Published:Updated:

சுல்தான்...வேட்டை மன்னன்...கரிகாலன்! இந்தப் படங்களை நினைவிருக்கிறதா?

சுல்தான்...வேட்டை மன்னன்...கரிகாலன்! இந்தப் படங்களை நினைவிருக்கிறதா?
சுல்தான்...வேட்டை மன்னன்...கரிகாலன்! இந்தப் படங்களை நினைவிருக்கிறதா?

'வாலு', 'இது நம்ம ஆளு', 'அச்சம் என்பது மடமையடா' போன்ற படங்கள் பல நாள் நம்மை காத்திருக்க வைத்து வெளியாகிவிட்டது. ஆனால், டீசர், ட்ரெய்லருக்குப் பிறகு தியேட்டரையே பார்க்காத பல படங்கள் லைன் கட்டி நிற்கின்றன.  அவற்றில் படப்பிடிப்பு நிறுத்தப்பட்டு சில, முழுதாய் ரெடியாகி சில என நிறைய படங்கள் இருக்கின்றன. பலவற்றை நாம் மறந்தும் போயிருப்போம். அப்படியான 'அட... ஆமால்ல' படங்களின் லிஸ்ட் தான் இது.

சுல்தான் த வாரியர்:

அதுவரை படங்களின் டைட்டில் ஸ்கெட்ச் வடிவமைப்பு, டைட்டில் சீக்குவன்ஸ் உருவாக்கம், கிராஃபிக்ஸ் டிசைன்கள் செய்து வந்த சௌந்தர்யா, திரைப்பட இயக்குநராக களம் இறங்க அடி எடுத்து வைத்தது 'சுல்தான் த வாரியர்' படம் மூலம் தான். படத்தின் டீசர் கட் வெளியாகவும் செய்தது. பின்னர் இப்படம் நிறுத்தப்பட்டு 'கோச்சடையான்' மூலம் இயக்குநரானார்.

மருதநாயகம்:

கமல்ஹாசனின் கனவுப் படம் இந்த 'மருதநாயகம்'. இதன் படப்பிடிப்பு துவக்க விழாவில் இங்கிலாந்து மகாராணி இரண்டாம் எலிசபெத் கூட கலந்து கொண்டார். பதினெட்டாம் நூற்றாண்டில் வாழ்ந்த முகமது யூசுஃப் கான் என்கிற மருதநாயகம் பற்றிய படம் தான் இது. பாதி படம் முடிந்திருப்பதாக தகவல் மட்டும் வந்தது. இன்னுமும் பெரிய பட்ஜெட் கிடைத்தால், இந்தப் படத்தை மீண்டும் துவங்க ஆர்வமாக இருப்பாதாய் கமல் அடிக்கடி குறிப்பிட்டிருக்கிறார்.

கரிகாலன்:

விக்ரம் நடிப்பில் துவங்கப்பட்ட வரலாற்றுப் படம் 'கரிகாலன்'. கரிகாலச் சோழனின் கதையை முதலில் இயக்குவதாக இருந்தது எல்.ஐ.கண்ணன். பின்பு செல்லமே, ஆனந்த தாண்டவம் படங்கள் இயக்கிய காந்தி கிருஷ்ணா இயக்குவதாக சொல்லப்பட்டது. இந்தி நடிகை ஜரீன் கான் விக்ரம் ஜோடியாகவும், பசுபதி, அஞ்சலி, ஜி.வி.பிரகாஷ் இசை எனப் பல விஷயங்கள் முடிவாகியிருந்து. அதன் பின் அப்படியே நின்றுபோனது படம்.

வேட்டை மன்னன்:

காளை, சிலம்பாட்டம் படங்களுக்குப் பிறகு சிம்பு நடிப்பதாக இருந்த படம் வேட்டை மன்னன். சிம்பு சரியாக ஷூட்டிங்கிற்கு வருவதில்லை என்பது கிசுகிசுவாகப் பரவிக் கொண்டிருந்த காலம் அது. டீசர் வந்த நிலையிலேயே படமும் நிறுத்தப்பட்டது. 

மத கஜ ராஜா:

முழுப்படமும் முடிந்து மூன்று வருடத்திற்கு முந்தைய பொங்கலுக்கு வெளியாகியிருக்க வேண்டிய படம். அதன் பின் இப்படத்தின் இயக்குநர் சுந்தர்.சி இயக்கியும், நடித்தும் படங்கள் வெளியாகிவிட்டது. இதன் ஹீரோ விஷாலும் பல படங்கள் நடித்துவிட்டார். இதில் காமெடியனாக நடித்த சந்தானம் ஹீரோவாக நடித்து மூன்று படங்களும் வெளியாகிவிட்டது. ஆனால், இந்தப் படத்தின் இரண்டு டிரெய்லர்கள் மட்டுமே வெளியாகியிருக்கிறது.

டிரெய்லர் 2:

இடம் பொருள் ஏவல்:

நீர்பறவை படத்துக்குப் பிறகு சீனு ராமசாமி இயக்கிய படம் 'இடம் பொருள் ஏவல்'. விஷ்ணு விஷால், விஜய் சேதுபதி நடித்திருக்கும் இப்படத்தின் முழு ஷூட்டிங்கும் முடிந்து வெகுநாட்களாக ரிலீஸுக்கு காத்திருக்கிறது. 

வா டீல்:

விஜய் சேதுபதி நடித்த றெக்க படம் இயக்கிய ரத்ன சிவாவின் முதல் படம் 'வா டீல்' தான். தடையறத் தாக்க படம் முடித்ததும் அருண்விஜய் நடித்து அதன் பின் என்னை அறிந்தாலும் வெளியானது. ஆனால் இன்னும் 'வா டீல்' வெளியாகவில்லை.

ரெண்டாவது படம்:

'தமிழ்ப்படம்' படத்துக்குப் பிறகு சி.எஸ்.அமுதன் இயக்கிய படம் 'ரெண்டாவது படம்'. விமல், அரவிந்த் ஆகாஷ், ரிச்சர்டு, விஜயலட்சுமி ஆகியோர் நடித்த இப்படம் நான்கு, ஐந்து வருடங்களாக கிடப்பிலேயே இருக்கிறது. 

சிப்பாய்:

சிலம்பாட்டம் படத்தின் இயக்குநர் சரவணன் இயக்கிய படம் சிப்பாய். கௌதம் கார்த்திக், லட்சுமி மேனன் நடித்த இந்தப் படத்தின் படப்பிடிப்பும் ஓரளவு முடிந்திருந்தது. ஆனால், அதன் பின் படம் பற்றி எந்த தகவலும் இல்லாமல் போனது.

இந்திரஜித்:

இதுவும் கௌதம் கார்த்திக் நடித்த படம் தான். சக்கரக்கட்டி இயக்குநர் கலாபிரபு இப்படத்தை இயக்கியிருக்கிறார். சில நாட்களுக்கு முன்பு வரைகூட படத்தின் டிரெய்லர் தியேட்டர்களில் ஓடிக்கொண்டிருந்தது. ஆனால், என்ன காரணமோ தெரியவில்லை படம் மட்டும் இன்னும் வெளியாகாவில்லை.

காதல் 2 கல்யாணம்:

ஆர்யாவின் தம்பி சத்யா முதலில் நடித்த படம் 'காதல் 2 கல்யாணம்'. இதில் சத்யாவுக்கு ஜோடியாக நடித்திருந்தது திவ்யா ஸ்பந்தனா (பொல்லாதவன், வாரணம் ஆயிரம் கதாநாயகி). இந்தப் படத்தின் மூலம் இயக்குநராக அறிமுகமாக இருந்தார் மிலந்த். இசை யுவன் ஷங்கர் ராஜா, ஆரண்ய காண்டம் ஒளிப்பதிவாளர் பி.எஸ்.வினோத் ஒளிப்பதிவு என பக்கா டீம். ஏனோ இன்று வரை படம் வெளியாகவில்லை.

நான் அவள் அது:

டோலிவுட்டின் பிரபலமான வசனகர்த்தாவும், திரைக்கதை ஆசிரியருமான கோனா வெங்கட் இயக்கிய ஒரே படம் இது தான். 'நான் அவள் அது' என தமிழிலும், 'நேனு தனு ஆமே' என தெலுங்கிலும் பைலிங்குவலாக தயாரான படம். பாலிவுட்டின் 'டார்லிங்' பட ரீமேக்கான இதில் மாதவன், ஷ்மிதா ஷெட்டி, சதா நடித்திருந்தனர். எட்டு வருடங்களுக்கு முன்பே முடிந்து விட்ட படம் இன்னும் வெளியாகவில்லை.

தொகுப்பு: பா.ஜான்ஸன்