Published:Updated:

வில் ஸ்மித், கேட் வின்ஸ்லெட், ஹல்லன்... யார் அழகு? CollateralBeauty படம் எப்படி?

Vikatan Correspondent
வில் ஸ்மித், கேட் வின்ஸ்லெட், ஹல்லன்... யார் அழகு? CollateralBeauty படம் எப்படி?
வில் ஸ்மித், கேட் வின்ஸ்லெட், ஹல்லன்... யார் அழகு? CollateralBeauty படம் எப்படி?

நினைவுகளால் சூழப்படுவீர்கள். அந்த நொடியில் உங்கள் கண்ணில் அருவியை பாய்ச்சிடும். அடுத்த நிமிடமே கண்ணீரிலிருந்து விடுபட்டு, நிதானத்தை அடைவீர்கள். அடுத்தகணமே மீண்டும் நினைவுகளால் சூழப்படுவீர்கள்..... இந்த நிகழ்வுகள் வில் ஸ்மித் நடிப்பில் இந்தவாரம் வெளியாகியிருக்கும் “கொலாட்ரல் ப்யூட்டி” படத்தினை பார்க்கும்போது உணரலாம். 

அமெரிக்காவில் கொண்டாட்டத்திற்கான மாதம் அது. கீச்சிடும் பெல்களும், கண்சிமிட்டும் ஸ்டார்களும் வீட்டை அலங்கரிக்கும். பனிபொழியும் கடும் குளிரில் கிருஸ்துமஸ் நாட்களை மகிழ்ச்சியில் வரவேற்க வில்ஸ்மித் மட்டும் சோகத்தில் உறைந்திருப்பார். நியூயார்க் நகரில் விளம்பர நிறுவனத்தை நடத்திவருபவர் வில்ஸ்மித். புதியதாக யோசிக்கும், வாழ்க்கையை ரசிக்கும் வில்லின் சந்தோஷங்கள் மூன்று வருடத்திற்கு முன்னரே பறிபோகியிருக்கும். ஆறுவயது மகளின் இழப்பு, வில் ஸ்மித்தை பாதித்திருக்கும். இதனால் மனைவி, நண்பர்கள் அனைவரிடமிருந்தும் விலகி தனிமையாகிவிடுகிறார் ஸ்மித். இப்படியே சென்றால் அலுவலகத்தையும் இழுத்து மூட நேரிடமும் என்பதால் திட்டம் ஒன்றை யோசிக்கிறார்கள்  வில்லின் மூன்று நண்பர்கள். நாடக நடிகர்களைக் கொண்டு, இந்த மூவரும் நடத்தும் நாடகமும், இதனால் இவர்களின் வாழ்க்கை எப்படி மாறியது... வில் ஸ்மித் பழைய நிலைக்கு திரும்பினாரா என்பதை வலியும் உணர்வுமாக கடத்துகிறது கொலாட்ரல் ப்யூட்டி. 

இருட்டு அறையில் அடைந்துகிடப்பது, இரவுகளில் சைக்கிள் ஓட்டுவது, யாரிடமும் பேசாமல் இருப்பது என்று அவரின் சோகத்தை அப்படியே கடத்துகிறார் வில்ஸ்மித்.  ஸ்மித்தை தவிற மற்ற எல்லோருக்குமே வசனம் அதிகம். பேசாமலே நடிப்பில் கச்சிதமாக பொருந்துகிறார். பொதுவாக படங்களில் நான் ஸ்டாப் டயலாக் டெலிவரியில் அசத்தும் ஸ்மித்தின் மெளனமான திரைமொழியும் ரசிக்கும் விதம் தான்.  

விவாகரத்து பெற்றதால், தன் மகளை பிரிந்து அன்பிற்காக ஏங்கும் எட்வர்ட் நோர்டன் (Edward Norton) குழந்தைப் பெற்றுக்கொள்ளும் ஆசை இருந்தும் நேரத்தை வீணாக்கி தனிமையில் வாடும் கேட் வின்ஸ்லெட் ( Kate Winslet) தீராத வியாதியால் மரணத்தின் வாசலில் நிற்கும் மைக்கேல் பெனா ( Michael Peña) இவர்களே ஸ்மித்தின் மூன்று நண்பர்கள்... ஒவ்வொருவருக்கும் ஒவ்வொரு பிரச்னை.. 

காதல், நேரம், மரணம் மூன்றையும் மனித ரூபத்தில் ஸ்மித்தின் முன் நிறுத்த, நாடக நடிகர்களை நடிக்க வைக்க திட்டமிடுகிறார்கள் ஸ்மித்தின் நண்பர்கள். ஒவ்வொருவருக்கும் 2000 டாலர் விலை பேசப்படுகிறது.  ’காதலாக’ கெய்ரா நைட்லி (Keira Knightley) ‘நேரம்’மாக  ஜாக்கப் ( Jacob Latimore) ‘மரணம்’ கதாபாத்திரத்தில் ஹெல்லன் மிர்ரன் (  Helen Mirren) மூவருமே ஸ்மித்தின் மனநிலையை மாற்றுவதற்காக நடிக்கிறார்கள்.  

“உனக்கான அன்பு உன் கிட்ட மட்டும் தான் இருக்கு. நீ தான் அதைத்தேடிக்கணும்.. சோகமா இருப்பதால் எதையும் மாற்றிவிட முடியாது” , “வாழ்நாள் முழுதும் சோகமாவே இருந்து உனக்கான நேரத்தை வீணடிக்கப்போறியா?”, இறப்பு சோகத்திற்கான முடிவு கிடையாது... சாகுறதுக்கு முன்னாடி வாழ்க்கையை வாழ்ந்திடணும்”  வசனங்கள் சொல்லும் மெசேஜ் இவை

இழந்ததை நினைத்து, நமக்குள் இருக்கும் சந்தோஷத்தை இழந்துவிடக்கூடாது, நமக்குள் இருக்கும் அழகினை தேடிப்பயணப்படவேண்டும் என்ற ஒன்லைனை உணர்வுகளுடன் கடத்தியிருந்தாலும், பலமாக கதாபாத்திரமாக மனதிற்குள் படம் நுழையவில்லை. முழுவதும் அறிவுரைகளால் மட்டும் நிறைகிறது. காட்சிகளில் உணர்த்த தவறிவிடுகிறது. ஆஸ்கார் நடிகர்கள் படமுழுவதும் நிறைந்திருந்தாலும் இயக்குநர் டேவிட் அவர்களை பயன்படுத்த தவறிவிட்டார்.  

“எனக்கு ஆறு வயசுல பொண்ணு இருந்தது. கேன்சர்ல இறந்துடுச்சி. அவ பெயர் ஒலிவியா... உன்னோட மக பெயர் என்ன?” என்று க்ளைமேக்ஸில் நோமி ஹாரிஸ் (Naomie Harris ) கேட்கும் காட்சிகளும், அதற்கு ஸ்மித்தின் அந்த ரியாக்‌ஷனும்... அழுகையும்.. நேர்த்தி.  நம்முடன் சந்தோஷமாக இருந்தவர்கள் விட்டு பிரியும் போது ஏற்படும் வேதனையை யாராலும் நிரப்பமுடியாது. ஆனால் வேதனையை சந்தோஷத்தால் நிரப்பமுடியும் என்பதை சொல்லியதில் கவனம் ஈர்க்கிறார்கள்.

‘மரணம்’ கதாபாத்திரத்தில் நடித்திருக்கும் ஹல்லன், விஸ் ஸ்மித் இருவருமே நடிப்பு சூப்பர். ஆனால் டைட்டானிக் நாயகி கேட் வின்ஸ்லெட்டை எதிர்பார்த்து சென்றால்,  எந்தவிதத்திலும் இம்ப்ரெஸ் செய்யவில்லை. ஏன் பேபி?  

மொத்தத்தில் படம்  வித்தியாசமான உணர்வுகளையும், உங்களின் நினைவுகளில் கரைந்தோடும் சோகங்களையும் பிரதிபலிக்கும்... அத்தோடு நின்றுவிடாமல் அதற்கான தீர்வையும் உணர்வுப்பூர்வமாக சொன்ன விதத்தில் கொலாட்ரல் ப்யூட்டியை பார்க்கலாம்.