Published:Updated:

"அமிதாப்.. தனுஷ்.. கல்யாணம்... பிங்க்!” டாப்ஸி டைம்ஸ் #VikatanExclusive

"அமிதாப்.. தனுஷ்.. கல்யாணம்... பிங்க்!” டாப்ஸி டைம்ஸ்  #VikatanExclusive
"அமிதாப்.. தனுஷ்.. கல்யாணம்... பிங்க்!” டாப்ஸி டைம்ஸ் #VikatanExclusive

டாப்ஸி பண்ணு பேசுவதைக் கேட்டால் வாயாடிப் பொண்ணு என்று சொல்லிவிடலாம் ஒற்றை வார்த்தையில்.

ஆடுகளம் படத்தில் அறிமுகமானபோது பார்த்த அந்த டாப்ஸியா இவர் என்று கேட்க வைக்குமளவுக்கு  எந்த கேள்வியைக் கேட்டாலும் பொளந்து கட்டுகிறார். 

னக்கும் பக்கா கிராமத்துப் பெண்ணா நடிக்கணும்னு ரொம்ப ஆசை. ஆனா அதுக்கும் என் கலர் செட்டாகாதுனு சொல்றாங்க. கிராமத்துப் பெண்கள்னா கருப்பாதான் இருப்பாங்களா என்ன? ஷூட்டிங்க்காக எத்தனையோ கிராமங்களுக்குப் போயிருக்கேன். அங்கே நான் பார்த்த பெண்கள் அழகுலேயும் கலர்லேயும் என்னை பிரமிக்க வச்சிருக்காங்க. கருப்பா, வழிய வழிய எண்ணெய் வச்சுக்கிட்டாதான் கிராமத்துப் பெண்கள்னு தமிழ் சினிமா சித்தரிச்சு வச்சிருக்கு. நிஜத்துல அப்படி இல்லை.”

டாப்ஸி நடித்த ஹிந்திப்படமான ‘பிங்க்’ தியேட்டரைவிட்டுப்போய் பல நாட்களானால்தான் என்ன? அதைப் பற்றி பேசாமல் இருக்க முடியாது. “'இது அமிதாப் படமில்லை. என்னை இதுல பார்க்க மாட்டீங்க... இந்த சின்னப் பொண்ணுங்க கலக்கி இருக்காங்க” என்று அமிதாப்பே பாராட்டித்தள்ளும் அளவுக்கு டாப்ஸியின் நடிப்பு பேசப்பட்டது.

''உண்மைதான். மனசார பாராட்டறதுல அவரை மிஞ்ச ஆளே இல்லை. படம் ஆரம்பிச்ச முதல் நாள்லேருந்து, ரிலீசாகிற வரைக்கும் எல்லார்கிட்டயும் இப்படியேதான் சொல்லிக்கிட்டிருந்தார். கிரேட் ஆக்டர்” என்கிற டாப்ஸியின் பேச்சில் ‘பிங்க்’கை தவிர்க்கவே முடியவில்லை.

''அமிதாப்ஜிகூட ஒர்க் பண்ணினது எனக்கு பெரிய ஹானர். 'பிங்க்' ஹிந்தியில எனக்கு மூணாவது படம். இவ்வளவு சீக்கிரம் அவ்வளவு பெரிய லெஜன்ட்கூட நடிக்க வாய்ப்பு கிடைச்சது ரொம்பப் பெரிய விஷயம். அவர்கிட்டருந்து நிறைய விஷயங்களைக் கத்துக்கிட்டேன். தான் எவ்வளவு பெரிய நடிகர் என்ற பந்தாவை அவர்கிட்ட பார்க்கவே முடியலை. அவரோட வயசும் அனுபவமும் எனக்குதான் பயத்தைக் கொடுத்தது. ஆனா அந்த செட்டுலயே அவர்தான் வயசுல கம்மினு சொல்ற அளவுக்கு அவர்கிட்ட அப்படியோர் எனர்ஜி... பணிவு... அதான் அமிதாப்ஜி.

ந்த விஷயத்தையும் 'டேக்கன் ஃபார் கிராண்ட்டட்'னு எடுத்துக்கக் கூடாதுங்கிற பெரிய விஷயத்தை அவர்கிட்ட கத்துக்கிட்டேன். படத்துல ஒவ்வொரு சீனையும் கஷ்டப்பட்டு நடிக்க வேண்டிய அவசியத்தைப் புரிய வச்சார். எதுவும் ஈஸி இல்லைங்கிறதையும் புரிய வச்சார்.''
அமிதாப் பச்சனுடன் நடித்த அனுபவத்தை சந்தோஷத்துடன் பகிர்கிற டாப்ஸிக்கு பெரிய வருத்தமும் இருக்கிறது. 
''நிறைய பேர் 'பிங்க்'தான் என்னோட முதல் ஹிந்தி படம்னு நினைச்சிட்டிருக்காங்க. ஆனா அதுக்கு முன்னாடியே நான் ரெண்டு ஹிந்தி படங்கள் பண்ணிட்டேன் தெரியுமா?”

ப்பூ.. இதுக்கெல்லாம் வருத்தப்படலாமா? புது ரூபாய் நோட்டுக்காக தேசமே ஏடிம் வாசலில் க்யூவில் நிற்க, டாப்ஸியின் முதல் படம் ஹிந்திப்படம் எது என்பதா பிரச்சனை? கூல் பேபி.

'பிங்க்' பட வாய்ப்பு எப்படி வந்தது?

“பாலிவுட் புரடியூசர் ஷூஜித்தோட 'ரன்னிங் ஷாதி டாட் காம்' படம் பண்ணிட்டிருந்தபோது அவர்தான் 'பிங்க்' பட வாய்ப்பையும் கொடுத்தார். நடிக்க வேணாம்... நீ நீயா இருந்தா போதும்... இந்த கேரக்டருக்கு அதுதான் தேவை'னு சொன்னார். 'பிங்க்' படத்துல கமிட் ஆனபோது அதுல அமிதாப்ஜியும் இருக்கார் என்ற விவரமே எனக்குத் தெரியாது. (யப்பா... என்னா பர்ஃபாமென்ஸ்?) நான் ஒரு டெல்லி பொண்ணு. அந்தக் கேரக்டருக்கு பொருத்தமா இருப்பேன்னுதான் என்னை செலக்ட் பண்ணியிருந்தாங்க. மானபங்கப்படுத்தப்படற ஒரு பெண்ணோட கேரக்டர்ல நடிக்கப் போறோம்னு ஷூட்டிங் ஆரம்பிக்கிறதுக்குப் பல நாட்கள் முன்பிருந்தே மனசளவுல என்னைத் தயார்படுத்திக்க வேண்டியிருந்தது. அதுதான் பெரிய சேலன்ஜும்கூட. நான் நிஜமாவே அந்த மாதிரி அனுபவத்துக்குள்ளானவளா இருந்தா எப்படியிருக்கும்னு தினம் தினம் நினைச்சுப் பார்த்துக்கிட்டேன். பெண்கள் மானபங்கப்படுத்தப்படற வழக்குகள் கோர்ட்டுல எப்படிக் கையாளப்படும்னு எனக்கு சில வீடியோஸ் போட்டுக் காட்டினாங்க. அந்தக் கேரக்டருக்குள்ளேயே போனா மட்டும்தான் அந்த வலியை ஃபீல் பண்ண முடியும்.  இயல்பிலேயே நான் ரொம்ப சந்தோஷமான பொண்ணு. அழுகைக்கும் எனக்கும் ரொம்ப தூரம். படத்துல மினல் கேரக்டர் அழற சீன்ஸ்ல கிளிசரின் இல்லாம நடிச்சேன்.  அதுக்கான மனப் பயிற்சிகள் ரொம்பவே அதிகம்.''

பிங்க் படத்துல வந்த மாதிரியான சம்பவங்கள் நிஜத்துல நடந்திருக்கா?

''அந்த மாதிரியான சம்பவங்கள் எனக்கு நடந்ததில்லை. ஆனா ஈவ் டீசிங்கை பார்த்திருக்கேன். 'இந்தப் பொண்ணு பசங்ககூட பேசறா... லேட்டா வீட்டுக்கு வர்றா'ங்கிற மாதிரியான கமெண்ட்ஸை சர்வசாதாரணமா எல்லா பொண்ணுங்களுமே ஃபேஸ் பண்ணிட்டுதான் இருக்கோம். அடுத்தவங்க பேசறாங்கனு நான் என்னை மாத்திக்க மாட்டேன். என்னோட அம்மா, அப்பாவும் அடுத்தவங்க பேச்சுக்கு முக்கியத்துவம் கொடுக்கிறவங்க இல்லை.''

பிங்க் படத்தைப் பார்த்துட்டு வேற யாரெல்லாம் பேசினாங்க?

''நிறைய பேர் பேசினாங்க. நிறைய ட்வீட்ஸ்... நிறைய மெசேஜஸ்.... கேமராமேன் விஜய் கே.சக்ரவர்த்தி ஒருநாள் கூப்பிட்டார். அப்போ பிங்க் ரிலீசாகி 6 வாரம் ஆகியிருந்தது.  அவர்கூடப் பேசி பலவருஷங்கள் ஆகியிருந்தது.  'சென்னையில படம் பார்த்தேன். அதுவும் ரிலீசுக்கு 6 வாரம் கழிச்சு... ஒரு வார நாள்ல.... தியேட்டர் ஹவுஸ்ஃபுல். ஹிந்தி தெரியாத மக்கள் சப் டைட்டிலை வச்சு படம் பார்க்கிறாங்க. உங்க நடிப்பைப் பத்திப் பாராட்ட எனக்கு வார்த்தைகளே இல்லை.... பெருமையா இருக்கு..னு ரொம்ப நேரம் பேசிட்டிருந்தார். அது மறக்க முடியாதது.

தமிழ் படங்களுக்கும் ஹிந்தி படங்களுக்கும் என்ன வித்யாசம் ஃபீல் பண்றீங்க?

''மொழி மட்டும்தான் வேற... ஹிந்தி நல்லா தெரியும்ங்கிறதால பாலிவுட் படங்கள்ல நடிக்கிறது எனக்கு ஈஸியாகவும் இருக்கு. ஸ்கிரிப்ட், மக்கள், அவங்களோட புரஃபஷனலிசம்னு எல்லாமே தமிழ்லயும் ஹிந்தியிலயும் ஒரே மாதிரிதான் இருக்கு.''
ஒரேயடியா பாலிவுட்லயே செட்டிலாயிட்டீங்க போலருக்கே? தமிழுக்கு வர்ற ஐடியா இல்லையா?
''செட்டில் ஆகலை. எனக்குனு ஒரு வழியை அங்கே தேடிக்கிட்டேன்றதுதான் உண்மை. எனக்கு அங்க நிறைய வேலை இருக்கு.  தமிழ், தெலுங்கு, ஹிந்தினு மூணு மொழிகள்ல எடுக்கிற 'காஸி' படத்துல ஸ்பெஷல் அப்பியரன்ஸ் பண்ணியிருக்கேன். அடுத்த வருஷ ஆரம்பத்துல ரிலீஸ். அப்புறம் 'பேபி'யோட சீக்வெல் பண்றேன். 'நாம் ஷபானா'னு  ஒரு படத்துல டைட்டில் ரோல் பண்றேன். ஒரு கலவரத்துல சம்பந்தப்படுத்தப்படற பெண்ணோட கேரக்டர். இன்னொரு லவ் ஸ்டோரி பண்றேன். அப்புறம் ஜுட்வா 2 பண்றேன். தமிழ்ல வாய்ப்புகள் வந்துட்டுதான் இருக்கு. ஆனா என் கேரக்டருக்கு முக்கியத்துவம் இருக்கிறதில்லை. எனக்கு முக்கியத்துவம் இல்லாத படத்துல நடிக்கிறதுல என்ன அர்த்தம் இருக்கப் போகுது சொல்லுங்க?''

எதுக்காக நடிக்க வந்தீங்க....? பேருக்கா? புகழுக்கா? இல்லை எல்லாரும் சொல்ற மாதிரி அது உங்களுக்கு பேஷனா?

''நடிப்பு என்னோட பேஷன்னு சொல்ல மாட்டேன். நான் பிளான் பண்ணி நடிக்க வரலை. இன்ஜினியரிங் முடிச்சிருந்தேன்... அந்த டைம்ல இன்ஃபோசிஸ்லருந்து எனக்கு ஆஃபர் வந்தது. எம்.பி.ஏ பண்ற ஐடியாவும் இருந்தது. ஓரளவுக்கு பணமும் இருந்தது. ஸோ... பணத்துக்காகவும் நான் நடிக்க வரலை.
சும்மா ட்ரை பண்ணினேன். அது எனக்கு ஒர்க் அவுட் ஆயிடுச்சு. அவ்வளவுதான். மெல்ல மெல்ல நடிப்பை என்ஜாய் பண்ண ஆரம்பிச்சேன். நடிப்பு எனக்கு சந்தோஷத்தைக் கொடுக்கிறதால இங்கே இருக்கேன்.  என்னிக்கு அந்த சந்தோஷம் கிடைக்காமப் போகுதோ, அன்னிக்கு நடிப்புலேருந்து விலகிடுவேன்.''

தமிழ் படங்கள் பார்க்கறீங்களா?

''மும்பையில இருக்கிறதால தமிழ் படங்கள் பார்க்க அதிக வாய்ப்புகள் கிடைக்கிறதில்லை. ரொம்ப நல்ல படம்னு தெரிஞ்சா, அந்தப் படத்தோட டிவிடி ரிலீசாயிருந்தா வாங்கிப் பார்ப்பேன்.  அதுலயும் சப் டைட்டில்ஸ் உள்ள படங்களை மட்டும்தான் பார்ப்பேன். தமிழ் எனக்குப் புரியாது. தமிழ்ல நாலு படங்கள்தான் பண்ணியிருக்கேன். தெலுங்குல நிறைய படங்கள் பண்ணிட்டேன். தெலுங்குல பேசத் தெரியும். ஆனா தமிழ்ல பேச வராது. யாராவது பேசினாங்கன்னா புரிஞ்சுப்பேன். அதுவும் ஸ்லோவா  பேசினா மட்டும்தான். ஆனா தமிழ் நிஜமாகவே ஒரு அழகான மொழி. குறிப்பா அந்த 'ழ' என்ற வார்த்தை. ஐ லவ் இட்.''

தனுஷ்கூட பேசறதுண்டா? உங்க ஹிந்தி படங்கள் பார்த்துட்டு என்ன சொன்னார்?

''அப்பப்ப பேசுவோம். ஒரு நடிகரா அவரோட வளர்ச்சி பிரமிக்க வைக்குது. ஹிந்தியிலயும் படங்கள் பண்ணிட்டார். இப்ப புரடியூராகவும் அவதாரம் எடுத்திருக்கார். வாழ்க்கையையே சினிமாவுக்காக அர்ப்பணிக்கிற அற்புதமான கலைஞர் அவர்.  தமிழ் சினிமாவுல இன்னும் மிகப் பெரிய உயரங்களுக்குப் போவார்.  அவர் இன்னும் என் ஹிந்தி படங்களை பார்க்கலைனு நினைக்கிறேன்.''

நடிப்புலேருந்து விலகினதும் எப்படிப்பட்ட வாழ்க்கை வாழ ஆசை?

''என்னைப் பத்தித் தெரியாத மக்களுக்கு மத்தியில ரொம்ப சாதாரணமான ஒரு வாழ்க்கை வாழ ஆசை. காலையில எழுந்திருக்கிறதுலேருந்து, ராத்திரி தூங்கப் போகிற வரைக்கும் எனக்குப் பிடிச்ச விஷயங்களை மட்டுமே செய்துகிட்டு, சந்தோஷமா வாழணும். பெரிய வீடோ, பெரிய காரோ வேண்டாம். செய்ய வேண்டிய விஷயங்கள்னு ஒரு பெரிய லிஸ்ட்டே இருக்கு. உலகம் முழுக்க டிராவல் பண்ணணும். ஸ்கை டைவிங், பாரா கிளைடிங்னு அட்வென்ச்சரஸ் விஷயங்களை ட்ரை பண்ணணும்..''
வெள்ளாவியில வச்சு வெளுத்தாங்களானு பாட்டாவே பாடிட்டாங்க. உங்க கலர் பிளஸ்சா, மைனஸா?
''உண்மையில  எனக்கு தமிழ்ல நிறைய வாய்ப்புகள் கிடைக்காததுக்குக் காரணமே என் கலர்தான். ரொம்ப கிளாமரா இருக்கீங்கனு சொல்றாங்க. பக்கத்துவீட்டுப் பெண் மாதிரியான கேரக்டர் எனக்குக் கிடைக்கறதில்லை. திரும்பத் திரும்ப ஆங்கிலோஇந்தியன் பொண்ணு அல்லது என்.ஆர்.ஐ கேரக்டர்தான் செட்டாகும்னு நினைக்கிறாங்க. ஸோ... என் கலர் எனக்குப் பெரிய மைனஸ். ஹிந்தி ஆடியன்சை பொறுத்தவரைக்கும் நான் கிளாமரான நடிகை இல்லை. தமிழ் ஆடியன்ஸ் பார்வையில நான் கிளாமரானவள்... அல்ட்ரா மாடர்ன் பொண்ணு...''

சினிமா இன்டஸ்ட்ரியில ஆணாதிக்கம்  இருக்கிறதா ஃபீல் பண்ணியிருக்கீங்களா?

''ஒட்டுமொத்த சினிமா இன்டஸ்ட்ரியும் அப்படித்தான் இருக்கு. ஏன் இப்படி இருக்குனு ஆரம்ப காலத்துல வருத்தப்பட்டிருக்கேன். ஆனா அந்த வருத்தம் எந்த வகையிலயும் யாரையும் பாதிக்கப் போறதில்லை, நமக்கு மட்டும்தான் பாதிப்புனு உணர்ந்தேன். இந்த நிலைமையை மாத்த நம்மால என்ன பண்ண முடியுமோ, அதைப் பண்ணணும்னு நினைக்கிறேன்.  ஹிந்தி சினிமாவுல நிறையவே மாற்றங்கள் வந்திருக்கு. மாசத்துல ஒரு படமாவது பெண்களை மையப்படுத்தின கதையோட வருது. ஹிந்தியில உள்ள எல்லா முன்னணி நடிகைகளும் இந்த மாதிரி சப்ஜெக்ட்ஸ் பண்றாங்க. இது மிகப் பெரிய மாற்றம். மெதுவா இது தமிழ், தெலுங்குலயும் வரும். 
ஹிந்தி படங்கள்ல நடிக்க வந்ததை நினைச்சு ரொம்பப் பெருமைப்படறேன். இப்ப நான் பண்ணிட்டிருக்கிற 'நாம் ஷபானா'வுல அக்ஷய்குமார், மனோஜ் பாஜ்பாய், மலையாள ஆக்டர் ப்ருத்விராஜ்னு பெரிய ஆட்கள் இருக்காங்க. கதையே என்னைச் சுற்றினதுதான். நான்தான் ஹீரோ மாதிரி. இந்தப் படத்துல பண்ணியிருக்கிற மூணு பெரிய நடிகர்களுமே கொஞ்சம்கூட யோசிக்காம நடிச்சிருக்காங்க. அவங்க எல்லாம் ஏற்கனவே பேர் வாங்கினவங்க. ஸ்கிரிப்டையும் கேரக்டரையும் மட்டும் பார்க்கிறவங்க. மனசளவுல ஸ்ட்ராங்கான நடிகர்களால  மட்டும்தான் இப்படிப் பண்ண முடியும்.''

இன்ஜினியரிங் ஸ்டூடண்ட்.... இப்போ நடிகை... இன்னொரு பக்கம் 'வெட்டிங் ஃபேக்டரி'னு ஒரு கம்பெனி நடத்தறீங்க... என்னதான் உங்கத் திட்டம்?

''சினிமாவோட கொஞ்சமும் சம்பந்தமில்லாத ஏதாவது ஒரு விஷயம் பண்ணணும்னு நினைச்சேன். என்னோட வாழ்க்கையையே சினிமாவுக்கு அர்ப்பணிச்சிட முடியாது. சினிமாவைத் தாண்டியும் எனக்குனு ஒரு லைஃப் இருக்கு. என்னோட ஃப்ரெண்ட் இதே பிசினஸ்ல இருந்தாங்க.  அவங்க சொந்தமா ஒரு கம்பெனி ஆரம்பிக்க முடிவு பண்ணினபோது, ஒரு பார்ட்னர் தேடினாங்க. நானே அவங்களுக்கு பார்ட்னராயிட்டேன். என்னோட தங்கை ஷகுனுக்கும் இதே பிசினஸ்ல ஆர்வம் இருந்தது. மூணு பேரும் சேர்ந்து வெட்டிங் ஃபேக்டரி ஆரம்பிச்சோம்.''

அடுத்தவங்க கல்யாணத்துக்கெல்லாம் பிளான் பண்றீங்க... உங்க கல்யாணம் பத்தி?

''நான் எதுக்கு இப்ப கல்யாணம் பண்ணணும்? நான் கம்பெனி நடத்தறது அடுத்தவங்க கல்யாணங்களை நடத்தறதுக்காக மட்டும்தான். 

-ஆர்.வைதேகி