Published:Updated:

இன்னும் எத்தனை நிர்பயாக்களையும், வினோதினிகளையும் பலி கொடுக்க இருக்கிறோம்? #MustWatchShortFilm

இன்னும் எத்தனை நிர்பயாக்களையும், வினோதினிகளையும் பலி கொடுக்க இருக்கிறோம்? #MustWatchShortFilm
இன்னும் எத்தனை நிர்பயாக்களையும், வினோதினிகளையும் பலி கொடுக்க இருக்கிறோம்? #MustWatchShortFilm

"ம்மா... வயிறெல்லாம் ரொம்ப வலிக்குதும்மா... தாங்கவே முடியல. சீக்கிரம் வீட்டுக்கு கூட்டிட்டுப் போயிடும்மா. நான் காலேஜ் போகணும். படிச்சு டாக்டராகிட்டா, நம்ம கஷ்டமெல்லாம் தீர்ந்திரும்மா..." என்று சொன்னபடி தன் அம்மாவின் கையை இறுகப் பற்றிக் கொள்கிறார். ஆனால், அவர் வீடு திரும்பவில்லை. கல்லூரிக்குச் செல்லவில்லை. படிக்கவில்லை. டாக்டராகவில்லை. அந்தக் கிழிந்த வயிற்றின் வலியோடும், தான் சார்ந்த சமூகத்தை நோக்கிய ஒரு பெரும் கேள்வியோடும், உயிர் கொடுத்த பெற்றோரைப் பார்த்தபடியே உயிரிழந்தாள் அந்த "பயமற்றவள்". நான்காண்டுகளுக்கு முன்னர் இன்றைய தினத்தில் தான், நிர்பயா பாலியல் வன்புணர்வுக்குள்ளானாள். அவளின் பிறப்புறுப்பில் இரும்புக் கம்பியை விட்டெடுத்தக் கொடூரம் நடந்தேறிய நாள். அவளின் குடல் பிசைந்தெடுக்கப்பட்ட நாள். ஒட்டு மொத்த ஆண் சமூகமும் தலைகுனிந்து நின்ற நாள். இன்று வரை நிமிரவில்லை. 

"அந்த முதலை... தண்ணியில இருந்து அப்படியே மேல வந்துச்சா... அங்க ஒரு முயல்... அது அப்படி ஓடி அங்க வந்துச்சு... அப்புறம் அங்க ஒரு மரம்..." ஒரு குழந்தையாய் தன் வலிகளை மறந்து கதை சொல்ல முயன்றார். ஆனால், முடியவில்லை. ஆசிட் காயங்கள் அவருக்கு பெரும் வலியைக் கொடுத்தன. வலியில் அவரால் கண்ணீர்விட முடியவில்லை. உப்புத் தன்மை நிறைந்த கண்ணீர், ஆசிட்டால் சிதைந்த கன்னங்களை தொட்ட போது, ரத்தத்தோடு கலந்து எரிச்சல் எடுத்தது. அந்தக் குழந்தைக் கதையை வினோதினியினால் சொல்லி முடிக்க முடியவில்லை... அதற்குள் அவர் உயிர் பிரிந்தது. 

நிர்பயா, வினோதினியைத் தொடர்ந்து,  பிஹார் மாநிலத்தில், பதின் வயது பெண் ஒருவரை அவரின் மாமாவே வண்புணர்வு செய்கிறார். வெளியில் சொல்லாமல் அந்த வலியைப் பொறுத்துக் கொண்டு நடமாடுகிறார் அந்தப் பெண். ஒரு வாரம் தான்... அந்த ஆண் மீண்டும் அதே செயலில் ஈடுபட, இந்த முறை... அந்தப் பெண் அவனின் ஆணுறுப்பை அறுத்தெறிகிறார். இப்படியாகத் தொடர்ந்து பெண்களுக்கு எதிரான பாலியல் வன்கொடுமைகள் நடந்து கொண்டேதானிருக்கின்றன. 

இது போன்ற செய்திகள் நம் ஒவ்வொருவரையும் பாதிக்கிறது. சிலர் மிக எளிதாக அதைக் கடந்து தங்கள் வாழ்க்கைக்குள் செல்வார்கள். சிலர் சில நிமிட அஞ்சலிகளை செலுத்துவார்கள். சிலர் புலம்புவார்கள். சிலர் அழுவார்கள். மிகச் சிலரை இது ஆழமாக பாதிக்கும். அவர்கள் தங்களிடமிருக்கும் ஆயுதத்தைக் கொண்டு அதை எதிர்க்கத் துணிவார்கள். பெண்களுக்கு எதிரான தொடர் வன்முறைகளை எதிர்த்து, " ஏங்குகிறேன்" என்ற ஒரு குறும்படத்தை எடுத்து அதை தங்களின் ஆயுதமாக்க முயற்சித்திருக்கிறார்கள் சென்னை எத்திராஜ் கல்லூரியின் முன்னாள் மாணவர்கள் சிலர்.

விஷுவல் கம்யூனிகேஷன் படிப்பை முடித்துவிட்டு சினிமாவில் இயக்குநராகும் முயற்சியில் இருக்கும் அனு சத்யாவும், ஷைலஜாவும் இந்தப் படத்தை எடுத்துள்ளனர். பெண்களுக்கு எதிரான வன்முறைகளை உண்மைக்கு மிக நெருக்கத்தில் பதிவு செய்துள்ளனர். 

" என்னைச் சுற்றி நடக்கும் சம்பவங்கள் ஒரு பெண்ணாக என்னைப் பெரியளவில் பாதிக்கும். ஒவ்வொரு பெண்ணும் ஏதாவது ஒரு வகையில் பாலியல் சீண்டல்களுக்கு ஆளாகிறாள். அப்படியான விஷயத்தில் பாதிக்கப்பட்டு ரோட்டில் நடக்கும் போது, அந்த மரங்களும், இலைகளும் கூட நம்மை பயமுறுத்தும். அதுவும் கூட நம்மை ஏதாவது செய்துவிடுமோ என்கிற எண்ணம் பிறக்கும். உடல் ரீதியிலான பிரச்னைகளைவிட, இந்த மன வேதனை தான் கொடுமை.." என்கிறார் படத்தின் இயக்குநர் அனு சத்யா.

" இப்படி ஒரு படத்தை எடுக்கிறோம் என்று சொல்லி நடிக்க ஆள் தேடி அலைந்தோம். யாருமே நடிக்க ஒப்புக் கொள்ளவில்லை. பின், இறுதியாக வேறு வழியில்லாமல் பாதிக்கப்பட்ட அந்தப் பெண்ணின் கதாபாத்திரத்தில் நானே நடித்தேன். இந்தக் கால மாற்றங்களும், முன்னேற்றங்களும் பெண்களுக்கு எதிரான பாலியல் வன்முறைகளுக்கு எந்த தீர்வுகளையும் முன் வைத்துவிடவில்லை. கிடைக்கும் வாய்ப்புகளில் இது போன்ற பிரச்னைகளை எங்கள் படங்களின் மூலம் தொடர்ந்து பேசுவோம்..." என்று சொல்லும் ஷைலஜா, இந்தப் படத்தின் எடிட்டரும் கூட. இந்த இளைஞர்களின் முயற்சி நிச்சயம் பாராட்டிற்குரியது.

நான்காண்டுகளுக்கு முன்பு இந்த நாளில் பாலியல் வன்புணர்வுக்குள்ளான நிர்பயாவிற்கு, மிகச் சிறந்த அஞ்சலியை செலுத்தியிருக்கிறது ஆண் சமூகம். ஆம்... அதே டெல்லி இந்த வாரம்... 14/12/2016 அன்று டீனேஜ் பெண்ணை அவரின் வகுப்பு மாணவர்களே கூட்டுப் பாலியல் வன்புணர்வுக்கு ஆளாக்கி, ரோட்டில் தூக்கி எறிந்துவிட்டு சென்றிருக்கின்றனர். 15/12/2016 அன்று வேலைத் தேடி டெல்லிக்கு வந்திருந்த இளம்பெண்ணை காரில் வைத்து பாலியல் வன்புணர்வு செய்திருக்கிறான் ஒரு டாக்சி டிரைவர் . இன்னும் எத்தனை நிர்பயாக்களையும், வினோதினிகளையும் பலி கொடுக்க இருக்கிறோம்??? ஆண்களாக என்று தலை நிமிரப் போகிறோம் நாம்???

                                                                                                                                  - இரா. கலைச் செல்வன்.
 

அடுத்த கட்டுரைக்கு