Published:Updated:

"ஹைக்கூக்கு பிடிச்ச சிவா பாட்டு.. நந்தினிதான் இன்ஸ்பிரேஷன்!" - மதன் கார்க்கியின் ‘லவ்டப்’ பேட்டி

Vikatan Correspondent
"ஹைக்கூக்கு பிடிச்ச சிவா பாட்டு.. நந்தினிதான்   இன்ஸ்பிரேஷன்!" - மதன் கார்க்கியின் ‘லவ்டப்’ பேட்டி
"ஹைக்கூக்கு பிடிச்ச சிவா பாட்டு.. நந்தினிதான் இன்ஸ்பிரேஷன்!" - மதன் கார்க்கியின் ‘லவ்டப்’ பேட்டி

”எங்கள சேர்த்து வைச்சதே வார்த்தைகள்தான்.மொழி வேறுபட்டாலும் ரெண்டு பேரோட திறமைகளுமே வார்த்தைகளில் தான் இருக்குன்னு நம்புறேன்.” -இது நந்தினி கார்க்கி. 

“உண்மைதான். என்னோட பாடல்கள்ல பல வரிகளுக்கு நந்தினி காரணமா இருந்திருக்காங்க. 180ல ஒரு பாட்டு. ’தினம் தினம் தூங்க இமை படைச்சானா”ன்னு எழுதிட்டு இமையோட பயன் என்னவா இருக்கும்னு யோசிச்சிட்டு இருந்தேன். அவங்கக்கிட்ட கேட்டப்ப, “இமை மூடுறது நமக்குள்ள பாக்குறதுக்கோ”ன்னு சொன்னாங்க. அததான் அடுத்த வரியா “நமக்குள்ளே பார்க்க இமை படைச்சானா’ன்னு எழுதினேன். - இது மதன் கார்க்கி. 

“அம்மா கத்துறது பிடிக்கும். அப்பா எழுதறது பிடிக்கும்” - இது ஏழு வயது குட்டி ஹைக்கூ கார்க்கி. 

பைந்தமிழும், ஐபேடும் கைக்கோத்து உலவுகிறது மதன் கார்க்கி வீட்டில். குடும்பத்தைப் பற்றிச் சொல்லுங்க என்றதும், மெட்டைக் கேட்ட கவிஞராகச் சொல்ல ஆரம்பித்தார். 

”கூடவே படிச்சவங்க. ஆனால், காலேஜுக்கு அப்புறம்தான் காதல். அது நல்லபடியா திருமணத்துக்குள்ள வந்துச்சு. என் வேலைகளுக்கு மிகப்பெரிய சப்போர்ட் நந்தினி தான். நிறைய வாசிப்பாங்க. என்னோட நிறைய நேர்மைக்கு நந்தினிதான் காரணம். எதையும் முறையா செய்யணும்னு என்னை ஒழுங்குப்படுத்தியது, பெண்களைத் தாக்குற மாதிரியான பாடல்கள் வேணாம்னு சொன்னதுன்னு நிறையசொல்லலாம். இப்ப அவங்களுக்குப் பிடிச்ச விஷயங்களைச் செய்றதுல பிஸியா இருக்காங்க. 

சப் டைட்டில்ஸ் எழுதுறது அவங்களுக்குப் பிடிச்சிருக்கு. ஐ, என்னை அறிந்தால், தங்க மீன்கள்னு 20 படங்கள் சப்டைட்டிஸ் எழுதினாங்க. ஆனால், அந்த வேலையோட பிரஷர் அவங்களுக்கு அதிகமா இருந்துச்சு. இப்ப, ‘சுபமி’ன்னு ஒரு அகாடெமி ஆரம்பிக்கிறாங்க. சப் டைட்டில்ஸ் எழுதுறது எப்படின்னு சொல்லிக்கொடுக்கற முதல் அகாடெமியா சுபமி இருக்கும். 

பையன் ஹைக்கூவுக்கு ஏழு வயசு ஆகுது. முடிஞ்சவரை டெக்னாலஜிக்குள்ள விடுறதில்லை. வாரத்துல ஒரு நாள்தான் ஐபேடு டைம். அப்ப சில கார்ட்டூன் வீடியோஸ் பாப்பான். அது தவிர எந்த ஸ்மார்ட் ஐட்டங்களும் அவனுக்கு அறிமுகப்படுத்தல. கல்லு, மண்ணுலதான் அதிகம் விளையாடுறான். நிறைய மனிதர்களும், இயற்கையும் தான் இப்ப அவன் வாழ்க்கைல இருக்கணும்னு நானும் நந்தினியும் தீர்மானமா இருக்கோம் 

ஹைக்கூ படிக்கிற ஸ்கூல் தான் இப்ப எங்களுக்குப் பிடிச்ச விஷயம். கிளாஸ் நடக்கறப்ப அவனா வெளிய வந்து மன்ணுல விளையாடுறான். டீச்சர்ஸ் எதுவும் சொல்ல மாட்டாங்க. நண்பன்ல வர்ற அவுட்ஸ்டேண்டிங் ஸ்டூடண்ட் மாதிரின்னு நினைச்சுப்பேன். ரொம்பக் கிரியேட்டிவா இருக்கிறான். காக்காமுட்டை, பசங்க2ன்னு ரெண்டு படங்கள்தான் காட்டியிருக்கோம். பாடல்கள் மேல அவனுக்கும் ரொம்ப ஈர்ப்பு இருக்கு. நிறையப் பாடல்கள மனப்பாடமா பாடுவான்.ஃபாஸ்ட் பீட் பாடல்கள் அவனுக்குப் புடிக்குது” ” மகனை அணைத்தபடி பேசுகிறார் மதன் கார்க்கி. அந்த அழகான நிஜ ஃப்ரேமுக்கு புன்னைகையால் லைக்ஸ் போடுகிறார் நந்தினி கார்க்கி. 

’வாங்கப்பா விளையாடலாம்’ என மதன் கார்க்கியை ஹைக்கூ இழுத்துச் செல்ல, நந்தினி தொடர்ந்தார். 

”நிறையக் கனவுகளோடதான் எங்க வாழ்க்கையைத் தொடங்கினோம். ஆனா இப்போ கனவுகளே நிறைய மாறியிருக்கு. அப்ப எங்களுக்கு நிறைய நேரம் அவரால கொடுக்க முடிஞ்சது. இப்ப முடியறதில்லை. அது ஒண்ணு தான். ஆனா, அவரால முடிஞ்சப்பலாம் வீட்டுக்கு வந்துடணுன்றதுல ரொம்பக் கவனமா இருப்பாரு. அதே மாதிரி, என்னோட தனிப்பட்ட ஆசைகள், இலக்குகள் மேல கவனமா இருப்பாரு. அத நான் செய்யனுன்றதுல என்னை விட அதிகமா ஆர்வம் காட்டறது எனக்குப் பிடிக்கும்.. 

நல்லா சமைப்பாரு. குழந்தையை வளர்க்குறதுல அவரோட ஸ்டைலே தனி. நிறையக் கதைகள் சொல்வாரு. ராமாயணத்த நாலு விதமா ஹைக்கூக்கிட்ட சொல்லியிருக்காரு. ஹாரர், காமெடின்னு பல வெர்ஷன்ஸ் சொல்வாரு. ஹைக்கூவுக்கும் அவங்க அப்பா கதை சொன்னா பிடிக்கும். அவனுக்கு அந்தத் திறமை இருக்கு. 

Karefoன்னு ஒரு தமிழ் ஆராய்ச்சி நிறுவனம், டூபாடூன்னு ஒரு இணையதளம், அப்புறம் சினிமால பாடல்கள், வசனங்கள்ன்னு நிறைய விஷயத்துல கவனம் செலுத்துறாரு. அதனால எங்களுக்கு நேரம் ஒதுக்க முடியலைன்னு டவுனா ஃபீல் பண்ணுவாரு. அத தவிரப் பெருசா எதுக்கும் ஃபீல் பண்ண மாட்டார். அவரு எப்பவும் live the moment டைப் தான். அதனால, ஒரு வேலை செய்றப்ப இன்னொரு வேலையை மனசுல ஓட விட மாட்டார். எங்க கூட வாக்கிங் வந்தா, அப்ப 100% எங்களுக்குதான். பாட்டு எழுதுனா 100% கவனமும் அதுல தான் இருக்கும். அது அவரோட தனிப்பட்ட நல்ல குணம்னு நினைக்கிறேன்.” 

”அது என்ன ‘சுபமி’? எங்க பிடிக்கிறீங்க பேரெல்லாம்?” 
ஒரு படத்துல கடைசியா நடக்கிற வேலை சப் டைட்டில் எழுதுறதுதான். படம் முடிஞ்சப்புறம் கடைசியா ஓடுறதும் அதுதான். அதைக் குறிக்கிற வகைல சுபம்னு வச்சோம். Sub titling academy of madras ன்னு அதுக்கு இன்னொரு அர்த்தமும் வந்துச்சு. அப்புறம்தான் சுபமின்னு யோசிச்சோம். அந்தச் சவுண்டிங்கும் நல்லா இருந்துச்சு. Sub titling academy-யை சுருக்கி வச்ச மாதிரியும் வந்துச்சு. 

விளையாடிக்கொண்டிருந்த ஹைக்கூ திரும்பிவந்து, அப்பா மேக்புக்கில் பாடல்கள் கேட்க தொடங்கினார். மதன் தொடர்ந்தார், 

“நான் வீட்டுல இருக்கறப்ப அவன் கூடவும், அவன் ஃப்ரெண்ட்ஸ் கூடவும் விளையாடுவேன். நான் ஒரு கதை ஆரம்பிப்பேன். அதோட அடுத்த லைன அவன் சொல்லணும். அப்படியே கதை எக்ஸ்டெண்ட் பண்ணிட்டே போவோம். ஹைக்கூ நல்லா, கிரியேட்டிவா சொல்றான். சமீபமா அவனுக்குப் புடிச்ச விளையாட்டு “சினாரியோ”. ஒரு சிச்சுவேஷன் சொல்லி அதுகுள்ள கொண்டு போய் அவன விட்ருவேன். அவன் அங்க இருக்கிற சில பொருட்களை வச்சே வெளிய வரணும். அந்தச் சிக்கலான சூழலுக்கு அவன் சொல்ற தீர்வுகள் ஆச்சர்யப்படுத்துது. 

ஒரு தீவுல மாட்டிக்கிறான். அவன் கைல துடுப்பு இல்லாத ஒரு போட், ஒரு ஆடு, ஒரு கயிறு மட்டும்தான் இருக்கு. எப்படித் தப்பிச்சு வருவன்னு கேட்டேன். ”ஆட்டை கயித்துல கட்டி தூக்கி போடணும். அது நீச்சலடிச்சிக்கிட்டே நம்மளையும் இழுத்துட்டு போகும். ஆட்டுக்கிட்ட நாம போனதும்,திரும்ப ஆட முன்னால தூக்கி போடணும்”னு சொன்னான். சரியோதவறோ, வித்தியாசமான சொல்யூஷன்ஸ் யோசிக்கிறான்.” 

”தாத்தா வைரமுத்து...” 
”வாரத்துல ஒருநாள் தாத்தா, பாட்டியை பாக்க போய்டுவோம். அப்பாவை அதட்டுற ஒரே ஆளு ஹைக்கூதான். நாங்க சின்ன வயசுல இருந்தப்ப வீடு சுத்தமா இருக்கணும், நீட்டா இருக்கணும்னு அப்பா அவ்ளோ சத்தம் போடுவாரு. இப்ப ஹைக்கூ அவர பாக்க போனா “தாத்தா..வீடு க்ளினாவே இல்ல. இங்க வந்தா என் காலு அழுக்காவது”ன்னு அதட்டுறான். அப்பாவுக்கு டிரைவ் போகப் பிடிக்கும். இவன கதை சொல்லச் சொல்லி கேட்டுக்கிட்டு லாங் டிரைவ்போவாரு. பாரதியார் பாடல்கள் மாதிரி பல விஷயங்கள் அவரு சொல்லிக் கொடுப்பாரு. ஹைக்கூவுக்கு ‘ழ’ உச்சரிப்பு சரியா வரணும்னு திருத்துவாரு. அவர் சொன்னா கேட்டுப்பான். 
ஒருநாள் அப்பா அவரோட ஃப்ரெண்ட்ஸ் முன்னாடி, எதாவது பாட்டு பாடிக்கட்ட சொல்லியிருக்கார்.இவனும் ரஜினிமுருகன்ல வர்ற ‘என்னம்மா இப்படிப் பண்றீங்களேம்மா’ பாட்டை, ஆரம்பத்துல சிவகார்த்திகேயன் சொல்ற வசனத்துல ஆரம்பிச்சு முழுசா பாடியிருக்கான். முதல்ல அப்பாவுக்கு ஷாக். அப்புறம் அடிக்கடி அந்த வசனத்த சொல்லச் சொல்லி ரசிக்க ஆரம்பிச்சிட்டாரு.” 

“ஹைக்கூன்ற பேரு அவனுக்குப் பிடிச்சிருக்கா?” 
அவன் கிளாஸ்ல வேதாந்த்னு 4 பேரு இருக்காங்க. 2 கார்த்திக் இருக்காங்க.ஆனா, ஹைக்கூன்ற பேர்ல இவன் மட்டும்தான்.அந்த யுனிக்னஸ் அவனுக்குப் பிடிச்சிருக்கு.” 

”நந்தினிக்கிட்ட உங்களுக்குப் பிடித்த விஷயங்கள்?” 
காலைல காலேஜ் போனா, மாலை வீடு திரும்பும் சராசரி வேலைல இருக்கிற மதன் கார்க்கியதான் அவங்க கல்யாணம் பண்ணாங்க.டெக்னாலஜி மேல அதீத ஆர்வம் இருக்கிற ஆளாதான் தெரியும். என் வாழ்க்கை இப்படி மாறும்னு அப்ப நானே எதிர்கார்க்கல. ஆனா, என் முயற்சிகளையும், கனவுகளையும் புரிஞ்சிக்கிட்டு ஆதரவா இருக்கிறது மட்டுமில்லாம நிறைய உதவிகளும் பண்றாங்க. நிறைய ஆசைகள் இல்லாத ஆள் அவங்க. நகைகள் பிடிக்காது. ஆன்மிகத்துல ரெண்டு பேருக்குமே ஆர்வம் இல்லை. ஒத்துமைன்னா, பயணங்கள் பிடிக்கும். நிறையக் கிராமங்களுக்குப் போகனும்னு ஆசைப்படுவோம். உலகம் முழுக்கப் பயணிக்கணும்னு ஆசை. நேரம் தான் பிரச்னை. 
வருஷத்துக்கு மூணு ட்ரிப் போயே ஆகணும் என்பது நந்தினியோட கட்டளை. ஒண்ணு, தமிழ்நாட்டுல நாம பாக்காத ஒரு இடம். அடுத்து, இந்தியாவுல. அடுத்து உலகத்துல நாம பாக்காத இடம். ஹைக்கூ பிறந்ததுல இருந்தே இது செஞ்சிட்டு இருக்கோம். 

டூர் போறதுன்னா சுற்றுலா இடங்களா பாத்து போக மாட்டோம். ஹைக்கூ ஒன்றரை வயசுல இருந்தப்ப செளத் ஆப்ரிக்கா போணோம். அங்க ஒரு கிராமத்துக்குப் போய் அந்தக் குழந்தைகளோடு விளையாடினோம். அந்த ஊருக்கு அவ்வளவா சுற்றுலாவாசிகள் வர மாட்டாங்களாம். எங்கள பாத்துட்டு அந்த ஊர் குழந்தைகள் ஒட்டிக்கிட்டாங்க. ஹைக்கூ எல்லோரையும் அண்ணா, அக்கான்னு கூப்பிட்டான். ஒரு நாய் எங்க கூடவே வந்துச்சு. இப்ப கூட அந்த ஃபோட்டோஸ் பார்த்தா அந்த நினைவுகள் ஞாபகத்துக்கு வருதுன்னு சொல்றான். அவ்வளவு நல்ல எக்ஸ்பீரியன்ஸ். குழந்தையோட டிராவல் பண்றது கஷ்டம். ஆனா, விடாம தொடர்ந்து எல்லா வருஷமும் மூணு ட்ரிப் போயிடுறோம். போன வருஷம் நாகலாபுரத்துக்கு ட்ரெக்கிங் போனோம். 9 கிமீ ஹைக்கூ நடந்தே வந்தான். 

”நிழலை திருடும் மழலை... இப்படி எழுதி இருந்தாலும் மதன் கார்க்கினாலே டெக்னாலஜி பாடல்கள்ன்னு ஒரு பிம்பம் இருக்கே.. அதை எப்படிப் பாக்கறீங்க?” 
நந்தினி முன்வருகிறார், “அவரோட பேக்கிரவுண்ட் அதுக்கு முக்கியமான காரணம்னு நினைக்கிறேன். அவர் படிச்சது, வேலை செஞ்சது எல்லாமே டெக்னாலஜி.” எனச் சொல்லும் போதே குறுக்கிடுகிறார் மதன் கார்க்கி 
”ஒரு சமையல்காரர் உவமை சொல்லும்போது கொத்தமல்லி கறிவேப்பிலைன்னு சொல்வாரு இல்ல. அந்த மாதிரி எனக்கு டெக்னாலஜின்னு நினைக்கிறேன். தூய்மையான பெண் என்றால் வைரஸ் இல்லா கணினின்னு எழுதுறேன் போல. ஆனா நான் எழுதின 450 பாடல்கள்ல 8 பாடல்கள்தான் அப்படி எழுதியிருக்கேன். கூகுள், செல்ஃபிபுள்ள மாதிரி.. ஆனா அதெல்லாம் பெரிய ஹிட் ஆனதால அப்படி நினைக்கிறாங்க. ” 

”எதிர்காலத் திட்டங்கள்?” 
”Kindle தமிழ்ல வர்றாங்க. அந்தப் புராஜெக்ட் ஒண்ணு செய்றோம். டூபாடூ.காம்.இத தமிழ்ல சக்ஸஸ் பண்ணி காமிச்சிட்டு மற்ற மொழிகளுக்கு எடுத்துட்டு போகணுன்ற ஆசை. சினிமா பாடல்கள்ல ஒரு வட்டத்துக்குள்ள எழுத வேண்டிய கட்டாயம் இருக்கு. இண்டிபெண்டட் இசைல நிறையப் புதுசா முயற்சிக்கலாம். அதுக்கு டூபாடூ உதவுது. இந்தச் சமயத்துல சினிமா இயக்கம்னு போறது சரியா வராதுன்னு நினைக்கிறேன். பாடல்கள் எழுதிட்டு இருக்கேன். வாழ்க்கை ஸ்மூத்தா போயிட்டு இருக்கு. நந்தினி நினைச்சதை செய்ய என்னாலான உதவிகள் செய்யணும். ஹைக்கூவை அவன் விருப்பப்படி வளர துணையா இருக்கணும். 

மூவருக்கும் வாழ்த்துகளைச் சொல்லிவிட்டு விடைபெற்றோம். 

“செல்ஃபிக்குள் சிக்கிக்கொண்டு சுழலுது பூமி.. 
செல்ஃபோனுக்குள்ளே வாழ வழி உண்டா காமி.. 
ஹார்ட்டுக்குள் பேசிட.. ஹார்மோன்கள் தூண்டிட 
ஆப் ஒண்ணு இருக்கா காமி காமி..” 

ஹைக்கூ கேட்டுக்கொண்டிருந்த பாடல் சன்னமாகக் கேட்டது. 


-கார்க்கிபவா 
படங்கள் -கே.ராஜசேகரன்