Published:Updated:

'சின்னத கொம்பே' முதல் 'நீங்க நல்லா இருக்கணும்' வரை... ஜெயலலிதாவின் படங்கள்! #JayaMovies

'சின்னத கொம்பே' முதல் 'நீங்க நல்லா இருக்கணும்' வரை... ஜெயலலிதாவின் படங்கள்! #JayaMovies
'சின்னத கொம்பே' முதல் 'நீங்க நல்லா இருக்கணும்' வரை... ஜெயலலிதாவின் படங்கள்! #JayaMovies

கல்லூரியில் சேரும் முதல் நாளில் 'நடிப்பா.. படிப்பா என்ற  கேள்வி ஜெயலலிதா முன் இருந்தது. படிப்பின் மீது ஜெயலலிதாவுக்குப் பேரார்வம் இருந்தது. அதேசமயத்தில், நடனம் மூலமாக கலை மீதும் ஆர்வம் ஏற்பட்டிருந்தது. தந்தையின் இறப்புக்குப் பிறகு தாய் வேதவல்லி சென்னைக்கு வந்து, சந்தியா என்ற பெயர் மாற்றத்துடன் திரைப்படங்களில் நடிக்க ஆரம்பிக்கிறார். ஆனால் ஜெயலலிதாவோ, திரைப்படத் துறைக்கு வரவேண்டும் என்கிற எண்ணம் இல்லாமல் வளர்கிறார். அந்த எண்ணம் எப்போதும் தனக்கு இருந்ததில்லை என்பதை அவரே பின்னாளில் ஒப்புக்கொண்டும் இருக்கிறார். ஆனாலும் நடிக்க சம்மதம் சொன்னார். 1964-ல் முதல் படம் 'சின்னத கொம்பே' (கன்னடம்) படத்தில் நடிக்கிறார். அப்போது அவருக்கு வயது 16 மட்டுமே. 1964 - 1966-க்குள் 23 திரைப்படங்கள் நடித்து முடித்திருந்தார் ஜெயலலிதா. இந்த இடைப்பட்ட காலத்தில்தான், ஜெயலலிதா நடித்த 'வெண்ணிற ஆடை'யின் (முதல் தமிழ்ப் படம்) இயக்குநர் ஸ்ரீதர், எம்.ஜி.ஆரிடம் ஜெயலலிதாவை நடிக்க வைக்கப் பரிந்துரை செய்கிறார். படத்தைப் பார்த்த எம்.ஜி.ஆரும் தனது 'ஆயிரத்தில் ஒருவன்' படத்தில் ஜெயலலிதாவை ஒப்பந்தம் செய்கிறார். தாய் சந்தியா நடிக்கும் படத்தின் படப்பிடிப்பைக்கூடப் பார்க்க விரும்பாத, வீட்டில் அதைப் பற்றி தன் தாயிடம் பேச ஆர்வம் காட்டாத ஜெயலலிதா, குறுகிய காலத்திலேயே முன்னணி நாயகியர் பட்டியலில் முக்கிய இடத்தைப் பிடித்தார். 

‘கோமளவல்லி - ஜெயலலிதா ஆன நிகழ்வு’  பற்றி ஜெயலலிதாவே எழுதியது இது...

"பள்ளிக்கூடத்தில் நான் ஆங்கிலத்திலும் சரித்திரப் பாடத்திலும் புலி. புலி என்றால் சாதாரண புலி அல்ல. பதினாறு அடி வேங்கைதான். எங்கள் பள்ளி, வெறுமனே பாடம் சொல்லித் தருவதில் மட்டும் பிரசித்தி பெற்றதல்ல. நடனங்கள், நாடகங்கள், நாட்டிய நிகழ்ச்சிகள் நடத்துவதிலும் தனிப் பெயர் உண்டு. நாட்டிய நிகழ்ச்சியில் என் ஆட்டமும் இருக்கும். ஜெயா, இன்றைக்கு உன் நாட்டியம் பிரமாதம் என்ற நற்சான்றிதழோடுதான் வீட்டுக்குத் திரும்புவேன். என் தாயார் என்னைக் கட்டி அணைத்துக் கொள்வார், தவறாது கன்னத்தில் ஒரு முத்தமும் விழுந்துவிடும். சர்ச் பார்க்கில் நான் படித்து வந்தபோது, என் தாயார் பல படங்களில் நடித்து வந்தார். காலையில் நான் எழுந்திருப்பதற்கு முன்பே அவர் போய் விடுவார். சில நாட்களில் நான் படுத்துத் தூங்கிய பின்பே படப்பிடிப்பு முடிந்து வீட்டுக்கு வருவார். அவர் சினிமாவில் நடிப்பதற்காக ஷூட்டிங் செல்கிறார் என்று மிக நிச்சயமாகத் தெரிந்தும், ‘அம்மா இன்று என்ன படப்பிடிப்பு.. என்ன காட்சி.. நானும் ஒரு நாள் உன்கூட ஷூட்டிங் பார்க்க வரட்டுமா’ என்றெல்லாம் ஒருநாள் கூடக் கேட்டதில்லை. எனக்கென்னவோ சினிமா மீது எந்தப் பிடிப்பும் ஏற்படவேயில்லை. அந்த நாட்களில் பள்ளியும் படிப்பும்தான் எனக்கு எல்லாமுமாக இருந்தது. அல்லது வீட்டில் இருக்கும்போது, புத்தகத்தை எடுத்து வைத்துக்கொண்டு படிக்கவோ, எழுதவோ ஆரம்பித்துவிடுவது வழக்கம். படிப்பில் என் ஆர்வம் பற்றி முன் சொன்னதுபோல, எழுத்திலும் அதீத ஆர்வம் இருந்தது. ஒரு சமயம் என் ஆங்கிலக் கட்டுரை ஒன்று பம்பாயிலிருந்து வெளியாகும் 'இல்லஸ்ட்ரேட்டர் வீக்லி' என்ற ஆங்கிலப் பத்திரிகையில் சிறுவர், சிறுமியர் பகுதியில் பிரசுரமாகி பாராட்டுக் கடிதமும் வந்தது. அந்தக் கடிதம் படித்ததும் என் மனதில் எதிர்காலம் பற்றிய நினைப்பு. அன்றைய தினம் பூராவும் பெர்ல் பெக் மாதிரி ஒரு பெரிய கதாசிரியராகவே என்னை நினைத்துக் கொண்டேன். ஆனால், இப்போதும் என்னால் உறுதியாகச் சொல்லமுடியும். நான் மட்டும் சினிமாவில் நடிக்க வராமலிருந்திருந்தால், இலக்கியத்தில் ஒரு டாக்டர் பட்டம் பெறவே முயற்சித்திருப்பேன். இலக்கியத்தில் எனக்கு அலாதியான ஈடுபாடு உண்டு. ஆனால் இப்போது படிப்பதற்கு நிறைய புத்தகங்கள் இருந்தும், நேரமில்லாமல் தவிக்கிறேன். எப்போதும் பட ஷூட்டிங் இருப்பதால், எனக்குப் பதிலாக என் தாயார் புத்தகங்களைப் படித்து வருகிறார். பள்ளியில் நான் படிக்கும்போதே பரதநாட்டியமும், ஓரியன்டல் நடனங்களையும் பயின்று வந்தேன். என்னுடைய பரத நாட்டிய ஆசிரியை கே.ஜே.சரசா, ஓரியன்டல் நடன மாஸ்டர் திரு.சோப்ரா. என் பரத நாட்டிய அரங்கேற்றம் மயிலையில் நடைபெற்றது. அரங்கேற்றத்திற்குத் தலைமை வகித்து, 'தங்கச் சிலை ஜெயலலிதா’ என்று என்னை அழைத்து ஆசி வழங்கியவர் நடிகர் திலகம் சிவாஜி கணேசன் அவர்கள். 

படிப்பு, பள்ளி, நடனம், நாடகம் என்று இருந்த என் வாழ்க்கை மாறிய நாள் - என் குடும்பத்துக்கு வேண்டிய, நெருங்கிய நண்பர் ரூபத்தில் வீட்டிற்கு வந்தது. ஐரோப்பிய படக் கம்பெனி ஒன்றின் கூட்டுறவோடு, இந்தியக் கலாசாரத்தைப் பிரதிபலிக்கும் வகையில், டாக்குமென்டரி படம் ஒன்று எடுக்கத் திட்டமிட்டிருக்கிறார் அவர், ஆங்கிலப் படமான அதில் ஜெயலலிதாவும் நடிக்க வேண்டும் என்பது என் விருப்பம் என்று சொல்லி தன்னுடன் அழைத்து வந்திருந்த நண்பரையும் அறிமுகப்படுத்தினார். அவர்தான் திரு.வி.வி.கிரி அவர்களின் குமாரர் திரு.சங்கர் கிரி. அவர்கள் அப்போது கேரளா கவர்னராக இருந்தார். என் தாயாருக்கோ என்னை சினிமாவில் ஈடுபடுத்த வேண்டும் என்ற எண்ணமோ, ஆசையோ துளிகூட கிடையாது. 'பள்ளிக்கூடம் போகிறாளே... படிப்பு கெட்டுவிடுமே' என்று சொல்லிப் பார்த்தார். ஆனால், 'நாங்கள் சனி, ஞாயிறு மற்றும் பள்ளி விடுமுறை நாட்களில் படம் எடுத்துக் கொள்கிறோம்; படிப்புக்கு ஒன்றும் தடை ஏற்படாது' என்று உறுதி அளித்தார்கள். அந்தப் படம்தான் 'Epistle' என்ற ஆங்கில படம். போகப் போகத்தான், டாக்குமென்டரி என்ற பெயரில் ஒரு முழு நீளப் படத்தையே அவர்கள் தயாரிக்க ஆரம்பித்துவிட்டார்கள் என்கிற உண்மை எங்களுக்குத் தெரிய வந்து. சனி, ஞாயிறு மட்டும், ஒரு சில நாட்கள் போதும் என்ற நிபந்தனைகளுக்கு அர்த்தமே இல்லாமல் பல நாட்கள் நான் சென்று நடிக்க வேண்டியதாயிற்று. அதனால் பரீட்சை சமயத்தில்கூட இதில் போய் நடித்து விட்டு வந்தேன். தவிர, எங்கள் கைச் செலவிலேயே படப்பிடிப்புக்குச் செல்வது, அதில் அணிய வேண்டிய உடைகள், அணிகள் எல்லாவற்றையும் நானே என் சொந்தச் செலவில் வாங்கிக் கொள்ளும்படியாகிவிட்டது. எனக்கு ஒரே கோபம், ஆத்திரம். ஆனால், பாதியில் நிற்கவேண்டாமே என்று என் தாயார் என்னைச் சமாதானப்படுத்தி விட்டார்.

ஒருநாள் நடன மாஸ்டர் சோப்ராஜி எங்களிடம் வந்தார். தனக்கு மிகவும் வேண்டிய தயாரிப்பாளர் படம் எடுத்து வருவதாகவும், என் பெயரையே சிபாரிசு செய்ய நினைத்திருப்பதாகவும் சொன்னார். என் தாயார் வழக்கம்போல் தட்டிக் கழித்தார். 'நடனம்தானே. ஒரே ஒரு நடனம்' என்று சோப்ராஜி சொன்னார். அவர் எனக்கு மாஸ்டர். நான் மாணவி. அந்தப் படம்- லாரி டிரைவர். அது நீண்ட நாட்கள் கழித்து வெளிவந்தது வேறு விஷயம். என் தாயார் கன்னடப் படங்களில் நடித்து வந்தவர். அவருக்குப் பல கன்னடப் படத் தயாரிப்பாளர்களை நன்கு தெரியும். நடன உலகில் எனக்குக் கிடைத்து வரும் வரவேற்பைக் கேள்விப்பட்டு, பல கன்னட படத் தயாரிப்பாளர்கள் என் தாயாரிடம் வந்து, என்னை அவர்களது படங்களில் நடிக்க அனுமதிக்கும்படி கேட்டார்கள். அவர்களில், 'பள்ளிக்கூடம் போகட்டும், சனி, ஞாயிற்றுக் கிழமைகளில் நான் படத்தை எடுத்துக் கொள்கிறேன்' என்று நாகேந்திரராவ் சொன்னார். என் தாயாருக்கு வேண்டாம் என உறுதியாக மறுக்க முடியாத நிலை. சினிமாவில் நடிக்க வேண்டுமென்று பலர் முயற்சித்து வருவதும், பலருக்கு அம்முயற்சியில் வெற்றி கிடைக்காமல் போனதும் என் தாயாருக்கும் எனக்கும் நன்றாகவே தெரியும். அப்படி ஒரு சூழலில் நம்மைத் தேடி வந்திருக்கும் இந்தச் சந்தர்ப்பத்தை விட்டுவிடுவதா? 'சந்தர்ப்பம் எப்போதும் இரண்டாவது தடவையாக ஒருவரது வீட்டுக் கதவைத் தட்டுவதில்லை' என்று ஆங்கிலத்தில் ஒரு பிரபலமான பழமொழி உண்டு. அதுவும் ஞாபகத்துக்கு வந்தது. 

பள்ளிக்கூடமா... பட உலகமா? 'அம்மு, நீ படிச்சது போதும்' என்று என் தாயார் சந்தியா சொல்லிவிட்டார். பள்ளிக்கூடத்தை விட்டுவிடப் போகிறோமே என்று யோசிக்கும்போதே எனக்கு அழுகை வந்துவிட்டது. அதேவேளையில், கலை உலகில் பணியாற்றப்போகிறோம் என்ற நினைப்பு வந்தபோது மனதில் ஒரு அமைதி, மகிழ்ச்சி. இன்பம்-துன்பம் இரண்டும் கலந்ததுதானே வாழ்க்கை? கன்னடப் படவுலகம் என்னைக் கை நீட்டி வரவேற்றது. அதேசமயம் தமிழ்ப் பட உலகமும் என்னை வரவேற்க தன் நேசக் கரங்களை நீட்டியது. 'வெண்ணிற ஆடை' படத்தின் கதாநாயகியாக என்னை ஒப்பந்தம் செய்து கொண்டார், தயாரிப்பாளர்-டைரக்டர் ஸ்ரீதர். அந்த வாய்ப்புக்கு முன்பே ஸ்ரீதரின் படங்களைப் பார்த்து, அவரது ரசிகைகளில் ஒருத்தியாக மாறியிருந்தவள் நான். அவரது படத்திலேயே கதாநாயகியாக நடிக்கும் சந்தர்ப்பம் கிடைக்கும் என்று பேராசையாகக்கூட நினைத்தது கிடையாது. அப்போது என் தாயாருக்கு வேறு முக்கியமான வேலை இருந்ததால், என் சிறிய தாயார் வித்தியாவுடன் படப்பிடிப்புக்குப் போனேன். 

நன்கு அலங்காரம் செய்து, மேக்கப்புடன் நுழைந்த பின்புதான் ஸ்ரீதர் என்னைப் பார்த்தார். 'இந்தப் படத்தில் சித்த சுவாதீனம் இழந்த பெண்ணாக நீ வருகிறாய்' என்று சொன்னார். அதாவது நான் பைத்தியமாக நடிக்க வேண்டும். அதுவும் முதல் நாள் அன்றே முதல் காட்சி, நான் சின்னதாகக்கூட யோசிக்காமல், தயங்காமல். சரி என்றேன். முதல் நாள் படப்பிடிப்பு  நல்ல விதமாக அமைந்தது என் மனதில் நிறைவை ஏற்படுத்தியது பற்றி என் தாயாரிடம் சொன்னேன். 'உனக்குக் குறை இருக்காது. விக்னமில்லாமல் தமிழ்ப் பட உலக வாழ்க்கை அமைந்துவிட்டது' என்றார். எல்லாவற்றுக்கும் மேல் நான் நேசிக்கும், மதிக்கும் என் தாயை வணங்கி எழுந்தேன். என் தெய்வம் அவர்தானே. 'வெண்ணிற ஆடை' படத்தில் நான் விதவைக் கோலத்தில் வரும் காட்சியைப் பார்த்து ரசிகர்கள். 'இனி விதவைக் கோலத்தில் தோன்றாதீர்கள், எங்களால் தாங்க முடியாது' என்று எழுதியிருந்தார்கள். இத்தனை நெக்கமாக நேசிக்கிறார்களே என பிரமிப்பாக இருந்தது." 

ஜெயலலிதா நடித்த திரைப்படங்கள்

1964

1.சின்னத கொம்பே (கன்னடம்)

2.மனே அலியா (கன்னடம்)

1965

3.வெண்ணிற ஆடை

4.நன்ன கர்த்தவர்யா(க)

5.ஆயிரத்தில் ஒருவன்

6.நீ

7.மனசு மமதாலு(தெ)

8.கன்னித்தாய்

9.மாவன மகளு(க)

1966

10.மோட்டார் சுந்தரம்பிள்ளை

11.முகராசி

12.யார் நீ

13.குமரிப்பெண்

14.சந்திரோதயம்

15.தனிப்பிறவி

16.மேஜர் சந்திரகாந்த்

17.கௌரி கல்யாணம்

18.மணி மகுடம்

19.பதுருவதாரி(க)

20.கூடாச்சாரி 116(தெ)

21.ஆமெ எவரு(தெ)

22.ஆஸ்தி பருலு(தெ)

23.எபிசில்(ஆங்கிலம்)

1967

24.தாய்க்குத் தலைமகன்

25.கந்தன் கருணை

26.மகராசி

27.அரச கட்டளை

28.மாடி வீட்டு மாப்பிள்ளை

29.ராஜா வீட்டுப்பிள்ளை

30.காவல்காரன்

31.நான்

32.கோபாலுடு பூபாலுடு(தெ)

33.சிக்கடு தொரகடு(தெ)

1968

34.ரகசிய போலீஸ் 115

35.அன்று கண்ட முகம்

36.தேர்த்திருவிழா

37.குடியிருந்த கோவில்

38.கலாட்டா கல்யாணம்

39.பணக்காரப்பிள்ளை

40.கண்ணன் என் காதலன்

41.மூன்றெழுத்து

42.பொம்மலாட்டம்

43.புதிய பூமி

44.கணவன்

45.முத்துச்சிப்பி

46.எங்க ஊர் ராஜா

47.ஒளி விளக்கு

48.காதல் வாகனம்

49.சுக துக்காலு(தெ)

50.நிலுவு தோபிடி(தெ)

51.பிரமச்சாரி(தெ)

52.திக்க சங்கரய்யா(தெ)

53.பாக்தாத் கஜ தொங்கா(தெ)

1969

54.அடிமைப்பெண்

55.குருதட்சனை

56.தெய்வமகன்

57.நம் நாடு

58.ஸ்ரீராம் கதா(தெ)

59.அதிர்ஷ்ட வந்துலு(தெ)

60.காதநாயகுரு(தெ)

61.கண்டி கோட்ட ரகசியம்(தெ)

62.ஆதர்ச குடும்பம்(தெ)

63.கதலடு ஒதலுடு(தெ)

1970

64.இஸ்ஸத்(ஹிந்தி)

65.எங்க மாமா

66.மாட்டுக்கார வேலன்

67.என் அண்ணன்

68.தேடி வந்த மாப்பிள்ளை

69.எங்கள் தங்கம்

70.எங்கிருந்தோ வந்தாள்

71.அனாதை ஆனந்தன்

72.பாதுகாப்பு

73.அலிபாபா நலபை தொங்கலு(தெ)

1971

74.குமரிக்கோட்டம்

75.சுமதி என் சுந்தரி

76.சவாலே சமாளி

77.தங்க கோபுரம்

78.அன்னை வேளாங்கன்னி

79.ஆதி பராசக்தி

80.நீரும் நெருப்பும்

81.ஒரு தாய் மக்கள்

1972

82.ஸ்ரீ கிருஷ்ண விஜயமு(தெ)

83.ராஜா

84.திக்கு தெரியாத காட்டில்

85.ராமன் தேடிய சீதை

86.பட்டிக்காடா பட்டணமா

87.தர்மம் எங்கே

88.அன்னமிட்டகை

89.சக்தி லீலை

90.ஸ்ரீ கிருஷ்ண சத்யா(தெ)

91.பார்யா பிட்டலு(தெ)

1973

92.நீதி

93.கங்கா கௌரி

94.வந்தாளே மகராசி

95.பட்டிக்காட்டு பொன்னையா

96.சூரியகாந்தி

97.பாக்தாத் பேரழகி

1974

98.தேவுடு சேசின மனிசுலு(தெ)

99.டாக்டர் பாபு(தெ)

100.திருமாங்கல்யம்

101.தேவுடு அம்மாயி(தெ)

102.தாய்

103.வைரம்

104.அன்புத் தங்கை

1975

105.அன்பைத் தேடி

106.அவன் தான் மனிதன்

1976

107.யாருக்கும் வெட்கமில்லை

108.பாட்டும் பரதமும்

1977

109.கணவன் மனைவி

110.சித்ரா பௌர்ணமி

111.உன்னைச் சுற்றும் உலகம்

1980

112.ஸ்ரீகிருஷ்ண லீலா

1992

113.நதியைத் தேடி வந்த கடல்

114.நீங்க நல்லா இருக்கணும்

கௌரவ வேடம்

1.ஸ்ரீ சைல மகாத்மியம்(க) - 1961

2.மன்மொளஜ்(ஹிந்தி) - 1962

3.கான்ஸ்டபிள் கூத்ரு(தெ) - 1963

4.மஞ்சி ரோஜீலு ஒஸ்தாயி(தெ) - 1963

5.அமர் சில்பி ஜக்கண்ணா(தெ) - 1964

6.அமர் சில்பி அக்கண்ணாச்சாரி(க) - 1964

7.தாயே உனக்காக - 1966

8.லாரி டிரைவர் - 1966

9.ஜீசஸ் (மலையாளம்) - 1977

10.நாடோடி மன்னன் - 1995

ஜெயலலிதா நடித்த திரைப்படங்கள் - 115

வண்ணப்படங்கள் - 14

மொழி மாற்றுப் படங்கள் - 48

தமிழ் படங்கள் - 83

தெலுங்குப் படங்கள்- 25

கன்னடப் படங்கள்- 5

இந்திப் படம்- 1

ஆங்கிலம்- 1 (படம்- Epistle)