தயவு செய்து விட்டுடும்பார் டி.ஆர் சார்.  டுவிட்டர்ல என்னோட ரசிகர், சாரி வெறியர் ஒருத்தர் இருக்கார். என்ன சிம்பு ஒய்ஃப்னு தான் சொல்லுவார். என்னைப் பத்தி யாராவது எதாவது சொல்லிட்டா அவ்வளவுதான். எப்படி நீங்க இப்படி சொல்லலாம்னு சண்டைக்குப் போயிடுவார்.'' 

''டி.ஆர்.சார் சொல்றதுல உங்களுக்குப் பிடிச்ச வார்த்தை, அதாவது டயலாக் எது?''

''சின்னத்திரை, பெரிய திரை பத்தி ஒரு முறை சொன்னார். அதை மறக்கவே முடியாது. 'பெரிய திரைல இருக்கவன் ரிச்சாவான். சின்னத்திரையில இருக்கவன் ரீச் ஆவான். தினமும் ஒவ்வொரு வீட்லயும் டி.வி நடிகர்கள் சொந்தங்கள் மாதிரி ஆகிடுறாங்க' என சொன்னார்.

''ஜோடி நம்பர் ஒன்? டான்ஸ் போட்டி, பாட்டுப் போட்டினு எல்லா நிகழ்ச்சியிலயும் தொகுப்பாளினியா இருக்கீங்க? இதுல உங்களுக்கு ரொம்ப பிடிச்சது எது?'' 

''கலக்கப்போவது யாரு' நிகழ்ச்சியில ஆடியன்ஸ் மாதிரிதான் உட்கார்ந்திருக்கேன். நான் எப்பவுமே நடுவரா இருந்ததே இல்ல. முன்னாடியே சொல்லிட்டேன். சும்மா ரசிக்கத்தான் இந்த நிகழ்ச்சிக்கு வரேன் என  கலக்கப்போவது யாரு நிகழ்ச்சிக்கு மட்டும் எப்பவுமே ஜாலியாப் போவேன். விஷயத்தை நல்லா ரசிக்கிறேன் என்றால் வாய்விட்டு சிரிச்சிடுவேன். எனக்கு 'ஜோடி நம்பர் ஒன்' மாமியார் வீடு, 'சூப்பர் சிங்கர்' 'தாய்வீடு', 'கலக்கப்போவது யாரு' அவுட்டிங்.'' 

''உங்களுக்கு சரியா கவுன்டர் கொடுக்கக் கூடிய ஆள்?''

''பாலாஜி அண்ணாதான். ஒரு எபிசோட்ல, 23-ம் புலிகேசி மாதிரி பண்ணியிருப்பார். அந்தப் படத்தோட கேரக்டர் ரோலை இமிடேட் பண்ணி மீசையில மல்லிகைப் பூவை வச்சிருப்பார். அதைப் பார்த்துட்டு சிரிப்பை அடக்க முடியாம, கண்ணுல பூ விழுதுனு கேட்டுருக்கேன். இப்போதான் முதன் முதல்ல பார்க்கிறேன்' என கவுன்டர் கொடுத்தேன். அவரும் சளைக்காம திருப்பி கவுன்டர் கொடுத்து ஆஃப் பண்ணார். மொத்தத்துல அவரும், நானும் டாமன் அன்ட் ஜெர்ரி மாதிரி. சூப்பர் சிங்கர்ல ம.கா.பா. ''

''படத்தில் நடிப்பதற்காக வாய்ப்புகள் வருகிறதா?''

''அப்பப்போ யாராவது  கூப்பிட்டுக் கேட்பாங்க. யாரோ சும்மா கலாய்க்கிறாங்கனு நினைப்பேன். ஒரு சில நேரத்துல உண்மையா கூப்பிடுறதா சொல்லுவாங்க. நடிப்பு மேல பெரிய விருப்பம் கிடையாது. தொகுப்பாளினா என் பாட்டுக்கு விட்டுடுவாங்க. நான் என்னோட ஸ்டைல்ல பேசுவேன். ஆனா, படத்துல அப்படி இல்ல. அவங்க சொல்றத எல்லாம் நாம செய்யணும். ரொமான்ஸ், கோபம் என எல்லா ரியாக்‌ஷனும் காண்பிக்கணும். சத்தியமா எனக்கு சிரிப்புதான் வரும் அந்த நேரத்துல. நமக்கெதுக்குங்க அந்த ரிஸ்க் எல்லாம். ஆனா, தனுஷ் சாரோட ஒரு படம் பண்ணணும். ஒரு பிரேம்ல நடந்துப்போம்மானு சொன்னாங்கனா கூட ஓ.கே சொல்லிடுவேன்.''

''பேச்சைத் தவிர்த்து பிரியங்காவுடைய அடையாளம்?''

''சிரிப்பு தான். ஒரு முறை ஏர்போட்ல நான் டிராவல் பண்ணப்போ ஒருத்தர் தன்னோட ரிங் டோனா என்னோட சிரிப்பை வச்சிருந்தார். என் கூட இருந்தவங்க,  'பேசாம அலாரம் டோனா வையுங்க. பயத்துலயே தூக்கம் கலஞ்சிடும்'. வெளிநாட்ல நிகழ்ச்சிகள் பண்ணும்போது, நீங்க சிரிப்பீங்களே.. அதே மாதிரி ஒரு முறை சிரிங்கம்பாங்க. நான் கவுண்டமணி, கார்த்திக்கிட்ட கொடுக்கிற ரியாக்‌ஷனை நினைச்சுப்பேன்.''

- வே. கிருஷ்ணவேணி 

பின் செல்ல