Published:Updated:

'மிஸ் யூ அஸ்வின்!' - கலங்கும் பிரியா ஆனந்த்

Vikatan Correspondent
'மிஸ் யூ அஸ்வின்!' - கலங்கும் பிரியா ஆனந்த்
'மிஸ் யூ அஸ்வின்!' - கலங்கும் பிரியா ஆனந்த்

கன்னட படமான 'ராஜ்குமாரா' படத்தின் ஷூட்டிங்கிற்காக கோவாவில் இருந்த நடிகை பிரியா ஆனந்திடம் பேசினோம், 

ஒரே பெண்ணான உங்களை பெற்றோர்கள் எப்படி பார்த்துக் கொள்கிறார்கள்?

என் அப்பா, அம்மாவுக்கு நான் ஒரே மகள். பாசம், அக்கறை, அன்பு என அத்தனையும் என்மீது தான் காட்டுவாங்க. ஆனா, இதுவரைக்கும் என்னோட முயற்சிகளுக்கு கட்டுப்பாடோ, தடையோ விதிச்சது கிடையாது. எந்த படத்தின் ஷூட்டிங்கிற்கும் அம்மாவை அழைத்து வந்ததது கிடையாது. அப்பா என்னுடைய படங்களில் புக்கிங்கில் தலையிடுவது கிடையாது. இப்போ வரைக்கும் நான் தனியாகத்தான் ஷூட்டிங் போயிட்டு வரேன். படத்தின் கதைகளைக் கேட்டு ஓ.கே செய்கிறேன். எனக்கு முழு சுதந்திரம் கொடுத்திருக்காங்க. பொத்தி பொத்தி வளர்த்தால் மட்டும் போதாது. உலகத்தில் வாழ்வதற்கான விஷயங்களை சொல்லிக் கொடுக்கவும் வேண்டும். என் பெற்றோர்கள் லக்கி என்பதைவிட, நான் லக்கி என்றே நினைக்கிறேன்.

நீங்கள் நடித்தப் படங்களிலேயே உங்களுக்கு மிகவும் பிடித்த ரோல்?

'எதிர்நீச்சல்', 'வணக்கம் சென்னை' இரண்டு படங்களுமே பிடிக்கும். அதில் என்னோட கதாபாத்திரம், டிரெஸிங் எல்லாமே நல்லா அமஞ்சது. சிவகார்த்திகேயன், சிவா இந்த இரண்டு சிவாவும் நல்ல நண்பர்கள்.

சிவகார்த்திகேயனுடன் இப்போதும் பேசிவருகிறீர்களா?

ஆமா. நாங்க இரண்டு பேருமே நல்ல நண்பர்கள். அவர் திறமையினால் இப்போது நல்ல உயரத்துக்குப் போயிட்டு இருக்கார். இன்னும் அவர் உயரத்துக்குப் போகணும். நேரம் கிடைக்கும்போது பேசுவோம்.

இப்போது நீங்கள் நடித்துவரும் படங்கள் பற்றி?

 'கூட்டத்தில் ஒருத்தன்', 'முத்துராமலிங்கம்' கன்னடம், தெலுங்கு என படங்களில் பிஸியாகவே இருக்கிறேன்.

உங்களுக்குப் பிடித்த நடிகர் யார்? யாருடன் இணைந்து நடிக்க ஆசைப்படுகிறீர்கள்?

எனக்கு நவரச நாயகன் கார்த்திக் ரொம்ப ரொம்ப பிடிக்கும். 'அக்னி நட்சத்திரம்' படத்திலிருந்துதான் அவரை அவ்வளவு பிடிக்க ஆரம்பித்தது. நல்ல கதை, கதாபாத்திரம் அவருடைய படத்தில் கிடைத்தால் கண்டிப்பாக அவருடன் நடிப்பேன். அந்த படத்துக்காக ஐ ஆம் வெயிட்டிங். அதே போல ஶ்ரீதேவி மேடம் பிடிக்கும். என்னோட சின்ன வயசுல இருந்தே அவங்களோட ரசிகை நான். ஒவ்வொரு படங்களையும் தவறாமப் பார்த்துடுவேன்.

சமீபத்தில் சோனம் கபூர், 'பெண்களுக்கு எதிரான வன்முறைகள் ஏற்படும்பொழுது பெண்கள் பேச வேண்டும்' என்று சொல்லியிருக்கிறார். உங்கள்  கருத்து?

கண்டிப்பாக பேச வேண்டும். அதற்கு முன்பாக, நமக்குப் பிரச்னை வரும்போது முன்கூட்டியே தடுக்க வேண்டும். அதாவது செய்ய முடியாத காரியங்களுக்கு 'நோ' சொல்லிப் பழக வேண்டும். பிரச்னைகள் ஏற்படும்பொழுது முதலிலேயே அதை தவிர்த்திடுங்கள் அல்லது பொறுமையாக தடுத்திடுங்கள். அப்போதுதான் தேவையில்லாமல் மறுபடியும் அந்த பிரச்னைக்கு ஆளாகாமல் இருப்போம். என்னைப் பொறுத்தவரையில் எனக்குப் பிடிக்காத விஷயத்தை செய்ய மாட்டேன். பிடிக்காத எந்த விஷயத்தையும் ஏற்றுக் கொள்ளவும் மாட்டேன். தப்பு பண்ணியிருந்தா நேர்மையா சொல்லி தண்டனை கொடுக்கணும். 

உங்களுக்கு பிடித்த இரண்டு விஷயங்கள்?

சென்னைக்கு அடுத்தப்படியாக கேரளா பிடிக்கும். சாப்பாட்டு விஷயத்தில் பிரியாணி என்றால் உயிர். இந்த இரண்டு விஷயமும் எப்போதும் சலிக்காது.  

உங்களுடைய அடுத்தக்கட்ட பிளான்?

வாழ்க்கையில் பிளான் செய்றதையே விட்டுட்டேன். நாம என்னதான் முன்கூட்டியே திட்டமிட்டாலும் அது காலத்தின்படி தான் நடக்கும். யாராலும் அதை மாற்ற முடியாது. வாழ்க்கை எனக்குப் பல விஷயங்களை கற்றுக் கொடுத்திருக்கிறது. கனவு, எதிர்பார்ப்பு, எதிர்கால திட்டம் எல்லாவற்றின் மேலும் அதிருப்தி கொள்ளச் செய்திருக்கிறது. இரண்டு வருடங்களுக்கு முன்பு என்னுடைய நெருங்கிய தோழனான ஒரு தம்பியை இழந்தேன். இப்போது, கடந்த மாதம் நவம்பர் 19-ம் தேதி இரவு சாலை விபத்தில் இன்னொரு தம்பி அஷ்வினை இழந்து நிற்கிறேன். அஸ்வினுக்கு 24 வயசுதான். அவனுக்குள்ள என்னென்ன ஆசைகள், கனவுகள் இருந்திருக்கும். அத்தனையும் ஒரே நொடியில் அல்லவா போயிடுச்சு. ஐ மிஸ் யூ அஸ்வின்.

வாழ்க்கையில் திட்டமிடாமல் அப்படியே வாழலாம் என்கிறீர்களா?

என்னைப் பொறுத்தவரையில் அதுதான் சரி என்று நினைக்கத் தோன்றுகிறது. மனிதர்களுடைய வாழ்க்கை மிகவும் குறுகிய காலத்தையே கொண்டது. இறப்பு எப்பொழுது வரும் என்று யாருக்குமே தெரியாது. அதற்குள், பகை, விரோதம் எல்லாம் எதுக்கு. இருக்கும் நாட்களை சந்தோஷமா கழித்துவிட்டுப் போலாமே?. என்னோட அப்பா, அம்மா எவ்வளவோ எனக்கு ஆறுதல் சொல்லிட்டுத்தான் இருக்காங்க. ஆனாலும், மனசு முழுக்க அதைப் பத்தியே யோசிக்க வைக்குது. எவ்வளவுதான் வெளியில சிரிச்சுப் பேசினாலும், இல்லாதவன் மேலதான் யோசனையா இருக்கு. எல்லாருக்கும் சொல்லிக்கிற ஒரே விஷயம், இருக்கிற ஒவ்வொரு நொடியும் சந்தோஷமா வாழுங்க.

-வே.கிருஷ்ணவேணி