Published:Updated:

தனி ஒருவனின் தெலுங்கு வெர்ஷனும் ப்ளாக்பஸ்டரா? துருவா படம் எப்படி?

தனி ஒருவனின் தெலுங்கு வெர்ஷனும் ப்ளாக்பஸ்டரா? துருவா படம் எப்படி?
தனி ஒருவனின் தெலுங்கு வெர்ஷனும் ப்ளாக்பஸ்டரா? துருவா படம் எப்படி?

ஹீரோ ராம் சரணின் முந்தைய இரண்டு படங்களான கோவிந்துடு அந்தரிவாடிலே, புரூஸ் லீ, இயக்குநர் சுரேந்தர் ரெட்டியின் கிக் 2 ஆகிய படங்கள் தோல்வியடைந்தது. இதனை சரிகட்ட இருவரும் கையில் எடுத்தது, தமிழில் சென்ற வருட ப்ளாக்பஸ்டர் ஹிட்டான தனி ஒருவன். செம க்ரிப்பான த்ரில்லர் சினிமா, இப்போது 'துருவா'வாக தெலுங்கு பேசியிருக்கிறது. "நீ ஸ்நேகிதுடு எவரோ தெலிஸ்தே, நீ கேரக்டர் தெலுஸ்தோந்தி; நீ செத்ரு எசேவரோ தெலிஸ்தே, நீ கெபாசிட்டி தெலுஸ்தோந்தி" என்ற லைன் தொடங்கி, தமிழில் நாம் பார்த்த எல்லா விஷயங்களும் அதே வடிவில் அப்படியே படத்திலிருக்கிறது. பெரிதாக எந்த மாற்றமும் இல்லாமல், அதே கதை, அதே வசனம், அதே டெய்லர், அதே வாடகை என மறுஆக்கம் செய்திருக்கிறார் இயக்குநர் சுரேந்தர் ரெட்டி. 'துருவா' இருவருக்கும் கை கொடுத்திருக்கிறானா?

துருவா படத்தின் கதை (இதுவரை தனி ஒருவன் பார்க்காதவர்களுக்காக இந்த அறிமுகம், பார்த்தவர்கள் அடுத்த பத்திக்குச் செல்லலாம்) இது தான். எந்த ஒருவனை அழித்தால் நூற்றுக் கணக்கான க்ரிமினல்கள் அழிவார்களோ அந்த ஒருவனை தேர்ந்தெடுத்து அழிப்பதே ஐ.பி.எஸ் துருவாவின் (ராம் சரண்) லட்சியம். தனக்கான எதிரியாக துருவா தேர்ந்தெடுக்கும் தனி ஒருவன் தான் சித்தார்த் அபிமன்யூ (அர்விந்த் சுவாமி). எப்படி அர்விந்த் சுவாமியை ராம் சரண் அழிக்கிறார் என்பது தான் கதைச் சுருக்கம். 

பொதுவாக ரீமேக் என்றதும் பல இயக்குநர்கள் செய்யும் தவறு, இதை நம்ம ஊருக்கு ஏற்றது போல சில மாற்றங்கள் செய்திருக்கிறேன் என குடவுனில் இருக்கும் அரிசி மூட்டையை எடுத்து வந்து வீட்டில் வைப்பது தான். ஆனால், துருவாவில் பெரிய ப்ளஸ் ஒரிஜினல் கதை, திரைக்கதையில் கைவைக்காமல் கையாண்டிருப்பது. அந்தக் கதைக்கு அப்படிப்பட்ட மாற்றம் தேவைப்படவும் இல்லை என்பதை உணர்ந்து படமாக்கியிருக்கிறார் சுரேந்தர். அப்படியானால் எந்த மாற்றமும் இல்லையா? என்று கேட்டால்... இருக்கிறது. அது எதுவும் கதையை பாதிக்காத விதத்தில் இருக்கிறது. உதாரணமாக, நயன்தாராவும் ஜெயம்ரவியும் முதன் முதலில் இரயிலில் சந்திக்கும் காட்சி, துருவாவில் வேறு சூழல் ஒன்றில், ரகுல் ப்ரீத் சிங்கும், ராம் சரணும் பேருந்தில் சந்திப்பது போல இருக்கும். இது போல இன்னும் சில சின்னச் சின்ன மாற்றங்கள். 

படத்தில் இன்னொரு சிறப்பு, கேஸ்டிங். நயன்தாராவுக்கு பதில் ரகுல் ப்ரீத் சிங் ரொமான்ஸுக்கும், தம்பிராமையாவுக்கு பதில் கிருஷ்ண முரளி காமெடிக்கும் என தங்கள் ஏரியாவை அழகாகவே பூர்த்தி செய்திருக்கிறார்கள். அர்விந்த் சுவாமிக்கு பதில் யாரையும் தேடாமல் அர்விந்த் சுவாமியையே பயன்படுத்தியதற்கு ஸ்பெஷல் பாராட்டுகள். அவ்வளவு பலமான ரோலுக்கு மாற்று கண்பிடிக்க யோசிக்காமல், பெயர் உட்பட அப்படியே படத்தில் பயன்படுத்தியிருக்கிறார்கள். 'ஒரிஜினல்' க்ரியேட்டரான ராஜாவின் 'வெல் க்ராஃப்ட்டட்' கதைக்கும் கதாப்பாத்திரத்திற்கும் கிடைத்திருக்கும் மரியாதை இது. 

ராம் சரண் நடிப்பில் இன்னும் முன்னேற்றம் வேண்டும் என்றாலும், அவரது முந்தைய படங்களைவிட நடிப்பில் இது ஒரு படி மேல் தான். தன்னைக் காதலிக்க சொல்லி துரத்தும் ரகுலிடம் "என் லட்சியமே வேற..." என பொறுமையாக எடுத்துச் சொல்வது, சிக்ஸ் பேக் உடலுடன் விரைப்பான போலீஸாக நடப்பது வரை எல்லாம் நன்றாகவே செல்கிறது. ஆனால், தன்னைப் பற்றிய விவரம் எல்லாம் அர்விந்த் சுவாமிக்கு எப்படி தெரிகிறது எனக் குழம்பும் போதும், கண்ணாடியில் காதலை எழுதி ப்ரெப்போஸ் செய்யும் போதும் எனப் பல இடங்களில் முகத்தில் வரவேண்டிய எக்ஸ்பிரஷன்கள் மட்டும் வருவேணா என்கிறது. மற்றபடி ஒரு ஹீரோவாக படத்துக்கு எந்த பாதகமும் செய்யாமல் இருக்கிறார். ராம் சரண் விட்ட நடிப்பு எல்லாவற்றையும் தன் குரூரமான ஒற்றை சிரிப்பால் அசால்டாக டேக் ஓவர் செய்கிறார் அர்விந்த் சுவாமி. நடித்த ரோலே என்றாலும், அதே தீமையை ரீக்ரியேட் செய்து வெல்ல வைத்திருக்கிறார் சித்தார்த் அபிமன்யு சாரி... அர்விந்த் சுவாமி. லவ் யூ ஸ்வீட் ஹார்ட்!

தனி ஒருவனுக்கு பலம் சேர்த்த இன்னொரு விஷயம் ஹிப் ஹாப் ஆதியின் இசை. படத்தில் இடம்பெறும் தீமை தான் வெல்லும் பாடலின் தெலுங்கு வெர்ஷன் தவிர மற்ற நான்கு பாடல்களுமே ஃப்ரெஷ் ட்யூன்ஸ். வழக்கமாக கலர்ஃபுல்லாக கண்ணைக் கூசச் செய்யும் தெலுங்கு சினிமா பாணியிலிருந்து விலகி பி.எஸ்.வினோத் கேமிரா கொடுத்திருக்கும் ஃப்ரெஷ் லுக் செம. 

எந்த மாற்றமும் இல்லாமல் எடுத்திருப்பது வியப்பான விஷயம் தான். ஆனால், 'வாளால வெட்டியுமா கொசு சாகலை?' என்கிற காமெடி முதற்கொண்டு அப்படியே வைத்திருந்தது நெருடல். வசனங்களில் மட்டுமாவது கொஞ்சம் புதிதான விஷயங்களைச் சேர்த்திருந்தால் இன்னும் கூடுதல் பலம் சேர்ந்திருக்கும். எது எப்படியோ ராம் சரண் கரியரை தனி ஒருவனாக நிமிர்த்திய பெருமை 'துருவா'வுக்கு உரியது. அதற்கு முக்கிய காரணியான இயக்குநர் சுரேந்த ரெட்டிக்கும் வாழ்த்துகள். மகன் ராம் சரண் நடித்த ரீமேக் ஹிட்டாகிவிட்டது, அப்பா சிரஞ்சீவி நடிக்கும் கத்தி படத்தின் ரீமேக் 'கைதி நம்பர் 150' எப்படி இருக்கும் என பொறுத்திருந்து பார்க்கலாம்!

பி.கு: தெலுங்கில் வெளியாகி பெத்த ஹிட்டான 'கிக்' படத்தை தான் ராஜா 'தில்லாலங்கடி'யாக தமிழில் ரீமேக் செய்திருப்பார். அந்த 'கிக்' படத்தை இயக்கியது சுரேந்தர் ரெட்டி. இப்போது ராஜாவின் 'தனி ஒருவன்' படத்தை துருவாவாக ரீமேக் செய்து ஹிட்டும் ஆக்கி நிகர் செய்திருக்கிறார் சுரேந்தர் ரெட்டி.