Published:Updated:

‘தலைவா’ முதல் ‘தெறி’ படம் வரை, விஜய் பேசிய முதல் வசனமும் அந்த காட்சியும் ஞாபகம் இருக்கா..?

‘தலைவா’ முதல் ‘தெறி’ படம் வரை, விஜய் பேசிய முதல் வசனமும் அந்த காட்சியும் ஞாபகம் இருக்கா..?
‘தலைவா’ முதல் ‘தெறி’ படம் வரை, விஜய் பேசிய முதல் வசனமும் அந்த காட்சியும் ஞாபகம் இருக்கா..?

விஜய்யின் ஒவ்வொரு படம் ரிலீஸாகும்போது அதை பார்க்கவரும் அவரது ரசிகர்கள் அதிகம் ஆவலோடு எதிர்பார்ப்பது விஜய்யின் என்ட்ரி காட்சியைத் தான். அதையும் தாண்டி படத்தில் அவர் பேசும் முதல் வசனத்தை திரையரங்கில் இருக்கும் யாரும் கேட்க முடியாத அளவுக்கு ஆரவாரம் செய்வார்கள். அப்படி ஆரவாரம் செய்ததால் பலர் கேட்கத்தவறிய அந்த முதல் வசனத்தின் தொகுப்பை பொதுநலன் கருதி வெளியிடுகிறோம்.

‘தெறி’


‘தெறி’ படத்தின் ஓப்பனிங் காட்சியிலையே விஜய்யின் என்ட்ரியும் இருக்கும். பைக் ரிப்பேர் ஆகி ரோட்டில் விஜய்யும் நைனிகாவும் நிற்கும்போது, விஜய் தன் முகத்தைக் காட்டாமலேயே, “டு மினிட்ஸ் பேபி” என்று கையசைவுடன் நைனிகாவிடம் சொல்லுவார். பிறகு ஒரு கார் காரர் நைனிகா மீது தண்ணியடித்துவிட்டு வேகமாக செல்லும் போது, மழையென்றும் பார்க்காமல் அவரை ஓவர் டேக் செய்து, கீழே இறங்கச் சொல்லுவார். அவரும் கீழே இறங்கி மழையில் நனைந்த பிறகு, அவர் அருகில் செல்லும் விஜய், “வெளியில மழையில வரது எவ்வளவு கஷ்டம்னு இப்போ தெரியுதுங்களாணா...?, பாத்து மெதுவா போங்க, ஸாரி... ஸாரி சொல்லிட்டு போங்க...” என்று அவரிடம் சொல்லுவார். இது தான் ‘தெறி’ படத்தில் விஜய் பேசும் முதல் வசனம். 

‘புலி’


‘புலி’ படத்தின் டைட்டில் கார்ட் ஆரம்பிக்கும்போதே, வேதாளங்கள் பற்றியும் வேதாள கோட்டையைப் பற்றியும் நிழல்கள் ரவி ஒரு பெரிய விளக்கத்தைக் கொடுப்பார். அதன் பின் டைட்டில் கார்ட்டோடு சேர்த்து விஜய்யின் சின்ன வயது கேரக்டரையும் காட்டியிருப்பார்கள். சரியாக 8 நிமிடங்கள் முடிந்த பிறகு வரிப் பணம் கட்டாததைக் கண்டிக்க, வேதாள மனிதர் விஜய் இருக்கும் ஊருக்குள்ள வருவார். வேதாளத்தை சமாளிக்க மருதீரனால் தான் முடியும்னு ‘ஆடுகளம்’ நரேன் விஜய்யை கூப்பிடுனு சொல்லுவார். அப்போ தான் விஜய்யின் என்ட்ரி. 

“அய்யா... அய்யா... எங்களை மன்னிச்சிடுங்க அய்யா... எங்களை மன்னிச்சிடுங்க அய்யா. நீங்க யாரு, நாங்க யாரு. நீங்க வேதாளம், நாங்க பாதாளம். இந்த ஒரு தடவை நீங்க பெரிய மனசு பண்ணி எங்களை மன்னிச்சிடுவீங்களா... அடுத்த தடவை நாங்களே வந்து வரிசையில நின்னு, உங்க வரிப் பணத்தை கட்டிடுவோமா...” என்று விஜய் பேசும் இந்த வசனம் தான் ‘புலி’யின் ஓப்பனிங் டயலாக். 

‘கத்தி’


‘கத்தி’ படத்தின் ஓப்பனிங் சீன்ல விஜய் ஜெயில்ல இருந்து தப்பித்து ஓடி வருவதும், அவரை துரத்திக்கொண்டு போலீஸ் வருவதையும் காட்டி, 30 நிமிடங்களுக்கு முன்பு என்று குட்டி ப்ளாஷ்பேக்கிற்குப் போவார்கள். நாலு வருஷமா போலீஸால் தேடப்பட்டு 2 நாட்களுக்கு முன்பு பிடிக்கப்பட்ட ஒரு குற்றவாளி ஜெயிலில் இருந்து தப்பித்து விடுவான். அவனைப்பிடிக்க ஏற்கெனவே 18 முறை ஜெயிலில் இருந்து தப்பித்த, ஜெயிலில் இருந்து தப்பிக்கும் டெக்னிக் தெரிஞ்ச விஜய்யிடம் ஐடியா கேட்க போலீஸ் வருவார்கள். 

அப்போது விஜய், “சோ... தப்பிச்சு போனவனை எம்மூலமா பிடிக்கணும்னு நினைக்கிறீங்க. எவ்வளவு நேரம் ஆச்சு..? (போலீஸ்: 20 நிமிஷம் ஆச்சு, கிளம்பு) கிளம்புன்னா, நமக்குள்ள என்ன டீல்..? அவனை பிடிச்சுக் கொடுத்தா என் செல்லுல மட்டும் ஒரு ஃபேனு, ரீச்சார்ஜ் பண்ணுன போனு” என பல கண்டிஷன் போட்டு போலீஸை ஓகே சொல்ல வைத்து ஜெயிலின் ப்ளு பிரிண்ட் கேட்பார் விஜய். பிறகு தப்பித்துப் போனவனைப் பிடித்துக் கொடுத்துவிட்டு விஜய் தப்பித்து விடுவார்.

‘ஜில்லா’


‘ஜில்லா’ படத்தில் மோகன்லாலிடம் வேலைப் பார்க்கும் தன் அப்பாவை போலீஸ்காரர் ஒருவர் கொன்றதால், காக்கியே பிடிக்காமல் மோகன்லாலின் வளர்ப்புப் பிள்ளையாக வளர்வார் விஜய். ‘புலி’ படத்தைப் போலவே இந்த படத்திலும் டைட்டில் கார்ட் போடும்போதே விஜய்யும் வளர்ந்து விடுவார். டைட்டில் கார்ட் முடிந்தவுடன் மருத்துவமனைக்குள் வந்து அராஜகம் பண்ணும் ரவுடிகளை விரட்டும் படி மோகன்லாலிடம் வேண்டுகோள் வைப்பார் ஒரு சிஸ்டர். உடனே 50 பேர் கொண்ட குழு ரவுடிகளை அடிக்க மருத்துவமனைக்கு போய் அடி வாங்கிட்டு வருவாங்க. 

மருத்துவமனைக்குள் இருக்கும் ரவுடி கும்பலின் தலைவன் சில்வா மோகன்லாலுக்கு போனைப் போட்டு வம்பு இழுத்துக்கொண்டிருப்பார். சில்வா போனில் பேசும்போதே அந்த மருத்துவமனைக்குள் விஜய் என்ட்ரி கொடுத்து 3 பேரை கண்ணாடியை உடைத்து தெறிக்க விடுவார். “ஒரு வாட்டி எங்கிட்ட வாங்கிட்டான்னா, இங்க இல்ல, இந்த ஜில்லாவ்லையே இருக்க மாட்டான். அதான் பயபுள்ளைக பாசமா வெச்சப்பேரு ‘ஜில்லா’...” என்று ஓப்பனிங் சீன்லையே பன்ச் பேசுவார் விஜய். 

‘தலைவா’


‘தலைவா’ படத்தின் ஆரம்பத்தில் சத்யராஜ் பற்றி சில காட்சிகளை காண்பித்து விட்டு தன்னால் தன் மகன் உயிருக்கு ஆபத்து வரக்கூடும் என்று நாசரிடம் தன் மகனை கொடுத்து விடுவார். அதன் பிறகு டைட்டில் கார்ட் முடிந்தவுடன் தன் மனைவிக்கு திதி கொடுத்து விட்டு, சத்யராஜ் ஆஸ்திரேலியாவில் இருக்கும் தன் மகனுக்கு போன் செய்வார். அங்கே விஜய் டான்ஸ் காம்படீசஷனின் செலக்‌ஷன் ரவுண்டில் இருப்பார். போன் வந்ததும் வெளியே ஓடி வந்து பேசுவார். 

“அப்பா... ஒரு நிமிஷம்... ஆ, சொல்லுங்கப்பா. உங்க போனுக்காகத் தான்ப்பா வெயிட் பண்ணிட்டு இருந்தேன். (இன்னைக்கு அம்மாவோட திதி) தெரியும்ப்பா. (உன் டான்ஸ் செலக்‌ஷன் என்னாச்சு) செலக்ட் ஆகிடுவோம்னு நம்புறோம். (விஷ்வா, நாம ஒரு விஷயத்துல இறங்கிட்டோம்னா முடிவு வெற்றியாத்தான் இருக்கணும். நீ என் பையன். ஜெயிச்சிட்டு கூப்புடு) ஓகே பா” என்பார் விஜய்.

- மா.பாண்டியராஜன்

அடுத்த கட்டுரைக்கு