Published:Updated:

''வேறு வழியில்லாமல் டப்பிங் சீரியல் பார்க்கிறார்கள்!'' - செம சீரியஸ் 'படவா' கோபி

''வேறு வழியில்லாமல் டப்பிங் சீரியல் பார்க்கிறார்கள்!'' - செம சீரியஸ் 'படவா' கோபி
''வேறு வழியில்லாமல் டப்பிங் சீரியல் பார்க்கிறார்கள்!'' - செம சீரியஸ் 'படவா' கோபி

'ஹலோ எஃப்.எம்-ல் 'ஆர்.ஜே வாக தனது பயணத்தைத் தொடந்து, டி.வி நிகழ்ச்சிகள், சினிமா, படங்கள் என நடித்துக் கொண்டிருப்பவர் படவா கோபி. 'நிமிர்ந்து நில்' படத்தில் முக்கிய கதாபாத்திரத்திலும் நடித்திருப்பார். இதோடு, தமிழ்நாடு செலிபிரிட்டி கிரிக்கெட் லீக்' கமென்டிரியும் கொடுத்து வருபவர். இப்படி பிஸியாக சுற்றிக் கொண்டிருந்தவரிடம், கார் பயணத்தின் போது பேசினோம்,

''நிறைய புராஜக்ட்டுகளில் கமிட் ஆகியிருக்கீங்களோ?''

''டிசம்பர் 9-ம் தேதி ரிலீஸ் ஆன 'சென்னை 28 பார்ட்-2' நடிச்சிருக்கேன். சமுத்திரகனி இயக்கி நடிக்கும், 'தொண்டன்' படத்தில் பத்திரிகையாளனா நடிச்சிருக்கேன். ஒரு பத்திரிகையாளனுடைய பங்களிப்பு இந்த சமுதாயத்துல எவ்வளவு முக்கியம் என்பதை உணர்த்தியிருக்கோம். இந்த படத்துல சமுத்திரகனியின் நண்பரா நடிச்சிருக்கேன். வரும் டிசம்பர் மாதம் 12 ம் தேதி இந்த படத்திற்கான ஷூட்டிங் ஆரம்பிக்குது. அடுத்து சந்தானத்துக்கு காமெடி போர்ஷன் எழுதிய மகேந்திரனுடைய இயக்கத்தில் 'எனக்கு வாய்த்த அடிமைகள்'. இந்த இரண்டு படங்களிலும் நடிச்சிட்டு இருக்கேன். சமீபத்துலதான் ரஷ்யாவில் எஸ்.பி.பி. 50 ஷோ முடிச்சோம். வரும் பொங்கல் பண்டிகையை முன்னிட்டு, அமெரிக்காவின் பல பகுதிகளில் ஸ்டான்ட் அப் காமெடி போன்ற நிகழ்ச்சிகளை நடத்தவிருக்கோம். ஒரு மாதம் இந்த நிகழ்ச்சி நடக்கும்''.

''நீங்க எதாவது நிகழ்ச்சியை இயக்குறீங்களா?''

''வெகு விரைவில் ஜி தமிழ் தொலைக்காட்சியில ஒரு காமெடி நிகழ்ச்சிப் பண்ணப் போறேன். இது காமெடி ஷோக்களின் மிகப்பெரும் புரட்சியை ஏற்படுத்தும். என்னோட மனைவி ஹரித்தா சமையல் நிகழ்ச்சிகளை பொங்கல் முதல் ஜி தமிழ் தொலைகாட்சியில் நடத்தவிருக்காங்க.''

''ஏன்..? தற்போது ஒளிபரப்பாகும் காமெடி நிகழ்ச்சிகள் நன்றாக இல்லையா?''

''அப்படியில்லை. இப்போ இருக்கிற எதுவுமே புதுசா இல்ல.  திரும்பத் திரும்ப ஒரே நிகழ்ச்சிகளையே ஒவ்வொரு தொலைக்காட்சியும் காப்பி அடித்து செய்து கொண்டு இருக்காங்க. நகைச்சுவையில் எவ்வளவோ விஷயங்கள் இருக்கு. அதை யாரும் வெளியில கொண்டு வர்றதே இல்லை. அதற்கான முயற்சியையும் யாரும் எடுக்காம இருக்காங்க. தமிழ்நாட்டில் ஒளிப்பரப்பாகி வரும் நிகழ்ச்சிகள் எல்லாமே மேற்கத்திய கலாசாரத்தில் இருந்து காப்பியடிச்சவைதான். நம்முடைய தமிழ் கலாசாரத்தைக் காட்டும் வகையில் பெரும்பாலான நிகழ்ச்சிகள் இல்லை. இப்போ மேற்கத்தியவங்க செய்துட்டு இருக்கிற ஸ்டேன்டப், ஓரங்க நாடகம் எல்லாமே நாம போட்ட விதைதான். அதை வியாபாரமா மாத்த ஆரம்பிச்சுட்டாங்க. நாம என்ன செய்துட்டு இருக்கோம். நம்மளோட சுயத்தை எல்லாம் விட்டுட்டு, அவங்களை காப்பி அடிச்சிட்டு இருக்கோம். இதுதான் நிதர்சனம். நம்முடைய கலாசாரத்தில் இருக்கக்கூடிய சோஷியல் சட்டையர், பேமிலி சட்டையர், ஹியூமர் சட்டையர் எங்கப் போச்சு? இந்த கேள்வி ஏன் யாருக்கும் எழவே இல்ல?. என் கேள்வி இதுதான்.'' 

''அப்போ கலாசாரத்தைச் சார்ந்த விஷயங்களை கையில் எடுக்காத காரணம் என்ன?''

''நிறைய விஷயங்களை சொல்லலாம். இன்றைக்கு மகாபாரதம், ராமாயணம் எல்லாம் ஹிந்தி போன்ற பிற மொழிகளில், அவ்வளவு பட்ஜெட் செலவழித்து எடுக்கிறார்கள். மக்களையும் அது கவர்கிறது. ஆனால், தமிழ்நாட்டில் எடுக்கப்படும் வரலாற்று விஷயங்களோ, நம் பண்பாட்டு விஷயங்களை எடுக்கவோ பட்ஜெட் ஒதுக்க ஆள் இல்ல. அதுக்குப் பதிலா பிற மொழிகளில் இருக்கக்கூடிய கதைகளை வாங்கி ஒளிபரப்ப ஆரம்பிச்சுட்டாங்க.''

''பிற மொழி சீரியல்களை மக்கள் பார்ப்பதற்கு காரணம்?''

''வேற நல்ல பொழுதுபோக்கு அம்சங்கள் இல்ல. அதனாலதான் வேற வழியில்லாம பிற மொழி டப்பிங் சீரியல்களை மக்கள் அதிகமாப் பார்க்கிறாங்க. நம்ம நேட்டிவ் சீரியல்களைப் பார்த்தாலே புரியும். பெரும்பாலும் சீரியலில் காண்பிக்கும் ஆண்கள் எப்போதுமே வீட்ல இருக்கிற மாதிரியே காட்டுவாங்க. யோசிச்சுப் பாருங்க. இப்போ இருக்கும் ஆண்கள் எத்தனைப் பேர் வீட்டில் இருக்காங்க. வீட்டிலேயே இருந்தா எப்படி சம்பாதிச்சி குடும்பத்தை காப்பாத்துவாங்க. இப்படி பிராக்டிக்கலான நிறைய விஷயங்களை சீரியல்களில் தவற விட்டுவிடுகிறோம். ரெகுலராகப் போயிட்டு இருக்கிற இந்த செட்டப் மாறணும். இன்னொன்று, பட்ஜெட் பிரச்னை. தமிழ் சீரியல்களுக்கான பட்ஜெட்டை பெரிய அளவில் கொடுக்கத் தயாரா இல்லை. பெரிய பட்ஜெட் போட்டால் லாபம் ஈட்ட முடியாமல் போகிறது. இந்தப் பிரச்னைகளை எல்லாம் டப்பிங் சீரியல் ஈஸியா முடிச்சு வைக்குது. நிறைய புரோகிராம் இன்னும் வரணும். அழிந்து வரும் நாட்டுப்புற கலைகள், பொழுதுபோக்கு அம்சங்கள் அனைத்தையும் மீண்டும் கொண்டு வர வேண்டும். இன்னும் சொல்லப்போனால் எல்லாமே கம்ப்யூட்டர் வசமாகிடுச்சு. அதில் உட்கார்ந்து டியூன் போடுறாங்க. கம்போஸ் செய்யறாங்க. வீணை, கிடார், ஆர்மோனியப் பெட்டி என அந்தந்த உபகரணங்களை வைத்து இப்போ இசை அமைப்பதே இல்லை.'' 

''குடும்பப் பிரச்னைகளை தீர்க்கக்கூடிய நிகழ்ச்சிகள் பற்றி?''

''ஓப்ரா வின்பிரேவுடைய நிகழ்ச்சியின் காப்பிதான் இப்போ உண்மை நிகழ்வுகளை சொல்லக் கூடிய நிகழ்ச்சிகள். மேலை நாடுகளில் பேமிலி சிஸ்டமே பெரும்பாலும் இல்ல. அதனால அவங்க பிரச்னைகளைத் தீர்க்கிறதுக்கு ஒரு மீடியத்தை நாடினாங்க. நம்ம அப்படி இல்லையே. நமக்கு பெரியப்பா, சித்தப்பா, மாமா என குடும்ப உறவுகள் இருக்கு. அவங்களை வச்சுப் பேசி தீர்வு காண முடியாத பிரச்னைகளை, இங்கு சொல்லியா தீர்வு காணப்போகிறார்கள். 

வீட்டுப் பிரச்னையை தீர்க்கிறோம் என பொது ஊடகத்துக்குக் கொண்டு வரும் விஷயங்களில் எனக்கு உடன்பாடு கிடையாது. இங்கு வரும் அத்தனைப் பிரச்னைகளுக்கும் தீர்வு கிடைக்கிறதானா நிஜமா இல்லை. இந்த நிகழ்ச்சிகளுக்கு வந்துட்டு, திரும்ப ஊருக்குள்ளப் போகிற பல பேர் முகத்தை மூடிட்டு போக வேண்டிய சூழ்நிலைக்கு தள்ளப்படுறாங்க. கடைசியா, சொந்த பிரச்னை ஊர் பிரச்னையா மாறிடுது. இது சமூக சேவைப் போன்றது என நிறைய பேர் சொல்றாங்க. சம்பளத்தை வாங்கிட்டுத்தான் இந்த வேலையை செய்யுறாங்க. அப்படி இருக்கும்போது எப்படி சமூகத் தீர்வாக இருக்க முடியும். அதுக்காக எல்லா பிரச்னைகளுக்கும் தீர்வு கிடைக்கலனு சொல்ல மாட்டேன்.  சில பேருக்கு இதற்கான தீர்வு கிடைச்சிருக்கு. பொதுவா, இந்தப் பிரச்னைகள் எல்லாமே 'பாலியல்' சார்ந்தே வருகிறது. அது ஏன்..? ஏன்னா, ஒரு கிளாமர், பொழுதுபோக்கு, த்ரில் தேவைப்படுது. சொத்துப் பிரச்னை , அண்ணன் தங்கச்சி சண்டை இப்படி எவ்வளவோ இருக்கே. 15 வயசு சிறுமிகளை கூட்டி வந்து ஏன் பேசுறீங்க?, சட்டையைப் பிடிச்சு அடிக்கிறீங்க?, தகாத வார்த்தைகளால அதட்டுறீங்க. இதை எல்லாம் பார்க்கும்போது நெருடலா இருக்கு.'' 

''உங்கள் மகள் பெயரில் ஆரம்பித்திருக்கும் 'ஆதியா அரவணைப்பு' டிரெஸ்ட் பற்றி?''

''எங்கள் மகள் ஆதியா இறந்தபிறகு அவளுடைய நினைவாக, 'ஆதியாவின் அரவணைப்பு' என பெயர் வச்சிருக்கோம். கடந்த  2007 அக்டோபர் 18-ம் தேதி என் மகளின் பிறந்த நாள் அன்று ஆரம்பிச்சோம். வீடும், ஆபிஸூம் மணப்பாக்கத்தில் தான் வச்சிருக்கோம். பாதிக்கப்பட்ட  குழந்தைகளுக்கு உதவுவதற்காக ஆரம்பிச்சோம். இதன் மூலமா கல்வி, உடல்நலம், பொழுதுபோக்கு என குழந்தைகளுக்காக நிறைய விஷயங்களை செய்துட்டு இருக்கோம். பாதிக்கப்பட்ட இல்லங்களுக்கும் உதவி செய்து கொண்டிருக்கோம். அதாவது ஒரு குழந்தைக்கு கல்வி தேவைப்படுகிறது என்றால் அதற்கான உதவி செய்து, வேலை வாய்ப்பு பெற்றுத் தருவது வரை உதவி செய்கிறோம். 

''ஏன் உங்களுக்கு இன்னொரு குழந்தை பெற்றுக் கொள்ள எண்ணம் வரவில்லையா?''

ஒரு குழந்தை போயிட்டா (இறந்துவிட்டால்), அடுத்தக் குழந்தை பெற்றுக்கொள்வது, கட்டின மனைவி இறந்துவிட்டால், உடனே இன்னொருவரை திருமணம் செய்து கொள்வது இதில் எனக்கு விருப்பம் இல்ல. ஏன் போனவங்களோட மெமரீஸோட இருக்க முடியாதா?. என்கிட்ட இந்த கேள்வியைக் கேட்பவர்களிடம் ஒரு விஷயத்தைதான் கேட்பேன். ஒரு குழந்தை இறந்துவிட்டாலும், இன்னொரு குழந்தை இருந்தால் என்னைக் கடைசி காலத்துல பாத்துக்கும்னுதானே பெற்றுக் கொள்ள ஆசைப்படுறீங்க.  86 வயசு வரைக்கும் வாழ்றீங்கனு வச்சுப்போம். கடைசி வரைக்கும் அந்தக் குழந்தை உங்க கூடவேதான் இருக்கும் என்கிற கேரண்டி என்ன?. நாம விரும்பினவங்க நினைவாகவே கடைசி வரைக்கும் வாழ முடியும். நாங்களும் அவள் நினைவாகத்தான் வாழ்ந்து கொண்டிருக்கிறோம்.'' என்கிறார் 'படவா' கோபி.


-வே. கிருஷ்ணவேணி