Published:Updated:

வீரசிவாஜியை சொப்பன சுந்தரியாவது காப்பாற்றினாரா? - வீரசிவாஜி விமர்சனம்

வீரசிவாஜியை  சொப்பன சுந்தரியாவது காப்பாற்றினாரா? - வீரசிவாஜி விமர்சனம்
வீரசிவாஜியை சொப்பன சுந்தரியாவது காப்பாற்றினாரா? - வீரசிவாஜி விமர்சனம்

வீரசிவாஜியை சொப்பன சுந்தரியாவது காப்பாற்றினாரா? - வீரசிவாஜி விமர்சனம்

சில படங்களின் கதைக்களமும், அதை எடுத்திருக்கும் விதமும் வேறு வேறு எக்ஸ்ட்ரீமில் இருக்கும். "ச்ச்சே! எப்பிடி எடுத்திருக்க வேண்டிய படம்!" என யோசிக்க வைக்கும். அல்லது சாதாரண கதையை வைத்து, செமத்தியான மேக்கிங்கில் பின்னிப் பெடலெடுத்த படங்களும் உண்டு. தகராறு படம் இயக்கிய கணேஷ் விநாயக் இயக்கி, விக்ரம் பிரபு நடித்திருக்கும் 'வீரசிவாஜி' படம் இதில் எந்த வகை?

கதை நாயகன் ஒரு நேர்மையான டாக்ஸி ஓட்டுநர். கூடவே வீரமான ஆளும் கூட. அவரின் பெயர் சிவாஜி என்பதால் வீரசிவாஜி என்கிற தலைப்பு வைத்திருப்பதாக நமக்கு நாமே நம்பிக்கொள்ளலாம். டாக்ஸி ஓட்டுநர் சிவாஜிக்கு (விக்ரம் பிரபு), சில பிரச்சனைகள். முதலாவது, கார் பம்பர் மோதலில் ஷாம்லியுடனான சந்திப்பு காதலில் முடிகிறது. இரண்டாவது, அக்காவின் மகளுக்கு மூளையில் கட்டி. ஆபரேஷன் செய்ய இருபத்தைந்து லட்சம் தேவை. அதைச் சரிசெய்வதற்காக, ரோபோஷங்கர் - யோகிபாபு மூலம் மோசடிக்காரர் என்று தெரியாமல் ஜான் விஜயை அணுகுபவருக்கு, இருந்த பணமும் பறிபோகிறது. மூன்றாவது, ஏமாற்றி ஜான் விஜய் சேர்த்து வைத்திருக்கும் மொத்த பணத்தையும், விக்ரம் பிரபு எடுத்து வரும் வழியில் விபத்துக்குள்ளாகிறார். அந்த விபத்தால் ‘ரீசண்ட் மெமரி லாஸ்’க்கு ஆளாகும் விக்ரம் பிரபுவுக்கு சமீபத்திய சம்பவங்கள் எதுவும் நினைவில் இல்லாமல் போகிறது. ஷாம்லி உடனான காதல், குழந்தையின் வியாதி, தன்னைத் துரத்தும் ஜான் விஜயின் பகை இவற்றிலிருந்து எப்படி விக்ரம் பிரபு தப்பிக்கிறார் என்பது தான் கதை. படிக்கும் போது ஒரு சூப்பர் ஆக்‌ஷன் த்ரில்லர் கதை போல தோன்றுகிறதா? தோன்றும்தான். என்ன செய்யுறது?

வழக்கமான தமிழ்சினிமாவின் அத்தனை க்ளிஷே காட்சிகளையும், அப்படியப்படியே இயக்குநர் விக்ரம் பிரபுவிடம் ஒரு கதையாகச் சொல்ல, அதை அவரும் ஓகே செய்திருக்கிறார். ‘இதையெல்லாம் தட்டிக்கேட்க ஒருத்தன் வருவாண்டா' என ஒருத்தர் சொல்லும்போது எண்ட்ரி ஆகிறார் விக்ரம் பிரபு. ‘ஒரு பொண்ணைப் பார்த்தா இதயத்துல இளையராஜா பாட்டு கேட்கணும்’ என ஹீரோ சொல்லும் போது ஹீரோயின் ஷாம்லி எண்ட்ரி. ஹீரோவின் உதவும் குணம் கண்டு இம்ப்ரஸ் ஆகிறார் ஹீரோயின், குழந்தைக்கு லட்சத்துல ஒருத்தருக்கு வர்ற வியாதி, அந்த நோய் பத்தி யாருக்கும் தெரியவேணாம் என ஹீரோ கெஞ்சுவது,  ஊரையே ஏமாத்தும் வில்லனை ஏமாற்ற திட்டமிடும் ஹீரோ. ஆபரேஷனுக்கு காசில்லாத நேரத்தில் ஐட்டம் சாங் என்று ஒரு குயர் நோட்டில் முக்கா குயர் குறிப்பெடுத்துக்கொள்ளும் அளவுக்கு ரிப்பீட் க்ளிஷேக்கள். அப்புறம் முக்கியமான விஷயம், சினிமா க்ளிஷேக்களின் வரிசையில் ஹீரோ ஓர் அனாதை.

நாயகனைச் சுற்றி நிறைய பிரச்னைகள், ஆனால், அவரோ அப்படியான பிரச்னைகள் இருப்பதையே மறந்துவிட்டு ஆயாசமாக கொட்டாவி விடும் வேளையில் கன்னத்தில் பளார் பளார் என அறைகின்றன மேலும் பிரச்னைகள். இப்படியான ஒரு படத்தின் திரைக்கதை எவ்வளவு வேகமாக பயணித்திருக்க வேண்டும், படம் பார்க்கும் ஆடியன்ஸ் அடுத்து என்ன வருமோ என பக்கத்தில் இருப்பவர் நகத்தையும் சேர்த்து கடிக்க வைத்திருக்க வேண்டாமா? ‘அவனுடைய வயசுக்கே இவ்வளோ ஃப்ராடுத்தனம் பண்ணுறான்னா, என் வயசுக்கு நான் எவ்வளவு பண்ணுவேன் பாருங்கடா’ என்றபடி விக்ரம் பிரபு தன் முழுக்கை சட்டையை மடித்துவிட்டு கிளம்பும் போது 'இங்க இருந்து படம் வேற மாதிரி போகப்போதுடா' என நினைத்தால் மறுபடி எல்லாக் கோட்டையும் அழித்துவிட்டு ஷாம்லியுடன் ரொமான்ஸ் செய்ய சென்றுவிடுகிறது. இடைவேளைக்கு கொஞ்சம் முன்பு திரைக்கதையில் இருந்து காணாமல் போகும் ஷாம்லி, இடைவேளைக்குப் பின் திடீரென ‘நான் இங்கதானே இருக்கேன்’ என்று எண்ட்ரி தருகிறார். 

படத்தின் ஆகப் பெரிய ஆறுதல் ரோபோ ஷங்கர் - யோகிபாபு காம்போ  தான். ஃபைவ் ஸ்டார் விளம்பர கதாபாத்திரங்களான ரமேஷ் - சுரேஷாக இவர்களை அலையவிட்டதே செம ஐடியா. கார்களில்  புகைப்படத்தை வைத்து கொள்ளையடிக்கும் ப்ளான், "அவன் ப்ளாஷ்பேக்கே பழசு உன் ரியாக்‌ஷன் அதவிட கேவலமா இருக்கு" என கலாய்ப்புத் தருணங்கள், பழைய நினைவுகளை இழந்த விக்ரம் பிரபுவிடம் மாட்டிக் கொள்ளும் காட்சிகள் எல்லாவற்றிலும் இருவரின் காமெடி,  வர்தாவின் போது இடைவெளி விட்டு அடித்த மழைத்தூறலாய் ஆறுதல். 

சிவாஜியின் பேரனாக இருந்தாலும் சரி, ஷாலினியின் தங்கையாக இருந்தாலும் சரி..  அவரவர்களுக்கு வந்தால்தான் நடிப்பு. விக்ரம் பிரபுவுக்கு ‘இந்தக் கதைக்கு இது போதும் பாஸ்’ என்று முடிவெடுத்தவராக வழக்கமான அதே நடிப்பு.  ஷாம்லி ஏதோ வருகிறார், ரெண்டு பாட்டுக்கு ஆடுகிறார். ரியாக்‌ஷன்களிலாவது கவர்வார் என்று எதிர்பார்த்தால்... பெட்டர் லக் (நமக்கு) நெக்ஸ்ட் டைம் என்கிறார்.  மாஸ்க் போட்ட முகங்களைப் பார்த்து விடிவி கணேஷ் ‘இவங்கதான்’ன்னு சொல்றதெல்லாம்... டன் கணக்கிலான பூச்சுற்றல். பஸ் ஸ்டாப்பில் வரும் காட்சியில் ‘பசங்க ஏமாறுவாங்க,, பொண்ணுக ஏமாத்தாதீங்க’ டைப் வசனங்களெல்லாம்.. இன்னும் எத்தன படத்துலதான் காட்டுவீங்களோ! (ஆனா, அதுக்கும் தியேட்டரில் கைதட்டுறாங்க. அவ்வ்வ்!)

ஜான்விஜய், ஸ்டைலிஷ் வில்லனாகத் தன்னைக் காட்டிக்கொள்ள ‘மொட்ட அங்கிள்’ என்றெல்லாம் பேசி என்னென்னவோ முயல்கிறார். ’மின்வெட்டு நாளில்’ பாடலில் மொட்டை ராஜேந்திரனின் ஸ்டெப்ஸும், துள்ளலும்.. ‘நீதானா பாபா... எப்டி பாபா இதெல்லாம்’ என்று கேட்டு தியேட்டரே க்ளாப்ஸால் நிறைகிறது. வினோதினி போன்ற திறமை இருப்பவர்களையும் சீரியல் அக்கா போன்ற குறைந்த ஸ்கோப் உள்ள வேடங்களிலே பார்ப்பது... சோகம் ரமேஷ்! ஆமா சுரேஷ்! 

தற்போதைய பெரும்பாலான படங்களில் இளையராஜாவுக்கும் ஒரு கிரெடிட் குடுத்துவிடலாம் போல. இதிலும் அப்படியே. ‘விழியில் விழி மோதி’, அபூர்வ சகோதரர்கள் பிஜிஎம் என்று பல இடங்களில் ராஜா. சண்டைக்காட்சிகளில் ஒலிக்கும் தீம் இசையில் இமான் கொஞ்சம் பொறி பறக்க வைக்கிறார். தவறான இடத்தில் காட்சிப்படுத்தப்பட்டிருந்தாலும் ‘சொப்பன சுந்தரி’ பாடலும் இசையும் மனதுக்கும், கண்ணுக்கும் கொஞ்சம் ரிலாக்ஸாக இருக்கிறது. ஆனால்  சொப்பன சுந்தரி மட்டும் போதுமா படத்தைக் காப்பாற்ற? 

ரமேஷ் - சுரேஷ் ஐடியா, மொட்டை ராஜேந்திரன் காதருகே பணத்தைக் கொண்டுபோய், எண்ணிப்பார்ப்பதுபோல செய்து, அதன் சத்தத்திலேயே எண்ணுவது, பெண்ணே இல்லாமல் ‘தொழில்’ செய்து சம்பாதிக்கும் ஐடியா,  கிலோமீட்டர் போர்டில் ஊரும், கிலோ மீட்டரும் ஸ்பீடாக ஓடுவது, ஹீரோ அஜித் ரசிகன், ஹீரோயின் விஜய் ரசிகை, மொட்டை ராஜேந்திரன் பரோட்டாவை ‘ப்ரோ’ என்பது என்று இயக்குநர் கணேஷ் விநாயக் ஒரு ரசனைக்காரர் என்பது அங்கங்கே தெரிகிறது. ஆனால் அந்த ரசனைகளை வைத்துக் கொண்டு ஒரு முழுமையான படமாக தரத்தவறிவிட்டார்! படத்தின் ஆல்பமெல்லாம் பார்த்து ஆவலாகப் படத்துக்குப் போனால், படம் பார்த்த நமக்கும் ரீசண்ட் மெமரி லாஸ் வந்து ஒரு மூன்று மணி நேரம் மறக்காதா என்று தோன்றுகிறது.

டெய்ல் பீஸ்: இடைவேளையில் தமிழக அரசு செய்தித்துறை சார்பில் ஹெல்மெட் உபயோகிப்பதை வலியுறுத்தி ‘துப்பட்டா ரீட்டா’ என்றொரு விளம்பரம் போட்டார்கள். ஜெயலலிதா படத்தைப் போட்டு ‘தமிழக முதல்வர் வழிகாட்டுதலுடன்’ என்று இருந்ததையெல்லாம் விட்டுவிடுவோம்.. இதை சொல்லியே ஆகணும். நல்ல கிரியேட்டிவிடியாக இருந்தது அந்த விளம்பரம்! பாராட்டுகள்!

அடுத்த கட்டுரைக்கு