Published:Updated:

"செட் போடுறதுக்கு முன்னாடி இப்படித்தான் வரைஞ்சு காட்டுவேன்!''- ஆர்ட் டைரக்டர் சக்தி

Vikatan Correspondent
"செட் போடுறதுக்கு முன்னாடி இப்படித்தான் வரைஞ்சு காட்டுவேன்!''-  ஆர்ட் டைரக்டர் சக்தி
"செட் போடுறதுக்கு முன்னாடி இப்படித்தான் வரைஞ்சு காட்டுவேன்!''- ஆர்ட் டைரக்டர் சக்தி

”சைத்தான் ஆடியோ ரிலீஸூக்கு தாமதமா தான் வந்தேன். தியேட்டர் கதவைத் திறக்கும்போது, என் பெயரைச் சொல்லி பேச அழைச்சாங்க. பயங்கர ஷாக். வந்ததே லேட்டு, திடீரென பேச சொல்லவும் பதறிடுச்சி.. இப்போ நீங்க திடீர்ன்னு பேட்டினு சொல்லவும் அதே ஃபீல் தான்” என்று சிரிக்கிறார் சைத்தான் பட கலை இயக்குநர் எம். சக்தி வெங்கட்ராஜ். கலை இயக்குநர் கதிரின் பயிற்சி பட்டறையில் பாஸ்மார்க் வாங்கி, அதர்வா நடித்த இரும்புகுதிரை படத்தின் மூலம்தான் சக்தி கலை இயக்குநரானார். ஆறாதுசினம், இந்தியா பாகிஸ்தான் படங்களைத் தொடர்ந்து சைத்தான் படத்தில் கலை இயக்கத்தில் கவனிக்கவைத்திருக்கிறார்.  அவரிடம் ஒரு குட்டி மீட்டிங்... 

கலை இயக்குநருக்கான பயணம் எங்கு தொடங்கியது? 

சின்ன வயசுலயே வரையிறதுல ஆர்வம். அதுனால கலை இயக்குநராகணும்னு முடிவுபண்ணிட்டேன். படிச்சது டிப்ளமோ வரைகலையியல். ஆனா சினிமாவில் யாரையுமே தெரியாது. என்னோட திருநின்றவூரைத் தாண்டித்தான் கலைஇயக்குநர் கே. கதிர் சாரோட ஊர். அதுனால ஒன்றரை வருசமா அவர்ட்ட உதவியாளர சேரணும்னு அணுகிட்டு இருந்தேன்.  இரண்டு வருஷம் கழிச்சி, இவரிடம் இனி முயற்சி பண்ணவேண்டாம்னு வேற இயக்குநரிடம் சேர்ந்துட்டேன். திடீர்னு அவரே கூப்பிட்டார். கதிர்சாரோடு என்னோட முதல் படம் “அபியும் நானும்”. தொடர்ந்து “சேவல்”, “இனிது இனிது”, சூர்யாவோட “சிங்கம்” , “சிங்கம்2”, “மன்மதன் அம்பு”, ”பயணம்”, பூஜைன்னு கதிர் சாரிடமிருந்து நிறைய கத்துக்கிட்டேன். 

விஜய் ஆண்டனியுடனான அறிமுகம்? 

“இந்தியா பாகிஸ்தான்” படத்தோட ஒளிப்பதிவாளர் ஓம் என்னோட நண்பர். அவரோட அண்ணன் ஆனந்த் தான் இயக்குநரும் கூட. நண்பர்களா சேர்ந்து வேலை செஞ்சோம். படத்துக்கான முதல் காட்சி செட்டுல தான் ஷூட்டிங். அன்று தான் எனக்கும் விஜய் ஆண்டனி சாருக்குமான முதல் அறிமுகம். படம் முடியும்போது, “ சக்தி.. சைத்தான் படத்துக்கும் நீங்க தான் கலை இயக்குநர்”னு விஜய் ஆண்டனி சார் சொன்னார்.  “இந்தியா பாகிஸ்தான்” படத்துல அப்படி என்ன பண்ணேனு தெரியலை, ஆனா சார் ரொம்ப இம்ப்ரெஸ் ஆகிட்டார். ஏன்னா, கலை இயக்கத்துக்காக அதிகமா செலவு பண்ணமாட்டேன். ஸ்கிர்ப்ட் சொல்லும்போதே வரைஞ்சு காட்டிடுவேன். இப்படித்தான் இருக்கும்னு ஒவ்வொரு சீனுக்கும், செட்டுக்கும் வரைஞ்சிடுவேன். அது அவங்களுக்கு எளிதா இருக்கும். அதுக்கேத்தமாதிரி பட்ஜெட்டுக்குள் பண்ணிடலாம். 

சைத்தான் படத்துல் அமைந்த கலை இயக்கம் பற்றி சொல்லுங்க? 

சைத்தான் படத்துக்காக முதலில் எடுத்த காட்சி... விஜய் ஆண்டனியை கிட்டி ஹிப்நாட்டிசம் பண்ணுறது தான். ஏவிஎம்ல் ஷூட்டிங் நடந்துச்சி. ரொம்ப மெனெக்கெட்டு அந்த காட்சியை படமாக்கினோம். ஷூட்டிங்கில் இருந்தது விட, திரையில் பார்க்கும் போது ரொம்ப அழகா வந்தது.  அதுமாதிரி, 50களில் நடக்கும் ஷர்மா காட்சிகள் கேரளாவில் படமாக்குனோம். முக்கியமா இந்தப் படத்துல ஒளிப்பதிவுக்காக லைட்டிங் வைக்காம, செட் ரெடிபண்ணும்போதே லைட்டிங் செட் பண்ணியும் கொடுத்துட்டேன். தனியா லைட்டிங் செட் பண்ணனும்னு அவசியமும் இல்லை. க்ளைமேக்ஸ் காட்சிகளில் எக்ஸ்ட்ரா லைட்டுகள் எதுவுமே பயன்படுத்தாமல் மோனோ லைட்டிலேயே முடிச்சோம். அதுனால ரொம்ப எதார்த்தமா அமைஞ்சது.   இந்தப் படத்துல எனக்கு ரொம்ப பிடிச்சது, ஷர்மாவோட வீடு தான். வீட்டோட காம்பவுண்ட் சுவரை மட்டும் 1950க்கு ஏத்தமாதிரி செட் போட்டோம். அப்புறம் 2016க்கு ஏத்தமாதிரி உடைஞ்சி, பாழடைஞ்ச மாதிரி இரண்டாவது செட். இரண்டுமே சேலஞ்ச் தான். ஆனாலும் விரும்பி பண்ணதுனால ரொம்ப கஷ்டமா தெரியலை.

கலை இயக்கம், ஒளிப்பதிவாளரோடு ஒத்துப்போறது சில நேரங்களில் சிக்கலாகுமே? 

உண்மை தான், ஆனா ஒளிப்பதிவாளர் பிரதீப்புக்கும் எனக்குமான ஒற்றுமை ஷூட்டிங்கிலேயே தொடங்கிடுச்சி. என்னோட அனைத்து வேலைகளையுமே வரைஞ்சி காட்டிடுவேன். என்னோட பலமே என்னோட ஓவியம் தான். அதுனால எங்களுக்குள் எந்த சிக்கலும் வந்ததே இல்லை.  இந்தப் படத்துல ஒவ்வொரு சீன்லயும் கலை இயக்கம் இருக்கும். ஒரு காட்சியில் விஜய் ஆண்டனிக்கு மருந்து கொடுத்து, கட்டிவைப்பாங்க. தினேஷுக்குள்ள முன் ஜென்ம ஷர்மா கதாபாத்திரம் வரும்போது பலசாலியாகிடுவான். அவனை இரும்பு சங்கலியில் கட்டிவைப்பது, அதற்கான அறை அமைப்புனு எல்லா காட்சிக்குமே மெனக்கெட்டோம். எப்போதுமே நான் இரண்டு விஷயங்களை மட்டும் தான் ஃபாலோ பண்ணுவேன். 

 வடிவேலு சொல்லுற மாதிரி எதையும் ப்ளான் பண்ணி பண்ணனும். 

அந்த ப்ளானுக்கு என்னோட ஓவியத்தை பயன்படுத்தணும். 

விஜய் ஆண்டனி பற்றி சொல்லுங்க? 

ரொம்ப பாசிட்டிவான மனிதர். எதையுமே வேணாம், நடக்காதுனு நெகட்டிவா சொல்லவே மாட்டார். தயாரிப்பாளராகவும் விஜய் ஆண்டனி சார் எதையும் மறுக்கவில்லை. அவர் சொல்லுற ஒரே வார்த்தை, “ இது படத்துக்கு எது சரியா இருக்குமோ, அதை பண்ணுங்க சார்” னு சொல்லிட்டி போய்ட்டே இருப்பார். எப்போ பேசுனாலும் படம் செம, ரொம்ப நல்லா வந்துருக்குன்னு பாராட்ட மட்டும் தான் செய்வார். 

“குற்றம் 23” எப்போ பாஸ் ரிலீஸ்? 

இயக்குநர் அறிவழகனோடு இரண்டாவது படம். இந்த மாதம் ரிலீஸ் பண்ணவிருப்பதா சொல்லியிருக்காங்க. அவரோடு ஆறாதுசினம் பண்ணும்போது, “ சின்ன பட்ஜெட் தான், அதுக்கு ஏத்தமாதிரி பண்ணுங்க. செட் கொஞ்சம் நல்லா இருக்கணும்”னு சொன்னார்.  படத்தோட மொத்த செலவுமே ஒரு பென்சில் தான் சார், பென்சில்ல வரைஞ்சி டெமோ காட்டிடுறேன். பிடிக்கலையா, 1ரூபா இரப்பர்ல அழிச்சிடலாம்னு சொன்னேன். அந்த இடத்துல தான் அறிவழகன் இம்ப்ரெஸ்ஸாகிட்டார். அதுனால தான் அருண்விஜய்யோட “குற்றம் 23” படத்துலயும் என்னை கலை இயக்குநராக்கிட்டார். அறிவழகன் சாரோட ஸ்பெஷலே நாம வேலையில் எதையுமே தட்டிகழிக்காம அப்படியே பயன்படுத்துவார். நாம பண்ணுற வேலைக்கான மரியாதை அவரிடம் நிறையவே கிடைக்கும். 

இவ்வளவு பாசிட்டிவா இருக்கீங்களே...எப்படி? 

“பசங்க” படத்துல அன்பு.. அன்புனு கைத்தட்டுவாங்கல்ல, அதுமாதிரி தான் என் வாழ்க்கையில எல்லாமே பாசிட்டிவ் தான். அதுனால தான் நானும் ரொம்ப எனர்ஜியா இருக்கேன். சினிமா இல்லைன்னா நான் இவ்வளவு பாசிட்டிவா இருப்பேனானு தெரியலை.   அலெக்ஸாண்டர் பற்றி நிறைய படிச்சிருப்போம். அவர் நினைச்சதெல்லாத்தையும் ஜெயிச்சிருக்கார். அதை அப்படியே என்னோட ஆர்ட் டைரக்‌ஷனோட கனெக்ட் பண்ணிப்பேன். யாரோட பேசுனாலும் புதுசா எதும் தெரிஞ்சிக்கிட்டா என்னோட வேலையோடு தான் முதலில் இணைத்து வச்சி யோசிப்பேன். எந்த ஒரு விஷயம்னாலும் நடக்குதோ, நடக்கலையோ அதுக்காக நிச்சயம் மெனக்கெடுவேன். எனக்கு எல்லா நேரமும் நல்ல நேரம் தான், சாப்பாடு விஷயத்தில் எல்லா தினமும் எனக்கு ஞாயிற்றுக்கிழமை தான்.  இதுக்கெல்லாம் என் குடும்பம் தான் காரணம். என் அம்மா கிட்ட, நான் வேலை செய்யப்போற படத்துக்கான டிராயிங் எல்லாத்தையுமே முன்னாடியே காட்டிடுவேன். அதுனால நான் செய்யுற வேலை அவங்களுக்குத் தெரியும். அதுனால தியேட்டர்ல படம் பார்க்கும் போதே, என்ன கட்டிப்பிடிச்சி முத்தம் கொடுப்பாங்க. என்னோட் சந்தோஷத்துக்கு என் குடும்பமும், என் குருநாதர் கதிர் சாரும் தான் பக்கபலம். 

பி.எஸ்.முத்து