Published:Updated:

ரஜினி கலக்கிய பிறமொழி திரைப்படங்கள்! #HBDRajini

ரஜினி கலக்கிய பிறமொழி திரைப்படங்கள்! #HBDRajini
ரஜினி கலக்கிய பிறமொழி திரைப்படங்கள்! #HBDRajini

சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் தமிழகம் மட்டுமின்றி இந்தியா முழுவதும் கொண்டாடப்படுவதற்குக் காரணம் பல மொழித் திரைப்படங்களிலும் அவர் இட்ட அடித்தளமேயாகும். தமிழ் மட்டுமின்றி தெலுங்கு, கன்னடம், மலையாளம், இந்தி, வங்காளம் எனப் பல மொழிகளின் நேரடிப் படங்களிலும் நடித்து சாதனை புரிந்திருக்கிறார்.

'அவள் ஒரு  தொடர்கதை' திரைப்படத்தில் ஜெய்கணேஷ் நடித்த கதாபாத்திரத்தை 1976-ல் வெளியான ‘அந்துலேனி கதா’ என்ற தெலுங்குப் படத்தில் மெருகூட்டி நடித்தார். படமும் அங்கு வெள்ளிவிழா கண்டது. 'நிழல் நிஜமாகிறது' படத்தின் கமல் கதாபாத்திரத்தை அதற்கு முன்பே ’சிலக்கம்மா செப்பிந்தி’ என்ற தெலுங்குப் படத்தில் நடித்து வெற்றி கண்டார். கன்னடத்தில் வெளியாகி வெற்றிபெற்ற 'சகோதர சவால்' திரைப்படம் தெலுங்கில் 'அண்ணா தம்முல சவால்' என்ற பெயரில் ரீமேக் செய்யப்பட்டு பெரும் வெற்றி கண்டது. இப்படத்தில் மகேஷ்பாபுவின் தந்தை கிருஷ்ணாவுடன் இணைந்து ரஜினி நடித்திருப்பார். இதே போன்று தமிழில் ஹிட் அடித்த திரைப்படங்கள் தெலுங்கில் டப் செய்யப்பட்டு, அங்கும் வெற்றி கண்டன. அம்மா எவரிகைன அம்மா (அன்னை ஓர் ஆலயம்), மாயதாரி கிருஷ்ணுடு (அன்புக்கு நான் அடிமை) போன்ற பல படங்கள்  தெலுங்கில் டப்பிங் செய்யப்பட்டு நல்ல வசூல் கண்டன. 1995-ம் ஆண்டு வெளியாகி தமிழில் பெரும் வெற்றிகண்ட ’பாட்ஷா’ திரைப்படம், தெலுங்கில் டப் செய்யப்பட்டு அதே பெயரில் வெளியானது. இப்படம் நேரடித் தெலுங்கு சூப்பர் ஹிட் படங்களுக்கு இணையான வெற்றிபெற்று அங்கே அதிர்வலைகளை ஏற்படுத்தியது.

1979-ம் ஆண்டிலேயே முன்னாள் ஆந்திர முதல்வர் என்.டி.ராமராவுடன் 'டைகர்' படத்தில் ரஜினி நடித்திருந்தார். இத்திரைப்படம்தான் ரஜினிகாந்த் தனது கேரியரில் நடித்த 50-வது படம் என்பது குறிப்பிடத்தக்கது. ரஜினியின் எளிமையும், அன்பும் என்.டி.ராமராவிற்கு மிகவும் பிடித்துப் போனது. இந்த அன்பின் வெளிப்பாடாக 10.08.95 அன்று, திருமலை திருப்பதி தேவஸ்தான போர்டு உறுப்பினராக ரஜினிக்கு அப்போது முதல்வராக இருந்த என்.டி.ஆர். பதவிப்பிரமாணம் செய்து வைத்தார். இப்போது ஆந்திர முதல்வராக இருக்கும் சந்திரபாபு நாயுடு, தெலுங்கானா முதல்வர் சந்திரசேகர் ராவ் போன்றவர்கள் மத்தியிலும் ரஜினி அதி முக்கியத்துவம் பெற்றார்.

ரஜினி கலக்கிய பிறமொழி திரைப்படங்கள்! #HBDRajini

தமிழில் வெளியாகி வசூலில் பெரும் சாதனை படைத்த 'நாட்டாமை' திரைப்படம் பல மொழிகளிலும் ரீமேக் செய்யப்பட்டது. இப்படத்தின் தெலுங்குப் பதிப்பான 'பெத்தராயுடு' திரைப்படத்தில் மோகன் பாபு கதாநாயகனாக நடித்தார். அவருடன் கொண்ட நட்பின் காரணமாக, நடிகர் விஜயகுமாரின் பாத்திரத்தில் கெளரவ வேடத்தில் நடிகர் ரஜினிகாந்த் நடித்தார். இப்படமும் அங்கு சூப்பர் டூப்பர் ஹிட் ஆனது. திருப்பதியில் நடந்த இப்படத்தின் பிரமாண்டமான வெற்றிவிழா கூட்டத்தில் ஆந்திர முதல்வர் சந்திரபாபு நாயுடு பேசிய பிறகு, கடைசிப் பேச்சாளராக பேசுகிற அந்தஸ்து ரஜினிக்கே அளிக்கப்பட்டது.

தொடர்ந்து டப் செய்யப்பட்டு வெளியான படையப்பாவின் 'நரசிம்மா', 'சிவாஜி', 'ரோபோ', 'கபாலி' போன்ற திரைப்படங்களும் வசூல் ரீதியாக மாபெரும் சாதனை படைத்தன. தெலுங்கு மட்டுமின்றி கன்னடத்தில் வெளியான ’சகோதர சவால்’, 'ப்ரியா' போன்றவையும் வெற்றி பெற்றன. கேரளாவில் வெற்றி பெற்ற 'அலாவுதீனும் அற்புத விளக்கும்', 'கர்ஜனம்' போன்றவை ரஜினி நடித்த நேரடி மலையாளத் திரைப்படங்கள். இம்மாதிரியான திரைப்படங்களின் வெற்றி, தென்னிந்தியாவில் ரஜினிகாந்திற்கு மிகப்பெரிய மார்க்கெட் ஏற்படுத்திக் கொடுத்தன.

அதுவரை தென்னிந்தியப் படங்களில் மட்டும் தோன்றிவந்த ரஜினிகாந்த், 1983-ல் 'அந்தா கானுன்' திரைப்படம் மூலம் இந்தியிலும் அதிரடிப் பிரவேசம் செய்தார். அதுவரை சிவப்பான தோற்றம் கொண்டவர்களையே கதாநாயகர்களாகப் பார்த்த பாலிவுட் ரசிகர்களை, தன் வேகத்தாலும் ஸ்டைல் நடிப்பாலும் கவர்ந்து வெற்றி கண்டார். இப்படம் பாலிவுட்டில் வெள்ளிவிழா கொண்டாடியது. இதற்கு அடுத்த ஆண்டில் வெளியான மலையூர் மம்பட்டியானின் இந்திப் பதிப்பான கங்குவாவும் அங்கே வெற்றி பெற்றது. மூன்று வேடங்களில் நடித்து எந்த பாலிவுட் நாயகனும் அதுவரை பெறாத மாபெரும் வெற்றியை மூன்று முகத்தின் இந்தி வெர்சனான ‘ஜான் ஜானி ஜனார்த்தன்’ படத்தின் மூலம் கண்டது. 95-ம் ஆண்டு வெளியான 'பாக்ய தேவதா' என்ற வங்காள மொழிப் படத்தில் கெளரவ வேடத்தில் நடித்தும் சாதனை புரிந்துள்ளார் ரஜினிகாந்த். 88-ம் ஆண்டு வெளியான 'பிளட் ஸ்டோன்' என்ற திரைப்படம் மூலம் ஹாலிவுட்டிலும் தனது காலடியைப் பதித்துள்ளார்.

ரஜினி கலக்கிய பிறமொழி திரைப்படங்கள்! #HBDRajini

பாலிவுட்டில் இரண்டு அல்லது மூன்று கதாநாயகர்கள் இணைந்து நடிப்பது அன்று முதல் இன்றுவரை சர்வசாதாரணமாக நிகழக்கூடியது. இது மாதிரியான திரைப்படங்களில் இரண்டு கதாநாயகர்களுடன் இணைந்து நடித்தாலும், தன் முக்கியத்துவம் குறையாத நல்ல பாத்திரங்களைத் தேர்ந்தெடுப்பதில் சூப்பர் ஸ்டார் கவனமாக இருந்தார். உத்தர் தக்ஷின், ஹம் போன்ற படங்களில் நடித்து வெற்றி பெற்றார். 

தென்னிந்தியாவிலிருந்து சென்று இருபதுக்கும் மேற்பட்ட இந்திப் படங்களில் நடித்து வெற்றி பெற்று பேர் வாங்கிய ஒரே 'நடிகர்' ரஜினி மட்டுமே! சிவாஜி, ரோபோ போன்ற இந்தி டப்பிங் படங்களும் வசூலில் பட்டையைக் கிளப்பின. சென்னை எக்ஸ்பிரஸ்' படத்தில் ரஜினியைப் பெருமைப்படுத்தும் விதமாக, ஷாரூக் கான் லுங்கி டான்ஸ் பாடலை வைத்து 'தலைவா' என்று ஆர்ப்பரித்து மகிழ்ந்தார். இதன் பிறகு ட்விட்டரிலும் பல முறை சூப்பர் ஸ்டாரை 'தலைவா' என்றழைத்து கெளரவப்படுத்தியிருக்கிறார்.

ரஜினிகாந்த் தமிழகம் தாண்டி இந்திய அளவில் சூப்பர் ஸ்டாராகக் கொண்டாடப்படுவதற்கு இதுபோன்ற படங்களின் வெற்றியும், அவரது உழைப்பும்தான் காரணம். 66-வது பிறந்தநாள் வாழ்த்துகள் 'தலைவா'!

- நா.ரஜினி ராமச்சந்திரன்