Published:Updated:

’பொண்ணு மாதிரி இருக்கணும்னு நினைக்கிறேன்’ - ரித்திகா சிங் #VikatanExclusive

’பொண்ணு மாதிரி இருக்கணும்னு நினைக்கிறேன்’ - ரித்திகா சிங் #VikatanExclusive
’பொண்ணு மாதிரி இருக்கணும்னு நினைக்கிறேன்’ - ரித்திகா சிங் #VikatanExclusive

பாக்ஸராக பயிற்சி பெற்று, நடிகையாகப் பிரபலமான ரித்திகா சிங்கின் வாழ்க்கையே திடீர் திருப்பங்கள் நிறைந்த ஒரு சினிமா போலவே இருக்கிறது.

''எங்கப்பா மோகன் சிங் ஒரு பாக்ஸர். என்னோட மூணு வயசுலேருந்தே  அவர் பிராக்டிஸ் பண்றதைப் பார்ப்பேன். நானும் அப்பா மாதிரியே பண்ணிப் பார்ப்பேன். பாக்சிங் பிடிச்சிருந்தது. ஆனா பிராக்டிஸுக்காக காலையில சீக்கிரமே எழுந்திருக்கிறது, டயட் பண்றதெல்லாம் கஷ்டமா இருந்தது. எங்கப்பா ரொம்ப ஸ்ட்ரிக்ட். " உனக்குள்ள ஒரு திறமை இருக்கு... நீ ஜெயிக்கப் பிறந்திருக்கே... சோம்பேறித்தனத்தை ஓரங்கட்டி வச்சிட்டு, பாக்சிங்ல  கவனம் செலுத்தினா எங்கேயோ போயிடுவே.னு" சொல்லிட்டே இருப்பார். ரொம்ப வருஷம்  கழிச்சுதான் அது என் மண்டையில ஏறியது. 

"பாக்ஸிங்கில் ரொம்ப சீரியஸானேன். அப்பாவே ஆச்சர்யப்படுகிற அளவுக்கு என் திறமையை வளர்த்துக்கிட்டேன். 17 வயசுல ஒரு ரியாலிட்டி ஷோவுல கலந்துக்கிட்டப்ப, எதிர்பாராத விதமா முட்டி உடைஞ்சு, ஷோவுலேருந்து நீக்கப்பட்டேன். அதைப் பார்த்துட்டு பாலிவுட் டைரக்டர் ராஜ்குமார் ஹிரானியும் நடிகர் மாதவனும்  இறுதிச்சுற்று படத்துக்கு என்னை நடிக்கக் கூப்பிட்டது, இன்னிக்கு நான் ஒரு நடிகையா உங்க முன்னாடி உட்கார்ந்து பேசிட்டிருக்கிறது, . எல்லாம்  கண்ணை மூடித் திறக்கறதுக்குள்ள நடந்து  முடிஞ்ச மாதிரி இருக்கு" 

21 வருட வாழ்க்கையை இரண்டே நிமிடங்களில் சுருக்கமாகச் சொல்கிற ரித்திகா, அதிர்ஷ்டக்கார... ஆசிர்வதிக்கப்பட்ட கோடம்பாக்க தேவதை.

தேடி வந்த சினிமா வாய்ப்பு. முதல் படத்திலேயே தேசிய விருது....நேஷனல் அவார்டு வின்னரான பிறகு எப்படி இருக்கிறது வாழ்க்கை...?

“நேஷனல் அவார்ட் என் வாழ்க்கையையே மாத்திடுச்சு. அவார்ட் கிடைச்சிருக்குங்கிற தகவல் வரும்போது என் ஃபோன்ல சாஃப்ட்வேர் அப்டேட் போயிட்டிருந்ததால ஸ்விட்ச் ஆஃப் ஆகியிருந்தது. கிட்டத்தட்ட அரை மணி நேரம் கழிச்சு ஃபோன்  ஆன் ஆனதும் எக்கச்சக்க மெசேஜ்.. என்ன நடக்குதுன்னே தெரியாம ஷாக் ஆயிட்டேன். யார் யாரோ ஃபோன் பண்ணி வாழ்த்து சொன்னாங்க. யாரோ கலாய்க்கறாங்கனு சந்தேகப்பட்டேன், பிறகு உண்மைதான்னு தெரிஞ்சப்ப அழுகையே வந்திருச்சு. முதல் படத்துக்கு இவ்வளவு பெரிய அங்கீகாரமானு இன்னும்கூட ஆச்சர்யமாதான் இருக்கு. 

வாழ்க்கை முழுக்க கிக் பாக்சராவே இருந்து அப்படியேதான் ரிட்டயர் ஆகப்போறேன்னு நினைச்சிட்டிருந்தேன். நடிகையாவேன், நேஷனல் அவார்ட் வாங்குவேன்னெல்லாம் கனவுல கூட நினைக்கலை. ஆனா இந்த அவார்ட் எனக்கு நிறைய விஷயங்களை  சொல்லிக் கொடுத்திருக்கு. இனிமே நல்ல படங்களையும் நல்ல கேரக்டர்களையும் செலக்ட் பண்ணி நடிக்கணும்ங்கிற பொறுப்பு கூடியிருக்கு.  ஒரு ஆர்ட்டிஸ்ட்டுக்கு நேஷனல் அவார்டுங்கிறதுதான் அல்டிமேட். எனக்கு என்னோட முதல் படத்துலயே அது கிடைச்சதுக்கு தினம் தினம் கடவுளுக்கு தேங்க்ஸ் சொல்லிட்டிருக்கேன்.” என்னோட இரண்டாவது படமான ஆண்டவன் கட்டளையும்  ஹிட்லிஸ்டில் சேர்ந்ததில் ரித்திகா சிங் செம ஹேப்பி.

“'இறுதிச்சுற்று' பண்ணினதே இன்னும்கூட கனவு மாதிரிதான் இருக்கு. அந்த எழில்மதி கேரக்டர்லேருந்தே நான்  முழுசா வெளியில வராதப்ப 'ஆண்டவன் கட்டளை' வாய்ப்பு வந்தது.   டைரக்டர் சுதா மேடம்தான் என்னை இந்தப் படம் பண்ணச் சொன்னாங்க. 

முதல் படத்துக்கும் அடுத்த படத்துக்கும் நான்  நிறைய வித்தியாசங்களை காட்ட வேண்டியதிருந்தது. 'இறுதிச்சுற்று' பண்ணும்போது என்னோட டயலாக்கை எல்லாம் முன்னாடியே வாங்கி பக்காவா மனப்பாடம் பண்ணிட்டு ரெடியா இருப்பேன். ஆனா ஆண்டவன் கட்டளை வேற மாதிரி இருந்தது.  ஆன் தி ஸ்பாட்ல டயலாக் கொடுத்துப் பேச வச்சாங்க.  செம டென்ஷனா இருந்தது... ஆனா டைரக்டர்தான், 'அதெல்லாம் ஒண்ணுமில்லை... கேஷுவலா பண்ணுமானு' சொல்லி நம்பிக்கை கொடுத்தார்.

முதல் படத்துல சென்னைத் தமிழ்ல கன்னாபின்னானு மத்தவங்கள கலாய்ச்ச கேரக்டர்ல நடிச்ச என்னை, ஆண்டவன் கட்டளையில நடிக்கிறப்ப அதிகம் பேசக்கூடாது, அதிகம் சிரிக்கக்கூடாதுனு டைரக்டர் சொன்னப்ப கொஞ்சம் கஷ்டப்பட்டேன். மதி கேரக்டர் கிட்டத்தட்ட என் ஒரிஜினல் கேரக்டர் மாதிரியேதான். ஹைப்பர் ஆக்டிவ்னு வச்சுக்கோங்களேன். அதுக்கு உல்டாவா, ஆண்டவன் கட்டளையில ஓவரா பேசவோ, சிரிக்கவோ வாய்ப்பில்லாத கேரக்டர். அந்த கேரக்டருக்குள்ள வர்றதுக்கு ரொம்பக் கஷ்டப்பட்டேன். ரியல் ரித்திகா எட்டிப் பார்த்துடுவாளோங்கிற பயத்துலதான் நடிச்சேன். நல்லவேளை சமாளிச்சிட்டேன். ”

லாரன்ஸ் படத்துல என்ன கேரக்டர்? 

"சிவலிங்கா'வுல லாரன்ஸ் சாரோட நடிக்கிறேன். முதல் ரெண்டு படங்களுக்குக் கொஞ்சமும் சம்பந்தமில்லாத கேரக்டர். 'நீ இப்ப நடிகை... பாக்சிங் பண்றேன்னு சொல்லிட்டு, முகத்தை டேமேஜ் பண்ணிக்காதே...'னு சொன்னார் பி.வாசு சார். அட ஆமாம்ல... இத்தனை நாளா என் முகத்தைப் பத்தியோ, அழகைப் பத்தியோ கொஞ்சமும் யோசிச்சதே இல்லை. இனிமே அழகு விஷயத்துலயும் அக்கறை எடுத்துக்கணும்.”

 பார்லர்... டயட்..  சைஸ் ஜீரோ...?

“நடிகையா இருக்கணும்னா சைஸ் ஜீரோ உடம்போட இருக்கணும்னு அவசியமில்லை. பர்சனலா எனக்கு சைஸ் ஜீரோ உடம்பு பிடிக்காது. எலும்பும் தோலுமா அந்த லுக்கை பார்க்கவே நல்லாருக்காது. அது ஆரோக்கியமானதும் இல்லை. பட்டினி கிடக்கிறதும் பார்த்துப் பார்த்து சாப்பிடறதும் தேவையா? பொண்ணுங்கன்னா உடம்புல கொஞ்சமாவது கொழுப்பு இருக்கணும். அதுதான் அழகு.” 

நடிகை என்றால் புற அழகுக்கு முக்கியத்துவம் கொடுத்தே ஆக வேண்டும். பாக்சராய் இருந்த ரித்திகா சிங்குக்கு இதெல்லாம் பிடித்திருக்கிறதா? அல்லது எரிச்சலூட்டுகிற விஷயமாக இருக்கிறதா?

''சினிமாவில் நடிக்க ஆரம்பிச்சது எனக்குப் புது வாழ்க்கை. காலேஜ் படிக்கிறபோது நான் பாட்டுக்கு எங்க ஊரு தெருக்கள்ல ஜாலியா சுத்திக்கிட்டும், பிடிச்சதை வாங்கி சாப்பிட்டுக்கிட்டும் ஒரு டாம்பாய் மாதிரி இருந்திருக்கேன். நடிகையான பிறகு வாழ்க்கையே மாறியிருக்கு. யோசிக்காம எதையும் பேசக்கூடாது, செய்யக்கூடாதுங்கிற அக்கறை அதிகமாகியிருக்கு. எல்லா படங்களும் 'இறுதிச் சுற்று' மாதிரி மேக்கப் இல்லாம, டிராக் பேன்ட், ஷர்ட்டோட கேமரா முன்னாடி போய் நிக்கற கதை மட்டுமே பண்ண முடியாதுனு புரிஞ்சிட்டிருக்கேன். நடிகையா என்னை நான் அழகாகவும் காட்டிக்கணும். முக்கியமா பொண்ணு மாதிரி இருக்கணும்ல.'' 

 பாக்சர் ரித்திகாவை மறந்துவிட வேண்டியதுதானா?

“ஸ்போர்ட்ஸ்லேருந்து விலகற ஐடியாவெல்லாம் இல்லை. இப்பவும் நான் ஜிம் போனா மெஷின் வச்சு ஒர்க் அவுட் பண்ண மாட்டேன். என்னோட கிக் பாக்சிங்கும் மார்ஷியல் ஆர்ட்ஸும்தான் ஒர்க் அவுட்ஸ். ஆனா ஒரு ஃபுல் டைம் ஸ்போர்ட்ஸ்மேனா   பாக்சிங்கை மிஸ் பண்றேங்கிறதையும் ஒத்துக்கிட்டுத்தான் ஆகணும்.

பெங்களூர்ல சிவலிங்கா ஷூட்டிங்ல பிசியா இருந்தேன். அப்பவும் விடிய விடிய கண்ணு முழிச்சு  ஒலிம்பிக் போட்டிகளை பாத்தேன். என்னோட ரெண்டு பெஸ்ட் ஃப்ரெண்ட்ஸ், பாக்சர்ஸ் மனோஜ் குமாரும், விகாஸ் யாதவும் இந்தியாவுக்காக ரியோ ஒலிம்பிக்ஸ்ல விளையாடினாங்க. அவங்களுக்காகவே பார்த்தேன். ஒரு ஸ்போர்ட்ஸ்பர்சனா இந்த வருஷம் என்னை இன்னும் கொஞ்சம் பெருமையா ஃபீல் பண்ண வச்ச விஷயம் சிந்துவோட சக்சஸ். 21 வயசுல தன்னோட முதல் ஒலிம்பிக்ஸ்லயே சில்வர் அடிச்ச அவங்கதான் எங்க எல்லாருக்கும் ரோல் மாடல். சீக்கிரமே அவங்களை மீட் பண்ணணும்.”

தமிழ் கத்துக்க ஆரம்பிச்சாச்சா? 

''தமிழ் மட்டுமில்லை, தெலுங்கும் கத்துக்கறேன். ஒரு நடிகையா நான் நடிக்கிற படத்தோட மொழி முழுசா புரிஞ்சாதான், அந்த கேரக்டருக்குள்ள போகறது இன்னும் ஈஸியா இருக்கும்னு நினைக்கிறேன். தமிழ்ல பேசறது ரொம்ப இன்ட்ரஸ்ட்டிங்கா இருக்கு. கூடியவரைக்கும் எல்லார்கிட்டயும் தமிழ்ல பேச ட்ரை பண்றேன்.  அடுத்த இன்டர்வியூவுல உங்கக்கிட்ட தமிழ்ல பேசுவா ரித்திகா. ஓ.கே...'' 

                                                                                                                                                  - ஆர்.வைதேகி