Published:Updated:

பெங்களூர் நாட்கள் முதல் தோழா வரை... 2016 ரீமேக்குகளின் ஹிட் அண்ட் மிஸ் கணக்கு! #2016RemakeMovies

Vikatan Correspondent
பெங்களூர் நாட்கள் முதல்  தோழா வரை... 2016 ரீமேக்குகளின் ஹிட் அண்ட் மிஸ் கணக்கு! #2016RemakeMovies
பெங்களூர் நாட்கள் முதல் தோழா வரை... 2016 ரீமேக்குகளின் ஹிட் அண்ட் மிஸ் கணக்கு! #2016RemakeMovies

இந்த வருடம் தமிழில் வெளியான படங்களில் ரீமேக்களும் பல உண்டு. எந்தெந்த மொழிகளிலிருந்து என்னென்ன படங்கள் தமிழில் ரீமேக் செய்யப்பட்டன, அதன் ரிசல்ட் என்ன தெரியுமா? 

பெங்களூர் நாட்கள்:

2014ல் மலையாளத்தின் செம ஹிட் படம் 'பெங்களூர் டேஸ்'. அஞ்சலி மேனன் இயக்கத்தில் நிவின் பாலி, துல்கர் சல்மான், ஃபகத் பாசில், நஸ்ரியா நசிம், பார்வதி, இஷா தல்வார் என மல்டி ஸ்டார் காஸ்ட், மிக அழகான கதை என அத்தனை பேரையும் ஈர்த்தது. கேரளம் தாண்டியும் நல்ல வரவேற்பு கிடைத்தது. உடனே படத்தின் தமிழ் மற்றும் தெலுங்கு ரீமேக் உரிமையை தில்ராஜுவும், பரம் வி.பொட்லுரியும் வாங்கினார்கள். இயக்குநராக பொம்மரில்லு பாஸ்கர் ஒப்பந்தம் செய்யப்பட்டார். துல்கரின் கதாப்பாத்திரத்தில் ஆர்யா என முடிவான பின் மற்ற ரோல்களுக்கு நாக சைத்தன்யா, சமந்தா ஆகியோரை யோசித்தார்கள். சித்தார்த், பிரசன்னா, பரத், நானி, சர்வானந்த் எனப் பலரும் யோசிக்கப்பட்ட நிலையில் இறுதியானது பாபி சிம்ஹா, ராணா, ஸ்ரீதிவ்யா தான். கடைசி வரை நஸ்ரியா ரோலில் நஸ்ரியாவையே நடிக்க வைக்க முயற்சி நடந்தும் திருமணமானதால் நடிக்க மறுத்துவிட்டார் நஸ்ரியா. நஸ்ரியா நடித்த கடைசி படம் அது தான். கேரளா அளவுக்கு இல்லையென்றாலும் தமிழிலும் படம் ஓடியது.

சாஹசம்:

2012ல் த்ரிவிக்ரம் இயக்கத்தில் அல்லு அர்ஜுன், இலியானா நடித்து வெளியான படம் ஜுலாயி. இதன் தமிழ் ரீமேக் தான் சாஹசம். பிரசாந்த் நடிப்பில் அதற்கு முன் வெளியான புலன் விசாரணை 2 எதிர்பார்த்த வெற்றி அடையாததால், கம்பேக் படமாக இருக்கும் என ஜுலாயி ரீமேக்கில் நடித்தார். ஹீரோயின் அமன்டா ஷர்மா ரோலில் நடிக்க முதலில் பேசப்பட்டது தமன்னாவிடம். ஒரிஜினலுக்கு இசையமைத்த தேவி ஸ்ரீ பிரசாத் இசையமைக்க, சக்தி சரவணன் ஒளிப்பதிவு என ஆலோசிக்கப்பட்டு பின்னர் தமன் இசை, ஷாஜி குமார், சௌந்தர்ராஜன் ஒளிப்பதிவு என ஒப்பந்தமானது. படத்தின் தலைப்பு முடிவாகும் முன் அஸ்திரம், மோதிப்பார் என்கிற பெயர்களுடன் ஃபேஸ்புக் போலிங் வைத்தது படக் குழு. ஆனால், படம் எதிர்ப்பார்த்த கம்பேக்கை பிரசாந்திற்கு அளிக்கவில்லை. சோ சேட்.

ஆறாது சினம்:

2013ல் த்ரிஷ்யம் படத்திற்கு முன் ஜீத்து ஜோசப் இயக்கத்தில் வெளியான படம் மெமரீஸ். ப்ரித்விராஜ், விஜயராகவன், மியா ஜார்ஜ், மேக்னா ராஜ் நடித்திருந்தனர். தேனாண்டாள் பிலிம்ஸ் தயாரிப்பில் இப்படத்தை தமிழில் ரீமேக் செய்ய தயாரானார் இயக்குநர் அறிவழகன். அருள்நிதி, ராதா ரவி, ஐஸ்வர்யா ராஜேஷ், ஐஸ்வர்யா தத் நடித்த இந்த த்ரில்லர் ரசிகர்களிடம் வரவேற்பைப் பெற்றது. ஆனால், மலையாள வெர்ஷன் தான் பக்கா என்றனர் விமர்சகர்கள்.

காதலும் கடந்து போகும்:

2010ல் கிம் க்வாங் சிக் இயக்கத்தில் வெளியான 'மை டியர் டெஸ்ப்ராடோ' என்கிற கொரியன் படத்தின் ரீமேக் உரிமையைப் பெற்று நலன் குமரசாமி இயக்கிய படம் காதலும் கடந்து போகும். சீனுக்கு சீன் அப்படியே எடுக்காமல் தன் ஸ்டைலில் கலகல வசனங்கள், ட்ரீட்மென்ட் மூலம் வித்தியாசமான அனுபவத்தைக் கொடுத்திருந்தார் நலன். விஜய் சேதுபதி, மடோனா செபாஸ்டியன் நடிக்க படம் ஓரளவுக்கு நல்ல வசூல் பெற்றது.

தோழா:

2011ல் ஃப்ரென்ச்சில் வெளியான 'த அன்டச்சபுள்ஸ்' படம் தோழா, ஊப்பிரி என தமிழ் மற்றும் தெலுங்கில் பைலிங்குவலாக ரீமேக்கானது. வம்சி இயக்கிய இப்படத்தில் கார்த்தி, நாகர்ஜுனா, தமன்னா, பிரகாஷ்ராஜ் என தமிழ், தெலுங்கு இரண்டுக்கும் வசதியாக இருக்குமாறு நடிகர்கள் கொண்டு எடுக்கப்பட்டிருந்தது. இரண்டு மொழிகளிலும் ஹிட்டும் ஆனது!

மனிதன்:

2013ல் இந்தியில் சுபாஷ் கபூர் இயக்கத்தில் வெளியான படம் ஜாலி எல்.எல்.பி. இதன் தமிழ் ரீமேக் தான் மனிதன். காமெடி படங்களில் மட்டும் நடித்துக் கொண்டிருந்த உதயநிதி கொஞ்சம் சீரியஸான படத்தைத் தேர்ந்தெடுத்ததற்காகவே படம் வரவேற்கப்பட்டது. இப்போது அக்‌ஷய் குமார் நடிப்பில் ஜாலி எல்.எல்.பி 2 உருவாகிவருகிறது.

மீண்டும் ஒரு காதல் கதை:

2012ல் வினித் ஸ்ரீனிவாசன் இயக்கத்தில் நிவின் பாலி, இஷா தல்வார் நடித்து மலையாளத்தில் வெளியான படம் 'தட்டத்தின் மறயத்து'. இதன் தமிழ் ரீமேக் 'மீண்டும் ஒரு காதல் கதை' படத்தை மித்ரன் ஜவஹர் இயக்கினார். வால்டர் பிலிப்ஸ் நிவின் ரோலிலும், ஒரிஜினலில் நடித்த இஷா தல்வாரே அதே பாத்திரத்திலும் நடித்திருந்தனர். மலையாளத்தில் அது கிளாஸிக். தமிழில் கொஞ்சம் சிக். 

அம்மா கணக்கு:

அஸ்வினி திவாரி இயக்கத்தில் இந்தியில் வெளியான படம் ’நில் பாட்டே சன்னாட்டா'. ஸ்வரா பாஸ்கர், ரியா சுக்லா நடித்திருந்த இந்தப் படத்தை தயாரித்திருந்தார் இயக்குநர் ஆனந்த் எல்.ராய். படத்தின் டிரெய்லரை ஆனந்த், தனுஷிடம் காண்பிக்க, இதை தமிழில் ரீமேக் செய்யுமாறு இயக்குநர் அஸ்வினி திவாரியை அணுகினார் தனுஷ். உடனடியாக அமலா பால், யுவலக்‌ஷ்மி நடிப்பில் தமிழில் 'அம்மா கணக்கு' என்ற பெயரில் ரீமேக் ஆனது. ஒரே நேரத்தில் தமிழிலும் இந்தியிலும் வெளியாவதாக இருந்த படம் சில காரணங்களால் ஒரு மாத இடைவெளிக்குப் பின் வெளியானது.

- பா.ஜான்ஸன்