Published:Updated:

பார்த்திபனின் கருப்பு கலர் ஜெயிச்சிடுச்சு...நாமும் ஜெயிப்போம்னுதான் நினைப்பேன் - விஷால்

பார்த்திபனின் கருப்பு கலர் ஜெயிச்சிடுச்சு...நாமும் ஜெயிப்போம்னுதான் நினைப்பேன் - விஷால்
பார்த்திபனின் கருப்பு கலர் ஜெயிச்சிடுச்சு...நாமும் ஜெயிப்போம்னுதான் நினைப்பேன் - விஷால்

சினிமா விழாக்களில் இவர் கலந்துகொண்டால் என்ன பேசுவார்... என்ன பரிசு தருவார் என்று எப்போதுமே மற்றவர்களை எதிர்பார்ப்பில் உறையவைக்கும் புதுமை வித்தகன் பார்த்திபன். எதைச்செய்தாலும் வித்தியாசமாக செய்ய நினைப்பவர், தன்னுடைய பட இசைவெளியீட்டு விழாவிலும் புதுமையை நிகழ்த்தினார். பாக்யராஜூக்கு குருவணக்கம், தன்னுடைய படமான “கோடிட்ட இடங்களை நிரப்புக” இசைவெளியீடு என்று முப்பெரும் விழாவை நடத்தினார். மூன்றாவது விழா என்னவென்ற ரகசியத்தை கடைசியில் சொல்கிறேன்.

சென்னை.... இமேஜ் அரங்கத்தில் அனைத்துத் திரைப் பிரபலங்களையும் சென்டமேளம் அதிர, பார்த்திபனே வரவேற்றார். 4.29க்கு நிகழ்ச்சி...ஆனால்,  4.26க்கே தேசிய கீதத்துடன் தொடங்கியது சிலிர்ப்பு. பூர்த்தி செய்யப்பட்ட வினாத்தாள்களைப் போடுவதற்காக தனிப்பெட்டி, பாக்யராஜூடன் உங்களுக்கான நினைவுகளைப் பகிர்ந்துகொள்ள புத்தகம் என்று அனைத்து ஏற்பாடுகளுமே அமர்களம். முதல் அரை மணிநேரமும் ட்ரம்ஸ் சிவமணியின் ஆக்கிரமிப்பில் அரங்கமே அதிர்ந்தது.

இயக்குநர் பாக்யராஜின் குருவான பாரதிராஜாவிற்கு முதலில் மரியாதை செய்யப்பட்டது. அதன்பின்னரே பாக்யரஜ் மேடைக்கு அழைக்கப்பட்டார். பார்த்திபன் தன்னுடைய குருவான பாக்யாராஜ் மூன்று ஆச்சரியங்களை நிகழ்த்தினார். 

 அவர் அமர்ந்திருந்த இருக்கைக்கு மேலே, மேகங்கள் கூடிவர, பூமழை பொழிந்தது. 

 பூர்ணிமா பாக்யராஜை மேடைக்கு அழைத்து, அவரின் கையாலேயே தங்க காப்பு பரிசளிக்கப்பட்டது. 

 பாக்யராஜின் ஒட்டுமொத்த உதவி இயக்குநர்களுமே வெள்ளைஉடையில், மரத்திலான பேனாவை தூக்கிவந்து பரிசளித்தனர். 

அடுத்ததாக, முதல் படமான  “சுவரில்லா சித்திரங்கள்” தொடங்கி தற்பொழுது வரையான படங்களின் பாடல்களுக்கு மகன் சாந்தனு நடனமாடி அசத்தினார்.  ஒட்டுமொத்த நிகழ்ச்சியையும் சுகாசினியும், ரோகினியும் தொகுத்து வழங்கினார்கள். இருவருமே பழைய நினைவுகளை நிகழ்ச்சிக்கு நடுவே சொல்லிச் சென்றதில் பார்த்திபனின் ராஜதந்திரம் புரிந்தது. 

இயக்குநர் ஷங்கர்: 

அந்த ஏழுநாட்கள், முந்தானை முடிச்சு க்ளைமேக்ஸ் பற்றி, பல இடங்களில் பலமுறை பேசிவிட்டோம். ஆனால் இன்றும் திரைக்கதையென்றால் பாக்கியராஜ் சார் தான். அவர் இடத்தை நிரப்ப, வேறு யாரும் இன்றுவரை  வரவில்லை. சந்தோசத்திலேயே பெரிய சந்தோஷம் அடுத்தவங்களையே சந்தோஷப்படுத்திப்பாக்குறது தான். பாக்யா பத்திரிகையின் மூலம் நிறைய வாசகர்களின் ஆசையை நிறைவேற்றியவர். பாக்யராஜ் மாதிரியே பார்த்திபனிடமும் அந்த மெனக்கெடல் இருக்கிறது. விழாவிற்கான பத்திரிகையிலிருந்து இந்த நிமிடம் வரையிலும் மெனக்கெட்டுகொண்டே இருக்கிறார். 

விஷால்: 

சினிமாவிற்காக நிறைய படிப்புகள் இருக்கிறது. ஆனால் பாக்யராஜ் மாதிரியான ஜாம்பவான்களின் படங்கள் தான் நமக்கான பாடம். புதுமுக இயக்குநர்களுக்கான சிறந்த வழிகாட்டி தான் பாக்யராஜ்... என் படம் ஜெயிச்சா, விஷால் ஜெயிச்ச மாதிரி.  கார்த்தி படம் ஜெயிச்சா  கார்த்தி ஜெயிச்ச மாதிரி. சாந்தனு ஜெயிச்சா, தமிழ் சினிமாவே ஜெயிச்ச மாதிரி. முதல் பத்து வரிசையில் இருக்கும் கதாநாயகர்களின் வரிசையில் சாந்தனு இடம்பெறவேண்டும் என்பதே  என்னுடைய நீண்ட நாள் ஆசை. அவருக்கான நேரம் இன்றிலிருந்து தொடங்கியிருக்கிறது. அண்ணனா அவன் கூட எப்போதுமே இருப்பேன். இதே நாள் போன வருடம், சென்னை வெள்ளத்தில் உண்மையான அவன் உழைப்பு  எனக்கு மட்டுமே  தெரியும்... பார்த்திபன் சாரோட கருப்பு கலர் ஜெயிச்சிடுச்சி.. நாமும் ஜெயிப்போம்னுதான் சொல்லுவேன்., லவ் யூ பார்த்திபன் சார். 

எஸ்.ராமகிருஷ்ணன்: 

திரைக்கதை எழுதுவதில் மகத்தான சாதனை செய்து, இன்றை எழுத்தாளர்களின் முன்னோடியாக இருக்கிறார் பாக்யராஜ்.  பொதுவாக டைட்டில் போடும்போது நடிகர்களுக்கு மட்டுமே விசில் சத்தம் வரும். நடிகர்களைத்தாண்டி, “திரைக்கதை பாக்யராஜ்” என்று டைட்டில் வரும்பொழுது கைதட்டல் பெற்றவர். திரைவாழ்க்கையில் அவர் உருவாக்கிய கதைக்களங்கள் எல்லாமே தனித்துவமானவை. அவரின் புதுமையை வாழ்க்கையாக கொண்ட பார்த்திபனுக்கு வாழ்த்துகள். 

கரு.பழனியப்பன்: 

எம்.ஜி.ஆரின் வாரிசு பாக்யராஜ் பற்றி எனக்கு இருக்கும் அனுபவம்.... முந்தானை முடிச்சு படம் ரிலீஸான அதே நாள், பஸ்ஸில் வீடியோ கேசட்டில் படம் போடுறாங்க. காரைக்குடியிலிருந்து மதுரை வரும்போது முதன்முறையா படம் பாக்குறேன். பஸ்ஸே சிரிச்சி வெடிக்குது. திருப்பத்தூரில் இறங்கவேண்டியவன் மதுரையில் இறங்குறான். மதுரையில் இறங்கவேண்டியவன் இறங்கவே மாட்டேனு சொல்லுறான். நான் பஸ்ஸூலருந்து இறங்கி, சிந்தாமணி தியேட்டரில் 1.10காசுக்கு தரைடிக்கெட் வாங்கி படம் பார்த்துட்டுத்தான் வீட்டுக்குப்போனேன். 

பார்த்திபன்: 

இந்த மேடையில் பார்த்திபன் பேசவில்லை.  அவர் பேசினால் உணர்ச்சிவசப்பட்டுவிடுவார் என்பதற்காக அவரின் உதவியாளர் தான், பார்த்திபனின் எண்ணங்களைக் தன் குரலால் பதிவுசெய்தார். இத்தனை வருடம்...இந்த இடத்தில் நிற்பதற்கு என்னுடைய குருநாதர் தான் காரணம். அவரால் தான் நான் இங்கு இருக்கிறேன். முதலில் நடிப்பிற்கான வாய்ப்பு தேடியலைந்த என்னை, உதவி இயக்குநராக மாற்றி, என்னையே நடிகனாகவும் உருமாற்றியவர்.  இந்த நிகழ்ச்சியும் அவருக்கான அர்பணிப்பு தான். 

பாக்யராஜ்: 

எதுவுமே தெரியாமல்  சினிமாவிற்குள் வந்தேன். கடைசி வரைக்கும் கற்றுக்கொள்ள எதாவது ஒன்று நிச்சயம் இருக்கும் என்பதை மனதில் கொண்டவன். ஆடியோ ரிலீஸ் என்று மட்டுமே அழைத்துவிட்டு, இந்தமாதிரியான  நெகிழ்ச்சியான சம்பவத்தில் என்னை மாட்டிவிட்டுவிட்டார் பார்த்திபன். சிஷ்யனாக என் குருவிற்கு நான் எதுவும் செய்யவில்லை. அவருக்கு முதலில் நான் செய்திருக்கவேண்டும். இங்கு எனக்கு கிடைக்கும் அனைத்து மரியாதையுமே என் டைரக்டருக்கானது. அவரின் பாதத்தில் இதைக் காணிக்கையாக்குகிறேன். பெத்த தந்தையா, தன் பையனுக்கு நடக்கும் விழாவை கண்டு ரசிப்பது போலத்தான் என் டைரக்டரைப் (பாரதிராஜா) பார்க்கிறேன். என்னுடைய தந்தையும் தாயுமாக இன்று எங்களை வாழ்த்தியிருக்கிறார் என் இயக்குநர்.

பல ஜாம்பவான் இயக்குநர்களின் படங்களிலிருந்து தான் நான் கற்றுக்கொண்டேன். சின்ன வீடு படத்தில் ஒரு டயலாக்.. என் பர்ஸ்னாலிட்டி என்ன, நீ எப்படி என்ன கல்யாணம் பண்ணிக்கலாம்” என்று கேட்பேன். அதற்கு கல்பனா, “ தோலுக்கு துண்டா இல்லாட்டாலும், காலுக்கு செருப்பாவாது உங்களுக்கு உதவுவேன்ல மாமா”.. இந்த டயலாக்கை சொன்னது பார்த்திபன். அந்த இடத்தில் தான் பார்த்திபனிடம் நான் இம்ப்ரஸ் ஆனேன்.  

பாரதிராஜா: 

பாக்யராஜ் நகைச்சுவையாக பேசியே ரசிகர்களை ஈர்த்துவிடுவார், வைரமுத்து பேசினால் சபையே இறுக்கமாகிவிடும். பார்த்திபன் பேசினாலே வித்தியாசமாக தான் இருக்கும். ஆனால் இந்த பாரதிராஜா பாமரன். உணர்ச்சி வசப்படக்கூடியவன். இதனாலேயே இரண்டு வருடங்களாக பல நிகழ்ச்சிகளைத் தவிர்த்துவந்தேன். ஆனால் இந்த நிகழ்ச்சியைத் தவறவிட்டால், என் பிள்ளையை பாராட்ட வேறு மேடை கிடைக்காது. யாரிடம் பேசினாலும், “பாரதிராஜா” என்று என் பெயரைச் சொல்லாத ஒரே  சிஸ்யன் பாக்கியராஜ். எங்க டைரக்டர் என்று மட்டுமே சொல்பவன். என்னிடம் பாக்கியராஜ் சேரும் போது நல்ல விதை என்று மட்டும் தான் அவனை நினைத்தேன். ஆனால் விதைக்குள் இவ்வளவு வீரியம் இருக்கும் என்பது எனக்கு தெரியாது. 

பிரபு, பி.வாசு, கருபழனியப்பன், கார்த்திக் சுப்புராஜ், தரணி, லிங்குசாமி , எஸ்.பி.பாலசுப்பிரமணி என்று பல நட்சத்திர பட்டாளங்கள் கலந்துகொண்டனர். இசை வெளியீட்டு விழாவும், பாக்யராஜூக்கான சாதனைக்கு சல்யூட்டும் நடந்து முடிந்தது. இரண்டு விழா ஓகே. மூன்றாவது விழா என்னவென்று தானே யோசிக்கிறீங்க? 

பாக்யராஜ் இயக்கத்தில் சாந்தனு நடிக்கவிருக்கும் படத்தினை, பார்த்திபன் தயாரிக்கவிருக்கிறார். அதற்கான அறிவிப்பும், தொடங்கவிழாவும் இம்மேடையிலேயே நடைபெற்றது. இந்த அறிவிப்பு பாக்யராஜூக்கே அதிர்ச்சியாக அமைய, ஆச்சர்யத்தில் நெகிழ்ந்தார்.  வித்தியாச வித்தகனின், ஒவ்வொரு முடிவும் கூட வித்தியாசம் தான் என்பதற்கு அவரின் கோடிட்ட இடங்களில் நிரப்பப்படும் விடைகளே சாட்சி. 

பி.எஸ்.முத்து

படங்கள்: குமரகுருபரன்