Published:Updated:

குறும்பட இயக்குநர்களே... உங்களை நடிகர் சூர்யா அழைக்கிறார்!

Vikatan Correspondent
குறும்பட இயக்குநர்களே... உங்களை நடிகர் சூர்யா அழைக்கிறார்!
குறும்பட இயக்குநர்களே... உங்களை நடிகர் சூர்யா அழைக்கிறார்!

இன்றைய இளம் இயக்குநர்களில் பெரும்பாலானவர்கள் குறும்பட இயக்குநர்களாக தங்களுடைய கலை வாழ்க்கையைத் தொடங்கியவர்கள். நலன்குமாரசாமி, கார்த்திக் சுப்புராஜ், அருண்குமார் என இந்தப் பட்டியல் நீளும். முழுமையான திரைப்படங்கள் எடுப்பதற்கு இந்தக் குறும்படங்கள் துருப்புச்சீட்டு. முன்பு தயாரிப்பாளர்களைச் சந்தித்துக் கதைச்சொல்லவேண்டும். ஆனால் நவீன உலகில் கதை சொல்வதற்கு முன்பே, இவர்களின் குறும்படங்கள் தான் பேசுகின்றன.

அந்தமாதிரியான இளம் இயக்குநர்களை அடையாளம் காணுவதற்காக சூர்யாவின் 2டி தயாரிப்பு நிறுவனமும், மூவி பஃப் நிறுவனமும் இணைந்து குறும்பட போட்டி ஒன்றை அறிமுகப்படுத்தியுள்ளது. ஃபர்ஸ்ட் கிளாப் என்ற  போட்டிக்கான அறிமுகவிழா நேற்று நடைபெற்றது. இந்நிகழ்வில் நடிகர் சூர்யா, இயக்குநரும் ஒளிப்பதிவாளர்களுமான பி.சி.ஸ்ரீராம், கே.வி.ஆனந்த் உள்ளிட்டோர் கலந்துகொண்டனர். தேர்ந்தெடுக்கப்படும் குறும்படங்கள் திரையரங்குகளில் திரையிடப்படுவது இன்னும் ஸ்பெஷல். 

“சிறுவயதில் ஓவியப்போட்டி ஒன்றில் கலந்துகொண்டேன். வேண்டா வெறுப்பாக கடைமைக்கென நான் வரைந்த ஓவியத்திற்கு மூன்றாவது பரிசு கிடைத்தது. அதுவும் சிவக்குமார் சார் கையால் கிடைத்ததை இன்றும் மறக்கமாட்டேன். நம்முடைய திறமைக்கும் படைப்பிற்குமான அங்கீகாரம் கிடைக்கவேண்டும். அந்த அங்கீகாரம் தான் ஓவியத்தின் மீதான என்னுடைய ஈர்ப்பை அதிகப்படுத்தியது. ஓவியத்தில் தொடங்கிய ஆர்வம் புகைப்படக்கலை வரையிலும் பின்தொடர்ந்தது. ஒரு படத்திற்கான பிரிவ்யூ ஸ்கிரீனில் படம் பார்க்கும் யாருமே, சிரிக்காம இறுக்கமான முகத்தோடு படம் பார்ப்பாங்க. ஆனா தேவி தியேட்டரில் முதல் நாள் முதல் காட்சி பார்க்கும் போது தான் உண்மையான ரிசல்ட் தெரியும். ஸ்கிரினோடு ஆடியன்ஸ் பேசுற மேஜிக் மொமண்ட் அங்க தான் கண்டுபிடிக்க முடியும். புதுசா படம் பண்ணுறவங்களுக்கு இந்த வாய்ப்பு மிகப்பெரியது. இந்த மாதிரியான போட்டிகளில் ஜெயிக்கணும்னு அவசியமில்லை. தோற்றாலும் வாழ்க்கையில் திருப்பம் கண்டிப்பா வரும். 3 நிமிடத்தில் ஓரு விஷயத்தைச் சொல்வது நிச்சயமாகவே மிகப்பெரிய சவால். இந்த போட்டி பல மணிரத்னங்களையும், பல ஷங்கர்களையும், பல பாலசந்தரையும் உருவாக்கும்” என்றார் கே.வி.ஆனந்த். 

“மூன்று நிமிடத்தில் சொல்லணும். அதுக்கு மக்கள் ரியாக்ட் பண்ணணும். திரையரங்கில் இடைவேளையில் போடப்படும் குறும்படங்கள் அந்த படத்தையே பாதிக்கிற அளவிற்கு இருக்கணும். மிகவும் சுவாரஸ்யமாக இருக்கும் என்று நம்புகிறேன்” என்று வழக்கம்போல இரு வரிகளில் பேசிமுடித்தார் பி.சி.ஸ்ரீராம். 

தொடர்ந்து சூர்யா பேசும்போது,  “பாலா படத்தில் நடித்துக்கொண்டிருக்கும்போது, எந்தவித முன்னேற்பாடும் இல்லாமல் பயிற்சியும் இல்லாமல் நேரடியாக  “நடிங்க சார்”னு பல இடங்களில் மிரளவைத்துவிடுவார். இந்தமாதிரி என்னோட படங்களில் பல அனுபவங்கள் இருக்கிறது. மூவி மேக்கிங் சாதாரண விஷயம் கிடையாது. என்னால படம் இயக்கமுடியலைனு தான் தயாரிப்பு நிறுவனத்தை தொடங்கிவிட்டேன். டாக்ஸி மாதிரி, கேன்டி கேம்மில் எடுக்கப்பட்ட படங்கள் திரையரங்கில் வெளியாகி மிகப்பெரிய தாக்கத்தை ஏற்படுத்தியது. படம் எடுக்க கருவி தேவையில்லை, நல்ல கதை தான் தேவை. எல்லோராலும் கதை சொல்ல முடியும். ஆடிட்டர், டாக்டர், இங்ஜினியர்னு யார்னாலும் கதை சொல்லலாம். எல்லோருக்குள்ளும் பல எண்ணங்கள் இருக்கும். 

300க்கும் மேல் படங்கள் தயாராகி திரைக்கு வரமுடியாமல் முடங்கிக்கிடக்கு. ஆனால் இந்த குறும்படங்கள் தமிழ்நாட்டில் மட்டும் 70 திரையரங்கில் திரையில் திரையிட திட்டமிட்டிருக்கிறோம். சிறந்த கலைப்படைப்பு இதன் மூலமாக உருவாகும் என்று நம்புகிறேன். இந்தியா ரசிகர்களுக்கான முழுமையான திரைப்படம் இதன் மூலமாக கிடைக்கும். அதற்கான அடித்தளம் தான் இந்த ஃபர்ஸ்ட் கிளாப். எனக்கு சின்னதா 18 வருஷ அனுபவம் இருக்கிறது. அதை வைத்துக்கொண்டு என்னால் என்ன செய்யமுடியுமோ, அதைப்பண்ணுவேன்” என்று முடித்தார் சூர்யா. 

பி.எஸ்.முத்து