Published:Updated:

ரசிகர்களிடம் 40 லட்சம் கேட்கிறார் நடிகை ரோகிணி!

ரசிகர்களிடம் 40 லட்சம் கேட்கிறார் நடிகை ரோகிணி!
ரசிகர்களிடம் 40 லட்சம் கேட்கிறார் நடிகை ரோகிணி!

ரசிகர்களிடம் 40 லட்சம் கேட்கிறார் நடிகை ரோகிணி!

நடிகை ரோகிணி இயக்குநராக களமிறங்கிய படம் "அப்பாவின் மீசை" . இயக்குநர் சேரன் தயாரித்த இந்தப் படத்தில் தென்னகத்தின் முக்கிய நடிகர்களான நாசர், பசுபதி, சேரன், சலீம் குமார் ஆகியோரும் பிரபல முன்னணி நடிகை நித்யா மேனனும் நடித்திருந்தனர். இந்தப் படத்தை இயக்குநர் சேரன் தனது தாமினி ப்ரொடக்‌ஷன்ஸ் சார்பில் தயாரித்தார். இந்தக் காலகட்டத்தில்தான் அவரின் சொந்த வாழ்க்கையிலும் தொழிலிலும் பல்வேறு பிரச்சினைகள் ஏற்பட்டன. இந்தப் படத்திற்குப் பல்வேறு பைனான்சியர்களும் கோர்ட்டில் தடை வாங்கியிருந்தனர். இந்நிலையில் முழுவதுமாக எடுக்கப்பட்டுவிட்ட இந்தப்படத்தின் பிற தயாரிப்புப் பணிகள் மட்டுமே பாக்கி உள்ளது. இதை இயக்கி உள்ள நடிகை ரோகிணியே படத்தை வெளியிட தீர்மானித்து, அதற்குத் தேவையான பணத்தை 'க்ரௌட் ஃபண்டிங்' மூலம் திரட்ட உள்ளார். விஸ்பெர்ரி என்கிற இணையதளத்தின் மூலம் தொடங்கியுள்ள நடிகை ரோகிணி இது குறித்துக் கூறும் போது... 

"பாலையா என்கிற சிறுவன் குறித்த படம்தான் இது.காஞ்சிபுரம் அருகே ஒரு சிறிய கிராமத்தில் வசிக்கும் பாலையா கொல்கத்தாவின் இனிப்புத் தொழிற்சாலைக்கு வேலைக்குச் செல்கிறான். குறிப்பிட்ட காலம் வேலை செய்து விட்டு சேமித்த கூலியுடன் மகிழ்ச்சியுடன் ஊருக்குத் திரும்புகிறான். அப்போது அவனது பணத்தை யாரோ திருடிவிடுகிறார்கள். திருடுக்கொடுத்த பணத்தை மீட்காமல் ஊருக்குப் போகமாட்டேன் என்று பணத்தைத் தேடிப் போகிறான். அதுதான் கதை. 

கிராமங்களில் மீசை என்பது பெருமைக்குரிய ஒன்றாகப் பார்க்கப்படுகிறது. பாலையா தன்னை அப்பாவின் பெருமைக்குரிய மீசைப் போலக் கருதுகிறான். இந்தப் படமும் முழுவதுமே தன் தகப்பனின் மீசையாகத் தன்னைக் கருதும் பாலையா தனக்கு நேரும் அவமானம் தன் தந்தைக்கு நேரும் அவமானமாகக் கருதுகிறான். நம்மீது நம் அப்பாக்கள் வைத்திருக்கும் செல்வாக்கை நிரூபிக்கும் வகையில் இருக்கும். நாம் அனைவருமே வாய்ப்புக் கிடைக்கும் போதெல்லாம் நம் அம்மாவைப் பற்றியும் அவர் நம் மீது வைத்திருக்கும் அன்பைப் பற்றியுமே பேசி வந்திருக்கிறோம். தந்தையின் அன்பை என்றுமே சரியாக நாம் வெளிக்காட்டியதில்லை. காரணம் பெரும்பாலும் நம் அப்பா நமக்கு அறிவுரைக் கூறிக்கொண்டே இருப்பதனால் இருக்கலாம். அறிவுரைகூறுவதைத் தாண்டியும் நம் தந்தைகள் நம்மை நேசித்தவற்றை இப்படத்தில் காட்டியுள்ளேன். 

200 படங்களுக்கும் மேல் நடித்துள்ள என் வாழக்கையில் சினிமாப் பெரும்பங்கை எடுத்துக் கொண்டுள்ளது. கேமராவுக்கு முன்னால் எத்தனையோ கதைகளுக்காக நடித்து வந்த நான் இனி என் கதைகளை மக்களுக்குச் சொல்ல வேண்டும் என்று விரும்பினேன். சினிமாவை இயக்கத் தொடங்கிய பின்னர்தான் தெரியவந்தது இது எனக்கு ஆத்ம ரீதியான தொழில் என்று. எழுத்தில் எழுதிய கதையைப் படமாக மாற்றும் அனுபவம் மிகச்சிறந்ததாகவே இருந்தது. அதிலும் மனித உணர்வுகளை இசையாக மாற்றுவது அற்புதமான அனுபவமாக இருந்தது. திரையில் பாத்திரங்கள் காட்டியுள்ள முகப் பாவனைகளுக்கு ஏற்ற இசையை அந்தக் காட்சிகளுக்கு ஏற்ற சூழலில் பொருந்துவதைப் போன்ற இசையைச் சேர்ப்பது உண்மையில் மிக மிக அழகான அனுபவம். 

ஒரு நடிகையாக என் ரசிகர்களிடம் இருந்தும் ஆதரவையும்,அன்பையும் பெற்றுள்ளேன். என் வாழ்க்கைப்பயணத்தில் அவர்களும் ஒரு பங்கு என்றே சொல்லலாம். நான் தொடங்கிய ஒரு ப்ராஜெக்ட் ஒரு சின்னத் தடங்கலில் நிற்கிறது என்கிற போது அவர்களின் நினைவுதான் வந்தது. அதையெல்லாம் விட என் புதிய அவதாரத்தில் அவர்களின் பங்கும் இருக்கவேண்டும் என விரும்புகிறேன். அதற்காகவே இதைத் தேர்ந்தெடுத்தேன்" என்றார். 

மொத்தம் 40 லட்சம் தேவை என அறிவித்துள்ள நிலையில் நேற்று(09/12/16) ஒரு நாளிலேயே 1,40,000 ஆயிரம் ரூபாய் சேர்ந்து விரைவில் அப்பாவின் மீசை வெளியாகும் என்கிற நம்பிக்கையை விதைத்துள்ளது.

-வரவனை செந்தில் 
 

அடுத்த கட்டுரைக்கு